காணொளி: அமெரிக்கா - இரான் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தம் குறித்து எழும் சந்தேகங்கள்

காணொளி: அமெரிக்கா - இரான் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தம் குறித்து எழும் சந்தேகங்கள்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை சுற்றி பல்வேறு கேள்விகள் இருப்பதாக பிபிசியின் வட அமெரிக்க செய்தியாளரான ஆண்டனி சர்ச்சர் கூறுகிறார். இது தொடர்பாக அவர் எழுதியிருக்கும் ஒரு கட்டுரையின் உள்ளடக்கத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.

அமெரிக்கா மற்றும் இரானுக்கு இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு மிகவும் வரவேற்கத்தக்க பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது. இருப்பினும், அந்தப் பரிசு இன்னும் பல சந்தேகங்களால் சூழப்பட்டே உள்ளது.

இந்த ஒப்பந்தத்தை தனது சமூக ஊடகப் பதிவில் அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹோர்மூஸ் நீரிணை வணிகக் கப்பல் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்றும், அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்கும் என்றும் அதில் கூறியிருந்தார்.

"எண்ணெய் மீண்டும் சுதந்திரமாக பாயட்டும்!" என்று அவர் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டார்.

மேலும், முந்தைய அமெரிக்க அதிபர்கள் தோல்வியடைந்த நிலையில், தாம் ஒரு "சிறந்த ஒப்பந்தத்தை" எட்டியிருப்பதாகவும், அது "முழு பிராந்தியத்துக்கும் அமைதி மற்றும் பாதுகாப்பை" வழங்கும் என்றும் அவர் கூறினார்.

இவ்வகையான மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள் டிரம்புக்கு புதிதல்ல. கடந்த ஆண்டு காஸா போருக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒப்பந்தத்தை அவர் "எல்லா காலத்துக்குமான அமைதி" என்றும், "நம்பிக்கை, விசுவாசம் மற்றும் இறைவனின் யுகத்தின் தொடக்கம்" என்றும் வர்ணித்திருந்தார். ஆனால் அந்தக் கூற்றுகளை விட குறைவான உண்மைத்தன்மை தான் களத்தில் காணப்படுகிறது.

இத்தகைய பெரும் ஆபத்துகள் நிறைந்த ஒப்பந்தங்களில், வெற்றியோ அல்லது தோல்வியோ பொதுவாக அதன் விவரங்களில் தான் அடங்கியிருக்கிறது. ஆனால், இங்கு அந்த விவரங்கள் மிகவும் குறைவாகவே வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஞாயிற்றுக்கிழமை மாலை ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், "இரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது என்பது "இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது" என்றும், அதை அமெரிக்காவால் சரிபார்க்க முடியும் என்றும் கூறினார்.

இருப்பினும், யுரேனியம் செறிவூட்டலுக்கான கட்டுப்பாடுகள் என்னவாக இருக்கும்? தற்போது இரானிடம் உள்ள அதிக அளவு செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பு என்ன ஆகும் என்பன போன்ற முக்கியமான கேள்விகள் இன்னும் எஞ்சி நிற்கின்றன.

இவற்றுள் சில, தற்போதைய போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு வழங்கப்பட்டுள்ள 60 நாள் காலத்தில் நடைபெறவுள்ள அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள் மற்றும் "தொழில்நுட்ப" ஆலோசனைகள் மூலம் தீர்க்கப்படலாம்.

ஆனால், பல தசாப்தங்களாக இரானை அதன் அணு இலக்குகளை கைவிடச் செய்வதற்காக வற்புறுத்தியும் அழுத்தம் கொடுத்தும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் காட்டுவது என்னவென்றால், இந்த "புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்" என்ன உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமெரிக்கா நம்பினாலும், அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பது தான்.

இந்தக் கருத்தை வலியுறுத்தும் விதமாக, இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஞாயிற்றுக்கிழமை ஓர் அறிக்கையை வெளியிட்டது.

அதில் "புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள மற்ற தரப்பினரின் கடமைகள் நிறைவேற்றப்பட்ட பிறகே இறுதி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

அந்த உறுதிமொழிகள் என்ன மற்றும் இரான் அவற்றை எவ்வாறு புரிந்துகொள்கிறது என்பது இந்த ஒப்பந்தம் நிலைத்திருக்குமா என்பதைத் தீர்மானிக்க உதவும்.

ஹோர்மூஸ் நீரிணை வழியாக எண்ணெய் கொண்டு செல்வதைப் பொருத்தவரை, உடனடியாக போருக்கு முந்தைய நிலைக்கு திரும்புவதற்கு சாத்தியமில்லை என்று எரிசக்தி சந்தை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தேங்கியுள்ள ஏராளமான எண்ணெய்க் கப்பல்களை அப்புறப்படுத்துவதற்கும், கண்ணிவெடிகளை அகற்றுவதற்கும், வழக்கமான எண்ணெய் கப்பல் போக்குவரத்து மற்றும் உற்பத்தியை மீட்டெடுப்பதற்கும் பல வாரங்கள் ஆகலாம்.

ஒப்பந்தத்துக்கு காத்திருக்கும் சவால்கள்

ஒப்பந்தத்தின் வெற்றியை உறுதி செய்வதற்கான முக்கிய விவரங்களை தீர்ப்பதற்கு இரானுக்கும் அமெரிக்காவுக்கும் நேரம் உள்ளது. அதேநேரத்தில் இந்த ஒப்பந்தம் முறிந்து போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த மோதல் ஆரம்பத்திலிருந்தே மூன்று தரப்புகளை உள்ளடக்கிய மோதலாக இருந்தது. சமீபத்தில் லெபனான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டது குறித்து தான் அதிருப்தி அடைந்ததாக, டொனால்ட் டிரம்ப் ஞாயிறன்று வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம் கூறியிருந்தார்.

அந்த தாக்குதல், இறுதி கட்டத்தை எட்டியிருந்த அமெரிக்கா–இரான் ஒப்பந்தத்தை பாதிக்கக்கூடும் என டிரம்ப் கருதியதாக கூறப்படுகிறது.

எனினும், ஒப்பந்தம் குறைந்தபட்சம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் அளவுக்கு நிலைத்திருந்தது. ஆனால், இஸ்ரேல் மீண்டும் லெபனானில் புதிய ராணுவ நடவடிக்கைகளை தொடங்கினால், இரான் ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் மூட முடிவு செய்யலாம். அது, உலகப் பொருளாதாரத்தை மீண்டும் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும்.

இந்தப் போர் காரணமாக அதிகரித்த எரிசக்தி விலைகளும், அதனால் ஏற்பட்ட பொருளாதார தாக்கங்களும் அமெரிக்க மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதை ஜே.டி. வான்ஸும் ஒப்புக்கொண்டார்.

சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி, டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சி மீது அமெரிக்கர்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளது.

யுகவ் நடத்திய கணக்கெடுப்பு, 63% அமெரிக்கர்கள் அதிபர் டிரம்ப் பொருளாதாரத்தைக் கையாண்ட விதத்தை அங்கீகரிக்கவில்லை என்றும், 57% பேர் பொருளாதாரம் மோசமடைந்து வருவதாக உணர்வதாகவும் கூறுகிறது.

இருப்பினும், குறைந்தபட்சமாக, ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட ஒப்பந்தம் தற்போதைய மோதலிலால் ஏற்பட்டுள்ள சில பொருளாதார அழுத்தங்களை முற்றிலும் நீக்காவிட்டாலும், அதைக் குறைக்க உதவக்கூடும்.

பெட்ரோல் விலை உண்மையிலேயே குறையத் தொடங்கினால், நிலைமை சிறப்பாக வருகிறது என்பதற்கான உறுதியான அறிகுறியாக அது அமெரிக்கர்களுக்கு தென்படக்கூடும்.

டிரம்பின் பெரிய இலக்குகள் இப்போதைக்கு நிறைவேறாமல் இருந்தாலும், அவர் தனது சொந்த நாட்டில் அரசியல் ஆபத்தை எதிர்கொண்டாலும், போர் தொடங்குவதற்கு முன்பு இருந்த நிலைக்கு மீண்டும் திரும்பும் நோக்கில் இது குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றமாகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு