You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நெல்லை அருகே பட்டியல் பிரிவைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவர் தாக்கப்பட்டது ஏன்? இன்றைய முக்கிய செய்திகள்
இன்றைய (11/03/2025) தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைய ஊடகங்களில் வெளியான முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில், பரீட்சை எழுத பேருந்தில் சென்ற பிளஸ்-1 மாணவர் ஒருவரை, ஒரு கும்பல் தாக்கியதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், "தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் தங்க கணேசன். இவருக்கு தேவேந்திர ராஜ் (வயது 17) உள்பட 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
தேவேந்திர ராஜ், நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். தற்போது பிளஸ்-1 பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் நேற்று (மார்ச் 10) ஆங்கில தேர்வு எழுதுவதற்காக காலையில் வழக்கம்போல் தேவேந்திர ராஜ் தனியார் டவுன் பேருந்தில் பாளையங்கோட்டைக்கு புறப்பட்டார்.
அரியநாயகிபுரத்தைக் கடந்து பேருந்து சென்ற போது திடீரென்று ஒரு கும்பல் பேருந்தை வழிமறித்தது. அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பேருந்திற்குள் ஏறி சென்று தேவேந்திர ராஜை பிடித்து வெளியே இழுத்து, அரிவாளால் தாக்கிவிட்டு தப்பிவிட்டனர்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று காயமடைந்த தேவேந்திர ராஜை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
'மாணவர் தேவேந்திர ராஜின் தலையில் 6 இடங்களில் வெட்டுக்காயங்கள் உள்ளன. இரண்டு கைகளிலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. பிளாஸ்டிக் சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட 7 பிரிவுகளை சேர்ந்த 20 டாக்டர்கள் அடங்கிய குழுவினர் மாணவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கின்றனர்' என்று பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனை டீன் ரேவதிபாலன் தெரிவித்தார்.
மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து தமிழர் விடுதலை களம் மாநில கொள்கை பரப்பு செயலாளர் மாரியப்பபாண்டியன், மாணவரின் தந்தை தங்க கணேசன் உள்ளிட்டவர்கள் அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை மைய அறையின் முன்பாக தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
'கபடி போட்டியில் நிகழ்ந்த மோதல் காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தில் மாணவர் தேவேந்திரராஜை கும்பல் வெட்டியதா? அல்லது காதல் விவகாரத்தில் தாக்கப்பட்டாரா?' என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்" என்று அந்தச் செய்தி கூறுகிறது.
தாக்குதல் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் போலீசார் வன்கொடுமை தடுப்புச்சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர் என்றும், கெட்டியம்மாள்புரத்தை சேர்ந்த 3 சிறுவர்களை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.
பால் சப்ளைக்கு பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு: ஆவின் உறுதி
தமிழகத்தில் பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுகளுக்கு மாற்றுப் பொருட்களை வழங்க சில நிறுவனங்கள் முன்வந்திருப்பதாகவும், அப்பொருட்கள் குறித்து 2 வாரங்களுக்குள் பரிசோதித்து பார்க்க இருப்பதாகவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது என்றும் தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சுரேந்திரநாத் கார்த்திக், பாளையங்கோட்டையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அய்யா ஆகியோர் தனித்தனியாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் ஆவின் உள்ளிட்ட நிறுவனங்கள் பால் மற்றும் பால் பொருள்களை பிளாஸ்ட்டிக் பாக்கெட்டுகளில் விற்பனை செய்கின்றன.
இவற்றை முறையாக சேகரித்து மறுசுழற்சி செய்ய எந்த வசதியும் செய்யப்படவில்லை. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, நெகிழி பாக்கெட்டுகளில் பால் மற்றும் பால் பொருள்களை விற்க தடை விதிக்க வேண்டும். கண்ணாடி பாட்டில்களில் பால் பொருள்களை விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கண்ணாடி பாட்டில் அல்லது மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டிலில் பால் விற்பனையை மேற்கொள்ள அதிக செலவாகும். இதைச் செயல்படுத்துவது சாத்தியம் இல்லை என ஆவின் நிர்வாகம் தெரிவித்தது.
அதற்கு, வெளிநாடுகளில் கண்ணாடி பாட்டில் மற்றும் மறு சுழற்சி செய்யக்கூடிய நெகிழி பாட்டில்களில் பால் விற்பனை செய்யப்படுகிறது. அதை ஏன் தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது? என கேள்வி எழுப்பிய தீர்ப்பாயம் இதுதொடர்பாக ஆவின் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உறுப்பினர் சத்ய கோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வேறு மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்தி பால் வழங்குவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
அதன்படி, மாற்று வழிகளை சில நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளன. இதற்கான செயல் விளக்கங்களை அந்த நிறுவனங்கள் இரு வாரங்களுக்குள் வழங்கவுள்ளன எனத் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, பிளாஸ்டிக் பாக்கெட்டுகளால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதைத் தடுக்க ஆவின் நிர்வாகம் நிரந்தர தீர்வை கொண்டு வரும் என நம்புகிறோம் எனக் கூறி விசாரணையை ஏப்ரல் 8-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர் என தினமணி நாளிதழின் செய்தி கூறுகிறது.
'3வது பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் பரிசு'- தெலுங்கு தேசம் எம்.பி
ஆந்திர மாநிலம், விஜயநகரம் மக்களவை தொகுதி உறுப்பினர் அப்பல் நாயுடு. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இவர், "ஆந்திராவில் 3-வதாக பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 பரிசாக வழங்குவேன். ஒருவேளை ஆண் குழந்தை பிறந்தால் ஒரு பசு மாடு பரிசாக வழங்குவேன்" என அறிவித்துள்ளதாக 'இந்து தமிழ் திசை' நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.
தனது தொகுதியில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய அப்பல் நாயுடு, "எங்கள் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தற்போது ஒவ்வொரு கூட்டத்தில் பேசும்போதும் மக்கள் தொகை பற்றி பேசுகிறார். நம் நாட்டில் 140 கோடி மக்கள் தொகை இருந்தாலும், வடஇந்தியாவைவிட தென்னிந்தியாவில் மக்கள் தொகை விகிதம் குறைவாக உள்ளது. எனவே, இதை கணிசமாக அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்ற தொகுதிகள் குறையாது. தமிழக முதல்வர் ஸ்டாலின் கூட இதைத்தான் வலியுறுத்துகிறார்."
"எனவே, ஆந்திராவில் இனி 2 பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளுங்கள். 3-வதாக பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 பரிசாக வழங்குவேன். ஒருவேளை ஆண் குழந்தை பிறந்தால் ஒரு பசு மாடு பரிசாக வழங்குவேன்." இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.
தேனி வியாபாரியின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.24 லட்சம் கொள்ளை
தேனி வியாபாரி வங்கிக் கணக்குகளில் இருந்து, செல்போன் செயலி மூலம் ரூ.24 லட்சம் பறிபோன வழக்கில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தினத்தந்தி நாளிதழின் செய்தி கூறுகிறது.
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்த 42 வயது நபர் ஒருவர், பலசரக்கு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அவருடைய மனைவி நகை அடகு கடை வைத்துள்ளார்.
இவர்கள் 2 பேரும், தனித்தனியாக ஆண்ட்ராய்டு கைப்பேசிகளை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள், தங்களின் வங்கிக் கணக்கு தொடர்பான செயலிகளை செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களுடைய குழந்தைகள் அடிக்கடி செல்போன்களை எடுத்து வீடியோ பார்ப்பது, விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அந்த வியாபாரி தனது வங்கிக் கணக்கு இருப்பு மற்றும் மனைவியின் வங்கிக்கணக்கு இருப்பு விவரங்களை 3 மாதங்களுக்கு ஒருமுறை வங்கிக் சென்று சரிபார்ப்பது வழக்கம்.
அதன்படி கடந்த ஆண்டு இவர், வங்கிக்கு சென்று இருப்பு விவரங்களை சரிபார்த்தார். அப்போது அவர்கள் பயன்படுத்தி வந்த 3 வங்கிக்கணக்குகளில் இருந்து, மொத்தம் ரூ.24 லட்சத்து 69 ஆயிரத்து 600 பறிபோனதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் பணம் எங்கே சென்றது என்ற விவரங்களை சரிபார்த்த போது, பல்வேறு புதிய வங்கிக் கணக்குகளுக்கு பல்வேறு தவணையாக பணம் சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அந்த வியாபாரி தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தைகள் பதிவிறக்கம் செய்த ஒரு செல்போன் செயலி மூலம், மர்ம நபர்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடி இருப்பதாக தெரியவந்தது.
அதில், ஒரு வங்கிக் கணக்கு பீகார் மாநிலம் பாட்னா அருகே பண்டாரக் பகுதியை சேர்ந்த அர்ஜூன்குமார் (22) என்பவரின் பெயரில் இருந்தது. அவரை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் பெங்களூரு பகுதியில் இருப்பதாக தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூரு சென்று அர்ஜூன்குமாரை கைது செய்தனர். பிளஸ்-2 படித்துவிட்டு அவர் கட்டுமான தொழில் செய்து வந்ததாக தெரியவந்தது. அவர் தனது பெயரில் தொடங்கிய வங்கிக் கணக்கு விவரங்கள், செல்போன் சிம் கார்டு ஆகியவற்றை இந்த மோசடி செய்யும் கும்பலுக்கு கொடுத்து அதற்கு கமிஷன் தொகை பெற்றதாக தெரியவந்தது என தினமணி செய்தி கூறுகிறது.
இதேபோல் பீகாரை சேர்ந்த அவருடைய நண்பர்கள் சிலரும் இதுபோன்ற மோசடி கும்பலுக்கு செல்போன், வங்கிக் கணக்கு விவரங்களை விற்பனை செய்ததாக தெரியவந்ததுள்ளது என்றும், அர்ஜூன்குமாரை தேனிக்கு நேற்று அழைத்து வந்த போலீசார் அவரது நண்பர்கள் உள்பட சிலரை தேடி வருகின்றனர் என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
'கொழும்பு தேசிய பாடசாலைகளில் தமிழ் பிரிவு வகுப்புகள் திட்டமிட்டு குறைப்பு'
"கொழும்பில் உள்ள பிரபல தேசிய பாடசாலைகளில் தமிழ் பிரிவுகளில் வகுப்புகள் திட்டமிட்டு குறைக்கப்படுகின்றன. இது, பல்லின மக்கள் வாழும் இங்கு தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த இருக்கும் வாய்ப்பை இல்லாமலாக்கும் செயலாகும்" என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார் என இலங்கையின் வீரகேசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (மார்ச் 10) நடைபெற்ற 2025 வரவு - செலவுத் திட்டத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் என அந்தச் செய்தி கூறுகிறது.
அதன்படி, "கொழும்பில் இருக்கும் பிரதான கல்லூரிகளான ரோயல், இசிபதன மற்றும் டி,எஸ். ஆகிய மூன்று கல்லூரிகளிலும் தமிழ் பிரிவு இருந்து வருகிறது. ஆனால் படிப்படியாக இந்த வளம்மிக்க தேசிய பாடசாலைகளில் தமிழ் பிரிவு வகுப்புகள் குறைக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பு ரோயல் கல்லூரியில் ஆரம்ப பிரிவில் சிங்கள மொழி மூல 8 வகுப்புகள் இருக்கும் நிலையில் தமிழ்மொழி மூலம் 2 வகுப்புகளே இருக்கின்றன. அதே பாடசாலையில் கனிஷ்ட பிரிவில் தரம் 6 தொடக்கம் 11 வரையில் சிங்கள மொழி மூலம் 7 வகுப்புகள், தமிழ் மொழி மூலம் 2 வகுப்புகள் ஆங்கில மொழி மூலம் 6 வகுப்புகள் இருக்கின்றன." என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தனது உரையில் பல கல்லூரிகளை உதாரணமாகக் காட்டிய அவர், "இது மிகவும் பாரபட்சமான நிலைப்பாடாகும். ஏனெனில் சிங்கள, தமிழ் முஸ்லிம்கள் என பல இனங்கள் ஒன்றாக வாழ்கின்ற இடங்களில்தான் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க முடியும்.
பல்லின மக்கள் வாழும் இந்த பிரதேசங்களில் நாங்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் என அமைத்துவிட்டு, சிறு வயதிலேயே மாணவர்களை சிங்களம், தமிழ், முஸ்லிம் என பிரித்து வைத்து, அவர்கள் 18 வயதான பின்னர் நீங்கள் அனைவரும் இலங்கையா்களாக ஒன்றாக எழுந்து நிற்க வேண்டும் என தெரிவித்தால், அது சாத்தியமாகப் போவதில்லை." என்று கூறியுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.
மேலும், "இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமான ஒரு மாவட்டமாக கொழும்பு மாவட்டம் காணப்படுகிறது. அதனால் கல்லூரிகளில் தமிழ் மொழி வகுப்புகளை அதிகரிக்க வேண்டும். ஆனால் சில அதிகாரிகள் ஒன்றுபட்டு இந்த கல்லூரிகளில் தமிழ் வகுப்புகளை திட்டமிட்டு குறைக்கிறார்கள்.
அது மாத்திரமின்றி ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளபோதும் இடமிருக்கின்றபோதும் மாணவர்களை அந்த வகுப்புகளில் சேர்ப்பதில்லை. இந்த சம்பவம் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது." என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதேபோன்று சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்கள் ஒரு கூரையின் கீழ் படிக்க முடியுமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், "அதனை முதலில் பிரபல பாடசாலைகளில் ஆரம்பியுங்கள். கொழும்பில் அதனை செய்ய முடியும்." என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார் என வீரகேசரி நாளிதழின் செய்தி கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)