You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யுக்ரேனில் ஜப்பான் பிரதமர்- ரஷ்யாவில் சீன அதிபர்: எதிரெதிர் பயணங்களுக்கு காரணம் என்ன?
- எழுதியவர், ஷய்மா காலில் மற்றும் கரித் இவன்ஸ்
- பதவி, டோக்யோ மற்றும் லண்டன்
- பிரசுரிக்கப்பட்டது
யுக்ரேன் போர் ஆசியாவில் எப்படி எதிரொலிக்கிறது என்பதை நீங்கள் அறிய விரும்பினால், ஜப்பான் மற்றும் சீன தலைவர்களின் பயணம் உங்களுக்கு ஒரு சிறந்த உதாரணத்தை வழங்கக்கூடும். போரில் எதிரெதிர் பக்கங்களில் உள்ள நாடுகளுக்கான பயணத்தில் இந்த நாடுகளின் தலைவர்கள் உள்ளனர்.
யுக்ரேன் தலைநகர் கியவ் சென்றுள்ள ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா புனரமைப்பு, மனிதாபிமான உதவிகள் தொடர்பாக யுக்ரேன் அதிபருக்கு உறுதியான ஆதரவை தெரிவித்துள்ளார்.
மறுபுறம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நண்பர் என்றும் கூட்டாளி என்றும் கருதப்படும் சீன அதிபர் ஷி ஜின்பின் தற்போது மாஸ்கோவில் உள்ளார். தன்னை நடுநிலையாளர் என்று சீனா கூறிகொண்டாலும், ரஷ்யா சார்புடையதாகவே அந்நாடு தெரிகிறது.
ரஷ்யாவுடனான தனது உறவுகளுக்கு சீனா முன்னுரிமை அளிக்கும் என்று செவ்வாயன்று கூறிய ஷி ஜின்பிங், இரு நாடுகளையும் சக்திவாய்ந்த அண்டை நாடுகள் என்றும் விவரித்தார்.
சூழல், நேரம் ஆகியவற்றின் அடிப்படையில், ஜப்பான் பிரதமர் கிஷிடாவின் யுக்ரேன் பயணமும் குறிப்பிடத்தக்கது ஆகும். இதில் நாம் என்ன புரிந்துகொள்ள முடியும்?
ஜப்பானிய தலைவர் ஒருவர் அறிவிக்கப்படாத வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது என்பது அரிதானது. அதிலும், இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் போரில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டுக்கு செல்லும் முதல் ஜப்பானிய பிரதமர் கிஷிடா தான். செவ்வாயன்று அவர் புறப்படுவதற்கு முன்புவரை அவரது பயணம் குறித்த தகவல் ரகசியமாகவே வைக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது பயணத் தகவல் ரகசியமாக வைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த பயணத்தின் போது, அருகில் உள்ள புச்சா நகருக்கு கிஷிடா அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு கடந்த ஆண்டு ரஷ்யப் படைகளால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அவர், அப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியத்தின் மீது மிகுந்த கோபம் கொள்வதாகக் கூறி ஆறுதல் கூறினார்.
இந்த பயணத்திற்கு முன்னதாக, ஜப்பானிய வெளியுறவு அமைச்சகம், "தங்கள் தாய்நாட்டைக் காக்க எழுந்து நிற்கும் யுக்ரேனிய மக்களின் தைரியம், பொறுமைக்கு மதிப்பளிப்பதாகவும் அசைக்க முடியாத ஆதரவை வழங்குவதாகவும்" கூறியது.
‘படையெடுப்பு, வலுகட்டாயமாக ரஷ்யா மேற்கொண்டுள்ள ஒருதலைப்பட்சமான மாற்றத்தை கிஷிடா முற்றிலும் நிராகரிப்பார்’ என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
யுக்ரேனுக்கு கிஷிடா பயணம் செல்ல வேண்டும் என்று அவரது சொந்த கட்சியான ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியில் இருந்து அழுத்தம் வந்தது. யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பை தொடங்கிய பின், அங்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் சென்றனர். அங்கு செல்லாத ஒரே ஜி7 நாட்டு தலைவராக கிஷிடா இருந்தார். எனவே, ஹிரோஷிமாவில் மே மாதம் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்குவதற்கு முன்பாக அவர் யுக்ரேன் செல்ல வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.
கடந்த வாரம் டோக்கியோவில் தென் கொரிய அதிபருடன் ஒரு உச்சி மாநாட்டை நடத்தியதன் மூலம் ஏற்கனவே அவர் ஒரு ராஜதந்திர நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார். தென் கொரியா- ஜப்பான் இடையேயான இந்த பேச்சுவார்த்தை பல ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றுள்ளது .
தென் கொரியாவுடன் உறவுகளை இயல்பாக்குவது, உளவுத்துறையைப் பகிர்வது மற்றும் வட கொரியாவுக்கு எதிராக ஒன்றிணைந்த கூட்டணியை காட்டுவது போன்றவை ஜப்பானின் நட்பு தொடர்பாக அமெரிக்காவுக்கு உறுதியளிக்கும்.
ஜப்பான் பிரதமரின் யுக்ரேன் பயணம் வாஷிங்டனால் வரவேற்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. சீனத் தலைவரின் மாஸ்கோ பயணத்தின் ஒரு பகுதி, நாட்டின் உலகளாவிய செல்வாக்கை விரிவுபடுத்தும் முயற்சியாகும். அதே நேரத்தில் யுக்ரைனில் ஜப்பான் தலைவர் இருப்பது, இந்த புவிசார் அரசியல் கொந்தளிப்புக்குள் அவர்கள் எங்கு நிற்கிறார்கள் என்பதற்கு வலுவான செய்தியை அனுப்புகிறது.
இது சாதாரண சாதனையல்ல. குறிப்பாக சீனாவுடனான அதன் உறவில் ஜப்பானுக்கு நிறைய சமநிலை உள்ளது. கடந்த மாதம், டோக்கியோவில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இரு நாடுகளும் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஜப்பானின் ராணுவக் கட்டமைப்பினால் கவலையடைந்துள்ளதாக சீனா கூறியது. ரஷ்யாவுடனான சீனாவின் ராணுவ உறவு, உளவு பலூன்களை பயன்படுத்துவது ஆகியவற்றை ஜப்பானும் விமர்சித்தது.
உலகின் இரண்டாவது, மூன்றாவது பெரிய பொருளாதார நாடுகளாக சீனா, ஜப்பான் உள்ளன. அவர்களுக்கு மத்தியில் உள்ள தற்போதைய பதற்றங்களுக்கு இடையே ஒரு திறந்த தொடர்பு ஒட்டம் அவசியம்.
யுக்ரேனில் நடைபெறும் போர் தொடர்பாக ஜப்பானுக்கும் அதன் சொந்த கவலைகள் உள்ளன. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கும் தைவானுக்கு எதிரான சீனாவின் ராணுவ ஆக்கிரமிப்புக்கும் இடையேயான சாத்தியமான ஒற்றுமை குறித்த ஆழ்ந்த கவலை ஜப்பானுக்கு உள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்