செளதிக்கு பிறகு குவைத்துடன் பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் - இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன?

இது இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம், ISPR

    • எழுதியவர், உமைர் சலீமி
    • பதவி, பிபிசி உருது
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பாகிஸ்தானுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்துக்கு குவைத் சட்டப்பூர்வ ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் என்ன உள்ளது? ஏற்கனவே செளதி அரேபியாவுடனும் பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருக்கும் நிலையில் பாகிஸ்தானின் செல்வாக்கு உயர்ந்து வருகிறதா?

குவைத்தில் உள்ள பாகிஸ்தான் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறது. ராணுவப் பயிற்சி, உளவுத்துறை ஒத்துழைப்பு, தளவாட ஆதரவு, பாதுகாப்புத் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் அனுபவப் பரிமாற்றம் போன்ற துறைகளில் இந்த ஒப்பந்தம் கவனம் செலுத்துகிறது

குவைத்திற்கான பாகிஸ்தான் தூதர் ஜாஃபர் இக்பால், குவைத் ஊடகமான அல்-ஜரிதாவிடம், இந்த ஒப்பந்தம் ஜூன் 11, 2023 அன்று கையெழுத்திடப்பட்டதாகவும், தற்போது அதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் 12 சரத்துகளைக் கொண்டுள்ளது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு கூட்டு ராணுவக் குழுவை அமைப்பதற்கான ஏற்பாடும் இதில் இடம்பெற்றுள்ளது. அந்தக் குழு ஆண்டுக்கு ஒருமுறை கூடும்.

அதேபோல், இரு தரப்பினரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன் எந்த நேரத்திலும் ஒப்பந்தத்தைத் திருத்த முடியும்.

இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தும் பொறுப்பு இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம், Pakistan Embassy, Kuwait

செளதி - பாகிஸ்தான் இடையேயான ஒப்பந்தத்திலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?

பாகிஸ்தானுக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையேயான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் செப்டம்பர் 2025-இல் கையெழுத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, "இரு நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது மற்றொரு நாட்டின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும்."

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, போர் விமானங்கள் உட்பட பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு படைப்பிரிவு ஏப்ரல் 2026-இல் செளதி அரேபியாவில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் விமானத் தளத்திற்கு வந்தடைந்ததாக செளதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

ஆனால், குவைத் - பாகிஸ்தான் இடையேயான ஒப்பந்தத்தில் இத்தகைய பரஸ்பர பாதுகாப்பு உறுதிமொழிகள் எதுவும் இடம்பெறவில்லை.

செளதி - பாகிஸ்தான் இடையேயான ஒப்பந்தத்திலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?

பட மூலாதாரம், Pakistan Embassy, Kuwait

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பிப்ரவரி முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் வளைகுடா நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

அங்கிருக்கும் அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்குவதாக இரான் தொடர்ந்து கூறி வருகிறது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டு வருவது, பாகிஸ்தானை பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றி இருப்பதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சிங்கப்பூரை சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் அப்துல் பாசித் பிபிசியிடம், ''பிராந்தியத்தில் அமெரிக்காவின் புவிசார் அரசியல் செல்வாக்கு குறைந்து வருகிறது. அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் மீதான வளைகுடா நாடுகளின் நம்பிக்கையும் குறைந்து வருகிறது" என்றார்.

அவரை பொறுத்தவரை, கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஒரு திருப்புமுனையாக மாறி இருக்கிறது.

''அதிக ஆயுதங்களை வாங்குவது பாதுகாப்பை உறுதி செய்யாது, மாறாக பரஸ்பர பாதுகாப்பு உத்தரவாதங்களே மிக முக்கியமானவை என்பதை அது உணர்த்தி இருக்கிறது'' என்கிறார் அப்துல் பாசித்.

வளைகுடா நாடுகள் இருதரப்பு மற்றும் முத்தரப்பு பாதுகாப்பு கூட்டணிகளை நோக்கி நகர்வதாகவும் செளதி மற்றும் அமெரிக்கா ஒப்புதலுடன், இந்த செயல்முறை ஒரு 'புதிய பிராந்திய ஒழுங்கை' வடிவமைக்கிறது என்றும் அவர் கூறுகிரார்.

அமெரிக்கா தனது பாதுகாப்பு உத்தரவாத சுமையைக் குறைக்க முயற்சிப்பதாகவும், அதே நேரத்தில் வளைகுடா நாடுகள் அபாயங்களை குறைக்கவும், தங்கள் உறவுகளை சமநிலைப்படுத்தவும் கூட்டாளிகளைப் பன்முகப்படுத்தும் உத்தியை கையாள்வதாக அவர் கூறுகிறார்.

அவரை பொறுத்தவரை, இந்த நடவடிக்கை தற்போதைய சூழலில் குவைத் தனது பாதுகாப்பு முன்னுரிமைகளை மாற்றி வருவதை காட்டுகிறது.

இந்திய பாதுகாப்பு ஆய்வாளர் பிரவீன் சாஹ்னி, இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தானின் நிலையை வலுப்படுத்தும் ஒரு மிக முக்கிய முன்னேற்றம் என்கிறார்.

அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்களை முழுமையாக சார்ந்திருப்பதற்கு பதிலாக, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகள் பிராந்திய பாதுகாப்பிற்காக 'இஸ்லாமிய கட்டமைப்பை' நோக்கி நகர்கின்றன என்று பிரவீன் கூறுகிறார்.

செளதியை போலவே குவைத்தும் பாகிஸ்தானை ஓர் அணுசக்தி நாடாக கருதுகிறது என்றும், இத்தகைய கூட்டணி பாகிஸ்தானுக்கு எண்ணெய், முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் அந்நிய செலாவணிக் கையிருப்பை வலுப்படுத்துவது போன்ற பலன்களை வழங்கும் என்றும் அப்துல் பாசித் கூறுகிறார்.

இது இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன?

ராய்ட்டர்ஸ் தகவலின்படி, இந்த ஆண்டு பிப்ரவரியில் 6 நாடுகளை கொண்ட வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுடன் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான நிபந்தனைகளுக்கு இந்தியா ஒப்புக்கொண்டது.

இந்த ஆறு நாடுகளில் செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார் மற்றும் ஓமன் ஆகியவை அடங்கும். வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளுடன் இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க வர்த்தக நலன்கள் உள்ளன.

மணிகண்ட்ரோல் தகவலின்படி, வளைகுடா பிராந்தியத்தில் இந்தியா சுமார் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான இருதரப்பு வர்த்தகத்தை கொண்டுள்ளது.

குவைத், செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளுடன் இந்தியா வியூக ரீதியான கூட்டாண்மை உறவுகளையும் கொண்டுள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில் உள்ள பல நாடுகள், இந்தியா உடனான தங்களின் பொருளாதார உறவுகளையும் பாகிஸ்தானுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பையும் இன்னும் தனித்தனி கொள்கை பகுதிகளாகவே கருதுகின்றன.

பாகிஸ்தான் வளைகுடா நாடுகளுடன் பாதுகாப்பு மற்றும் கடற்படை ஒத்துழைப்பை விரிவுபடுத்தி வருவதால், அரபிக்கடல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள கடல்வழிப் பாதைகளை இந்தியா உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டிய அவசியத்தை இந்த ஒப்பந்தங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

தற்போதைக்கு இந்த ஒப்பந்தம் ராணுவ ஒத்துழைப்பில் மட்டுமே கவனம் செலுத்தினாலும், எதிர்காலத்தில் குவைத்தின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைப்புகளில் பாகிஸ்தானின் பங்கு அதிகரித்தால், அது இந்தியா கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சூழலை உருவாக்கக்கூடும்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு