கேரள முதல்வர் கடிதம்: கனிம வளங்களை கொண்டு செல்ல தடை விலகுமா? தமிழக அரசு தரப்பு பதில்

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்களைக் கொண்டு செல்வதற்கு தமிழ்நாடு அரசு 3 மாத காலம் தற்காலிகத் தடை விதித்துள்ளது.
மாநிலத்திற்குள் கனிமங்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யவும், சூழலியலைப் பாதுகாக்கவும், கனிமங்களின் சட்டவிரோத சுரங்கம் மற்றும் போக்குவரத்தைத் தடுக்கவும் தற்காலிகமாக தடை செய்திருப்பதாக இதற்கான உத்தரவில் தமிழ்நாடு அரசு விளக்கியுள்ளது.
இந்த நடவடிக்கையை வரவேற்கும் கட்டுமானத்துறையினர், இதனால் தமிழ்நாட்டில் எம்.சேண்ட், ஜல்லி உள்ளிட்ட பொருட்களின் விலை குறையுமென்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஆனால் இந்தத் தடை தேவையற்றது என்றும், பொய்யான குற்றச்சாட்டுகளை நம்பி இந்தத் தடையை ஏற்படுத்தி இருப்பதாகவும் தமிழ்நாடு கல் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சின்னச்சாமி கூறியுள்ளார்.
இந்தத் தடையை நீக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு கேரள முதலமைச்சர் சதீஷன் கடிதம் எழுதியுள்ளார்.
தற்காலிகமான இந்த தடை நீட்டிக்கப்படுமா அல்லது நீக்கப்படுமா என்பதை முதலமைச்சர் தான் முடிவு செய்ய முடியும் என்று தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் பிரபு சங்கர் பிபிசியிடம் தெரிவித்தார்
கனிம வளம் - 3 மாத தடை விதித்து ஆணை
தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் பிரபு சங்கர் சார்பில் கடந்த ஜூலை 27-ஆம் தேதி செயல்முறை ஆணை ஒன்று வெளியிடப்பட்டது.
''மாநிலத்திற்குள் போதுமான அளவு கனிமங்கள் கிடைப்பதை உறுதிசெய்யும் பொருட்டு, பெரிய பாறைக்கற்கள் (boulders), எம்-சாண்ட், ஜல்லி, ரயில்வே தண்டவாளக் கற்கள் (ballasts), திருவைக்கற்கள் (mill stones), கை அரவைக்கற்கள் (hand chakais) மற்றும் கட்டிடம் மற்றும் சாலை கட்டுமானக் கற்கள் ஆகியவற்றை பிற மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதை முறைப்படுத்த தற்காலிகத்தடை விதிக்கவும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது." என்று அதில் கூறப்பட்டுள்ளது.
''எல்லைப் பகுதியை நோக்கிச் செல்லும் லாரிகளின் பெருமளவிலான நடமாட்டம் உள்ளூர் பயணிகளுக்குப் பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது. மேலும் குறுகலான சாலைகளில் கனரக வாகனங்கள் செல்வதால் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளன, அவை பல உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகின்றன.'' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நகரமயமாக்கல் ஆகியவை வேகமாக நடைபெற்று வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள இந்த செயல்முறை ஆணை, அதற்கு கல் மற்றும் ஜல்லி போன்ற கட்டுமானப் பொருட்களின் தடையற்ற விநியோகம் தேவைப்படுகிறது என்றும், பொருளாதார ரீதியாகப் பயன்படுத்தக்கூடிய கரடுமுரடான கல் (rough stone) படிவுகள், தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே கிடைக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் இத்தகைய கனிம வளம் கொண்ட பகுதிகளில் குறிப்பிடத்தக்க பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்கள் (Eco-Sensitive Zones) என்றும் குறிப்பிட்டுள்ளது.
கர்நாடகம், கேரளம் மற்றும் ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் கனிமவளம் இருப்பதாகக் கூறும் செயல்முறை ஆணை, வெளிமாநிலங்களுக்கு தமிழகக் கனிமவளங்களை அனுமதிப்பது சட்டவிரோத குவாரி, இருப்பு, போக்குவரத்து, அனுமதிக்கப்பட்ட ஆழத்திற்கும் அதிகமான சுரங்கப்பணிகளுக்கு வழிவகுத்து சூழலியலுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
''தமிழகத்தில் கனிமங்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யவும், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியலைப் பாதுகாக்கவும், கனிமங்களின் சட்டவிரோத சுரங்கம் மற்றும் போக்குவரத்தைத் தடுக்கவும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு கனிமவளத்தைக் கொண்டு செல்வது தற்காலிகமாகத் தடை செய்யப்படுகிறது. 3 மாதங்களுக்கான இந்த தடை உடனே அமலுக்கு வருகிறது.'' என்று கூறப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள், இது தொடர்பாக தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும், கனிமங்கள் மற்றும் பிற பொருட்களின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இவற்றை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தடையை நீக்குமாறு கேரளா வலியுறுத்தல்

பட மூலாதாரம், Getty Images/TNDIPR
தமிழக அரசின் ஆணைப்படி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாநில எல்லைகளில் உள்ள மாவட்டங்களில் காவல்துறையினரும், கனிமவளத்துறையினரும் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தடை அமலுக்கு வந்த மறுநாளே, இதை நீக்க வலியுறுத்தி கேரள முதலமைச்சர் சதீஷன், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ''தமிழ்நாடு அரசின் தடையால் கேரளாவில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படும். தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் கேரளாவுக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.'' என்று தெரிவித்துள்ளார்.
''இயற்கை வளங்களை மேலாண்மை செய்யும் தமிழ்நாடு அரசின் கொள்கையை உணர்கிறேன். அதனால் ஜல்லி கற்களைத் தடையின்றி கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில், உரிய விலக்குகள் அளிப்பது அல்லது தகுந்த ஒரு நடைமுறையை உருவாக்குவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும்.'' என்று கோரியுள்ளார்.
ஆனால் இந்தத் தடையை வரவேற்றுள்ள பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், இதற்கு நிரந்தரத் தடை விதிப்பதோடு, சிபிஐ விசாரணைக்கும் ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதேபோல கட்டுமானத்துறையைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினரும், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கமும் இந்த தடையை வரவேற்றுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
பிபிசியிடம் பேசிய இந்த அமைப்பின் மாநிலத்தலைவர் யுவராஜ், ''கன்னியாகுமரி, கோவை போன்ற மாவட்டங்களிலிருந்து கேரளாவுக்கும், கிருஷ்ணகிரியிலிருந்து கர்நாடகாவுக்கும் தினமும் பல ஆயிரம் லாரிகளில் ஏராளமான கனிமவளம் கொண்டு செல்லப்பட்டன. இந்தத் தடையால் இரு மாநிலங்களுக்கும் செல்லும் கனிமவளங்களை இங்கேயே விற்க வேண்டியிருக்குமென்பதால் விலை நிச்சயமாகக் குறையும்.'' என்றும் யுவராஜ் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையை வரவேற்பதாகக் கூறும் இந்திய கட்டுமானர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினரான ஜோசப், ''தடை இப்போதுதான் அமலுக்கு வந்துள்ளது. இதனால் விலை குறையுமா என்பது இன்னும் ஓரிரு வாரங்கள் சென்றால் மட்டுமே தெரியவரும். ஆனால் செயற்கையான தட்டுப்பாடு இருக்காது. ஏனென்றால் கல், மணல், ஜல்லிக்கு இங்கே விற்பதே அதிகவிலை என்கிறோம். ஆனால் அண்டை மாநிலங்களில் இதை விட மிகஅதிக விலை கிடைப்பதால்தான் அங்கே அதிகமான அனுப்பிவந்தனர்.'' என்றார்.
பிபிசியிடம் பேசிய கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து கட்டுமானப் பொறியாளர்கள் (சிவில் இன்ஜினியர்கள்) சங்க செயலாளர் மணிகண்டன், ''தமிழ்நாட்டிலுள்ள குவாரிகளில் எடுக்கப்படும் கல், மணல், ஜல்லி போன்றவை கேரளத்துக்கு அதிகமாக கொண்டு செல்லப்படுகிறது. கேரளத்தில் எந்த குவாரிக்கும் அனுமதி கிடையாது. மணல் எடுக்கவும் முடியாது. அதற்காக உள்ளூர் பயன்பாட்டிற்கானதை விட 3 மடங்கு அதிகமான எடையில் லாரிகளில் கேரளத்துக்கு அவற்றை கொண்டு செல்கின்றனர். கோவை, திருப்பூர் போன்ற தொழில் வளர்ச்சி உள்ள பகுதிகளில் நடக்கும் கட்டுமானப் பணிக்கே இந்த பொருட்கள் போதியளவு கிடைப்பதில்லை.'' என்றார்.

பட மூலாதாரம், Manikandan
''எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி என அனைத்தின் விலையும் யூனிட்டுக்கு 500 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுவிட்டது. இதில் 4 யூனிட் என்பதை 3 யூனிட் ஆக்கிவிட்டதால் லாரி வாடகையும் அதிகமாகியுள்ளது. இந்த தடையால் தேவைக்கேற்ப மட்டுமே எடுக்கப்படுமென்பதால், குவாரிகளில் ஆழமாகத் தோண்டுவது குறையும். கட்டுமானப் பொருள் விலையும் குறையும். நம் மாநிலத்தின் கனிமவளமும் பாதுகாக்கப்படும்.'' என்றார் மணிகண்டன்.
அதனால் இந்தத் தடையை நிரந்தரமாக்க வேண்டுமென்பதே இவர்கள் தமிழ்நாடு அரசிடம் முன் வைக்கும் ஒருமித்த கோரிக்கையாக இருக்கிறது.
ஆனால் தமிழ்நாட்டில் எப்போதும் கனிமவளம் தட்டுப்பாடு என்பதே இல்லை என்கிறார் தமிழ்நாடு கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சின்னச்சாமி.
பிபிசியிடம் பேசிய சின்னச்சாமி, ''இந்த தடையால் கேரளத்தில் இருந்து இங்கே வரவேண்டிய ஆற்று மணல் கிடைக்காமல் போகிறது. தற்போது கேரளத்திலுள்ள பல்வேறு அணைகளில் தூர் வாரும் பணி நடப்பதால் அதில் கிடைக்கும் மணல் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. கோவை, திருப்பூர் லாரி உரிமையாளர்கள்தான் அதை எடுத்து வருகின்றனர்.'' என்றார்.
''தமிழ்நாடு அரசின் தடையால் அங்கேயிருந்து வந்த மணல் லாரிகளை கேரளத்தில் தடுத்து நிறுத்துகின்றனர். எந்தக் குவாரியிலும் இப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கனிமம் எடுப்பதில்லை. திமுக அரசு இருந்தபோதே கெடுபிடிகள் அதிகமாகிவிட்டன. இந்த அரசு வந்தபின்பு இந்த நடவடிக்கை இன்னும் கடுமையானது. இப்போது தமிழ்நாட்டில் அனுமதியற்ற கல்குவாரிகள் எதுவும் இயங்கவில்லை.'' என்றார் அவர்.
''உண்மையில் ஒரு மாநிலத்தில் பெரிய திட்டங்கள் ஏதாவது செயல்படுத்தப்பட்டால்தான் கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரிக்கும். இப்போது தமிழ்நாட்டில் பெரியளவிலான எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்பதால், வெறும் கட்டடங்களுக்குத் தேவைப்படுவதை விட மிக அதிகமாகவே நம்மிடம் கனிமப்பொருட்கள் இருப்பில் இருக்கின்றன.'' என்றார் சின்னச்சாமி.
கேரளாவுக்கு தடை நீக்குவது பற்றி தமிழ்நாடு முதலமைச்சர் கையில் முடிவு!
தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு மிக அதிகமான பாரத்தில் லாரிகளில் கனிமவளம் கொண்டு செல்லப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கிறார் கேரளத்துக்கு கட்டுமானப் பொருட்களை அனுப்பிவரும் விற்பனையாளரான அசோக்.
பிபிசியிடம் பேசிய அசோக், ''தமிழ்நாட்டிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட அளவில்தான் லாரிகளில் கல், மணல், ஜல்லி கொண்டு செல்கிறோம். ஏனென்றால் இப்போது தமிழ்நாடு அரசு விதிக்கும் அளவுக்கு அதிகமான அபராதத்தைச் செலுத்துவதற்கு எங்களைப் போன்ற விற்பனையாளர்கள் யாரும் தயாராகயில்லை. தமிழ்நாடு அரசின் தடையால் கேரளத்தில் கட்டுமானப்பணிகள் கண்டிப்பாகப் பாதிக்கப்படும். ஆனால் தடை இப்போதுதான் அமலுக்கு வந்திருப்பதால் அங்கே இனிமேல் விலையேறுமா என்பதை இப்போது கணிக்கமுடியாது.'' என்றார்.

பட மூலாதாரம், Loganathan
கேரளத்துக்கு கனிமவளங்கள் கடத்தலில் பிடிபட்ட லாரிகள், மணல் அளவு, கைது நடவடிக்கைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பல்வேறு தகவல்களையும் பெற்று, உயர்நீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்த வழக்கறிஞர் லோகநாதன் பிபிசி தமிழிடம் இதுகுறித்து பேசினார்.
சமச்சீர் வளர்ச்சிக்கான கூட்டமைப்பின் நிறுவனராக உள்ள அவர், ‘'கேரளத்திலும் இதே மேற்குத்தொடர்ச்சி மலைதான் உள்ளது. அங்கே எந்த மலையும் உடைக்கப்படவில்லை. எந்த ஆற்றிலும் இவ்வளவு ஆழமாக மணல் அள்ளப்படவில்லை. ஆனால் இங்கே தடை விதித்தால் உடனே கேரள முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதுகிறார். இதே சிறுவாணி அணையைத் தூர் வாருவதற்கு நமது தமிழ்நாடு முதலமைச்சர்கள் எத்தனை பேர் கேரள முதலமைச்சர்களுக்கு எத்தனை கடிதம் எழுதியிருக்கிறார்கள். எதையும் அவர்கள் மதிக்கவில்லை.'' என்றார் வழக்கறிஞர் லோகநாதன்.
தமிழ்நாடு அரசு பதில்
இதுகுறித்து தடை உத்தரவைப் பிறப்பித்துள்ள தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் பிரபு சங்கரிடம் பிபிசி தமிழ் பேசியது. களஆய்வுகள், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள், உள்மாநிலத்தின் தேவைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே இந்த தற்காலிகத் தடை விதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பிபிசி தமிழிடம் இதுபற்றி விளக்கிய அவர், ''அரசியல் சாசனப்படி இந்தியாவில் எந்த மாநிலத்தின் பொருளையும் எந்த மாநிலத்திலும் விற்பனை செய்யலாம். ஆனால் நம்முடைய தேவையைப் பூர்த்தி செய்து கொள்வது அவசியம் என்ற வகையில், நமது மாநிலத்தில் கட்டுமானப் பணிகள் அதிகம் நடப்பதால் அதற்கு முன்னுரிமையளித்து, கட்டுமானப் பொருட்களை வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்வதை தற்காலிகமாக தடை செய்யும் வகையில் கனிமவள விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.'' என்றார்.
''கட்டுமானப் பொருள் தட்டுப்பாடு, விலை உயர்வு, வெளிமாநிலங்களுக்கு அதிக லோடுகளில் கனிமவளம் கொண்டு செல்வதால் ஏற்படும் சாலை பாதிப்பு, விபத்து அபாயம் எனப் பல காரணங்களும் இதில் ஆய்வு செய்யப்பட்ட பின்பே இந்த தற்காலிகத்தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்தப் பொருளையும் வெளிமாநிலத்துக்குக் கொண்டு செல்வதை நிரந்தரமாக தடை செய்ய முடியாது. நீதிமன்றத்துக்குச் சென்றால் அது நிச்சயமாக நிற்காது.'' என்றார் அவர்.
'நமது அண்டை மாநிலங்களில் கனிமவளங்களுக்குக் குறைவில்லை. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மலைகள், கனிமவளங்கள் இல்லாததால் அங்குள்ள 2 மாவட்டங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை நீக்கக்கோரி கேரள முதலமைச்சர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் என்ன முடிவு எடுக்கிறார் என்பதைப் பொறுத்தே இதில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும்.'' என்றார் துறை இயக்குநர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































