கன்னியாகுமரி அணுக்கனிம சுரங்க திட்டம்: தமிழக அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு எழுவது ஏன்?

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்காக மத்திய அரசின் ஐஆர்இஎல் (IREL) நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டு ஆணையை ஒரு வருடத்திற்கு நீட்டிப்பதாக கடந்த மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இதற்கு அரசியல் கட்சிகள், மீனவ அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன.

குறிப்பாக, 'கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும்' என கடந்த 2024இல் தவெக தனது செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி இருந்தது.

கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் 'மக்களைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் அரசு அனுமதிக்காது, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சரும் கிள்ளியூர் சட்டப்பேரவை உறுப்பினருமான ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

'இந்தத் திட்டத்தால், அணுக்கனிம சுரங்கம் அமையவுள்ள பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு கதிர்வீச்சு பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு அபாயங்கள் ஏற்படலாம்' என்றும், 'மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம்' என்றும் இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை ஐஆர்இஎல் நிறுவனம் மறுக்கிறது.

பின்னணி என்ன?

'இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட்' என அறியப்பட்ட ஐஆர்இஎல், இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும்.

1950-இல் நிறுவப்பட்ட இந்நிறுவனம், கடற்கரை மணல் கனிமங்கள் மற்றும் அருமண் கனிமங்களை (Rare earth elements) அகழ்ந்தெடுத்தல், பிரித்தெடுத்தல் மற்றும் செயலாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமாகும்.

ஐஆர்இஎல் நிறுவனம் 1960-கள் முதலே கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் ஓர் ஆலையை இயக்கி வருகிறது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிமச் சுரங்கப் பணிகளை மேற்கொள்வதற்காக, 1,144 ஹெக்டேர் நிலத்திற்கு மத்திய சுரங்க அமைச்சகத்திடம் இருந்து 2021 ஜூன் 11 அன்று ஐஆர்இஎல் நிறுவனம் நில ஒதுக்கீட்டு ஒப்புதலைப் பெற்றிருந்தது. இதற்கு மாநில அரசும் ஒப்புதல் அளித்திருந்தது.

கிள்ளியூர் தாலுகாவில் உள்ள எட்டு கடற்கரை கிராமங்களில் இலுமினைட், ரூட்டைல், லூகோக்சீன், சிர்கான், மோனசைட், கார்னெட், சில்லிமனைட் ஆகிய கடற்கரை மணல் கனிமங்கள் அகழ்ந்தெடுக்கப்படும் என ஐஆர்இஎல் நிறுவனம் கூறியது.

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் (எம்எம்டிஆர் சட்டம்) பிரிவு 17-இன் கீழ் வழங்கப்பட்ட ஒப்புதல், ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் வகையில் இருந்ததுடன், 2026 ஜூன் 10 அன்று காலாவதியாகும் எனவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அதன்பின்னர் ஐ.ஆர்.இ.எல் நிறுவனம் சுரங்கக் குத்தகைக்கு விண்ணப்பித்தது, இதற்கான சுரங்கத் திட்டத்திற்கு அணுக்கனிம இயக்குநரகம் பிப்ரவரி 2024-இல் ஒப்புதல் அளித்தது. இருப்பினும், இந்தத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி (EC) மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதி தேவைப்படுகிறது. அவை இன்னும் நிலுவையில் உள்ளன.

இந்த அனுமதிகளைப் பெறுவதற்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஜூன் 2026-இல் நில ஒதுக்கீட்டின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டுக்கு (ஜூன் 2027 வரை) நீட்டித்துள்ளது.

"தற்போது நிலுவையில் உள்ள அனுமதிகளைப் பெற அந்நிறுவனத்திற்கு இந்த ஒரு வருடம் காலம் போதுமானதாக இருக்கும். ஒருவேளை இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்காவிட்டால் அந்நிறுவனம் மீண்டும் முதலில் இருந்து அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டியிருந்திருக்கும்," என்கிறார் பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.

"ஐ.ஆர்.இ.எல் நிறுவனம் முன்னதாக 2023-ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருந்தது. பொதுமக்களின் போராட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, கன்னியாகுமரியில் 2024 அக்டோபர் 1-ஆம் தேதி நடைபெறவிருந்த மக்கள் கருத்து கேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது" என்கிறார் வெற்றிச்செல்வன்.

ஐஆர்இஎல் நிறுவனம் 2025 ஜூலை 22-ஆம் தேதி கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதிக்கு விண்ணப்பித்தது. அதன் பின்னர், 2025 செப்டம்பர் 8-ஆம் தேதி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், அணு கனிமங்கள் சம்பந்தப்பட்ட சுரங்கத் திட்டங்களுக்கு கட்டாய மக்கள் கருத்து கேட்பு கூட்டங்களிலிருந்து விலக்கு அளித்தது.

"மத்திய அரசின் அந்த நடவடிக்கை அத்திட்டத்திற்கான ஒரு பெரிய தடையை நீக்கியது," என்கிறார் வெற்றிச்செல்வன்.

அதன் பின்னர், "நில ஒதுக்கீட்டு ஒப்புதலை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கக் கோரி, ஐஆர்இஎல் நிறுவனம் 2026 ஜனவரி 31 அன்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தது. திமுக அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில், புதிய அரசு 2026 ஜூன் 10 அன்று இந்த கால நீட்டிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது," என்கிறார் அவர்.

'தவெக-வின் நிலைப்பாடு'

கடந்த 2024, நவம்பர் மாதம் நடைபெற்ற தவெக-வின் செயற்குழு கூட்டத்தில் கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான ஐஆர்இஎல் திட்டம் குறித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"கன்னியாகுமரிப் பகுதியில் அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயல்கிறது. தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் இன்னொரு முயற்சியே இது. எங்கள் மண்ணையும் மக்களையும் பாழ்படுத்தும் இதுபோன்ற அபாயம் விளைவிக்கும் நாசகர, நச்சுத் திட்டங்களை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது" என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு இந்த அணுக்கனிம அகழ்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால், இன்று அதே திட்டம் 10.06.2026 அன்றுடன் முழுமையாகக் காலாவதியாக இருந்த நிலையில், சரியாக இறுதி நாளில் அத்திட்டத்தை மீண்டும் உயிர்ப்பித்து, ஒட்டுமொத்தத் தென் தமிழக மக்களையும் கதிரியக்கப் பாதிப்பிற்குள்ளாக்கும் செயலுக்கு துணைபோயிருக்கிறது தவெக அரசு" என விமர்சித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, பாமக ஆகிய கட்சிகளும் தமிழக அரசின் முடிவை விமர்சித்துள்ளன.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் விஜயை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சரும் கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

"அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட ஓராண்டு காலநீட்டிப்பு அரசாணையை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும், மக்களைப் பாதிக்கும் திட்டத்தை அரசு அனுமதிக்காது; இந்தக் கோரிக்கையின் மீது நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும்" அமைச்சர் ராஜேஷ்குமார் தனது சமூக ஊடகப் பக்கங்களில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசின் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பிரபுவிடமும் பிபிசி தமிழ் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர் தரப்பில் பதில் கிடைத்ததும் இந்தப் பக்கத்தில் சேர்க்கப்படும்.

ஐஆர்இஎல் நிறுவனம் கூறுவது என்ன?

"புற்றுநோய் பாதிப்புகள் மட்டுமல்லாது, கடற்கரை பகுதியில் சுரங்கம் அமைக்கப்பட்டால், அருகில் இருக்கும் மீனவர்கள் அங்கு வசிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் என அனைத்தும் கதிர்வீச்சு பாதிப்புக்கு உள்ளாகும்," என்கிறார் கன்னியாகுமாரியைச் சேர்ந்த எழுத்தாளர், சமூக ஆர்வலர் குறும்பனை சி பெர்லின்.

ஆனால், ஐஆர்இஎல் நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது.

"அணுக்கனிம சுரங்கச் செயல்பாடுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. இத்திட்டத்தில் காற்று, நீர் மற்றும் மண் ஆகியவற்றின் மீதான நீண்டகால பாதிப்பு மிகக் குறைவு," என்றும் ஐஆர்இஎல் தனது அறிக்கையில் கூறுகிறது.

"சுரங்கக் குத்தகை பகுதிகளில் உள்ள மணலில் மோனசைட் கலந்திருப்பதன் காரணமாக, பின்புல கதிர்வீச்சு அதிகமாகக் காணப்படுகிறது (இது 1 முதல் 4 µSv/h என்ற அளவிலோ அல்லது சில இடங்களில் அதற்கும் அதிகமாகவோ இருக்கும்). எனவே அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இயற்கையாகவே கணிசமான அளவில் கதிர்வீச்சு பாதிப்புக்கு ஆளாகின்றனர்."

"மோனசைட் அடங்கிய கடற்கரை மணல் கனிமங்கள் தாதுவை அகழ்ந்தெடுத்த பிறகு, மோனசைட் இல்லாத மணல் அங்கு நிரப்பப்படும். இதனால் அப்பகுதிகளில் கதிர்வீச்சு 0.2–0.4 µSv/h ஆகக் குறைகிறது. எங்கள் சுரங்கத் தொழில் சுற்றுச்சூழலையோ மக்களையோ பாதிப்பதில்லை, இப்பகுதியில் இருக்கும் அதிக கதிர்வீச்சை குறைக்கிறது." என்று ஐஆர்இஎல் விளக்கம் அளித்துள்ளது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு