'புனித நோக்கங்களுக்கு மட்டுமே...' - கோவில் நிதி குறித்து அமைச்சர் கூறியதை திமுக விமர்சிப்பது ஏன்?

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

'இந்துசமய அறநிலையத்துறையின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் வருவாய் அதன் புனிதமான நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்' - கடந்த 18 ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த வரிகள் இவை.

இதனை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, "பா.ஜ.கவும் வலதுசாரிகளும் கூறுவது இதைத் தான். இதற்காக வழக்கும் தொடர்ந்துள்ளனர்." எனப் பேசினார்.

உதயநிதிக்கு தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அளித்த விளக்கமும் அதைத் தொடர்ந்து அத்துறையின் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்த கருத்துகளும் விவாதப் பொருளாக மாறின.

கோவில் நிதியை வணிகரீதியாகப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்து பல்வேறு தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கியுள்ள நிலையில், கடந்த ஆட்சியில் மேற்கொள்ளபட்ட கட்டுமானங்களின் நிலை என்னவாகும்?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 22ம் தேதி ஆளுநர் விஸ்வநாத் அர்லேகரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரை விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கோவில் நிதி தொடர்பாக ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த விவரங்களைக் குறிப்பிட்டுப் பேசினார்.

"பா.ஜ.கவும் வலதுசாரிகளும் கூறுவது இதைத் தான். இதற்காக வழக்கும் தொடர்ந்துள்ளனர். இது வணிக வளாகங்களுடன் நிற்குமா? அல்லது கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்துமா?" எனவும் உதயநிதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், "கோவில் நிதியை கோவிலும் பக்தர்களும் பயன்படுத்தும் வகையில் மாற்றுத் திட்டங்களை செயல்படுத்துவோம் எனக் கூறியிருந்தோம். மக்கள் பயன்பெறும் கல்வி நிலையங்கள், மருத்துவ வசதிகளை செய்து தர மாட்டோம் எனக் கூறவில்லை." எனப் பேசினார்.

'245 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் ரத்து'

கடந்த தி.மு.க ஆட்சியில் இந்துசமய அறநிலையத் துறையால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், 29 திருமண மண்டபங்கள் மற்றும் 17 வணிக வளாகங்கள் கட்டுவதற்கு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

இப்பணிகளை ரத்து செய்து அண்மையில் த.வெ.க அரசு உத்தரவிட்டுள்ளது. கோவில் உபரி நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்களைக் கட்டுவதற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.

இதனை உத்தரவில் குறிப்பிட்டுள்ள இந்துசமய அறநிலையத்துறை ஆணையர், 'கோவில் உபரி நிதியில் இருந்து கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாத நிலையில், திருமண மண்டபம் மற்றும் வணிக வளாகங்களைக் கட்டுவதற்கான அரசாணைகள் ரத்து செய்யப்படுகிறது' எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், நீதிமன்ற உத்தரவு, கோவில்களின் நிதிச்சுமை காரணமாக 245.85 கோடி ரூபாய் மதிப்பில் 29 திருமண மண்டபங்கள் மற்றும் 17 வணிக வளாகங்கள் ஆகியவற்றைக் கட்டுவதற்கான 46 பணிகளுக்கு நிர்வாக அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அத்துறையின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிதியைக் கொண்டு கோவில்கள் மற்றும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் ஆணையரின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் சொன்ன குன்னூர் உதாரணம்

இதனை சட்டப்பேரவையில் குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர் ரமேஷ், "அடிப்படை வசதிகள், கழிப்பறை வசதிகளை மேம்படுத்துவதைக் காட்டிலும் வணிக வளாகம் கட்டுவது, திருமண மண்டபம் கட்டுவது, அதன்மூலம் வருவாய் ஈட்டுவதை மட்டும் நோக்கமாக வைத்திருந்தனர்" எனக் கடந்த தி.மு.க ஆட்சியை விமர்சித்தார்.

உதாரணமாக, குன்னூரில் உள்ள விநாயகர் கோவிலை மேற்கோள் காட்டி அவர் பேசினார். "விநாயகர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் பன்னடுக்கு கார் நிறுத்தம் அமைப்பதற்கான திட்டத்தைக் கடந்த அரசு அறிவித்தது" எனக் கூறினார்.

"கோவிலுக்கு மாதந்தோறும் வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கையே சுமார் 500 பேர் தான். ஆனால் ஊட்டி, குன்னூரை சுற்றியுள்ள பல கோவில்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லை. கோவில் நிதியில் எதற்கு பன்னடுக்கு கார் நிறுத்தம்" என கேள்வியெழுப்பினார்.

"கோவில் நிதியை கோவிலும் பக்தர்களும் பயன்படுத்தும் வகையில் மாற்றுத் திட்டங்களை செயல்படுத்துவோம் எனக் கூறியிருந்தோம். மக்கள் பயன்பெறும் கல்வி நிலையங்கள், மருத்துவ வசதிகளை செய்து தர மாட்டோம் எனக் கூறவில்லை" என, எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சர் விளக்கம் அளித்தார்.

அப்போது இடைமறித்த இந்துசமய அறநிலையத்துறையின் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, முந்தைய ஆட்சியில் அறநிலையத்துறை சட்டத்தின் பிரிவுகளில் கூறியுள்ளபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

சேகர்பாபு அளித்த விளக்கம்

உண்மைக்குப் புறம்பான தகவல்களை சட்டப்பேரவைக்கு அமைச்சர் அளித்துள்ளதாகக் கூறிய சேகர்பாபு, "ஒவ்வொரு திட்டங்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் பரிந்துரையின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது." எனப் பேசினார்.

குன்னூர் விநாயகர் கோவில் பன்னடுக்கு கார் நிறுத்தம் குறித்து விளக்கம் அளித்த சேகர்பாபு, "கோவிலுக்கு வரும் பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு போதிய வாகன நிறுத்தும் வசதி இல்லாமல் தவிக்கும் சூழலில் நகராட்சி பரிந்துரையின் அடிப்படையில் பணிகளை மேற்கொண்டோம்." எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ரமேஷ், "கோவில் நிதியில் இருந்து பத்து கோடி ரூபாயை எடுத்து அங்கு பன்னடுக்கு கார் நிறுத்தம் வேண்டும் என பக்தர்களும் பொதுமக்களும் கேட்கவில்லை." என பதில் அளித்தார்.

அமைச்சர் தன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக சேகர்பாபு கூறவே, "குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. அதில் தவறு நடந்ததாகவும் கூறவில்லை. அதை விளக்கமாக எடுத்துக் கொள்ளவும்" என சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.

'6 கல்லூரிகளைத் தொடங்குவதற்கு தடை'

"அறநிலையத்துறை சட்டம் பிரிவு 66ன்படி சில செயல்கள் அனுமதிக்கப்படுகின்றன. அதில் திருமண மண்டபமோ, பன்னடுக்கு கார் நிறுத்தம் போன்றவையோ அனுமதிக்கப்படவில்லை" என்கிறார், ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ்.

கோவில் நிலத்தில் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவது தொடர்பாக பல்வேறு தடை உத்தரவுகளை நீதிமன்றத்தின் மூலம் இவர் பெற்றுள்ளார்.

கடந்த தி.மு.க ஆட்சியில் கொளத்தூரில் கபாலீஸ்ரவர் கோவில் கலை அறிவியல் கல்லூரி, விளாத்திகுளத்தில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கலைக் கல்லூரி, திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கலைக் கல்லூரி, பழனியில் பெண்கள் கலைக் கல்லூரி ஆகியவை தொடங்கப்பட்டன.

"இந்த நான்கு கல்லூரியும் நீதிமன்றத்தின் இறுதி ஆணைக்கு உட்பட்டது" எனக் கூறும் டி.ஆர்.ரமேஷ், "பத்து கல்லூரிகளைத் தொடங்குவதற்குத் திட்டமிட்டனர். இதில் ஆறு கல்லூரிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் தடை உத்தரவு பெறப்பட்டது" என்கிறார்.

சட்டப்பேரவை அறிவிப்பை வைத்து கடந்த ஆட்சியில் கல்லூரியைத் தொடங்கியதாகக் கூறிய அவர், "கோவிலின் உபரி நிதியில் இருந்து தான் செலவு செய்ய வேண்டும். அதற்கு மாறாக செயல்பட்டனர்" எனக் கூறினார்.

'வணிகரீதியில் பயன்படுத்தக் கூடாது'

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கிழக்குப் பகுதியில் ராஜகோபுரத்துக்கு எதிரில் ஆறு கோடி ரூபாய் மதிப்பில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டுவதற்கு இந்துசமய அறநிலையத்துறை திட்டமிட்டது.

இதற்கான பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வந்தது. 'கட்டடப் பணிகளால் ராஜகோபுரத்துக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது' என சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.ஆர்.ரமேஷ் உள்பட மூன்று பேர் தரப்பில் அவசர முறையீடு செய்யப்பட்டது.

2023 ஆம் ஆண்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு, அறநிலையத்துறை மேற்கொள்ளும் கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

அடுத்து, சென்னை கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவிலுக்குச் சொந்தமான இடங்களில் வணிக வளாகங்களும் குடியிருப்புகளையும் கட்டுவதற்குத் தடைகோரி ஏ.பி.பழனி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கின் விசாரணையில் அரசுத் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், கட்டுமானப் பணிகள் 80 சதவிகிதம் முடிவடைந்துவிட்டதாகத் தெரிவித்தார். இந்தக் கட்டடங்கள் மூலம் மாதம் 7 லட்ச ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "பக்தர்கள் வசதிக்காக மட்டுமே கட்டடங்களைப் பயன்படுத்த வேண்டும். வணிகரீதியில் பயன்படுத்தக் கூடாது" என உத்தரவிட்டார்.

கோவில் நிதியில் வணிக வளாகங்களைக் கட்டக் கூடாது என, கோவில்களுக்கு சுற்றறிக்கையை வெளியிடவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

'தனிப்பட்ட சொத்து அல்ல' - கள்ளழகர் கோவில் வழக்கு

மதுரை கள்ளழகர் கோவில் வளாகத்தில் புதிய கட்டுமானங்களை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'சட்ட அதிகாரமின்றி இந்த நிதி செலவிடப்பட்டுள்ளது. இது தெய்வக் குற்றம்' என விமர்சித்தனர்.

முன்னதாக, 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ஆம் தேதியன்று கள்ளழகர் கோவிலின் துணை ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில், கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்கு யாத்ரி நிவாஸ், அர்ச்சகர்கள் குடியிருப்பு, விருந்தினர் மாளிகை, உணவகங்கள், கடைகள், கழிப்பறைகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆகியவை கட்டப்படுவதாகக் கூறியிருந்தார்.

இந்தப் பணிகளை ஈரோட்டைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு வழங்க உள்ளதாகவும் துணை ஆணையரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு, 'அறங்காவலர் குழு இல்லாமல் உபரி நிதியைப் பயன்படுத்தி வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. கோவில் நிதியை தனிப்பட்ட சொத்தாகக் கருத முடியாது' எனக் கூறியது.

தொடர்ந்து, கோவில் நிதியில் இருந்து வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.40 கோடியை ஒதுக்கி ஒப்புதல் வழங்கிய அரசாணையை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

இதனைக் குறிப்பிட்டுப் பேசிய ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ், "அறநிலையத்துறை சட்டம் அனுமதிக்காத பல விஷயங்களை மேற்கொண்டனர். அதற்கு நீதிமன்றம் தடைவிதித்தது" என்கிறார்.

'அமைச்சருக்கு அதிகாரம் இல்லை'

சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பேசும்போது, "கோவில் நிதியை கோவிலும் பக்தர்களும் பயன்படுத்தும் வகையில் மாற்றுத் திட்டங்களை செயல்படுத்துவோம் எனக் கூறியிருந்தோம்" எனக் குறிப்பிட்டார்.

"இது தவறான வாதம்" எனக் கூறும் டி.ஆர்.ரமேஷ், "கோவில் நிதி என்பது எதற்காக உருவாக்கப்பட்டதோ அதற்காக செலவிடப்பட வேண்டும். உபரி நிதியில் இருந்து மட்டுமே பக்தர்களுக்கு செலவு செய்ய வேண்டும் என அறநிலையத்துறை சட்டம் கூறுகிறது" என்கிறார்.

தொடர்ந்து பேசும்போது, "உபரி நிதியில், குறைந்தபட்சம் 25 சதவிகிதத்தை பராமரிப்புச் செலவுக்கு செலவிடலாம் என பிரிவு 86 (2) (சி) கூறுகிறது. தன் விருப்பம்போல தொகையைச் செலவிட முடியாது. இதனை நீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளில் உறுதிப்படுத்தியுள்ளது" எனத் தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் வணிக வளாகம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதால் மேற்கொள்ளப்பட்டதாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் குறிப்பிட்டுப் பேசினார்.

"இதனை நீதிமன்றம் ஏற்காது. அறநிலையத்துறை சட்டத்தைப் பின்பற்றி அறங்காவலர்கள் கூறும்போது அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது தான் விதி. அமைச்சருக்கு இதில் எந்தவித அதிகாரமும் இல்லை" என்கிறார் டி.ஆர்.ரமேஷ்.

செய்தியாளர்களிடம் சேகர்பாபு அளித்துள்ள விளக்கத்தில், "குன்னூரில் சுற்றுலா பயணிகளுக்காக கோவிலில் கார் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது. வெறும் கோவிலுக்கு வருகிறவர்களுக்காக மட்டும் ஏற்படுத்தப்படவில்லை" எனக் கூறினார்.

"நலிவடைந்த கோவிலை மேம்படுத்தவும் அடிப்படை வசதிகளை செய்வதற்கான வருவாயை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம்" எனக் கூறினார்.

'கோவில் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்' என அமைச்சர் கூறியது குறித்துப் பேசிய அவர், "அவர்களிடம் ஆதாரப்பூர்வமாக குற்றச்சாட்டுகள் இருந்தால் அதை சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறோம். இதுபோன்ற மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம்" எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு