'மைக்கேல் மதன காமராஜன்' உள்பட டெல்லி கணேஷ் முத்திரை பதித்த 7 படங்கள்

பட மூலாதாரம், X/Delhi ganesh
- எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
ஆயிரக்கணக்கான நாடகங்கள், 400க்கும் அதிகமான படங்களில் நடித்து முத்திரை பதித்தவர் நடிகர் டெல்லி கணேஷ்.
உண்மையில் அவர் டெல்லியைச் சேர்ந்தவர் கிடையாது. பின்னர் அவருக்கு டெல்லி என்ற அடைமொழி எப்படி வந்தது?
நெல்லை மாவட்டத்தில் பிறந்து, மதுரை டிவிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு, இந்திய விமானப் படையில் 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர் டெல்லி கணேஷ்.
அப்போது டெல்லியில் பல நாடகங்களில் நடித்தார். 1974-ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னை வந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அவர் டெல்லியில் இருந்து வந்ததால் டெல்லி கணேஷ் என அழைக்கப்பட்டார்.
டெல்லி மற்றும் சென்னையில் பல நாடங்களில் நடித்தவரை அடையாளம் கண்டு, தனது 'பட்டின பிரவேசம்' படத்தில் கே. பாலசந்தர் நடிக்க வைத்தார்.
அவரே பிற்காலத்தில் தான் இயக்கிய சிந்து பைரவியில் டெல்லி கணேசுக்கு சிறப்பான வேடத்தைக் கொடுத்தார். கமலின் பல படங்களில் டெல்லி கணேஷ் நடித்துள்ளார்.
'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் வில்லனாக நடித்து மிரட்டினார். நாயகனில் நாயக்கரின் வலது கையாக வந்தார். தெனாலி, அவ்வை சண்முகியில் சிரிக்க வைத்தார். சினிமாவில் மட்டுமல்ல, சின்னத்திரை , குறும்படங்களிலும் நடித்தார். 2024-ஆம் ஆண்டு தனது 80 வயதில் காலமானார். இன்று அவரது பிறந்தநாள்.
டெல்லி கணேஷின் உயிர் நண்பரும், ஆரம்ப காலத்தில் அவரை நாடகங்களில் நடிக்க வைத்தவருமான காத்தாடி ராமமூர்த்தியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
''டெல்லியில் நாடங்களில் நடித்து வந்த கணேஷ் சென்னை வந்து நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார். அப்போது 'டவுரி கல்யாணம்' நாடக வேலைகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு நண்பர் மூலமாக வந்து ரிகர்சல் சமயத்தில் வாய்ப்பு கேட்டார். மாம்பலம் குசேலர் என்ற சின்ன வேடம் கொடுத்தோம். திருமண வீட்டுக்கு சம்பந்தம் இல்லாமல் வந்து பந்தா செய்யும் கதாபாத்திரம். அதில் நடித்து அசத்தினார். பின்னர், நாடக குழுவினருடன் நட்பாகப் பழகினார். எங்கள் நாடகங்களில் பல ஆண்டுகள் நடித்தார்.
சாதாரண கணேஷ் டெல்லி கணேஷ் ஆனார். அவர் திறமையால் ஈர்க்கப்பட்ட கே.பாலசந்தர் 'பட்டினப் பிரவேசம்' நாடகத்தில் நடிக்க வைத்தார். அது பின்னர் படமாகவும் எடுக்கப்பட்டது. பின்னர் நாடகங்களில் நடிக்க முடியாத அளவுக்கு சினிமாவில் பிஸியானார். எல்லாக் காலத்திலும் தன்னை அறிமுகப்படுத்திய என்னை மறக்கவே இல்லை. எல்லா இடத்திலும் என் பெயரைச் சொல்வார். அவர் நடித்த படங்களில் சிந்து பைரவி, அவ்வை சண்முகி எனக்கு மிகவும் பிடித்த படங்கள்." என்றார் காத்தாடி ராமமூர்த்தி.

பட மூலாதாரம், X/Delhi Ganesh
டெல்லி கணேஷின் நண்பரும் நடிகருமான எஸ்.வி.சேகர் பேசுகையில் "சென்னைக்கு வந்த காலத்தில் இருந்தே அவர் என் நண்பராக இருந்தார். நான், விசு, காத்தாடி ராமமூர்த்தி, கணேஷ் ஆகியோர் நாடகங்களில் பணியாற்றினோம். 'டவுரி கல்யாணம்' நாடகத்தில் அவரின் நடிப்பு அப்போது பேசப்பட்டது.
அந்த நாடகத்தில் தான் யார் என்று மற்றவர்களுக்கு தெரிந்தவுடன் அவர் தனியாக சிறிது நேரம் நடிப்பார். அது பிரபலமாக, பிற்காலத்தில் அப்படி தனியாக நடிக்கும் பாணியை பலரும் பின்பற்றினார்கள். சிலர் சினிமாவில் வேறு மாதிரி இருப்பார்கள், நிஜத்தில் வேறு மாதிரி இருப்பார்கள். நிஜ வாழ்க்கையிலும் டெல்லி கணேஷ் கலகலப்பானவர்." என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், "டெல்லி கணேஷிடம் ஒரு நகைச்சுவை தொனி உண்டு. அவரின் திறமையை பாலசந்தர், கமல் போன்றவர்கள் நன்கு அறிந்து, தங்கள் படங்களில் பணியாற்ற வைத்தார்கள். சில கதாபாத்திரத்திற்கு அவர்தான் பொருந்துவார் என்று சொல்லும் அளவுக்கு நடிப்பார். நானும் அவரும் பல படங்களில் நடித்து இருக்கிறோம். 'ஊருக்கு உபதேசம்' படத்தில் எனக்கு அப்பாவாக நடித்தார்.
மணல்கயிறு-2 படத்தில் மருத்துவர் வேடத்தில் அவர் நடித்தார். 75 வயதைத் தாண்டிய நிலையிலும் சிறிய கதாபாத்திரம், குறும்படம் என அழைத்தால் கூட வெளியூர் சென்று நடித்து விட்டு வருவார். சிறிய கம்பெனி, பெரிய கம்பெனி, புதுமுக இயக்குநர், புதுமுக நடிகர்கள் எனப் பார்க்காமல் சிறப்பாக நடித்து கொடுப்பார். மைக்கேல் மதன காமராஜனில் அவர் நடிப்பு பிரமாதமாக இருக்கும். தனது கடைசி காலத்தில் காலத்துக்கு தக்கப்படி மாறி, ஃபேஸ்புக்கில் கூட நன்றாக அனுபவங்களை எழுத ஆரம்பித்தார். அதை புத்தகமாக வெளியிடுங்கள் என்றேன். அதையும் செய்தார். மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி டெல்லி கணேசும் நாடகம், சினிமாவில் முத்திரை பதித்த நடிகர்கள்." என்றார்
'பசி, குடிசை, அபூர்வ சகோதரர்கள்' - மகன் சொல்லும் தகவல்

பட மூலாதாரம், X/Tamilisai Soundararajan
மறைந்த டெல்லி கணேஷின் மகனும், 'என்னுள் ஆயிரம்' பட நாயகனுமான மகா டெல்லி கணேஷ் பிபிசி தமிழிடம் கூறுகையில் 'அப்பா நடிப்புக்காகவே வாழ்ந்தார். கடைசி காலகட்டம் வரை நடித்துக்கொண்டே இருந்தார். சூழ்நிலை, உடல்நிலை காரணமாக உறவினர் வீட்டு நிகழ்ச்சி, நண்பர்கள் வீட்டு விசேஷங்களுக்கு போவதை கூட தவிர்த்துவிடுவார். ஆனால், சினிமா படப்பிடிப்புக்கு போகாமல் வீட்டில் இருக்கவே மாட்டார். நம்மை நம்பி அழைத்து இருக்கிறார்கள். எவ்வளவு செலவு, எவ்வளவு பேர் காத்திருப்பார்கள் என கிளம்பிவிடுவார். அவர் நடித்ததில் பல படங்கள் பிடித்து இருந்தாலும் சில படங்களைச் சொல்கிறேன்." எனப் பட்டியலிட ஆரம்பித்தார்.
1) பசி
துரை இயக்கத்தில் வெளியான படம். அதில் நடித்த ஷோபாவுக்கு தேசிய விருது கிடைத்தது. அப்பாவுக்கு மாநில அரசு விருது கிடைத்தது. அதை அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் கையால் வாங்கினார். அதுவரை நடித்திராத மாறுபட்ட வேடம். ஆம், அதில் முனியாண்டி என்ற ரிக்ஷாகாரராக வருவார். அந்தக் கதாபாத்திரத்திற்காக அவர் ரிக்ஷா ஓட்டி பழகியிருக்கிறார். அப்போது ஒருவர் அவரை நிஜ ரிக்ஷாக்காரராக நினைத்து 'ஏம்பா என்னை அங்கே கொண்டு போய்விடு' எனச் சொல்லியிருக்கிறார். அந்த சம்பவம் அப்பாவையும், இயக்குநர் துரையையும் நெகிழ வைத்திருக்கிறது
2) குடிசை
ஜெயபாரதி இயக்கத்தில் வெளிவந்த தமிழின் முக்கியமான படம். ஏகப்பட்ட விருதுகள் வாங்கிய படம். நான் அடிக்கடி பார்க்கிற படம். தமிழ் சினிமாவில் அந்தக் காலத்தில் 'திரள் நிதி' முறையில் உருவான படம். கல்லுாரிகளில் நிதி திரட்டி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். ஒரு எளிய மனிதராக அருமையான நடிப்பை தந்திருப்பார் அப்பா.

பட மூலாதாரம், Ayngaran
3) பட்டினப் பிரவேசம்
கே.பாலசந்தர் இயக்கிய இந்தப் படம் எனக்கும், அப்பாவுக்கும், எங்கள் குடும்பத்துக்கும் உணர்வுப்பூர்வமாக முக்கியமான படம். காரணம், இந்தப் படத்தின் மூலமாக அவர் சினிமாவில் நடிகரானார். அந்தப் பட இறுதிக் காட்சி அவ்வளவு அழுத்தமாக இருக்கும்.
கிராமத்தில் இருந்து பட்டினம் வந்து மீண்டும் கிராமம் செல்லும் கதை. அவர் நடிப்பு அவ்வளவு அழுத்தமாக இருக்கும். அந்தச் சமயத்தில் இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதிய ஒரு பத்திரிகை ஒவ்வொரு துறைக்கும் மார்க் கொடுத்துவிட்டு, கூடுதலாக 5 மதிப்பெண் அறிமுகமாகி இருக்கிற டெல்லி கணேஷுக்கு என்று பாராட்டியிருந்தது.
4) அபூர்வ சகோதரர்கள்
அப்பா - கமல் கூட்டணியில் வந்த படங்களுக்கு தனி இடமுண்டு. காமெடி வேடத்திலும், குணசித்திர கதாபாத்திரத்தில் அதிகமாக நடித்துக் கொண்டிருந்த போது அவர் தைரியமாக முடிவெடுத்து வில்லனாக நடித்த படம். அவருடன் ஜெய்சங்கர், நாகேஷ், நாசர் போன்றோர் இணைந்து நடித்திருந்தனர். அனைவருடனும் போட்டிபோட்டு நடித்தார். குறிப்பாக, மற்ற வில்லன்களை விட அப்பாவின் கொலை தான் கதையில் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அதற்கு தக்கபடி அப்பாவும் நடித்திருந்தார்.
5) புன்னகை மன்னன், ஆஹா, மைக்கேல் மதன காமராஜன்
இந்த மூணு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இந்தப் படங்களில் அப்பா சமையல்காரராக வருவார். ஆனால் மூன்று படங்களிலும் நடிப்பில் அவ்வளவு வித்தியாசம் காண்பித்திருப்பார். ஒரு நடிகரால் ஒரே கதாபாத்திரத்தை இப்படி 3 விதமாக நடிக்க முடியும் என்றும் நான் உட்பட பலரும் வியந்து இருக்கிறோம். ஒருமுறை இந்தப் படங்களை பாருங்கள், அது உங்களுக்கே புரியும்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



























