முதல் காதலை மறக்க முடியாதது ஏன்? பல ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவில் நிற்பதன் காரணம்

வல்லுநர்களின் கூற்றுப்படி முதல் காதலின் நினைவுகள் பல ஆண்டுகள் வரை நிலைத்திருக்கும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வல்லுநர்களின் கூற்றுப்படி முதல் காதலின் நினைவுகள் பல ஆண்டுகள் வரை நிலைத்திருக்கும்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பலருக்கு, முதல்முறையாகக் காதலில் விழுவது வாழ்க்கையின் மிகவும் மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாகும்.

ஆனால், முதல் காதலும் முதல் உறவும் பல தசாப்தங்கள் கடந்த பிறகும் மூளையில் ஏன் பசுமையாகவே இருக்கின்றன? அந்தப் பருவத்தின் நினைவுகள் ஏன் அவ்வளவு ஆழமாக இருக்கின்றன, அவற்றை மறப்பது ஏன் அவ்வளவு கடினமாக இருக்கிறது?

இதற்குக் காரணம், இளம் வயதில் மனித மூளை நீண்ட காலம் நிலைத்திருக்கும் நினைவுகளை உருவாக்கும் திறன் அதிகமாக இருப்பதுதான்.

பலர் தங்களின் முதல் காதலை இளமைப் பருவத்தில்தான் அனுபவிக்கிறார்கள். மூளையின் வளர்ச்சியில் முக்கியமான இந்தக் காலகட்டத்தில், நினைவுகளை உருவாக்கி நீண்ட காலம் சேமித்து வைத்திருக்கும் திறன் உச்சத்தில் இருக்கும்.

"இந்த வயதில், நிகழ்வுகளை மிகத் துல்லியமாக மனதில் பதியவைத்து, அவற்றை நீண்ட காலம் நினைவில் வைத்திருக்கும் அபாரமான திறன் நமக்கு உள்ளது," என்று வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் உளவியல் பேராசிரியரான கேத்ரின் லோவி கூறுகிறார்.

உணர்வுகளுடனும் தொடர்புடைய விஷயங்களையும் நிகழ்வுகளையும் மூளை மிகவும் நன்றாக நினைவில் கொள்கிறது என்று அவர் விளக்குகிறார்.

மேலும், ஒரு நிகழ்வு முதன்முறையாக நடைபெறும்போது, வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்போது அல்லது துயரம், வலி, பதற்றம் போன்ற தீவிரமான உணர்வுகளை உருவாக்கும்போது, அது நீண்ட காலம் நினைவில் நிலைத்திருக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது என்கிறார் அவர்.

''இதுதவிர, ஒரு நினைவை எத்தனை முறை திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்கிறோமோ, அது மூளையில் நிலைத்திருப்பதற்கான சாத்தியக்கூறும் அவ்வளவு அதிகமாகிறது. இதனால்தான் உணர்ச்சிபூர்வமான அனுபவங்கள் பெரும்பாலும் மிக நீண்ட காலம் நினைவில் நிற்கின்றன.''

"ஒவ்வொரு முறையும் நாம் இந்த அனுபவங்களையும் நினைவுகளையும் மீண்டும் நினைவுகூரும் போது, அவற்றுடன் தொடர்புடைய நரம்பியல் இணைப்புகள் மேலும் வலுவடைகின்றன" என்கிறார் பேராசிரியர் லோவி.

ஹார்மோன்களுக்கும் முதல் காதலுக்கும் இடையே உள்ள தொடர்பு

வளரிளம் பருவத்தில் உடலிலும் மூளையிலும் பல ஹார்மோன்களும் வேதிப்பொருட்களும் தீவிரமாகச் செயல்படுகின்றன. இவைதான் தீவிர உணர்ச்சிகளை உருவாக்குகின்றன

பட மூலாதாரம், Getty Images

அது மகிழ்ச்சியாகவும் கிளர்ச்சியாகவும் இருந்தாலும் சரி, அல்லது இதயம் உடைந்த வலியாக இருந்தாலும் சரி, முதல் காதலுடன் தொடர்புடைய உணர்வுகள் பெரும்பாலும் மிகவும் ஆழமானதாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருக்கும்.

கேத்தரின் லோவியின் கூற்றுப்படி, வளரிளம் பருவத்தில் உடலிலும் மூளையிலும் பல ஹார்மோன்களும் வேதிப்பொருட்களும் தீவிரமாகச் செயல்படுகின்றன. இவைதான் தீவிர உணர்ச்சிகளை உருவாக்குகின்றன. முதலில், ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பது, மற்றவர்களிடம் உணர்வுபூர்வமான ஈர்ப்பை உருவாக்குகிறது. அதன் பின்னர், காதல் உறவு உருவாகத் தொடங்கும்போது, மூளையில் செரோட்டோனின், டோபமைன் மற்றும் ஆக்ஸிடோசின் போன்ற வேதிப்பொருட்கள் சுரக்கின்றன.

இந்த வேதிப்பொருட்கள் மகிழ்ச்சி, வெகுமதி உணர்வு, உணர்வுபூர்வமான பிணைப்பு மற்றும் நெருக்கமான உறவுகள் போன்றவற்றுடன் தொடர்புடையவை.

முதல் காதல் என்பது வெறும் உணர்வுப்பூர்வமான அனுபவம் மட்டுமல்ல. இது ஒரு மனிதன் நம்பிக்கை வைக்கவும், நெருக்கத்தை உணரவும் மற்றும் புதிய உறவுகளை உருவாக்கவும் கற்றுக்கொள்ளும் ஒரு செயல்முறையுமாகும்

பட மூலாதாரம், Getty Images

முதல் காதல் என்பது, காதல் உறவுகளைப் புரிந்துகொள்ளும் பயணத்தின் தொடக்கமாகவும் அமைகிறது. அடிப்படை அளவில், மனித உறவுகள் நமது வாழ்க்கை மற்றும் சமூக இருப்பின் முக்கிய அங்கமாக உள்ளன.

ஒரு இளைஞர் அல்லது இளம்பெண்ணின் வாழ்க்கையில் முதல் காதல் உறவு ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஏனெனில், குடும்பத்தினரையும் நெருங்கிய சமூக வட்டத்தையும் தாண்டி, வேறொருவருடன் ஆழமான உணர்வுபூர்வமான பிணைப்பை உருவாக்கும் முதல் அனுபவம் இதுவாகும்.

கேத்ரின் லோவி, முதல் காதலை "மனித உறவுகளில் மிகவும் முக்கியமான அனுபவங்களில் ஒன்று" என்று குறிப்பிடுகிறார்.

"நமக்குப் பழக்கமான வட்டத்துக்கு வெளியே உள்ள ஒருவரை நம்பக் கற்றுக்கொள்ள வேண்டும். நமது வாழ்க்கை புதிய திசையில் நகரத் தொடங்குகிறது," என்று அவர் கூறுகிறார்.

அவரது கருத்துப்படி, முதல் காதல் என்பது வெறும் உணர்வுபூர்வமான அனுபவம் மட்டுமல்ல. ஒருவரை நம்புவது, அவருடன் நெருக்கத்தை உணருவது மற்றும் புதிய உறவுகளை உருவாக்குவது ஆகியவற்றைக் கற்றுக்கொள்ளும் ஒரு செயல்முறையாகவும் அது அமைகிறது.

ஒரு ஆய்வில் முன்னாள் காதலர்கள் மீண்டும் சந்தித்தபோது அவர்களில் 72 சதவீதம் பேர் பின்னர் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொண்டது கண்டறியப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

பழைய காதல் மீண்டும் கிடைக்கும்போது என்ன நடக்கும்?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

1993-ஆம் ஆண்டில், அமெரிக்க உளவியலாளர் நான்சி கலிஷ், பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்களின் முன்னாள் காதலர்களை மீண்டும் தொடர்புகொண்டவர்களைப் பற்றி ஓர் ஆய்வு மேற்கொண்டார்.

அந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் திருமணம் செய்யாதவர்களாகவோ அல்லது தங்கள் வாழ்க்கைத் துணையை இழந்தவர்களாகவோ இருந்தனர்.

அவர்களில் பலர் சில வாரங்களுக்குள் மீண்டும் காதல் உறவைத் தொடங்கியதுடன், 72 சதவீதம் பேர் பின்னர் திருமணமும் செய்துகொண்டனர்.

இணையத்தின் வருகைக்குப் பிறகு, பழைய காதலர்களைக் கண்டுபிடித்து மீண்டும் தொடர்புகொள்வது முன்பைவிட மிகவும் எளிதானதாக மாறியது.

2004-ஆம் ஆண்டில் நான்சி கலிஷ் மேற்கொண்ட மற்றொரு ஆய்வில், தங்களின் முன்னாள் காதலர்களுடன் மீண்டும் தொடர்புகொண்டவர்களில் 62 சதவீதம் பேர் அவர்களுடன் மீண்டும் காதல் உறவில் இணைந்தது தெரியவந்தது.

எனினும், அந்த உறவுகளில் வெறும் 5 சதவீதம் மட்டுமே திருமணத்தில் முடிந்தன.

கேத்ரின் லோவியின் ஆய்வுகள் முதல் காதலை மட்டும் மையப்படுத்தியவை அல்ல. மனிதர்கள் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் உருவாக்கும் நினைவுகளை அவர் ஆய்வு செய்து வருகிறார்.

ஆனால், முதல் காதலின் நினைவுகள் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன என்று அவர் கூறுகிறார்.

"70 மற்றும் 80 வயதுடையவர்களிடமும் நான் பேசியிருக்கிறேன். அவர்களில் பலர், முதல் காதலின் நினைவுகளையே தங்கள் வாழ்க்கையின் மிகவும் தெளிவான மற்றும் முக்கியமான நினைவுகளில் ஒன்றாகக் கருதுகின்றனர்," என்று அவர் கூறுகிறார்.

அவரது கருத்துப்படி, பலருக்கு முதல் காதல் என்பது கடந்தகாலத்தின் ஓர் அத்தியாயம் மட்டுமல்ல.

அது பல ஆண்டுகள், சில சமயங்களில் பல தசாப்தங்கள் கடந்த பின்னரும் மனதிலும் உணர்வுகளிலும் உயிர்ப்புடன் வாழும் ஒரு அனுபவமாகத் தொடர்கிறது.

பழைய காதல் நினைவுகள் தற்போதைய உறவுகளை வலுப்படுத்துமா?

பழைய காதலை நினைவுகூர்வது எப்போதும் இழந்த உறவை மீண்டும் விரும்புவதை மட்டுமே குறிக்காது.

சில நேரங்களில் அது தற்போதைய உறவுகளையும் வலுப்படுத்த உதவக்கூடும்.

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஆடம் ஃபெட்டர்மேன், "ரொமான்டிக் நாஸ்டால்ஜியா" என அவர் அழைக்கும் ஒரு கருத்தை ஆய்வு செய்து வருகிறார்.

அவரது விளக்கப்படி, இது கடந்தகால காதல் அனுபவங்களுடன் தொடர்புடைய அன்பும் பாசமும் கலந்த நினைவுணர்வாகும். அது தற்போதைய உறவுகளின் சூழலிலும் தோன்றக்கூடும்.

ஒரு உறவில் முக்கியமான தருணங்களை மீண்டும் அனுபவிப்பது, உதாரணமாக, முதன்முதலில் சந்தித்த காலத்தில் சேர்ந்து பார்த்த திரைப்படத்தை மீண்டும் பார்ப்பது போன்றவை அந்நேரத்தின் மகிழ்ச்சியான உணர்வுகளை மீண்டும் நினைவூட்ட உதவும் என்று ஃபெட்டர்மேன் கூறுகிறார்.

அவரது ஆய்வுகளின்படி, இத்தகைய பகிரப்பட்ட நினைவுகளை அடிக்கடி நினைவுகூரும் தம்பதிகள், தங்கள் துணையுடன் அதிகமான உணர்வுபூர்வமான பிணைப்பை உணர்கிறார்கள். இதன் மூலம் அன்பும் நெருக்கமும் மேலும் அதிகரிக்கின்றன.

ஒரு உறவின் சிறப்புமிக்க தருணங்களை மீண்டும் நினைவுகூர்வது, முதல் சந்திப்பில் பார்த்த திரைப்படத்தை மீண்டும் சேர்ந்து பார்ப்பது போன்றது

பட மூலாதாரம், Getty Images

கண்டதும் காதலும்... நினைவுகளும்

கேட் மற்றும் குந்தர் முதன்முதலில் 1989-ஆம் ஆண்டு, பிரிட்டனின் டெவான் பகுதியில் விடுமுறைக்குச் சென்றிருந்தபோது சந்தித்தனர்.

அவர்களுக்குள் முதல் சந்திப்பிலேயே காதல் மலர்ந்தது.

ஆனால், குந்தர் மீண்டும் ஜெர்மனிக்குத் திரும்ப வேண்டியிருந்தது. அதன் பிறகும் இருவரும் கடிதங்கள் மூலம் தொடர்பில் இருந்து வந்தனர். அவ்வப்போது சந்தித்தும் வந்தனர். இருப்பினும், ஒன்றாக வாழ்வதற்கான வழியை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

"அவருடன் சேர்ந்து வாழ முடியாது என்று அவரிடம் சொன்னது, என் வாழ்க்கையின் மிகவும் கடினமான முடிவாக இருந்தது," என்று கேட் கூறுகிறார்.

சுமார் இரண்டு ஆண்டுகள் காதல் உறவில் இருந்த பிறகு, இருவரும் மனவேதனையுடன் பிரிவதைத் தேர்ந்தெடுத்தனர்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது அலமாரியில் குந்தர் எழுதிய பழைய கடிதங்களை கேட் மீண்டும் கண்டுபிடித்தார். அது பல பழைய நினைவுகளை மீட்டெடுத்தது.

"நான் எப்போதும் அழுதுகொண்டே இருந்தேன்," என்று அவர் கூறுகிறார்.

அப்போது, "அற்புதமான மனிதரின் இதயத்தை நான் உடைத்துவிட்டேன். அதற்கான காரணத்தைக் கூட அவரிடம் ஒருபோதும் சொல்லவில்லை," என்று அவர் எண்ணினார்.

பின்னர், குந்தரின் குடும்ப நிறுவனம் இருக்கும் முகவரியைக் கண்டுபிடித்து அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதற்கு பதில் வரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

ஆனால், குந்தர் பதில் எழுதினார்.

"நவம்பர் 22-ஆம் தேதி அதிகாலை 12.36 மணிக்கு தொலைபேசி ஒலித்தது. அந்த அழைப்பு ஜெர்மனியில் இருந்து வந்தது என்பதைப் பார்த்தவுடன் என் இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது," என்று கேட் நினைவுகூர்கிறார்.

அதன்பிறகு இருவரும் பல மணி நேரம் பேசினர். சில வாரங்களுக்குப் பிறகு, குந்தர் கேட்டைச் சந்திக்க மான்செஸ்டருக்குப் பயணம் மேற்கொண்டார்.

"அவரைப் பார்த்த அந்த நொடி, நாங்கள் ஒருபோதும் பிரிந்ததே இல்லை என்ற உணர்வு ஏற்பட்டது," என்று கேட் கூறுகிறார்.

பின்னர், 30 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் சேர்ந்து ஏறிய அதே மலைப்பகுதிக்கு குந்தர் அவரை அழைத்துச் சென்று திருமண முன்மொழிவு செய்தார்.

அதன்பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

"வாழ்க்கையில் எல்லோருக்கும் இரண்டாவது வாய்ப்பு கிடைப்பதில்லை," என்று கேட் கூறுகிறார்.

"இனி அவரை மீண்டும் இழக்கப் போவதில்லை," என்று குந்தர் கூறுகிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு