ஆஸ்திரேலியாவுக்கு 150 நாய்கள் தனி விமானத்தில் செல்ல உள்ளன ஏன்?

நியூசிலாந்து, கிரேஹவுண்ட், பந்தயத் தடை, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Phil Walter/Getty Images

    • எழுதியவர், ஹாரி செகுலிச்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நியூசிலாந்தில் கிரேஹவுண்ட் நாய் பந்தய விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்துள்ள நிலையில், 150-க்கும் மேற்பட்ட கிரேஹவுண்ட் நாய்களை ஏற்றிச் செல்லும் குறைந்தது இரண்டு சார்ட்டர் விமானங்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ளன.

புதிய தடையை தொடர்ந்து, நியூசிலாந்தில் உள்ள பல கிரேஹவுண்ட் பயிற்சியாளர்கள் தங்களது நாய்களை ஆஸ்திரேலியாவுக்கு மாற்றி, அங்கு இந்த விளையாட்டைத் தொடரத் திட்டமிட்டுள்ளதாக, கிரேஹவுண்ட் ரேசிங் நியூசிலாந்து அமைப்பு பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து முழுவதும் சனிக்கிழமை முதல் இந்தத் தடை அமலுக்கு வந்தாலும், ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் கிரேஹவுண்ட் பந்தயம் இன்னும் சட்டபூர்வமாகவே உள்ளது.

இந்தத் தடை முதன்முதலில் 2024 டிசம்பரில் அறிவிக்கப்பட்டது. பின்னர் 2025 ஏப்ரலில் அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தடையால் நியூசிலாந்தில் சுமார் 1,400 கிரேஹவுண்ட் நாய்கள் பந்தய வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற உள்ளன. அவற்றுக்கு புதிய பராமரிப்பு இல்லங்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

நியூசிலாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும் கிரேஹவுண்ட் நாய்கள் "செல்லப்பிராணிகள்" என்ற வகையில் வகைப்படுத்தப்படுவதாகவும், அவை ரேபிஸ் உள்ளிட்ட நோய்கள் தொடர்பாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"ஆஸ்திரேலியாவுக்கு நாய்களை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகள், அந்த விலங்குகள் எதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதன் அடிப்படையில் அல்ல; உயிரியல் பாதுகாப்பு அபாயங்களின் அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படுகின்றன," என்று ஆஸ்திரேலியாவின் வேளாண்மை, மீன்வளம் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடந்த ஜூன் மாதம் செனட் விசாரணையில் தெரிவித்தது.

இதற்கிடையில், நாய்களை ஆஸ்திரேலியாவுக்கு மாற்றும் திட்டத்தை, "அழிந்து வரும் ஒரு தொழில்துறையின் கடைசி முயற்சி" என்று நியூசிலாந்து பந்தயத்துறை அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸின் செய்தித் தொடர்பாளர் விமர்சித்தார்.

கிரேஹவுண்ட் பந்தயம் "சமூக அங்கீகாரத்தை இழந்துவிட்டது" என்று கூறிய வின்ஸ்டன் பீட்டர்ஸ், பல்வேறு ஆய்வுகள் நாய்களின் காயம் மற்றும் உயிரிழப்பு விகிதங்கள் "ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயர்ந்தவையாகவே உள்ளன" என்று கண்டறிந்ததாக தெரிவித்தார்.

ஆனால், இதனை கிரேஹவுண்ட் ரேசிங் நியூசிலாந்து அமைப்பு மறுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு 150 நாய்கள் தனி விமானத்தில் அனுப்பப்படுகின்றன ஏன்

பட மூலாதாரம், Getty Images

'18 மாதங்களுக்கு முன்பு தடை’

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸின் செய்தித் தொடர்பாளர், "சில நாய்கள் ஆஸ்திரேலியாவுக்கு மாற்றப்பட உள்ளன என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் பெரும்பாலான நாய்கள் (1,300 முதல் 1,400 வரை) அடுத்த சில ஆண்டுகளில் புதிய பராமரிப்பு இல்லங்களில் ஒப்படைக்கப்படும்," என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், கிரேஹவுண்ட் ரேசிங் நியூசிலாந்து அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி எட்வர்ட் ரென்னல், பிபிசியிடம் பேசுகையில், ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்வதில் 6 முதல் 10 பயிற்சியாளர்கள் வரை ஆர்வம் தெரிவித்துள்ளதாக கூறினார்.

பெரும்பாலான நியூசிலாந்து குடிமக்களுக்கு ஆஸ்திரேலியாவில் வாழ சிறப்பு விசா தேவையில்லை.

இந்த இடமாற்றம் தொடர்பான இறுதி விவரங்கள் "அடுத்த இரண்டு வாரங்களில்" முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

"இன்னும் அனைத்து விவரங்களும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால் நாய்களை ஏற்றிச் செல்லும் விமானங்களுக்கான முழுச் செலவையும் எங்கள் அமைப்பே ஏற்கும். மற்ற செலவுகளை நாய்களின் உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள்," என்று ரென்னல் தெரிவித்தார்.

"ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர விரும்புபவர்களுக்கு நாங்கள் தேவையான உதவிகளை வழங்குவோம்," என்றும் அவர் கூறினார்.

மேலும், சில கிரேஹவுண்ட் நாய்கள் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து பயிற்சி பெற்று பந்தயங்களில் பங்கேற்கும் என்றும் ரென்னல் தெரிவித்தார். இருப்பினும், 18 மாதங்களுக்கு முன்பு தடை அறிவிக்கப்பட்டதிலிருந்து நியூசிலாந்தில் நாய் இனப்பெருக்கம் பெருமளவில் நிறுத்தப்பட்டிருப்பதால், தொழில்முறை பந்தயங்களில் அவை குறைவான போட்டித்திறனுடன் இருக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நியூசிலாந்து மக்கள் ஆஸ்திரேலிய கிரேஹவுண்ட் பந்தயங்களில் தொடர்ந்து பந்தயம் கட்ட முடிகிறது. ஆஸ்திரேலியாவில் இந்தத் துறைக்கு நியூசிலாந்தை விட மிகப் பெரிய வணிகச் சந்தை உள்ளது.

கிரேஹவுண்ட்ஸ் ஆஸ்திரேலேசியா வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2022-23 காலகட்டத்தில் குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவில் கிரேஹவுண்ட் பந்தயத் துறைகளின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலராக இருந்தது. இது, நியூசிலாந்தின் மொத்த 147 மில்லியன் டாலர் மதிப்பை விட பல மடங்கு அதிகமாகும்.

நியூசிலாந்து, கிரேஹவுண்ட், பந்தயத் தடை, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Phil Walter/Getty Images

நியூசிலாந்தில் தடை ஏன்?

நியூசிலாந்தில் கிரேஹவுண்ட் பந்தயத் துறையை மூடும் பணிகளை மேற்பார்வையிடும் கிரேஹவுண்ட் டிரான்சிஷன் ஏஜென்சி அமைப்பு, "சில நாய்களை பந்தய நோக்கங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால், அந்த ஏற்பாடுகள் குறித்து இதற்கு மேல் கருத்து தெரிவிக்கும் நிலையில் நாங்கள் இல்லை," என்று பிபிசியிடம் தெரிவித்தது.

2013, 2017 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் கிரேஹவுண்ட் பந்தய விளையாட்டு குறித்து மேற்கொள்ளப்பட்ட மூன்று சுயாதீன ஆய்வுகளுக்குப் பிறகே நியூசிலாந்து அரசு இந்தத் தடையை அறிவித்தது.

"பாதுகாப்பு தொடர்பாகத் சில முன்னேற்றங்களைச் செய்ததை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் நாய்களின் காயம் மற்றும் உயிரிழப்பு விகிதங்கள் தொடர்ந்து அதிகமாகவே இருந்தன; அவற்றில் முன்னேற்றம் காணப்படவில்லை," என்று அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த கிரேஹவுண்ட் ரேசிங் நியூசிலாந்து அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி எட்வர்ட் ரென்னல், "நியூசிலாந்தில் உள்ள எந்தப் பந்தயத் துறையையும் விட கிரேஹவுண்ட் நாய்களின் நலன் பாதுகாப்பு தரநிலைகளே சிறந்தவை என்று நான் இறக்கும் வரை கூறுவேன்," என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

நியூசிலாந்தின் பந்தய நாய்களை மாற்றுவதற்காக ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதிகளில் உள்ள பல நாய் பராமரிப்பு மையங்களை கிரேஹவுண்ட் ரேசிங் நியூசிலாந்து பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து குயின்ஸ்லாந்து ரேசிங் இன்டெக்ரிட்டி கமிஷன் செய்தித் தொடர்பாளர், "பந்தய கிரேஹவுண்ட் நாய்கள் வரவிருப்பது மற்றும் நியூசிலாந்தில் இருந்து சில துறை சார்ந்தவர்கள் குயின்ஸ்லாந்துக்கு இடம்பெயர வாய்ப்புள்ளது குறித்து கிரேஹவுண்ட் ரேசிங் நியூசிலாந்து எங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது," என்றார்.

அதேவேளை, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா அதிகாரிகள், குறிப்பிட்ட இடமாற்றத் திட்டங்கள் குறித்து தங்களுக்கு தகவல் இல்லை என்று தெரிவித்தனர். மேலும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையே கிரேஹவுண்ட் நாய்கள் பயணிக்க அனுமதி இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் கருத்து கேட்டு அணுகப்பட்ட ஆஸ்திரேலியாவின் வேளாண்மை, மீன்வளம் மற்றும் வனத்துறை அமைச்சகம் பதிலளிக்கவில்லை.

நியூசிலாந்தில் கிரேஹவுண்ட் பந்தயத்துக்கு தடை அறிவிக்கப்பட்ட பிறகும், பல கிரேஹவுண்ட் நாய்கள் ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2025 ஏப்ரல் மாதத்தில், 80 கிரேஹவுண்ட் நாய்கள் சார்ட்டர் விமானம் மூலம் நியூசிலாந்தில் இருந்து குயின்ஸ்லாந்துக்கு அனுப்பப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

டாஸ்மேனியாவில் புதன்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றக் குழு விசாரணையில் பேசிய கிரேஹவுண்ட்ஸ் ஆஸ்திரேலேசியா அமைப்பின் சைமன் ஸ்டவுட், ஒரு பயிற்சியாளரும் அவரது குடும்பத்தினரும் பிரிஸ்பேனின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள "புதிய வசதிகளால் ஈர்க்கப்பட்டு" ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர முடிவு செய்ததாகக் கூறினார்.

கிரேஹவுண்ட் பாதுகாப்பு கூட்டணியின் இயக்குநர் கைலி ஃபீல்ட், ஆஸ்திரேலியாவிலேயே ஓய்வு பெற்ற ஆயிரக்கணக்கான பந்தய நாய்களுக்கு புதிய இடங்களை கண்டுபிடிப்பதில் சிரமம் நீடித்து வருவதாகக் கூறினார். நியூ சவுத் வேல்ஸில் மட்டும் சுமார் 4,100 ஓய்வு பெற்ற கிரேஹவுண்ட் நாய்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"புதிய பராமரிப்பு இல்லங்களின் பற்றாக்குறையை சமாளிக்கும் முயற்சியாக, ஓய்வு பெற்ற கிரேஹவுண்ட் நாய்களை அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு அனுப்பும் திட்டத்தை பந்தயத் துறை உருவாக்கியது," என்று ஃபீல்ட் கூறினார்.

"இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட நாய்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன," என்றும் அவர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய தலைநகர் பிரதேசத்தில் கிரேஹவுண்ட் பந்தயம் ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், டாஸ்மேனியாவும் இந்த விளையாட்டை படிப்படியாக நிறுத்துவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது.

அதேபோல், ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகியவை இந்த ஆண்டில் வணிகரீதியான நாய் பந்தயத்தைத் தடைசெய்யும் சட்டங்களை நிறைவேற்றியுள்ளன.

அமெரிக்காவிலும் பெரும்பாலான மாகாணங்கள் கிரேஹவுண்ட் பந்தயத்துக்கு தடை விதித்துள்ளன. தற்போது மேற்கு வர்ஜீனியாவில் உள்ள இரண்டு பந்தய தடங்களே இன்னும் செயல்பாட்டில் உள்ள கடைசி மையங்களாக உள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு