You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'விஜய் இங்கு வர வேண்டாம்' - கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறுவது என்ன? தமிழ்நாட்டில் என்ன நிலவரம்?
காவிரி நதிநீர் பிரச்னை, மேகேதாட்டில் புதிய அணை கட்டும் விவகாரம் ஆகியவை தொடர்பாக, ஆகஸ்ட் 3ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பெங்களூரு செல்ல உள்ளதாகத் தகவல் வெளியானது.
இதற்கிடையே, தற்போது கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், விஜய் இப்போது நிலவும் சூழலில் வருவதற்குப் பதிலாக, நிலைமை சுமூகமானதாக மாறிய பிறகு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு தினசரி 3,500 கன அடி வீதம் 4 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலத்தின் நீர் இருப்பு மற்றும் ஆணையத்தின் உத்தரவு குறித்து கர்நாடக முதலைமைச்சர் டிகே சிவக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
காவிரி நதிநீர் மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடகாவுக்கு பயணம் மேற்கொள்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. அவருடன் 13 பேர் கொண்ட குழு கர்நாடகா செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால், கர்நாடகாவில் துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதலமைச்சர் டி .கே சிவக்குமார், "நட்பான ஒரு சூழலில் நாம் சந்திக்க வேண்டும் என்று நான் தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இந்த நீதிமன்ற வழக்குகள் முடியட்டும், நதிநீர் தொடர்பான மாநிலத்தில் நிலவும் சூழ்நிலைகள் சீராகட்டும், இந்த நாட்டின் சட்டத்தை நாம் மதிக்க வேண்டும். இப்போது இருப்பதைவிட இன்னும் இணக்கமான சூழலில் நாம் சந்திப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
மறுபுறம், இரு மாநில முதலமைச்சர்கள் இடையே இப்படியொரு சந்திப்பு திட்டமிடப்பட்டு இருப்பதாக, தமிழ்நாடு அரசுத் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை.
தமிழ்நாடு முதலமைச்சரின் கர்நாடகா பயணம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவக்குமார் "விஜய் நேரில் வந்து பல்வேறு விவகாரங்கள் குறித்து எங்களுடன் ஆலோசிக்க விரும்புவதாக முதலமைச்சர் அலுவலகம் எங்கள் தலைமைச் செயலாளரைத் தொடர்புகொண்டு தெரிவித்தது. அந்தக் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக் கொண்டு, இரு மாநில முதலமைச்சர்கள் இடையிலான சந்திப்பை ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு நிர்ணயித்தோம்" என்று கூறியுள்ளார்.
ஆனால், "காவிரி நீர் தொடர்பாக தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுக்குப் பிறகு, தற்போது நிலவும் சூழல் இந்தச் சந்திப்புக்கு ஏற்றதாக இல்லை என்று தான் கருதுவதாகவும், எனவே தமிழ்நாடு முதலமைச்சர் தனது வருகையைச் சில காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும்" அவர் குறிப்பிட்டார்.
டி.கே. சிவக்குமார், "இந்தச் சந்திப்பு நட்புறவான, அமைதியான மற்றும் சுமூகமான சூழலில் நடைபெற வேண்டும் என்பதே எனது விருப்பம். கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களும் பயனடைய வேண்டும். இரு மாநிலங்களுக்கும் இடையில் எந்தவிதமான மனக் கசப்பும் ஏற்படக்கூடாது. நீர் கிடைப்பது பெரும்பாலும் மழையைப் பொறுத்தே உள்ளது. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்ற வேண்டிய கடமை கர்நாடகாவுக்கு உள்ளது. அந்த உத்தரவை மீற வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கில்லை" என்று தெரிவித்தார்.
மேகேதாட்டு அணை தொடர்பாகப் பேசும்போது, நீர் மேலாண்மையைப் பொருத்தவரை கர்நாடகாவைவிட தமிழ்நாட்டிற்கே அது அதிகமாகப் பயனளிக்கும் என்று தான் நம்புவதாகக் குறிப்பிட்ட கர்நாடகா முதலமைச்சர் "கர்நாடகாவுக்கு கிடைக்கக்கூடிய கூடுதல் நன்மை பெரும்பாலும் மின்சார உற்பத்திதான்" என்று கூறினார்.
அதே நேரத்தில், "அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் கர்நாடகாவின் அரசியல் கட்சிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் தகவல் தெரிவிப்பது எனது கடமை. அரசியல் ரீதியாக எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கர்நாடகாவின் பரந்த நலன் சார்ந்த விவகாரங்களில் அவர்கள் அரசுக்கு ஆதரவாகவும் ஒத்துழைப்பாகவும் இருந்து வருகின்றனர்" என்றும் குறிப்பிட்டார்.
ஆகையால், அவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அனைத்துக் கட்சிகளின் கருத்துகளையும் நம்பிக்கையையும் பெறவிருப்பதாகக் கூறிய டி.கே. சிவக்குமார், அதுவரை தமிழ்நாடு முதலமைச்சர் இந்தச் சந்திப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகக் குறிப்பிட்டார். அத்துடன், சூழல் அமைதியாகவும் பதற்றமின்றியும் சுமூகமாகவும் இருக்கும் நேரத்தில் நாம் சந்தித்து, இரு மாநிலங்களின் நலன்கள் குறித்த விவகாரங்களில் பேசி தீர்வு காணலாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக புதுடெல்லியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், "கர்நாடக மாநில அரசின் தலைமைச் செயலாளருக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார். என்னிடமும் அவர் தொலைபேசியில் பேசினார். பெங்களூருவில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு அவரை அழைத்துள்ளேன்" எனக் கூறினார்.
தங்கள் மாநிலத்துக்கு வரவிருக்கும் விருந்தினர்களை உரிய மரியாதையுடன் வரவேற்பது தங்கள் கடமை என்றும் அவரை வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாகவும் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
கர்நாடகாவில் உள்ள காவிரிப் படுகைகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால் அதை நேரில் பார்வையிடுமாறு முதலமைச்சர் விஜயிடம் தான் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், டி.கே.சிவக்குமார் கூறினார்.
இதற்காக "வான்வழியே பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யவிருப்பதாக, விஜயிடம் தெரிவித்துள்ளேன். இங்குள்ள களநிலவரத்தை அவர் நேரில் காண வேண்டும்" எனக் கூறியதாகவும் டி.கே.சிவக்குமார் குறிப்பிட்டார்.
கர்நாடகா பயணம் தொடர்பாக தமிழ்நாடு அரசுத் தரப்பில் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை. இருப்பினும், இந்த விவகாரம் அரசியல்ரீதியாக பேசுபொருளாக மாறியது.
"காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத தீர்ப்பு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு, காவிரி ஒழுங்குமுறை ஆணையம் ஆகிய சட்ட அமைப்புகளின்படி இரு மாநில அரசுகளும் நடந்துகொள்ள வேண்டும்" என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திப்பது விஷப் பரீட்சை எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.
"கர்நாடக முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினால் எந்தத் தீர்வும் ஏற்படப் போவதில்லை" என்று காவிரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார். இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "29ஆம் தேதி அதிகாலை முதல் 3500 கனஅடி நீரை திறந்துவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் இன்று வரை தண்ணீர் வரவில்லை" என்றார்.
"காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு எந்தவித இரு மாநில முதலமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை. எனவே, அவர்களுக்கு இடையே சந்திப்பு நிகழ்வதைக் கடுமையாக எதிர்ப்பதாகவும்" அவர் குறிப்பிட்டார்.
"இந்த விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மட்டுமே முடிவெடுக்க வேண்டும். இந்த ஆணையம் உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது" எனக் கூறும் பி.ஆர்.பாண்டியன், "கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தைக்குச் செல்வது என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயல்" என்றார்.
"கர்நாடகாவின் செயலால் மிகப்பெரிய அளவில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 'கர்நாடகம் தண்ணீர் தர மறுத்தால் மத்திய அரசின் உதவியைப் பெற்று தண்ணீரை திறக்க வேண்டும்' என காவிரி நடுவர் மன்றமும் உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது" என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
பி.ஆர்.பாண்டியனின் கூற்றுப்படி, "மேகேதாட்டு தொடர்பாகவோ, காவிரி நீர் தொடர்பாகவோ பார்வையிடுவதற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்றால் டெல்டாவில் வறண்டு கிடக்கும் பாசனப் பகுதிகளை டி.கே. சிவக்குமாரும் நேரில் பார்வையிடுவதற்கு வர வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இதே கருத்தை முன்வைத்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி, "கர்நாடகாவுக்கு சென்று அம்மாநில முதலமைச்சர் சிவக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தியே தீருவேன் என்று முதலமைச்சர் விஜய் பிடிவாதம் பிடிப்பது தமிழக நலனுக்குப் பயனளிக்காது" எனக் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் காவிரி பாயும் மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகள் எச்சரித்துள்ளதை மேற்கோள் காட்டியுள்ள அன்புமணி, "இதுகுறித்து விவாதிக்க ஆகஸ்ட் 2ஆம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கர்நாடக முதலமைச்சர் கூட்டியிருக்கிறார்" என்பதையும் குறிப்பிட்டார்.
"தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீரைக்கூட தரக் கூடாது என்ற மனநிலையில் கர்நாடகா இருக்கும்போது, மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகள்தான் தாரைவார்க்கப்படும். இந்தத் தவறை முதலமைச்சர் விஜய் செய்யக்கூடாது" எனவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், "கர்நாடகாவுக்கு முதலமைச்சர் விஜய் செல்லவிருப்பதாகக் கூறுகிறார்கள். நமக்குத் தண்ணீர் தர கர்நாடகா மறுக்கும் நிலையில் முதலமைச்சர் அங்கு சென்று என்ன செய்யப் போகிறார்? எனக் கேள்வியெழுப்பியதுடன், "இந்த முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் ஜோசப் விஜயின் பயணத் திட்டம் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளிவராத நிலையில், தமிழ்நாடு எரிசக்தித் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் சில விளக்கங்களை அளித்துள்ளார்.
"முதலமைச்சர் அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்து வருகிறார். சட்டரீதியாக என்ன செய்யவுள்ளோம் என்பது தெரியும். இந்தப் பிரச்னையில் ஒன்றிய அரசுதான் தீர்வு கொடுக்க முடியும்" எனக் கூறினார்.
காவிரி விவகாரம் தொடர்புடைய வல்லுநர்களுடன் பேசி வருவதாகவும், 1980ஆம் ஆண்டில் இருந்து என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்தார்.
மேலும், "காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருந்து, இவ்வளவு கனஅடி நீர் திறக்க வேண்டும் எனக் கூறியும் கர்நாடகா ஒப்புக் கொள்ள மறுக்கிறது. உச்ச நீதிமன்றம் மூலமாக தேவையான நீரைப் பெற வேண்டும். காவிரி விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசின் அமைச்சரே தமிழக மக்களுக்கு எதிராகப் பேசி வருகிறார். இதைக் கண்டிப்பதற்குக்கூட இங்குள்ள கட்சிகள் தயாராக இல்லை. இதை சட்டரீதியாக உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வோம்" என்றும் நிர்மல்குமார் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் கர்நாடகா செல்வது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனக் கூறிய அவர், "காவிரியை மையமாகக் கொண்டே கர்நாடகாவில் அரசியல் நடந்து வருகிறது. இதை அரசியலாகப் பார்க்காமல் தமிழக விவசாயிகள் நலனைப் பார்க்க வேண்டும். ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. ஒரு வாரத்துக்குள் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து பதில் வரும்" என்றார்.
இந்த விவகாரத்தில், ஒன்று உச்ச நீதிமன்றம் மூலமாக தீர்வைப் பெறுவது, அடுத்து காவிரி நடுவர் மன்றம், உள் மாநிலங்களில் பேசுவது, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது என மாநில அரசுக்கு நான்கு அணுகுமுறைகள் இருப்பதாகவும் சி.டி.ஆர். நிர்மல்குமார் குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் 2 ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவுள்ளது. தமிழ்நாட்டின் பாசன உரிமையைப் பாதுகாக்கும் நோக்கிலும் மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியைக் கண்டித்தும் இந்தப் போராட்டம் நடக்க உஇருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு