You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தினசரி ஷாம்பூ பயன்படுத்தினால் முடி உதிருமா? நரைமுடியை பிடுங்கினால் கூடுதல் நரைமுடி வருமா? அறிவியல் உண்மைகள்
- எழுதியவர், மருத்துவர் ஹிமானி, கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர்
- பதவி, பிபிசிக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
தலைமுடி நமது அழகை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உச்சந்தலையை சூரிய ஒளி, குளிர் மற்றும் தூசியிலிருந்து ஓரளவிற்குப் பாதுகாக்கவும் செய்கிறது.
ஆரோக்கியமான தலைமுடி என்பது நல்ல ஊட்டச்சத்து, ஹார்மோன் சமநிலை மற்றும் உடல் ஆரோக்கியத்தின் அறிகுறியாகவும் கருதப்படுகிறது.
ஒரு காலத்தில் நடுத்தர வயதிற்குப் பிறகு மட்டுமே காணப்பட்ட முடி உதிர்வுப் பிரச்னை, இப்போது இருபது மற்றும் முப்பது வயதுகளில் இருக்கும் பலரையும் பாதித்து வருகிறது.
ஆண்கள் மட்டுமின்றி பெண்கள், இளைஞர்கள், பிரசவத்திற்குப் பிறகான தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் சில சமயங்களில் குழந்தைகள் கூட முடி உதிர்வுப் பிரச்னையால் அவதிப்படுகிறார்கள்.
இதன் விளைவாக, "ஒரே வாரத்தில் முடி வளரும்", "100 சதவிகித உத்தரவாதம்" மற்றும் "வழுக்கைக்கு நிரந்தர தீர்வு" என்று கூறும் பல விளம்பரங்கள் சந்தையில் உலா வருகின்றன.
ஆனால் இவற்றில் பெரும்பாலானவற்றிற்கு அறிவியல் பூர்வமான சான்றுகள் எதுவும் இல்லை.
முடி உதிர்வு என்பது ஒரு நோயாக இல்லாமல் இருக்கலாம்.
பல சந்தர்ப்பங்களில், இது உடலில் நடக்கும் வேறு ஏதேனும் ஒரு பிரச்னையின் அறிகுறியாக இருக்கக்கூடும். எனவே, முடி உதிர்வுக்கான உண்மையான காரணத்தை அறிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.
முடி எப்படி வளர்கிறது?
ஒவ்வொரு முடியும் ஒரு சிறிய மயிர்க்காலில் இருந்து வளர்கிறது. ஒவ்வொரு முடியின் வாழ்க்கைச் சுழற்சியிலும் மூன்று நிலைகள் உள்ளன.
1. அனஜென்
இது முடி வளரும் நிலை ஆகும்.
இது பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகள் வரை நீடிக்கும். நமது தலையில் உள்ள முடிகளில் தோராயமாக 85-90 சதவீதம் இந்த பருவத்தில் தான் உள்ளன.
2. கேட்டாஜென்
இது சில நாட்கள் மட்டுமே நீடிக்கும் ஒரு இடைநிலை ஆகும். இந்த நிலையின் போது, முடியின் வளர்ச்சி குறைகிறது.
3. டெலோஜென்
இது முடி ஓய்வெடுக்கும் நிலை .
இந்த நிலை முடிந்த பிறகு, முடி உதிர்ந்து விடுகிறது. அதற்குப் பதிலாக அந்த இடத்தில் ஒரு புதிய முடி வளர்கிறது.
எனவே, ஒரு நாளைக்கு 50-100 முடிகள் உதிர்வது என்பது முற்றிலும் சாதாரணமானது. இதை ஒரு நோயாகக் கருதத் தேவையில்லை.
முடி உதிர்தலின் வகைகள் மற்றும் முக்கிய காரணங்கள்
முடி உதிர்வு என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
1. ஆண்ட்ரோஜெனிக் அலோபீசியா
முடி உதிர்தலில் இது மிகவும் பொதுவான வகை ஆகும்.
ஆண்களுக்கு நெற்றிக்கு மேல் முடி பின்வாங்குவது, தலையின் நடுப்பகுதியில் முடி மெலிதாவது மற்றும் படிப்படியாக வழுக்கை விழுவது போன்றவை ஏற்படலாம். பெண்களுக்குத் தலையின் நடுப்பகுதியில் முடி மெலிதாகலாம்.
பெண்களுக்கு முழுமையாக வழுக்கை விழுவது அரிதானது. இந்த வகை பெரும்பாலும் மரபணு காரணிகள் மற்றும் ஹார்மோன் தாக்கங்களால் ஏற்படுகிறது.
2. டெலோஜென் எஃப்ளூவியம்
இது திடீரென அதிகளவில் முடி உதிரும் ஒரு நிலை ஆகும்.
இது பொதுவாக டெங்கு, கோவிட், டைபாய்டு, பெரிய அறுவை சிகிச்சைகள், பிரசவம், கடுமையான மன அழுத்தம் போன்றவற்றுக்குப் பிறகு தோன்றும்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த நிலைகள் குணமாகி மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் முடி மீண்டும் வளரத் தொடங்கும்.
3. அலோபீசியா அரேட்டா
இது ஒரு ஆட்டோ இம்யூன் நோய் .
உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் மயிர்க்கால்களைத் தாக்குவதால், முடி வட்ட வட்ட வடிவில் கொத்தாக உதிர்கிறது. சிலருக்கு புருவங்கள் மற்றும் தாடியும் இதனால் பாதிக்கப்படலாம்.
4. டிராக்ஷன் அலோபீசியா
தலைமுடியை நீண்ட நேரம் இறுக்கமாகக் கட்டி வைப்பதால் இது ஏற்படுகிறது. இறுக்கமான ஜடைகள், இறுக்கமான போனிடெயில்கள் மற்றும் ஹேர் எக்ஸ்டென்ஷன்கள் (செயற்கை முடி) போன்றவை முடி உதிர்வை ஏற்படுத்தலாம்.
5. ஸ்காரிங் அலோபீசியா
இது ஒரு அரிதான ஆனால் தீவிரமான நிலை.
இதில் மயிர்க்கால்கள் நிரந்தரமாக சேதமடைகின்றன. சிகிச்சை அளிக்காமல் விட்டால், அந்த இடத்தில் முடி மீண்டும் வளராது. எனவே, உடனடியாக ஒரு தோல் மருத்துவரை அணுக வேண்டும்.
ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட முடிகள் உதிர்வது, முடி மெலிதாவது, உச்சந்தலை வெளியில் தெரிவது, வட்ட வடிவில் முடி உதிர்வது அல்லது புருவங்கள் அல்லது தாடியில் முடி உதிர்வது போன்ற நிலைகளை நீங்கள் எதிர்கொண்டால், அதை அலட்சியப்படுத்தக் கூடாது. உடனடியாக ஒரு தோல் மருத்துவரை அணுகுவதே மிகச்சிறந்தது.
மருத்துவர்களால் செய்யப்படும் சோதனைகள்
அனைவருக்கும் அனைத்துப் பரிசோதனைகளும் தேவைப்படுவதில்லை.
அறிகுறிகளைப் பொறுத்து, மருத்துவர்கள் முழு ரத்த அணுக்கள் எண்ணிக்கை, சீரம் ஃபெரிட்டின், தைராய்டு பரிசோதனை, வைட்டமின் டி, வைட்டமின் பி12, சீரம் துத்தநாகம் , ஹார்மோன் பரிசோதனைகள், டிரைகோஸ்கோபி மற்றும் அரிதாக, உச்சந்தலை பயாப்ஸி போன்றவற்றை பரிந்துரைக்கலாம். அதன் அடிப்படையில் சிகிச்சையளிக்கலாம்.
தற்போது கிடைக்கும் சிகிச்சைகள்
சிகிச்சை என்பது முற்றிலும் அதற்கான காரணத்தைப் பொறுத்தது.
1.ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் டி போன்ற குறைபாடுகள் சரிசெய்யப்படுகின்றன.
வைட்டமின் மாத்திரைகளைத் தேவையின்றி பயன்படுத்துவது நல்ல யோசனையல்ல.
2. மினாக்ஸிடில்
இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்தாகும்.
இது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் சில வகையான முடி உதிர்வுப் பிரச்னைகளில் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இதை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
3. ஃபினாஸ்டரைடு
இது முக்கியமாக ஆண்களுக்கு ஏற்படும் மரபணு ரீதியான வழுக்கைப் பிரச்னைக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தை மருத்துவக் கண்காணிப்பின் கீழ் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
4. பிஆர்பி (பிளேட்லெட்-ரிச் பிளாஸ்மா)
பிஆர்பி என்பது, ஒரு நோயாளியின் ரத்தத்திலிருந்து ரத்தத் தட்டுகளை ஒரு சிறப்பு முறையில் பிரித்தெடுத்து, உச்சந்தலையில் செலுத்தும் ஒரு சிகிச்சை முறையாகும்.
இது சிலருக்குப் பயனுள்ளதாக இருக்கலாம், ஆனால் அனைவருக்கும் ஒரே மாதிரியான முடிவு கிடைக்கும் என்று அர்த்தமல்ல.
5. குறைந்த-அளவிலான லேசர் சிகிச்சை (LLLT)
சில ஆராய்ச்சிகள் இதன் மூலம் பலன் கிடைப்பதாகக் காட்டினாலும், இது அனைவருக்கும் தேவையானது அல்ல.
6. முடி மாற்று அறுவை சிகிச்சை
மரபணு ரீதியான வழுக்கை உள்ள சிலருக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். இந்தச் சிகிச்சையை அனுபவம் வாய்ந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் அல்லது தோல் மருத்துவர் மட்டுமே செய்ய வேண்டும்.
சமூக ஊடகங்களில் காட்டப்படும் சிகிச்சைகள் உண்மையானவையா?
தற்போது, யூடியூப் , இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.
"ஏழு நாட்களில் முடி வளரும்", "இந்த எண்ணெய் வழுக்கையை குணமாக்கும்", "இந்த இலையைப் பயன்படுத்தினால் புதிய முடி வளரும் " போன்ற விளம்பரங்கள் வெளிவருகின்றன.
இத்தகைய கூற்றுகளுக்கு அறிவியல் பூர்வமான சான்றுகள் எதுவும் இல்லை. முடி உதிர்வுக்கான காரணங்கள் மாறுபடுவதால், ஒரே ஒரு தீர்வு அனைவருக்கும் பலனளிக்காது.
ஸ்டீராய்டு லோஷன்கள் ஆபத்தானவையா?
மருத்துவர்கள் சில சந்தர்ப்பங்களில் மட்டுமே ஸ்டீராய்டுகளைப் பரிந்துரைக்கின்றனர்.
ஆனால், நீங்களே அதை ஒரு மருத்துவக் கடையில் வாங்கி மாதக்கணக்கில் பயன்படுத்தினால், தோல் மெலிதல், நோய்த்தொற்றுகள் மற்றும் பிற பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
முடி வளர்ச்சிக்கானது எனப்படும் எண்ணெய்கள் உண்மையிலேயே பயனுள்ளவையா?
தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் போன்ற எண்ணெய்கள் உச்சந்தலைக்கு ஈரப்பதத்தை அளித்து, முடி உடைவதிலிருந்து பாதுகாக்கும்.
ஆனால், அவற்றால் மரபணு ரீதியான வழுக்கையையோ அல்லது கடுமையான முடி உதிர்தலையோ முழுமையாகக் குணப்படுத்த முடியாது.
முடி கெரட்டின் எனப்படும் புரதத்தால் ஆனது, எனவே புரதத்தை குறைவாக உட்கொள்பவர்களுக்கு முடி பலவீனமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
முட்டை, பால், தயிர், மீன், கோழி இறைச்சி (அளவோடு), பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, பீன்ஸ், சோயா பொருட்கள், பச்சை காய்கறிகள், பாதாம், வால்நட், எள், புதிய பழங்கள் மற்றும் வண்ணமயமான காய்கறிகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
எப்படி குளிப்பது?
தினமும் ஷாம்பு கொண்டு தலைமுடியைக் கழுவினால் முடி உதிர்தல் ஏற்படும் என்று பலர் நினைக்கிறார்கள்.
ஆனால், இது ஒரு கட்டுக்கதை.
- பொதுவாக, வாரத்திற்கு 2-3 முறை குளிப்பதே போதுமானது.
- உடலில் அதிக வியர்வை சுரக்கும் நபர்கள் தேவைக்கேற்ப அடிக்கடி குளிக்கலாம்.
- மிகவும் சூடான நீரில் குளிப்பது நல்லதல்ல.
- மென்மையான ஷாம்பூவைப் பயன்படுத்துவது சிறந்தது.
- நீங்கள் ஹேர் ட்ரையர் அல்லது ஸ்ட்ரெய்ட்னரைப் பயன்படுத்தலாம், ஆனால் அதிக வெப்பத்தைப் பயன்படுத்த வேண்டாம்.
- அதேபோல், அதைத் தினமும் பயன்படுத்தாதீர்கள்.
- தேவைப்பட்டால் வெப்பப் பாதுகாப்புப் பொருட்களைப் பயன்படுத்துங்கள்.
- முடி ஈரமாக இருக்கும்போது அதை வேகமாகச் சீவ வேண்டாம்.
கட்டுக்கதைகள் – உண்மைகள்
கட்டுக்கதை: தினமும் ஷாம்பூ பயன்படுத்தினால் முடி உதிரும்
உண்மை: சரியான ஷாம்பூவைப் பயன்படுத்துவதால் பொதுவாக எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை.
கட்டுக்கதை: முகச்சவரம் செய்வதால் முடி தடிமனாகும்.
உண்மை: இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.
கட்டுக்கதை: எண்ணெய் வழுக்கையைக் குணப்படுத்தும்.
உண்மை: இல்லை.
கட்டுக்கதை: நரை முடிகளைப் பிடுங்கினால் மேலும் நரை முடிகள் வளரும்.
உண்மை: ஒரு முடியைப் பிடுங்குவதால் மற்ற முடிகளின் நிறம் மாறுவதில்லை.
கட்டுக்கதை: அனைவருக்கும் பயோட்டின் மாத்திரைகள் தேவை.
உண்மை: பயோட்டின் குறைபாடு ஏற்படுவது மிகவும் அரிது. பரிசோதனை செய்யாமல் சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
முடி உதிர்தல் ஒரு பொதுவான பிரச்னையாக இருந்தாலும், அதற்கான காரணம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
சிலருக்கு இது ஒரு தற்காலிகப் பிரச்னையாக இருக்கலாம், மற்ற சிலருக்கு ஹார்மோன் மாற்றங்கள், ஊட்டச்சத்துக் குறைபாடுகள், தைராய்டு நோய்கள் அல்லது மரபணுக் காரணங்களால் ஏற்படலாம்.
அதனால்தான், இணையத்தில் நீங்கள் காணும் ஒவ்வொரு ஆலோசனையையும் நம்புவதற்குப் பதிலாக, பிரச்னை தொடர்ந்தால் ஒரு தோல் மருத்துவரை அணுகுவது சிறந்தது.
சரியான காரணத்தைக் கண்டறிந்து, அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் சிகிச்சையைத் தொடங்குவது, பலருக்கு முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த உதவும்.
ஆரோக்கியமான கூந்தலைப் பெற, விலையுயர்ந்த ஷாம்பூகள், எண்ணெய்கள் அல்லது அழகு சிகிச்சைகள் மட்டும் போதாது. உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆரோக்கியமான, சமச்சீரான உணவு, போதுமான உறக்கம், மன அமைதி, தலைமுடியைச் சுத்தமாக வைத்திருத்தல், மற்றும் தேவைப்படும்போது மருத்துவ ஆலோசனை பெறுதல்.
இவைதான் அடர்த்தியான, ஆரோக்கியமான கூந்தலுக்கான உண்மையான ரகசியங்கள்.
(குறிப்பு: இந்த கட்டுரையை எழுதியவர் ஒரு மருத்துவர். மருத்துவ நடைமுறைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும். உடல்நலம் தொடர்பான எந்தவொரு முடிவையும் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னரே எடுக்க வேண்டும்)
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு