You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்ப் திட்டப்படி, காஸாவில் ஆயுதங்களை கைவிட ஹமாஸ் ஒப்புதல் - இஸ்ரேல் கூறுவது என்ன?
காஸாவில் ஹமாஸ் மற்றும் இதர ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களை முழுமையாக கைவிடவும், இஸ்ரேல் தனது படைகளை விலக்கிக் கொள்ளவும் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தனது அமைதி வாரியம் இதனை சாதித்திருப்பதாகவும், இது "காஸா ஒரு புதிய பாலத்தீன அரசாங்கத்தால் ஆளப்படுவதை நோக்கிய ஒரு முக்கியமான படி" என்றும் டிரம்ப் கூறினார்.
காஸாவில் முழுமையாக ஆயுதங்களைக் கைவிடுவதற்கான அமைதி வாரியத்தின் திட்டத்திற்குத் தாங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், இஸ்ரேல் இது குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
"ஆயுதத்தை கைவிடும் படிநிலை முடிந்ததும்" இஸ்ரேல் துருப்புகள் காஸாவிலிருந்து வெளியேறும் என்று டிரம்ப் கூறினார்.
அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த காஸா போர்நிறுத்தத்தின் இரண்டாம் கட்டத்தில் ஹமாஸ் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்ற நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் கட்டத்தில் காஸா மறுசீரமைப்பும் சேர்க்கப்பட்டுள்ளது.
எகிப்து, கத்தார் மற்றும் துருக்கிக்கு டிரம்ப் நன்றி
"டிரம்பின் 20 அம்சத் திட்டத்தை செயல்படுத்துவதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த ஒப்பந்தம் கவனமாக வடிவமைக்கப்பட்ட கட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்" என ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார்.
காஸாவில் ஹமாஸ் மற்றும் ஆயுதக்குழுக்கள் ஆயுதங்களை துறப்பது மற்றும் இஸ்ரேலியப் படைகள் வெளியேற்றத்திற்குப் பிறகு, புதிய பாலத்தீன காவல் படையுடன் சர்வதேசப் படை இணைந்து காஸா குடியிருப்பாளர்களுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் பாதுகாப்பாக இருப்பதற்கான பொறுப்பை ஏற்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மத்தியஸ்தம் செய்த எகிப்து, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
போர் நிறுத்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் குறித்து காஸா மத்தியஸ்தர்களின் கூட்டத்தை கெய்ரோ நடத்தும் என்று எகிப்திய அரசு ஊடகங்களை மேற்கோள் காட்டி ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் நிலைப்பாடு இன்னும் தெளிவாகவில்லை
அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த காஸா அமைதித் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து எகிப்து மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு இடையே கெய்ரோவில் நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் முன்மொழியப்பட்ட விதிமுறைகள் திருப்திகரமாக இல்லை என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டிரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து, டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் நாளிதழ் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவரை மேற்கோள் காட்டி, ஹமாஸ் பேச்சுவார்த்தையாளர்கள் மற்றும் அமைதி வாரியம் மற்றும் மத்தியஸ்த நாடுகளுக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த முன்மொழிவு இஸ்ரேலின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று "ஒரு இஸ்ரேலிய அலுவலகம்" கருத்து வெளியிட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் கூறியுள்ளது.
ஹமாஸுடன் விவாதிக்கப்பட்டு வரும் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் எதிர்ப்புத் தெரிவிப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் முன்னதாகச் செய்தி வெளியிட்டிருந்தன.
தாங்கள் ஆயுதங்களை கைவிட ஒப்புக்கொண்டுள்ளதாக பிபிசியிடம் ஹமாஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்
காஸாவில் முழுமையாக ஆயுதங்களைக் களைவதற்கான அமைதி வாரியத்தின் திட்டத்திற்குத் தங்களது குழு ஒப்புக்கொண்டுள்ளதாக பிபிசியிடம் தெரிவித்த ஹமாஸின் மூத்த அதிகாரி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.
ஹமாஸ் ஆயுதங்களை கைவிடுவது எவ்வாறு நடக்கும்?
ஆயுதங்களை கைவிடும் செயல்முறை எவ்வாறு செயல்படுத்தப்படக்கூடும் என்பது குறித்த ஒரு தோராயமான செயல்திட்டத்தை அமெரிக்கா மற்றும் அமைதி வாரிய அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு வழங்கியுள்ளனர்.
முதலாவதாக, காஸாவில் உள்ள ஹமாஸின் காவல் படையினர் தங்களது ஆயுதங்களை இடைக்கால அதிகார அமைப்பிடம் ஒப்படைப்பார்கள் என்றனர்.
அதன் பிறகு, கனரக ஆயுதங்களைச் "செயலிழக்கச் செய்யும் செயல்முறை" இருக்கும், இதில் சுரங்கப்பாதைகள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை மூடுவதுடன், இந்த வசதிகளை இயக்கிக் கொண்டிருக்கும் போராளிகளைப் பணியிலிருந்து விலக்குவதும் அடங்கும்.
இது ஒரு "மிகவும் தொழில்நுட்ப ரீதியான செயல்முறையாக" இருக்கும், இதில் சேகரிக்கப்பட்ட ஆயுதங்களை எவ்வாறு பாதுகாப்பாகச் சேமித்து வைப்பது என்பது மிக முக்கியமான கேள்விகளில் ஒன்றாக இருக்கும்.
இறுதியாக, காஸாவில் உள்ள அனைத்து தனிநபர் ஆயுதங்களும் பாலத்தீன சட்டத்தின் கீழ் "கையாளப்பட" வேண்டும்.
இந்தச் செயல்முறையின் ஒரு பகுதியாக ஆயுதக் குழுக்கள் மற்றும் பழங்குடிப் பிரிவினரும் தங்களது ஆயுதங்களை களைய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு