'துரோகத்தின் உச்சம்': பிரிட்டிஷ், அமெரிக்க ரகசியங்களை சோவியத்திற்கு கடத்திய 'டபுள் ஏஜென்ட்'

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஃபியோனா மெக்டொனால்ட்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
ஜூலை 30, 1963 அன்று, எம்ஐ 6 (MI6) அமைப்பிலிருந்து சோவியத் ஒன்றியத்திற்கு கிம் ஃபில்பி தப்பிச் சென்றது பகிரங்கப்படுத்தப்பட்டது. 2016-இல், பிபிசி நிறுவனம், ஸ்டாசி (Stasi - கிழக்கு ஜெர்மனி உளவு அமைப்பு) உளவாளிகளுக்கு அவர் தனது துரோகத்தின் ரகசியங்களை விளக்கி ஆற்றிய அதுவரை வெளிவராத உரை ஒன்றின் வீடியோவை ஒளிபரப்பியது.
"என் வாழ்நாள் முழுவதும் எந்தவொரு விளம்பரத்தையும் தவிர்க்கவே நான் முயற்சித்து வந்திருக்கிறேன்," என கிழக்கு ஜெர்மனியின் உளவுத்துறை ஆவணக் காப்பகத்தில் இருந்து பிபிசி கண்டுபிடித்த 1981-ஆம் ஆண்டு வீடியோவில் கிம் ஃபில்பி கூறுகிறார்.
இது மிகச் சாதாரணமான வார்த்தை அல்ல. ஃபில்பி ஒரு பிரிட்டிஷ் 'டபுள் ஏஜென்ட்' ஆவார்; அவர் சோவியத் ஒன்றியத்திற்குத் தப்பிச் சென்றது ஜூலை 30, 1963-இல் உலகிற்குத் தெரியவந்தது. அந்த வீடியோவில், உளவுத்துறையில் எப்படி வெற்றிபெறுவது என்பது குறித்து ஸ்டாசி உளவாளிகளுக்கு அவர் ஒரு கருத்தரங்கு நடத்துவதைக் காண முடிகிறது.
இதுவரை பார்த்திராத இந்த வீடியோ குறித்து பிபிசியின் முன்னாள் பாதுகாப்புச் செய்தியாளர் கார்டன் கொரேரா 2016-இல் விளக்கும்போது, "கேம்பிரிட்ஜ் படிப்பிற்குப் பிறகு சோவியத் உளவாளிகளால் சேர்க்கப்பட்டது முதல், பிரிட்டனின் ரகசிய உளவு அமைப்பான எம்ஐ6-இல் இணைந்து அதன் ரகசியங்களைத் திருடியது வரை, துரோகம் செய்வதற்கான ஒரு தலைசிறந்த பாடத்தை ஃபில்பி வழங்குகிறார்" என்றார்.
'வெறுக்கத்தக்க துரோகிகள்'

பட மூலாதாரம், Getty Images
'கேம்பிரிட்ஜ் ஃபைவ்' என அழைக்கப்படும் கேஜிபி (KGB) உளவாளிக் குழுவின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தனது துரோகத்தைப் பற்றி விவாதிக்கும் ஒரே வீடியோ இதுதான் - பல நிலைகளில் உண்மைகளை வெளிப்படுத்தும் ஒரு அரிய பதிவு.
சூட் அணிந்து ஒரு மேடையில் நின்றபடி, "எதிரி முகாமில் கழித்த எனது 30 ஆண்டுகாலப் பணியை இப்போது திரும்பிப் பார்க்கிறேன்," என்று அந்த மங்கலான வீடியோவில் அவர் கூறுகிறார்.
"ஒவ்வொரு நாள் மாலையிலும், நானே எழுதிய அறிக்கைகள் மற்றும் உண்மையான ஆவணக் காப்பகங்களில் இருந்து எடுக்கப்பட்ட கோப்புகள் நிரம்பிய ஒரு பெரிய கைப்பெட்டியுடன் நான் அலுவலகத்திலிருந்து வெளியேறுவேன். மாலையில் அவற்றை எனது தொடர்பாளரிடம் வழங்குவேன். அடுத்த நாள் காலை கோப்புகளைத் திரும்பப் பெறுவேன்; அதற்குள் அதிலுள்ளவை புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கும். பிறகு அதிகாலையிலேயே அவற்றை மீண்டும் கொண்டு சென்று, அந்தக் கோப்புகளை அதனதன் இடத்தில் வைத்துவிடுவேன். இதைப் பல ஆண்டுகளாக நான் தொடர்ந்து செய்தேன்."
டொனால்ட் மேக்லீன், கை பர்கெஸ், அந்தோனி பிளண்ட் மற்றும் ஜான் கெய்ர்ன்கிராஸ் ஆகியோரையும் உள்ளடக்கிய ஒரு குழுவின் அங்கமாக, இரண்டாம் உலகப் போர் மற்றும் பனிப்போரின் போது பிரிட்டனின் அரச ரகசியங்களை கிரெம்ளினுக்கு ஃபில்பி அனுப்பினார். நாஜி ஜெர்மனியும் சோவியத் ஒன்றியமும் கூட்டாளிகளாக இருந்த காலகட்டமும் இதில் அடங்கும்.
எனினும், அவர்களின் இந்த இரட்டை வேடத்தைப் பற்றி சில நேரங்களில் ஒரு நல்லவிதமான அல்லது கவர்ச்சியான கண்ணோட்டம் நிலவுவதாக, 'ஸ்டாலினின் தூதர்கள்: கேம்பிரிட்ஜ் ஐவர் மற்றும் சோவியத் பேரரசின் உருவாக்கம்' (Stalin's Apostles: The Cambridge Five and the Making of the Soviet Empire) என்ற புத்தகத்தின் ஆசிரியரான அன்டோனியா சீனியர் கூறுகிறார்.
"குறிப்பாக நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் அவர்களைக் கவர்ச்சியான முரடர்களாகச் சித்தரிக்கின்றன," என்று சீனியர் பிபிசியிடம் தெரிவித்தார்.
"உண்மையில் அவர்கள், தங்கள் நாட்டையும் தங்களை நேசித்த மக்களையும் காட்டிக்கொடுத்த, வெறுக்கத்தக்க துரோகிகள்... இது சாதாரணமான குற்றமல்ல. அவர்களின் துரோகங்கள் ஐரோப்பாவின் பாதியை ஸ்டாலின் அடிமையாக்க உதவியது. உலகப் புரட்சி என்ற போர்வையில் அந்த ஏகாதிபத்தியத் திட்டத்தை முன்னெடுப்பதில் 'கேம்பிரிட்ஜ் ஃபைவ்' குழுவினர் ஆர்வமாக இருந்தனர்."
அல்பேனியாவில் சிஐஏ மற்றும் எம்ஐ6 இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையைத் தான் காட்டிக்கொடுத்ததாகவும், இதனால் நூற்றுக்கணக்கான ஆண்கள் கொல்லப்பட்டதாகவும் ஸ்டாசி உரையில் ஃபில்பி ஒப்புக்கொள்கிறார்.
தான் காட்டிக்கொடுத்த அல்பேனிய உளவாளிகளை "அவர்கள் மிகவும் அனுபவமற்றவர்களாக இருந்தார்கள்" என்று அவர் 1968-இல் எழுதிய சுயசரிதையில் விவரித்திருந்தார். இதை நியூயார்க் டைம்ஸ் "சிறிதும் குற்றவுணர்வு அற்ற, சுயநலமிக்க" ஒரு செயல் என்று குறிப்பிட்டது. தன்னால் மரணத்தை எதிர்கொண்ட மனிதர்கள் மீது அவருக்கு "துளியும் இரக்கமற்ற ஓர் அலட்சியமான அணுகுமுறை இருந்தது" என்று சீனியர் கூறுகிறார்.
ஐவர் குழு

பட மூலாதாரம், Getty Images
1930-களின் முற்பகுதியில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சோவியத் உளவாளியாகச் சேர்க்கப்பட்ட பிறகு, ஃபில்பி 1940-இல் எம்ஐ6 அமைப்பில் இணைந்தார். பின்னர் அந்த அமைப்பின் சோவியத் எதிர்ப்பு உளவுத்துறையின் தலைவரானார். அந்தப் பதவி அவருக்கு முக்கியமான பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ரகசியங்களை நேரடியாக கேஜிபி-க்கு வழங்கவும், அதேநேரத்தில் மேற்கத்திய நாடுகளின் கம்யூனிச எதிர்ப்பு நடவடிக்கைகளை சீர்குலைக்கவும் உதவியது.
பிரிட்டிஷ் உளவுத்துறையில் அவரது இந்த வளர்ச்சிக்கு அவரது பின்புலமும், "சாபோக்ரசி" (chapocracy - உயர்குடியினரின் ஆதிக்கம்) என்று சீனியர் குறிப்பிடும் ஒரு நிகழ்வும் உதவியது; இது அதிகார அமைப்பிற்குள் இருந்த, ஒரே மாதிரியான உயர் கல்விப் பின்னணியைக் கொண்ட சலுகை பெற்ற ஆண்களின் ஒரு நெருக்கமான குழுவைக் குறிக்கிறது.
தகுதி அல்லது கடுமையான பின்னணி விசாரணையின் அடிப்படையில் இல்லாமல், சமூக அந்தஸ்து மற்றும் தனிப்பட்ட செல்வாக்கின் அடிப்படையிலேயே பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டது என்பதை இது குறிக்கிறது என்கிறார் சீனியர்.
"இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில், பாதுகாப்புச் சேவைகளில் சேர புத்திசாலி மனிதர்களுக்குப் பெரிய தேவை இருந்தபோது, 'சாபோக்ரசி' முறை ஃபில்பியை பிரிட்டிஷ் உளவுத்துறை வேலைக்குக் கொண்டுவந்தது; அவரைப் போன்றவர்கள் எளிதாக உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டனர்," என்று அவர் கூறுகிறார்.
வர்க்கப் பாகுபாடுகள் மற்றும் நிறுவனங்களின் குறைகளைப் பயன்படுத்திக் கொண்டு, ஃபில்பியும் மற்ற 'கேம்பிரிட்ஜ் ஃபைவ்' உறுப்பினர்களும், "ஸ்டாலினுக்காக உளவு பார்த்த 17 ஆண்டுகளில் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அரசுகளின் முக்கிய ரகசியங்களை" அணுக முடிந்தது என்கிறார் சீனியர்.
"அணுசக்தி ஆராய்ச்சி, பிரிட்டன் அமைச்சரவையின் முழுமையான குறிப்புகள், பிளெட்ச்லி பார்க்கின் ரகசியங்கள் (Bletchley Park - பிரிட்டனின் இரண்டாம் உலகப் போர்க் கால குறியீடுகளை தீர்க்கும் மையம்), வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் ஆகியோரின் தனிப்பட்ட கடிதங்கள், என இந்தப் பட்டியல் நீளமானது மற்றும் முற்றிலும் அதிர்ச்சியளிக்கக்கூடியது - சோவியத் உளவுத்துறை தங்களுக்குள் இவர்களை 'மேக்னிஃபிசென்ட் ஃபைவ்' (அற்புதமான ஐவர்) என்று அழைத்ததில் ஆச்சரியமில்லை."
1951-இல் பர்கெஸ் மற்றும் மேக்லீன் சோவியத் ஒன்றியத்திற்குத் தப்பிச் சென்ற பிறகு, ஃபில்பி உளவுத்துறைப் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் 1955-இல் எம்ஐ6-இல் இருந்து நீக்கப்பட்டார். இருந்தபோதிலும், அவரால் 1963-இல் மாஸ்கோவிற்குத் தப்பிக்க முடிந்தது. கிழக்கு ஜெர்மனி உளவாளிகளுக்கு ஃபில்பி வழங்கிய இறுதி ஆலோசனையில் இதற்கான சாத்தியமான காரணம் ஒன்று சொல்லப்பட்டிருந்தது:
"என் மனவுறுதியை உடைத்து, என்னை ஒப்புக்கொள்ளக் கட்டாயப்படுத்துவதற்காக அவர்கள் என்னை விசாரித்தனர். நான் செய்ய வேண்டியதெல்லாம், என் தைரியத்தை விடாமல் இருப்பதே. உங்களுக்கு நான் சொல்லும் அறிவுரை என்னவென்றால், உங்கள் உளவாளிகளிடம் ஒருபோதும் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டாம் என்று கூறுங்கள். எல்லாவற்றையும் மறுத்துவிடுங்கள்."
உளவு பார்த்ததற்காக இந்த ஐவரில் எவர் மீதும் வழக்குத் தொடரப்படவில்லை - இது பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தால் மூடி மறைக்கப்பட்டதன் விளைவு என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் சீனியர் அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை என்று வாதிடுகிறார். "ஃபில்பி, பிளண்ட் மற்றும் கெய்ர்ன்கிராஸ் மீதான விசாரணைகள் குறித்து எம்ஐ5 கடந்த ஆண்டு தொடக்கத்தில் பெரிய அளவிலான ஆவணங்களை வெளியிட்டது. அது ஒரு வித்தியாசமான கோணத்தை வெளிப்படுத்தியது," என்று அவர் கூறுகிறார்.
"பாதுகாப்புப் படையினர் தவறுகளைச் செய்தனர், ஆனால் உளவு பார்த்ததை நிரூபிப்பது எவ்வளவு கடினம் என்பதே அடிப்படைப் பிரச்னையாக இருந்தது. இந்த வீடியோவில், வழக்கில் இருந்து தான் தப்பியதை, விஷயங்களை மூடிமறைக்க நினைத்த அதிகார வர்க்கத்தின் ஆசையைத் தான் திறமையாகக் கையாண்டதாக ஃபில்பி சித்தரிக்கிறார். ஆனால் உண்மை இதைவிடச் சிக்கலானது."
பர்கெஸ் மற்றும் மேக்லீன் தப்பிச் சென்றவுடன் ஃபில்பி மீது சந்தேகம் எழுந்தது- அவர் விசாரிக்கப்பட்டார், கண்காணிக்கப்பட்டார், ரகசியமாக ஒட்டுக் கேட்கப்பட்டார், மற்றும் பின்தொடரப்பட்டார். ஒரு முன்னணி வழக்கறிஞரின் குறுக்கு விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக, "வழக்குத் தொடர போதுமான சான்றுகள் இல்லை. ஃபில்பி பொய் சொல்கிறார் என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தது, ஆனால் எந்த ஆதாரமும் இல்லை," என்கிறார் சீனியர்.
ரஷ்யாவின் நாயகன்

பட மூலாதாரம், Getty Images
பாதுகாப்புப் படையினர் இறுதியில் ஃபில்பி, பிளண்ட் மற்றும் ஜான் கெய்ர்ன்கிராஸ் ஆகியோரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெற்றனர். ஆனால் சட்ட நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதால் மட்டுமே அது சாத்தியமானது; அதாவது, அவர்களது ஒப்புதல் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியாது.
"பிரிட்டனில், கேம்பிரிட்ஜ் ஃபைவ் குழுவினரைப் பாதுகாத்த மிக முக்கியமான அம்சம் சட்ட அமலாக்கம் தான்," என்கிறார் சீனியர். "ஆதாரங்கள் மற்றும் முறையான நடைமுறைகள் மீதான நமது பிடிவாதமே அவர்கள் நீதியிலிருந்து தப்பிக்க உதவியது. அவர்களின் எஜமானரான ஸ்டாலினாக இருந்திருந்தால், இவர்களைத் தலையில் சுட்டுக்கொன்றிருப்பார் அல்லது அவரது குலாக்கில் (Gulag - சோவியத் சிறை முகாம்) இறப்பதற்காக அனுப்பியிருப்பார்."
தப்பிச் சென்ற பிறகு, ஃபில்பி தான் தஞ்சம் புகுந்த நாட்டில் ஒரு நாயகனாகப் போற்றப்பட்டார். 1988-இல் அவர் இறப்பதற்கு முன் கேஜிபி-யில் கர்னல் பதவியை அடைந்தார், 1990-இல் ஒரு சோவியத் தபால் தலையில் அவரது உருவம் இடம்பெற்றது.
இன்றும் அவர் அங்கு ஆராதிக்கப்படுகிறார். மாஸ்கோவில் ரஷ்ய வெளிநாட்டு உளவுத்துறை தலைமையகத்திற்கு அருகில் உள்ள ஒரு சதுக்கத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. குர்ஸ்க் போர்க்களத்திற்கு அருகில் அவரது சிலை உள்ளது. "புதின், கிம் ஃபில்பியை தனது ரஷ்ய தேசியவாதத்தின் அடையாளமாக ஏற்றுக்கொண்டார்," என்று சீனியர் கூறுகிறார்.
தனது தாய் நாடாக அவர் கருதிய ரஷ்யாவின், மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் உள்ள குன்சோவா கல்லறையில் ஃபில்பி புதைக்கப்பட்டுள்ளார். 2016-இல் கொரேரா அங்கு செய்தி சேகரிக்கச் சென்றபோது, அது பனியால் மூடப்பட்டிருந்தது. அது ஜான் லெ கரேயின் கிளாசிக் உளவு நாவலான 'குளிர் பிரதேசத்திலிருந்து வந்த உளவாளி' (The Spy Who Came in from the Cold) என்ற தலைப்பை அவருக்கு நினைவூட்டியது. கொரேரா குறிப்பிட்டபடி, ஃபில்பி 'குளிர்ச்சியான சூழலுக்குள் வந்த உளவாளி' ஆவார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































