You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமாகும் வைபவ் சூர்யவன்ஷி - கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது என்ன?
இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி, மான்செஸ்டரில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமாகிறார். அவருக்கு அணியின் துணைக் கேப்டன் திலக் வர்மா அறிமுகத் தொப்பியை வழங்கினார்.
இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக வைபவ் சூர்யவன்ஷி அணியில் இடம் பெற்றுள்ளார்.
போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.
இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் அறிமுகமான இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 16 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமானார். தற்போது 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி அதைவிட இளம் வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார்.
கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் என்ன கூறினார்?
வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், "கடந்த சில மாதங்களாக அவரை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். அவர் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் விதத்திலே அவரது தன்னம்பிக்கை தெளிவாகத் தெரிகிறது. அவரை அணியில் சேர்க்க எந்த அழுத்தமும் இல்லை. தனது இடத்தை அவர் தானாகவே சம்பாதித்துள்ளார்," என்றார்.
மேலும், "அவர் எந்த அழுத்தத்தையும் எடுத்துக்கொள்வதில்லை. எந்த பதற்றமும் இல்லாமல் விளையாடுகிறார். அவர் அணியில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் போட்டிகளில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் அவருக்குத் தெரியும். அவர் மிகவும் அமைதியான குணம் கொண்டவர்," என்றும் கூறினார்.
"நெட் பயிற்சியில் அவர் பேட்டிங் செய்வதைப் பார்த்தாலே அவரது குணாதிசயத்தைப் புரிந்துகொள்ள முடியும். அணியில் இடம் பெறுவதற்கான போட்டி மிகவும் கடுமையாக உள்ளது," என்றும் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார்.
அயர்லாந்து தொடருக்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியாவின் இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
இரண்டாம் போட்டிக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல், "அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களை புறக்கணிப்பது சரியானதாக இருக்காது" என்று கூறினார்.
மேலும், "தேசிய அணிக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களுக்கு ஆதரவாக நிற்பதில்தான் இந்திய அணி நம்பிக்கை கொண்டுள்ளது" என்றும் மோர்கல் வலியுறுத்தினார்.
இந்திய அணியின் தற்போதைய சுற்றுப்பயணத்தில் சஞ்சு சாம்சனின் தொடர் சொதப்பல்கள் நீடித்து வருகின்றன. கடந்த மூன்று இன்னிங்ஸ்களில் அவர் முறையே 5, 0 மற்றும் 1 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அணி நிர்வாகத்தின் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் அணி நிர்வாகத்தின் முடிவை கேள்வி எழுப்பியுள்ளனர். சுனில் கவாஸ்கர் கூட, "வைபவுக்கு நிச்சயமாக வாய்ப்பு வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இதற்கிடையில், மோர்னே மோர்கலின் கருத்துக்குப் பிறகு, வைபவ் சூர்யவன்ஷி சமூக வலைதளத்தில் "New Chapter" என்று பதிவிட்டுள்ளார்.
அபிஷேக் சர்மாவும் சஞ்சு சாம்சனும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள். அபிஷேக், இந்திய அணியின் மிகவும் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.
2024ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக வேகமான சதம் அடித்தது, 54 பந்துகளில் 135 ரன்கள் குவித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தது உள்ளிட்ட பல அதிரடி இன்னிங்ஸ்களை அவர் ஆடியுள்ளார். மேலும், டி20 கிரிக்கெட்டில் மிக வேகமாக 100 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
அதேபோல், இந்த ஆண்டு இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல சஞ்சு சாம்சனும் முக்கிய பங்கு வகித்தார். உலகக் கோப்பை தொடரில் அவர் "தொடர் நாயகன்" விருதை வென்றார். இந்திய அணிக்கு மிகவும் தேவைப்பட்ட நேரத்தில் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்ததுடன், தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தலா 89 ரன்கள் எடுத்தார்.
சஞ்சு சாம்சன் குறித்து மோர்கல் கூறுகையில், "அவர் சிறப்பான ஐபிஎல் தொடரை ஆடியுள்ளார். எனவே பயிற்சியாளர் குழுவாக, வீரர்களின் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஆதரவாக நிற்பது சரியான அணுகுமுறை என்று நான் நினைக்கிறேன்" என்றார்.
வைபவ் சூர்யவன்ஷி குறித்து என்ன கூறினார்?
வைபவ் சூர்யவன்ஷி குறித்து மோர்கல் கூறுகையில், "ஆம், ஒரு இளம் வீரர் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறார். அது உற்சாகமூட்டும் விஷயம். ஆனால் இந்த இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களுக்கு மட்டுமல்ல, முழு அணிக்கும் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை வழங்குவது நல்ல அறிகுறி என்று நான் கருதுகிறேன்" என்றார்.
ஐபிஎல் 2026 தொடரில் 16 போட்டிகளில் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, 237.30 என்ற அபார ஸ்டிரைக் ரேட்டில் 776 ரன்கள் குவித்தார். அவர் ஆரஞ்சு கேப், மிகவும் மதிப்புமிக்க வீரர், சிறந்த அறிமுக வீரர் ஆகிய விருதுகளையும் வென்றார்.
இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுடன் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில், வெறும் 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்து அதிரடி ஆட்டம் ஆடியிருந்தார்.
இதன் காரணமாகவே தேசிய தேர்வுக்குழு, மூத்த இந்திய டி20 அணியில் அவருக்கு இடம் வழங்கியது. இந்திய அணிக்காக மிக இளம் வயதில் அறிமுகமாகும் வீரர் என்ற சாதனையை படைக்கும் வாய்ப்பு வைபவ் சூர்யவன்ஷிக்கு உள்ளது.
கிரிக்இன்ஃபோவின் தகவலின்படி, சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இவ்வளவு இளம் வயதில் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்திய பேட்ஸ்மேன் அரிது. அவரது ஆட்டத்தில் கேரி சோபர்ஸ் மற்றும் கிரேம் போலாக் ஆகியோரின் சாயலைக் காணலாம் என அனுபவமிக்க கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், வைபவின் தயார்நிலை குறித்து எந்த சந்தேகமும் இல்லை என்று மோர்கல் தெளிவுபடுத்தினார்.
"அவரை அணியில் உள்ள வீரர்கள் வரவேற்ற விதம் பாராட்டுக்குரியது. 15 வயதில் சர்வதேச அளவிலான நெட் பயிற்சியில் பங்கேற்பது அச்சமூட்டக்கூடிய அனுபவமாக இருக்கலாம். ஆனால் இதுவரை நடந்த அனைத்து நெட்ஸ் அமர்வுகளிலும் அவர் மிகவும் ஈர்க்கும் வகையில் செயல்பட்டுள்ளார்" என்று மோர்கல் கூறினார்.
சச்சின், கோலியுடன் ஒப்பிட்ட கபில் தேவ்
விளையாட்டு பத்திரிகையாளர் விக்ராந்த் குப்தாவுடன் நடைபெற்ற பாட்காஸ்டில், இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ், வைபவ் சூர்யவன்ஷியை சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி போன்ற வீரர்களுடன் ஒப்பிட்டார்.
"வைபவ் சூர்யவன்ஷி ஒரு அசாதாரண திறமை கொண்ட வீரர். அவரைப் போன்ற திறமைசாலிகளை நான் மிகவும் குறைவாகவே பார்த்துள்ளேன். விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கரிடம் இருந்த அளவிலான திறமை அவரிடமும் உள்ளது," என்றார்.
ஆனால், "அவர் மிகப்பெரிய திறமைசாலி. இருப்பினும், அவரைப் பற்றி நாம் இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்," என்றும் கபில் தேவ் கூறினார்.
"சச்சினும் இதே வயதில்தான் விளையாடத் தொடங்கினார். ஒரு வீரர் தயாராக இருந்தால், அவரது வயதைப் பற்றி யோசிக்க வேண்டாம். அவரது திறமையைப் பாருங்கள். அவர் விளையாடத் தயாராக இருக்கிறார் என்று தோன்றினால், அவருக்கு வாய்ப்பு கொடுங்கள்," என்றும் அவர் கூறினார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வைபவுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து சுனில் கவாஸ்கர் ஏமாற்றம் தெரிவித்திருந்தார்.
"வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்காக அறிமுகமாக அதிக காலம் காத்திருக்க வேண்டியிருந்தால், அவர் மீது அழுத்தமும் அதே அளவில் அதிகரிக்கும்," என்று அவர் கூறினார்.
முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், அயர்லாந்து தொடரிலேயே வைபவுக்கு வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வானும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததை கேள்வி எழுப்பினார்.
ஆனால், இந்திய முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் போன்ற சில முன்னாள் வீரர்கள், வைபவ் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்றும், அணியில் இடம் கிடைக்காத நிலையிலும் சர்வதேச கிரிக்கெட்டின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்றும் கருதுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு