5 வயதில் அரியணை, 11 வயதில் நாடு கடத்தல் - இந்தியா திரும்ப அனுமதிக்கப்படாத மன்னரின் கதை

    • எழுதியவர், ஷிவானி சௌத்ரி
    • பதவி, எசெக்ஸ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

துலீப் சிங் (1838-1893) தனது ஐந்தாவது வயதில் சீக்கிய மகாராஜா பட்டத்தைப் பெற்றார். ஆனால், 1849-ஆம் ஆண்டில் பிரிட்டிஷாரால் சீக்கியப் பேரரசு இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் பிரிட்டனுக்கு நாடு கடத்தப்பட்டார். அந்த மகாராஜா இந்தியாவுக்குத் திரும்ப முயன்றார், ஆனால் அவருக்கு எப்போதும் அனுமதி மறுக்கப்பட்டது.

இறுதியில் அவர் தனது 25-வது வயதில் சஃபோல்க்கில் உள்ள எல்வெடன் ஹாலை விலைக்கு வாங்கி, ஜெர்மன் மற்றும் அஃபிசீனிய வம்சாவளியைச் சேர்ந்த தனது முதல் மனைவியான பம்பா முல்லருடன் குடியேறினார்.

நூறு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், 1996-ஆம் ஆண்டில் எசெக்ஸில் உள்ள ஹால்ஸ்டெட் பகுதியைச் சேர்ந்த பீட்டர் பன்ஸ் அந்த இல்லத்துக்குச் சென்று, துலீப் சிங்கின் வாழ்க்கையால் உடனடியாக ஈர்க்கப்பட்டார்.

அவர் அந்த அரசர் பற்றிய கதைகளைச் சேகரிப்பதில் மூன்று தசாப்தங்களைச் செலவழித்தார். அது தனது சொந்த வேர்களை ஆராய்ச்சி செய்வது போல் உணர்ந்ததாக அவர் கூறினார்.

1850-களில் துலீப் சிங் பிரிட்டனுக்கு வந்தது, அந்த நாட்டில் பஞ்சாபிகளின் வரலாறு எவ்வளவு பழமையானது என்பதை எடுத்துக்காட்டுகிறது என்று பீட்டர் பன்ஸ் கூறினார்.

அந்தத் தம்பதியினருக்கு ஆறு குழந்தைகள் இருந்தனர். அவர்களில் தனது விருப்பமான இளவரசி கேத்ரின் (1871-1942) என்று பீட்டர் பன்ஸ் கூறினார்.

தெற்காசிய பாரம்பரிய மாதம் இறுதி வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், பிபிசியிடம் பேசிய 52 வயதான பீட்டர் பன்ஸ், "இளவரசி கேத்ரினின் கதை பெரிதும் வெளிச்சத்துக்கு வராத ஒன்றாக இருந்தது." என்றார்.

"முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட யூத குடும்பங்கள் அனைவரையும் அவர் காப்பாற்றினார்."

"தனது மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத, தனது பின்னணியைச் சேர்ந்தவர்கள் அல்லாத, தனது பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத நபர்களுக்கு அவர் உதவினார். அவர்கள் அவருக்கு முற்றிலும் அந்நியமானவர்கள். அது வெறும் தூய்மையான மனிதநேயம் மட்டுமே."

அவர் மேலும் கூறுகையில், "புலம்பெயர்ந்தோரின் குழந்தையாக நானே அதனுடன் என்னை ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது என்பதால், இந்தக் குழந்தைகளைப் பற்றி நான் மேலும் தெரிந்துகொள்ள மிகவும் விரும்பினேன்." என்றார்.

"நான் இங்கு (இங்கிலாந்தில்) வளர்ந்தேன், மேலும் இங்குதான் பிறந்தேன். எனவே, கலப்பு இனத்தைச் சேர்ந்த இந்தக் குழந்தைகள் இனரீதியாக பஞ்சாபிகள் என்பதால், அவர்கள் இங்கு வளர்ந்தது குறித்து நான் தெரிந்துகொள்ள விரும்பினேன்."

பொக்கிஷமான கலைப்பொருட்கள்

1990களில், இளவரசிகள் பற்றிய கூடுதல் தகவல் யாரிடமாவது உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக நார்ஃபோக் மற்றும் சஃபோல்க் உள்ளூர் நாளிதழ்களில் பீட்டர் பன்ஸ் விளம்பரங்களை வெளியிட்டார்.

அவர்களை அறிந்திருந்த அல்லது அந்தக் குடும்பத்துக்காக வேலை செய்த மக்களிடமிருந்து சுமார் 300 பதில்கள் தனக்குக் கிடைத்ததாகவும், பலருக்கு அந்த இளவரசிகள் பரிசுகளை வழங்கியிருந்ததாகவும் அவர் கூறினார்.

அந்தக் கலைப்பொருட்களை விலைக்கு வாங்குவதாகத் தான் முன்வந்ததாகவும், ஆனால் பலரும் தங்களது பொக்கிஷமான பொருட்களைத் தனது தொகுப்பில் என்றென்றும் நிலைத்திருக்கும் வகையில் இலவசமாகவே வழங்கியதாகவும் பீட்டர் பன்ஸ் தெரிவித்தார்.

தமது சேகரிப்பை தனது வாழ்நாள் பணி மற்றும் பொழுதுபோக்கு என இரண்டாகவும் குறிப்பிடும் அவர், "அந்தக் குடும்பத்துக்குச் சொந்தமான 2,000-க்கும் மேற்பட்ட பொருட்களை நான் வைத்துள்ளேன். அவர்களில் தங்களது அறிமுக நடன நிகழ்வில் பங்கேற்ற மூன்று இளவரசிகளின் அழகிய புகைப்படம் எனது மிகவும் பிடித்த பொருட்களில் ஒன்றாகும் என்பதை நான் சொல்லியே ஆக வேண்டும்."

"இது இளவரசி சோஃபியா துலீப் சிங்குக்குச் சொந்தமானது. அவர் அதனைத் தனது ஞானஸ்நான மகளுக்கு வழங்கினார். அது தென்மேற்கு லண்டனில் உள்ள ஹாம்ப்டன் கோர்ட்டில் உள்ள ஃபாரடே இல்லத்தில் இருந்தது." என்றும் தெரிவித்தார்.

பெண்களின் உரிமைகளுக்காக போராடிய இளவரசி

பெண்களுக்கான உரிமைகளுக்காகத் தனது வாழ்நாள் முழுவதும் போராடுவதில் இளவரசி சோஃபியா முக்கியப் பங்கு வகித்தார் என்று பீட்டர் பன்ஸ் கூறினார்.

ஆனால், அவரது இல்லப் பணியாளர்களில் ஒருவரின் மகளிடம் பேசிய பிறகே அவர் பெண்களுக்கு வாக்குரிமை கோரிப் போராடியவர் என்பதைப் பற்றி அவர் தெரிந்துகொண்டார்.

மகாராஜாவின் சட்டை, இளவரசிகளின் சேலைகள், பொம்மைகள், கடிதங்கள் மற்றும் ஓவியங்கள் ஆகியவை இப்போது அவரது சேகரிப்பில் உள்ளன.

பஞ்சாபின் கடைசி இளவரசிகள் (தி லாஸ்ட் பிரின்சஸ் ஆஃப் பஞ்சாப்) என்ற பெயரிலான கண்காட்சியின் ஒரு பகுதியாக, இந்தக் கலைப்பொருட்களில் பல மேற்கு லண்டனில் உள்ள கென்சிங்டன் அரண்மனையில் நவம்பர் வரை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

லண்டனில் நடைபெற்ற இந்தக் கண்காட்சிக்காக ஜஸ்ஸா அலுவாலியா தனது சொந்த சகோதரி ரமனீக்குடன் இணைந்து ஆலோசகராகப் பணியாற்றினார்.

இந்திய மற்றும் ஆங்கிலேயப் பாரம்பரியம் கொண்ட நடிகரும், ஆர்வலரும், எழுத்தாளருமான அவர், கலப்புப் பாரம்பரிய அடையாளம் குறித்த தனது சொந்த அனுபவங்களுடன் இதைப் பொருத்திப் பார்க்க முடிந்ததாகத் தெரிவித்தார்.

"இந்தக் கதைகள் என்னையும் எனது சகோதரியையும் பாதித்துள்ளன; எங்கள் அனுபவங்களில் உள்ள ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் அத்தகையவை," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

"இது (எல்வெடன் ஹால்) என்னை எனக்குள் பிரதிபலிப்பது போல இருந்தது. வெளிப்பகுதி மிகவும் ஆங்கிலேயத் தன்மையுடனும், உட்பகுதி மிகவும் இந்தியத் தன்மையுடனும் தோன்றியது."

அலுவாலியா மேலும் கூறுகையில், "21-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வளர்ந்த கலப்புப் பாரம்பரியப் பஞ்சாபிகளாக நாங்கள் யார் என்பதைப் புரிந்துகொள்ளும் ஒரு வழியாவே இந்தக் கதைகளை அணுகினோம். எங்கள் கதை முற்றிலும் தனித்துவமான நவீனக் கதை அல்ல என்பதையும், அதற்கு ஒரு வரலாறு உண்டு என்பதையும், கலாசாரப் பரிமாற்றத்தின் தொடர்ச்சியான பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக நாங்கள் இருக்கிறோம் என்பதையும் உணர்ந்துகொண்டோம்." என்றார்.

"இது மிகவும் உயிரோட்டமான ஒரு வரலாறு மற்றும் நாம் ஒரு நாடாக யார் என்பதைச் சொல்லும் வரலாறு."

"நம் நாட்டின் வரலாற்றை நீங்கள் துல்லியமாகச் சொல்லவில்லை என்றால், வேறு நபர்கள் அதன் கற்பனையான பதிப்புகளை உருவாக்குவார்கள், அது நாம் ஒரு நாடாக யார் என்பதற்கான கதையாக இருக்காது."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு