You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'கோழிகளுக்கு வலுக்கட்டாய தீவனம்' - கறிக்கோழி விற்பனையை நிறுத்தப் போவதாக அறிவிப்பு ஏன்?
'வரும் 31-ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட உள்ளது' என, கோழி வணிகர்கள் அறிவித்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.
தமிழ்நாட்டில் கோழி இறைச்சி என்பது மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது.
'தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 11 முதல் 12 லட்சம் பிராய்லர் கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் 40 சதவிகிதத்துக்கும் மேல் கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன' என, தமிழ்நாடு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல விவசாயிகள் ஒப்பந்த அடிப்படையில் கறிக்கோழிகளை வளர்க்கின்றனர். இதில், கோழிக் குஞ்சுகள் மற்றும் தீவனங்களை நிறுவனங்கள் வழங்க, விவசாயிகள் அவற்றை வளர்க்கின்றனர்.
"கோழிகளை வளர்த்துக் கொடுப்பதற்காக விவசாயிகளுக்கு கூலி கொடுக்கப்படுகிறது" என்கிறார், கோழி வணிகர்களின் கூட்டமைப்பின் தலைவர் துரைராஜ்.
விவசாயிகளிடமிருந்து கோழிகளைப் பெறும் மொத்த விற்பனையாளர்கள், அவற்றை சில்லறை விற்பனையாளர்களுக்கு அனுப்புகின்றனர். சந்தைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு கோழிகளுக்கு அதிக அளவில் தீவனம் வழங்கப்படுவதாக கோழி வணிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதைப் பற்றி விவரிக்கும் துரைராஜ், "ஒரு கோழிக்கு வழக்கமான தீவனம் கொடுக்கப்பட்டால் பிரச்னை வருவதில்லை. மாறாக, தீவனத்தை வலுக்கட்டாயமாக கொடுக்கின்றனர். இதனால் சுமார் 150 முதல் 200 கிராம் தீவனம் அதன் உடலில் தங்கிவிடுகிறது. இதன் காரணமாக கோழியின் எடை செயற்கையாக அதிகரிக்கிறது.
இதனால் சுமார் 150 கிராம் இறைச்சிக்கான விலையை கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. தற்போதைய சந்தை விலைப்படி இதன் மதிப்பு சுமார் 22 ரூபாய் 50 காசாக உள்ளது. இதனால் சில்லறை விற்பனையாளர்களும், இறுதியில் நுகர்வோரும் பாதிக்கப்படுகின்றனர்" என்றார்.
துரைராஜ் தொடர்ந்து பேசும்போது, "நாளொன்றுக்கு சுமார் ஆறு லட்சம் கோழிகள் விற்பனைக்காக வருவதாகக் கணக்கிட்டால் கோடிக்கணக்கான ரூபாய் பணம், பல்வேறு நிறுவனங்களுக்குச் சென்று சேருகிறது." என்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக இதை ஒரு பிரதான விஷயமாக சில்லறை வணிகர்கள் முன்வைத்துப் பேசி வருகின்றனர்.
"நுகர்வோருக்கு ஆரோக்கியமான கோழியைக் கொடுக்க வேண்டும் என்பது நோக்கமாக உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கோழி வெட்டப்படுவதற்கு 8 முதல் 12 மணிநேரத்துக்கு முன்பாக தீவனம் கொடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது," என்கிறார் துரைராஜ்.
அவரது கூற்றுப்படி, ''காலை ஆறு மணிக்கு ஒரு கோழியை வெட்டுவதாக இருந்தால் அதற்கு முதல்நாள் மாலை 6 மணியளவில் அதற்குத் தீவனம் கொடுப்பதை நிறுத்திவிட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள மொத்த விற்பனையாளர்கள் இதனைக் கண்டுகொள்வதில்லை."
"அதிக தீவனம் கொடுக்கப்படும் கோழிகள் திறந்தவெளி வாகனத்தில் கொண்டு வரப்படுகின்றன. போக்குவரத்தின்போதே கழிவுகள் வெளியேறுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு, சுத்தம் செய்யும் நபர்களுக்குப் பாதிப்பு எனப் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன" என்கிறார் துரைராஜ்.
சில்லறை வணிகர்கள் மத்தியில் இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அரசின் கால்நடை பராமரிப்புத்துறைக்குப் புகார் மனுவாக அளித்துள்ளனர்.
அதிக தீவனம் கொடுப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கடந்த 2024-ஆம் ஆண்டு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநரகம் ஆலோசனை நடத்தியுள்ளது.
கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் மற்றும் கோழி வணிகர்கள் கூட்டமைப்பினர் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் பல்வேறு விதிமுறைகளை கால்நடை பராமரிப்புத்துறை வகுத்துள்ளது.
'அதிக தீவனத்தால் ஆபத்து'
இறைச்சிக்காக கோழிகளை வெட்டுவதற்கு முன்பு கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் நிபுணர்களிடம் அரசு கருத்து கேட்டுள்ளது. அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
- கோழியை அறுப்பதற்கு முன்பு தீவனம் அளிக்காமல் இருப்பதன் மூலம் அதன் செரிமானப் பாதையில் உள்ளவற்றை வெளியேற்ற அனுமதிக்கிறது. இது போக்குவரத்தின்போது சுகாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதைக் குறைக்கிறது.
- இந்த நடைமுறை இறைச்சி பதப்படுத்தும் ஆலைகளில் மலக் கலப்படம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
- இறைச்சி தயாரிப்பில் பாதுகாப்பு, இறைச்சியின் சேமிப்புக் காலம், சிறந்த லாபம் கிடைப்பதற்கு இது உதவுகிறது.
- அந்த வகையில் கோழிகளை வெட்டுவதற்கு 8 முதல் 12 மணிநேரத்துக்கு முன்னதாக தீவனம் அளிப்பதை நிறுத்த வேண்டும்.
12 மணிநேரத்துக்கு மேல் தீவனம் அளிக்காமல் இருந்தால் ஏற்படும் பாதிப்புகளையும் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறையின் வழிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அவ்வாறு தீவனம் அளிக்காமல் இருந்தால் பசியின் காரணமாக கழிவுகள் (மலம்) மற்றும் குப்பைகளைக் கோழிகள் உண்ண நேரிடும். இது சால்மோனெல்லா மற்றும் கேம்பிலோபாக்டர் ஆகிய கிருமிகளின் எண்ணிக்கையை அதிகரித்து சுகாதாரச் சிக்கல்களை ஏற்படுத்தும்.
- மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் வயிற்றுப்போக்கு மற்றும் உணவு நச்சுத்தன்மையை கேம்பிலோபாக்டர் வகை பாக்டீரியா ஏற்படுத்தும் என, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
- கோழிகளின் நலன் மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விற்பனைக்குத் தயாராக உள்ள பிராய்லர் கோழிகளை ஏற்றிச் செல்லும் நேரத்தையும் சேர்த்து தீவனம் நிறுத்தும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
- 'இதன்மூலம் போக்குவரத்து மற்றும் பதப்படுத்தும் நேரங்களில் அதிகப்படியான கழிவு வெளியேறுவது தவிர்க்கப்படும்' என அரசின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'அதிக எடைக்காக அதிக தீவனம்'
2024-ஆம் ஆண்டு நடந்த ஆலோசனை கூட்டத்தில், 'மொத்த விற்பனைக்காக கோழிகளை ஏற்றிச் செல்லும்போது எடை அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிக தீவனம் உண்ணுமாறு கட்டாயப்படுத்தப்படுவதாக', கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீவனத்தின் விலை கிலோவுக்கு 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை மட்டுமே உள்ள நிலையில், மொத்த விற்பனையில் தோலுடன் கோழியின் விலை கிலோவுக்கு 100 முதல் 120 வரை உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நுகர்வோர் பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆகவே, இறைச்சிக்காக கோழிகளை வெட்டுவதற்கு முன்னதாக போக்குவரத்து நேரத்தையும் சேர்த்து 8 முதல் 12 மணிநேரம் வரை தீவனம் அளிக்காமல் இருக்கும் காலஅளவைப் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்' என, வழிமுறையில் கூறப்பட்டுள்ளது.
"போராட்டம் தொடரும்"
"ஆனால், விதிமுறைகளை அரசு வகுத்த பிறகும் தீவனக் கட்டுப்பாடுகளை மொத்த விற்பனையாளர்கள் நிறுத்தவில்லை" என்கிறார், கோழி வணிகர்களின் கூட்டமைப்பின் தலைவர் துரைராஜ்.
"இதனைக் கண்டித்து வரும் 31-ஆம் தேதி காலை முதல் அனைத்துக் கடைகளிலும் மொத்தக் கோழி விற்பனையை நிறுத்துவது என முடிவு செய்துள்ளோம். புதுச்சேரியும் இதில் இணைந்துள்ளது. கேரளாவில் உள்ள சங்கங்களும் போராட்டத்தில் இணைகின்றன," என்கிறார் அவர்.
"தமிழ்நாட்டில் 60,000-க்கும் மேற்பட்ட சில்லறை வர்த்தக கோழி வியாபாரிகள் உள்ளனர். தீவனக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து அரசும் மொத்த விற்பனை நிலையங்களும் உத்தரவாதம் அளிக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும்," என்கிறார் துரைராஜ்.
'அதிக தீவனம் அவசியம் இல்லை'
இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளது பிராய்லர் ஒருங்கிணைப்புக் குழு. அதன் நிர்வாகிகளில் ஒருவரான சுரேஷ்குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது.
"அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி செயல்பட்டு வருகிறோம். கோழிகளுக்கு அதிகமாக தீவனம் போட்டு விற்பனைக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை" என்கிறார் அவர்.
"இறைச்சிக் கூடத்துக்குக் கொண்டு வருவதற்கு 8 முதல் 12 மணிநேரத்துக்கு முன்னதாக தீவனம் வழங்க வேண்டும் என அரசு கூறுகிறது. ஆனால், வாகனங்களில் கொண்டு போய் சேர்ப்பதற்கு 15 முதல் 20 மணிநேரம் வரையில் தாமதம் ஏற்படுகிறது" என்கிறார் சுரேஷ்குமார்.
"அவ்வளவு நேரம் கோழிகளை பட்டினி போட முடியாது" எனக் கூறும் அவர், "அரசு வகுத்துள்ள நேரத்துக்குள் வாகனம் சென்றுவிட்டால் பிரச்னையில்லை. அதேநேரம், கோழிகளுக்கு கடைசி நேரத்தில் தீவனம் கொடுப்பதற்குக் வாய்ப்பில்லை." என்கிறார்.
"சுகாதார சீர்கேடு ஏற்படும் அளவுக்கு தீவனம் வழங்கப்படுவது இல்லை. அரசின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி வருகிறோம். ஆனால், அது அவர்களுக்கு எதிராக இருப்பது போல நினைத்துப் போராடுகின்றனர்" எனவும் அவர் தெரிவித்தார்.
தங்களின் தவறுகளை திசைதிருப்பும் நோக்கில் பிராய்லர் ஒருங்கிணைப்புக் குழுவினர் இவ்வாறு கூறுவதாக, கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் துரைராஜ் கூறுகிறார்.
இருதரப்பும் குற்றம் சுமத்தி வரும் நிலையில், வரும் ஜூலை 31 ஆம் தேதி முதல் கோழி இறைச்சிக்குத் தட்டுப்பாடு வரும் வாய்ப்புள்ளதாக, சில்லறை வணிகர்கள் பேசி வருகின்றனர்.
இறைச்சிக் கோழி வணிகர்களின் போராட்ட அறிவிப்பு குறித்து, தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கமலியை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோது, "இரு தரப்பினருடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது" என்று மட்டும் அவரது உதவியாளர் பதில் அளித்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு