You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'மொட்டை அடித்தால் ரூ.15,000': சேலத்தில் பெண்களை ஏமாற்றிய நபர் - என்ன நடந்தது?
- எழுதியவர், சுதாகர்.பா
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
"புதிய வகை தொற்றுநோய் பரவி வருகிறது. தலைமுடி வழியாக நோய் பரவுவதால் மொட்டை அடித்தால் தமிழக அரசு ரூ.15,000 வழங்கும்," என்று கூறி வந்த ஒரு தொலைபேசி அழைப்பை நம்பி, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மூன்று பெண்கள் மொட்டையடித்த சம்பவம் நடந்துள்ளது.
ஆத்தூர் அருகேயுள்ள புதுக்கொத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சில பெண்களுக்கு இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டார்.
தன்னை தாசில்தார் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திய அவர், "கொரோனாவைப் போன்ற புதிய நோய் பரவி வருகிறது. தலைமுடி வழியாக அது பரவுவதால் மொட்டை அடித்தால் நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். தமிழக அரசு அதற்காக ஊக்கத்தொகை வழங்குகிறது." என்று கூறியுள்ளார்.
அந்த நபர் ஊக்கத்தொகையாக பெண்களுக்கு ரூ.15,000, ஆண்களுக்கு ரூ.6,000, மாணவிகளுக்கு ரூ. 45,000 வழங்கப்படும் என்றும் கூறியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
'18 டோக்கன் மட்டுமே'
மோசடியை நம்ப வைப்பதற்காக "உங்கள் கிராமத்திற்கு 18 டோக்கன் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் அதிகாரிகள் பணத்துடன் வருவார்கள். அதற்குள் மொட்டை அடித்து தயாராக இருக்க வேண்டும்" என்று அந்த நபர் கூறியதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
மேலும், ஏற்கெனவே மொட்டை அடித்த பெண்களின் புகைப்படங்கள், பணக்கட்டுகளின் படங்கள் உள்ளிட்டவற்றை வாட்ஸ்அப் மூலம் அந்த நபர் அனுப்பியுள்ளார்
இந்த தகவலை நம்பி சுமார் 20 பேர் மொட்டை அடிக்கத் தயாரான நிலையில், மூன்று பெண்கள் மொட்டையடித்துள்ளனர்.
பின்னர் அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது செல்போன் அணைக்கப்பட்டிருந்ததால் அவர்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.
பிபிசியிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், "அதிகாரிகள் வரும்போது மேசை, நாற்காலி போட்டு பணம் வாங்க தயாராக இருக்கச் சொன்னார்கள். சந்தேகம் வந்தபோது ஏற்கனவே மொட்டை அடித்தவர்களின் புகைப்படங்களையும் அனுப்பினர். அதனால் நம்பிவிட்டோம்," என்றார்.
போலீஸ் எப்படி கண்டுபிடித்தது?
புகார் கிடைத்தவுடன் ஆத்தூர் ஊரக காவல்துறையினர் சைபர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செல்போன் எண்ணை கண்காணித்தனர்.
விசாரணையில், சந்தேகநபர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்றும், மொபைல் போன் மூலம் அவரின் இருப்பிடத்தை கண்டறிந்து கைது செய்ததாகவும் ஆத்தூர் ஊரக காவல் நிலைய ஆய்வாளர் குலசேகரன் கூறினார்.
''மோசடி நபரின் செல்போன் இயக்கத்தில் இருந்ததால் அவரை கண்டுபிடிப்பதில் பெரிய சிக்கல் ஏதும் ஏற்படவில்லை. இதற்கென தனியாக தனிப்படை அமைக்காமல், மொபைல் போன் தகவல்களின் அடிப்படையில் குறுகிய நேரத்திலேயே அவரை கைது செய்தோம்'' என்றார் அவர்.
விசாரணையில், 'போதையில் இருந்தபோது விளையாட்டாக செய்தேன். மக்கள் உண்மையிலேயே மொட்டை அடித்துவிடுவார்கள் என்று நினைக்கவில்லை' என்று சதீஷ்குமார் தெரிவித்ததாக ஆய்வாளர் குலசேகரன் கூறினார்.
அவர்மீது இதற்கு முன்பு பெரிய குற்றப் பதிவுகள் இல்லை என்றும், கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
"டெலகிராம் செயலியில் பல்வேறு குழுக்களில் குற்றம்சாட்டப்பட்டவர் உறுப்பினராக உள்ளார். இதில் சில குழுக்களில் மொட்டையடிக்கும் வீடியோக்களை பகிர்ந்து அதை குழு உறுப்பினர்கள் ரசித்து வந்துள்ளனர்.
தாசில்தார் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி பாதிக்கப்பட்டவர்களிடம் பேசியுள்ளார். கொரோனாவை போல் தற்போது வைரஸ் பரவுவதாகவும், மொட்டையடித்தால் இது சரியாகிவிடும் என்று கூறிய அவர், அதற்காக அரசு தருகிறது என கூறியுள்ளார்.
மொட்டையடித்துவிட்டு அந்த பெண்கள் அழைத்தபோது சரியான பதிலை கூறவில்லை. பின்பு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இதன்பின்பே பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்." என ஆய்வாளர் குலசேகரன் கூறினார்.
குறிப்பிட்ட நபரின் நடத்தை உண்மையில் போதை அல்லது மனநலக் கோளாறு காரணமாக இருந்ததா என்பதை மருத்துவ பரிசோதனையின்றி உறுதிப்படுத்த முடியாது என்று மனநல மருத்துவர் முனைவர் ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மக்களிடம் விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு இரண்டும் அவசியம் என்பதை காட்டுகின்றன என்றும் அவர் கூறுகிறார்.
காவல்துறை பொதுமக்களுக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளது.
- அரசு எந்தத் திட்டத்தையும் தனிப்பட்ட செல்போன் அழைப்பின் மூலம் அறிவிக்காது.
- வாட்ஸ்அப் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை ஆதாரமாக நம்பக்கூடாது.
- சந்தேகமான அழைப்புகள் வந்தால் அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது சைபர் குற்றப்பிரிவை உடனடியாக தொடர்புகொள்ள வேண்டும்.
- அரசு திட்டங்கள் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் மட்டுமே உறுதி செய்ய வேண்டும்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு