You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'செல்போனை வெளியே சார்ஜ் செய்தோம், மற்றவர்கள் எறியும் கூப்பனை பயன்படுத்தினோம்' - 40 வயதிலேயே இவர்கள் ஓய்வு பெற்றது எப்படி?
- எழுதியவர், ஆலிஸ் கேன்டர்
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
பிரிட்டனில் உள்ள தங்கள் வீட்டில், ஒவ்வொரு குளிர்காலத்திலும் ஹீட்டரை இயக்குவதை ஆலன் மற்றும் கேட்டி டோனெகன் தம்பதியினர் தவிர்த்து வந்தனர்.
"அதற்குப் பதிலாக கூடுதல் ஆடைகளை அணிந்துகொள்வோம். வெந்நீர் பாட்டில்களைப் பயன்படுத்துவோம். அதை ஒரு விளையாட்டாகவே மாற்றிவிட்டோம்," என்கிறார் ஆலன்.
"அது கஷ்டப்படுவது அல்ல. ஒரு திட்டமிட்ட உத்தி."
பணம் செலவிடாமல் இருப்பதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததால், தங்களைப் பலர் "அதீதமானவர்கள்" அல்லது "பைத்தியக்காரர்கள்" என்று நினைத்ததாக அந்த தம்பதியினர் ஒப்புக்கொள்கிறார்கள்.
ஆனால், "சுதந்திரத்தை பெறுவதில்தான் எங்கள் முழு கவனமும் இருந்தது" என்று ஆலன் விளக்குகிறார்.
அவர் கூறும் "சுதந்திரம்" என்பது முன்கூட்டியே ஓய்வுபெறுவதை குறிக்கிறது. அந்த இலக்கை இந்த தம்பதியினர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே அடைந்துவிட்டனர். அப்போது ஆலனுக்கு 40 வயதும், கேட்டிக்கு 35 வயதும் மட்டுமே.
இருவரும் அரிதாகவே வெளியே இருந்து உணவு வாங்கிச் சாப்பிட்டனர். வேலைக்குச் செல்லும்போது எப்போதும் வீட்டிலிருந்தே மதிய உணவை எடுத்துச் செல்வார்கள்.
"மதிய உணவை வெளியே வாங்காமல் இருந்த அந்த ஒரு பழக்கத்தால் மட்டுமே, 10 ஆண்டுகளில் 40,000 பவுண்டுகள் கூடுதலாக சேமிக்க முடிந்தது," என்கிறார் ஆலன்.
"வீட்டுக்கு வெளியே இருக்கும்போது எங்கள் செல்போன்களை சார்ஜ் செய்வோம். மேலும், மற்றவர்கள் பயன்படுத்தாமல் தூக்கி எறிந்த சூப்பர் மார்க்கெட் தள்ளுபடி கூப்பன்களை தேடிப் பயன்படுத்தினோம். இது பைத்தியக்காரத்தனமா அல்லது புத்திசாலித்தனமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், எங்களுக்கு அது பலன் தந்தது."
ஆலன், பயிற்சி மற்றும் வாழ்க்கை வழிகாட்டல் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பு, தோட்ட வடிவமைப்பாளராக பணியாற்றினார். கேட்டி, ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
2014-ஆம் ஆண்டில், ஆலன் ஆண்டுக்கு சுமார் 63,000 பவுண்டுகளும், கேட்டி 58,000 பவுண்டுகளும் சம்பாதித்தனர்.
நல்ல வருமானம் இருந்ததோடு, அவர்கள் கடைப்பிடித்த தீவிர சேமிப்பு பழக்கங்கள் முன்கூட்டியே ஓய்வுபெற உதவின. மேலும், தங்களால் இயன்ற அளவு பணத்தை முதலீடுகளிலும் செலுத்தினர்.
உலகளாவிய இயக்கம்
"நாங்கள் முதலீடு செய்த ஒவ்வொரு பவுண்டும், நாங்கள் விரும்பிய வாழ்க்கையை நோக்கி எடுத்த ஒரு முன்னேற்றப் படியாக இருந்தது," என்கிறார் கேட்டி. அவர்களின் சேமிப்பு 10 லட்சம் பவுண்டுகளை எட்டியபோது, இருவரும் தங்கள் வேலையை விட்டுவிட்டனர்.
ஆலன் மற்றும் கேட்டி, "நிதி சுதந்திரம் பெற்று முன்கூட்டியே ஓய்வுபெறுதல்" என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட 'ஃபயர்' என்ற சிறிய ஆனால் வளர்ந்து வரும் உலகளாவிய இயக்கத்தின் ஒரு பகுதியாக உள்ளனர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு பெரிதாக அறியப்படாத இந்தக் கருத்து, தற்போது ரெடிட்டில் உள்ள முக்கிய 'ஃபயர் விவாதக் குழுவில் கிட்டத்தட்ட 10 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. மேலும், முன்னணி நிதி நிறுவனங்களும் இதுகுறித்து பல வழிகாட்டிகளை வெளியிட்டு வருகின்றன.
இந்த இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை, பணிபுரியும் காலத்தில் மிகவும் சிக்கனமாக வாழ்ந்து, முடிந்தவரை விரைவில் ஓய்வுபெற வேண்டும் என்பதுதான்.
ஆனால் பெரும்பாலானோருக்கு, முன்கூட்டியே வேலைவாழ்க்கையை முடிப்பது ஒரு கனவாகவே உள்ளது. உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவு, அதிகரித்துவரும் வீட்டு விலைகள், மாணவர் கல்விக் கடன்கள் போன்ற காரணங்களால், மக்கள் மேலும் நீண்ட காலம் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புள்ளிவிவரங்களும் இதையே காட்டுகின்றன.
கடந்த ஆண்டு பிரிட்டனில் ஆண்களின் சராசரி ஓய்வுபெறும் வயது 65.8 ஆகவும், பெண்களின் சராசரி ஓய்வுபெறும் வயது 64.7 ஆகவும் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவிலும் இதே நிலை காணப்படுகிறது. 1990-களிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்களின் சராசரி ஓய்வுபெறும் வயது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2025-ஆம் ஆண்டில் அது முறையே 64.8 மற்றும் 63.3 வயதாக இருந்ததாக நீண்டகால ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஆனால், 49 வயதான ஏமி மின்க்லி போன்ற ஃபயர் இயக்க ஆதரவாளர்கள் தங்கள் இலக்கில் உறுதியாக இருக்கின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நடுநிலைப் பள்ளி ஆசிரியர், வெறும் 44 வயதிலேயே ஓய்வுபெற முடிந்தது.
இதற்காக அவர் ஜப்பான், சிங்கப்பூர், இந்தியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள சர்வதேச தனியார் பள்ளிகளில் பணியாற்றினார். தனது சொந்த ஊரான டெக்சாஸை விட, இந்த நாடுகளில் அதிக வருமானமும் குறைவான வாழ்க்கைச் செலவும் இருந்ததாக மின்க்லி கூறுகிறார். அவரது ஆண்டு வருமானம் 76,000 அமெரிக்க டாலர் (சுமார் 54,600 பவுண்டுகள்) வரை சென்றது.
அதே நேரத்தில், அவர் முடிந்தவரை குறைவாகவே செலவழித்தார்.
"வெளிநாடுகளில் வாழும் சிலரின் ஆடம்பரமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதில் எனக்கு ஆர்வம் இல்லை," என்கிறார் மின்க்லி.
"விலையுயர்ந்த ஆடைகளை அரிதாகவே வாங்குவேன். மின்னணு சாதனங்கள் முற்றிலும் பழுதாகும் வரை பயன்படுத்துவேன். பெரும்பாலான உணவுகளை வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடுவேன். பெரிய பொருள் எதையும் வாங்குவதற்கு முன் பலமுறை யோசிப்பேன்.
சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் வாழ்ந்தபோது, மற்றொருவருடன் வீட்டைப் பகிர்ந்து வாழ்ந்தது எனக்கு மேலும் அதிகம் சேமிக்க உதவியது. மேலும், சில நாடுகளில் கார் தேவையில்லாததால் என் செலவுகள் குறைவாகவே இருந்தன," என்கிறார் அவர்.
தற்போது மின்க்லி பாலியில் வசித்து வருகிறார். அமெரிக்காவுக்குத் திரும்பியிருந்தால் கிடைத்திருப்பதை விட, பாலியில் அதிக வசதியாக வாழ முடிகிறது என்கிறார்.
டொராண்டோவைத் தலைமையிடமாகக் கொண்ட நிதி ஆலோசனை நிறுவனமான பிஎம்ஓ பிரைவேட் வெல்த் நிறுவனத்தின் தலைமை சந்தை உத்தி நிபுணராக கரோல் ஷ்லெய்ஃப் பணியாற்றுகிறார்.
ஃபயர் முறை இன்னும் பலரால் பின்பற்றக்கூடிய ஒன்றாக இருந்தாலும், தனது வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் வேலை வாழ்க்கையில் சமநிலையைப் பேணுவதிலேயே அதிக கவனம் செலுத்துவதாக அவர் கூறுகிறார். அதாவது, முடிந்தவரை விரைவாக ஓய்வுபெற முயல்வதற்குப் பதிலாக, அர்த்தமுள்ள ஒரு தொழில் வாழ்க்கையையும், தங்களால் இயன்ற வரம்புக்குள் வாழ்வதையும் இணைத்துக் கொள்ள முயல்கிறார்கள்.
"நீங்கள் முன்கூட்டியே ஓய்வுபெற்றாலும், நல்ல நண்பர்கள், உடல்நலம் அல்லது வாழ்க்கைக்கான நோக்கம் எதுவும் இல்லாவிட்டால், ஓர் இலக்கை அடைந்ததற்காக மற்ற பல முக்கிய விஷயங்களை இழந்துவிட்டீர்கள் என்று பொருள். அப்படியானால் அது உண்மையில் மதிப்புள்ளதா என்ற கேள்வி எழுகிறது," என்கிறார் ஷ்லெய்ஃப்.
"இப்போது மக்கள் ஓய்வூதிய இலக்குகளை அடைவதோடு, வாழ்க்கையையும் அனுபவிப்பதற்கான வழிகளைத் தேடுகிறார்கள்," என்று அவர் கூறுகிறார்.
பிரிட்டனை சேர்ந்த முதலீட்டு தளமான ஏஜே பெல்லின் தனிநபர் நிதிப் பிரிவு தலைவர் சாரா கோல்ஸ், தற்போதைய சூழலில் பெரும்பாலான மக்களால் ஃபயர் கொள்கையை முழுமையாகப் பின்பற்றுவது மிகவும் சவாலானதாக மாறிவிட்டதாக கூறுகிறார்.
இருப்பினும், ஃபயர் கொள்கையின் சில அம்சங்கள் பயனுள்ளதாக இருப்பதாகவும், அவை மக்களுக்கு சற்று முன்கூட்டியே ஓய்வுபெற உதவக்கூடும் என்றும் அவர் கூறுகிறார். குறிப்பாக, இளம் வயதிலேயே சேமிப்பைத் தொடங்குவது மற்றும் ஒவ்வொரு ஊதிய உயர்விற்குப் பிறகும் ஓய்வூதிய நிதிக்கான பங்களிப்பை அதிகரிப்பது போன்றவை அதில் அடங்கும்.
"சமநிலையான அணுகுமுறை, உங்கள் மன உறுதியை பாதிக்காமல், நீங்கள் விரும்பும் நேரத்தில் நீங்கள் விரும்பும் வகையிலான ஓய்வு வாழ்க்கையைப் பெற உதவும். அதற்கு இன்னும் நுணுக்கமான மற்றும் யதார்த்தமான திட்டமிடல் தேவை," என்கிறார் கோல்ஸ்.
ஃபயர் சமூகத்தினருள் சிலர் தற்போது இந்த மிதமான அணுகுமுறையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக, "பரிஸ்டா ஃபயர்" போன்ற புதிய துணைப் பிரிவுகளும் உருவாகியுள்ளன.
இதன் நோக்கம், முதலீடுகளிலிருந்து கிடைக்கும் வருமானம் வாழ்க்கைச் செலவுகளின் பெரும்பகுதியைச் சமாளிக்கும் அளவுக்கு போதுமான சேமிப்பை உருவாக்குவது. பின்னர், பகுதி நேர வேலை மூலம் மீதமுள்ள தேவைகளை பூர்த்தி செய்வது.
ஆனால் சில ஃபயர் ஆதரவாளர்களுக்கு, தீவிர சிக்கன வாழ்க்கை முறையே இன்னும் முன்கூட்டிய ஓய்வை அடைவதற்கான முக்கிய வழியாக உள்ளது. நீண்டகால பலனை மனதில் கொண்டு அவர்கள் அதை ஒரு அர்த்தமுள்ள தியாகமாகக் கருதுகின்றனர்.
"ஃபயர் கொள்கையின் அடிப்படை மிகவும் எளிமையானது; அது எப்போதும் மாறவில்லை. நீங்கள் சம்பாதிப்பதைவிடக் குறைவாகச் செலவிடுங்கள், மீதமுள்ள தொகையை முதலீடு செய்யுங்கள், பின்னர் அந்த முதலீடு வளர்வதற்கு போதுமான கால அவகாசம் கொடுங்கள்." என்கிறார் மின்க்லி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு