காணொளி: டைனோசரை ஒட்டுமொத்தமாக அழித்ததைப் போன்ற விண்கல் மோதல் பூமியில் மீண்டும் நிகழுமா?

காணொளி: டைனோசரை ஒட்டுமொத்தமாக அழித்ததைப் போன்ற விண்கல் மோதல் பூமியில் மீண்டும் நிகழுமா?
பிரசுரிக்கப்பட்டது

கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று, குஜராத்தில் உள்ள கட்ச் பகுதியின் மேலே நாசாவின் செயற்கைக்கோளான லான்சாட் 8 பறந்தது. அப்போது அதில் திகைக்க வைக்கும் ஒரு காட்சி பதிவானது.

அங்கு 1.8 கி.மீ விட்டம், 6 மீட்டர் ஆழம் கொண்ட, கின்னம் போன்ற ஒரு பள்ளம் இருப்ப அந்த செயற்கைக்கோள் பதிவு செய்தது. கிட்டத்தட்ட துல்லியமான வட்ட வடிவில் இயற்கையான பள்ளம் உருவாகாது.

பின்னர் அது எப்படி ஏற்பட்டது என்பதை ஆராய்ந்தபோது, சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்பாக அங்கு வந்து விழுந்த ஒரு விண்கல் ஏற்படுத்திய குழியே அந்தப் பள்ளம் என்பது தெரிய வந்தது.

பூமியில் பல்வேறு காலகட்டங்களில் அவ்வப்போது விண்கற்கள் விழுந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படித்தான் சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பும் ஒரு சம்பவம் நடந்தது.

அப்போது, மெக்சிகோவின் கிழக்கு கடல் பகுதியில் 10-15கி.மீ விட்டம் கொண்ட ஒரு மிகப் பிரமாண்டமான விண்கல் பூமியில் மோதியது. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட பிரளயத்தில் அதுவரை கோலோச்சி வந்த டைனோசர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.

அவை மட்டுமல்ல, 25 கிலோவுக்கும் மேல் எடை இருக்கக்கூடிய நீர், நிலவாழ் பெரிய உயிரினங்கள் அனைத்துமே அழிக்கப்பட்டன. ஆனால், விண்கல் மோதலால் இதுபோன்ற பிரளயங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிக மிக அரிது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆரம்பத்தில் கூறிய குஜராத் பள்ளத்தைப் போல பூமியில் சுமார் 200 இடங்களில் விண்கல் விழுந்தமைக்கான வடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 44,000 கிலோ விண்கற்கள் பூமியில் வந்து விழுகின்றன. சின்னச் சின்ன மணல், கல் போன்ற எரிகற்கள் பூமியில் தினசரி வந்து விழுகின்றன.

ஆனால், 50 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு விண்கல் பூமியை நோக்கி வந்தாலும்கூட, அது வளிமண்டலத்திலேயே எரிந்து சாம்பலாகிவிடும். அதுதான் ரஷ்யாவிலும் நடந்தது.

ஒருவேளை சுமார் 75மீட்டர் விட்டமுள்ள ஒரு விண்கல் பூமியில் மோதினால், அதனால் ஒரு சிறிய நகரை தரைமட்டமாக்க முடியும். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழக்கூடும்.

அதேநேரம், நூறு முதல் ஆயிரம் மெகாடன் ஆற்றலை வெளிப்படுத்தவல்ல சுமார் 160 மீட்டருக்கும் அதிகமான விட்டத்தைக் கொண்ட ஒரு விண்கல் பூமியில் மோதினால், சென்னை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களே தரைமட்டமாகிவிடும்.

இருப்பினும் கணிப்புகளின்படி, இத்தகைய சம்பவங்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடக்க வாய்ப்புள்ளது.

பூமியில் விழுந்தால் ஒரு மாவட்டத்தையே அழித்துவிடும் அளவிலான, சுமார் ஆயிரம் முதல் பத்தாயிரம் மெகாடன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டுமெனில், ஒரு விண்கல் 350 மீட்டருக்கும் மேல் பெரிதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடப்பதற்கான வாய்ப்பு 15,000 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் என்று கணிப்புகள் கூறுகின்றன.

இத்தகைய விண்கல் மோதல்கள் பூமியில் எவ்வளவு அதிகமாக நிகழ்கின்றன? அவற்றால் என்ன ஆபத்து? பூமியில் டைனோசர்களின் இருப்பை அழித்த அளவுக்குப் பேரழிவை ஏற்படுத்தவல்ல விண்கல் மோதல் மீண்டும் நிகழுமா?

காணொளியில் முழு விவரங்களை பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு