'அச்சமின்மை, தனித்துவம்' - 15 வயது சூர்யவன்ஷியை சிறப்பானவராக மாற்றுவது எது? பகிரும் முன்னாள் பேட்டர்கள்

    • எழுதியவர், திமோதி ஆபிரகாம்
    • பதவி, பிபிசி விளையாட்டுப் பிரிவு செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அவர்களால் இனி அவரைப் புறக்கணிக்க முடியாது.

13 வயதில் தடம் பதித்தது முதல் பல சாதனைகளைத் தகர்த்துள்ள வைபவ் சூர்யவன்ஷிக்கு, பெல்ஃபாஸ்ட்டில் அயர்லாந்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெறும் முதலாவது டி20 சர்வதேசப் போட்டியில் இந்தியா அறிமுக வாய்ப்பை வழங்கக்கூடும்.

சூர்யவன்ஷிக்கு 15 வயது 92 நாட்கள் மட்டுமே ஆகிறது.

இது 1989 இல் பாகிஸ்தானுக்கு எதிராகத் தனது 16 வயது 205 நாட்களில் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் விளையாடிய இந்தியாவின் மிக பிரபலமான, இளம் வயது மேதையான சச்சின் டெண்டுல்கரை விடவும் குறைவான வயதாகும்.

அவரது வயதைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக சூர்யவன்ஷி தனது சக அணி வீரர்களிடமிருந்து தனி உடை மாற்றும் அறைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 16 இன்னிங்ஸ்களில் 237.30 ஸ்டிரைக் ரேட்டில் 776 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்த வீரராகத் திகழ்ந்த ஒரு சிறப்பான சீசனைத் தொடர்ந்து, அவர் சர்வதேசப் போட்டியில் அறிமுகமாகவுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, இலங்கை ஏ அணிக்கு எதிரான இந்தியா ஏ போட்டியில் பேட்டிங் செய்த அவர், வெறும் 11 பந்துகளில் அரைசதம் கடந்து, லிஸ்ட் ஏ 50 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த சாதனையை முறியடித்தார்.

ஆனால் புள்ளிவிவரங்களைத் தாண்டி, இந்த இளம் தொடக்க ஆட்டக்காரரை இவ்வளவு சிறப்பானவராக மாற்றுவது எது?

அதனைக் குறித்துத் தெரிந்துகொள்ள, பிபிசி ஸ்போர்ட் அவரை மிக அருகில் இருந்து கவனித்த மூன்று புகழ்பெற்ற முன்னாள் பேட்டர்களான ராகுல் டிராவிட், மைக்கேல் வாகன் மற்றும் ஜஸ்டின் லாங்கர் ஆகியோரிடம் பேசியது.

நீச்சல் குளத்தில் உள்ள குழாய் போல

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய முன்னாள் சர்வதேச வீரருமான ஜஸ்டின் லாங்கர், சூர்யவன்ஷியைப் போலவே ஒரு இடதுகை தொடக்க ஆட்டக்காரர்.

"என் வாழ்நாளில் நான் கேட்டு வாங்கிய இரண்டாவது செல்ஃபி வைபவ் சூர்யவன்ஷியுடனானது மட்டும் தான்! இன்னொன்று, நான் சிறு குழந்தையாக இருந்தபோது பார்த்து ரசித்த ஒரு ஏஎஃப்எல் சாம்பியனுடனானது."

"நான் அவரிடம், 'ஐபிஎல்லில் இதற்கு முன்பு நான் இப்படிச் செய்ததில்லை. நாம் இருவரும் சேர்ந்து ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ளலாமா? ஏனென்றால் உனது திறமை, உனது மனநிலை மற்றும் நீ கிரிக்கெட் விளையாடும் விதம் ஆகியவற்றைக் கண்டு நான் வியந்துபோயிருக்கிறேன்' என்று கூறினேன். அவர் பேட்டிங் செய்வதைப் பார்ப்பதே மனதைக் கொள்ளை கொள்ளும் விஷயம்."

"அவரை எது இவ்வளவு சிறப்பானவராக்குகிறது? அவரிடம் அசாதாரணமான கைகள் உள்ளன. நான் எப்போதும் சொல்வதுண்டு, உண்மையிலேயே சிறந்த வீரர்களின் கைகள் நீச்சல் குளத்தில் இருக்கும் குழாயைப் போன்றது."

"அவர் தனது பேட்டைப் பின்னோக்கி வீசும்போது தனது கைகளால் கிட்டத்தட்ட ஒரு எட்டு வடிவ அசைவை உருவாக்குகிறார். அது மிகவும் சிறியது, நுட்பமானது, ஆனால் அவரது கைகள் மிகவும் இலகுவாக இருக்கின்றது."

"இடதுகை பேட்ஸ்மேன்கள் பலர் சிக்ஸர்களை அடிக்க முயலும்போது, சைட் ஸ்கிரீனில் இருந்து லெக் சைட் பக்கமாகத் திருப்புவார்கள். ஆனால் ஆஃப் சைடில் அடிக்கத் தயாராகும் சூர்யவன்ஷியின் விஷயத்தில் இது வித்தியாசமானது."

"தனது ஐபிஎல் வாழ்க்கையின் முதல் பந்திலேயே, அவர் கவருக்கு மேல் ஒரு சிக்ஸர் அடித்தார். இடதுகை பேட்டர்கள் பலரைப் போல லாங்-ஆன் மூலமாகவோ அல்லது டீப் மிட்-விக்கெட்டுக்கு மேலாகவோ அல்ல. அவர் கவருக்கு மேல் அடித்த சிக்ஸர், மைதானத்தின் கேலரியில் சுமார் 20 வரிசைகளுக்குப் பின்னால் போய் விழுந்தது."

"இந்தக் குழந்தைக்கு ஆட்டம், ஆர்வம் மற்றும் கண்-கை ஒருங்கிணைப்பு மட்டுமன்றி, மேலும் மேலும் ரன்கள் குவிக்க வேண்டும் என்ற தாகமும் உள்ளது. அவர் மிகவும் அடக்கமானவராகவும் இருக்கிறார். அதுதான் ஒரு சாம்பியன் வீரரின் அடையாளம்."

துணிச்சலாக பந்துகளை எதிர்கொள்ளும் திறன்

இந்திய முன்னாள் பேட்டரான ராகுல் டிராவிட் 2025ம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்தார், மேலும் சூர்யவன்ஷிக்கு அவரது 14வது வயதில் ஐபிஎல் அறிமுக வாய்ப்பை வழங்கினார்.

"நீங்கள் ஒரு தனித்துவமான திறமையைப் பார்க்கிறீர்கள். பந்துவீச்சாளரின் வேகத்தைக் கணிக்கும் திறன், கிரிக்கெட் நுணுக்கம் மற்றும் அச்சமின்மை ஆகியவற்றின் நம்பமுடியாத கலவை இது என நான் நினைக்கிறேன். இது பல விஷயங்களின் ஒட்டுமொத்தக் கலவையாகும்."

"ஒரு சூர்யவன்ஷியை உருவாக்குவதற்கான செய்முறை எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை; நீங்கள் எந்தக் குழந்தையையும் அழைத்து, 'இதைச் செய், அப்போது சிறப்பானவனாக மாற முடியும்' என சொல்ல முடியும் என்றும் நான் நினைக்கவில்லை."

"சில விஷயங்கள் அவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருக்கும். ஆனால், அவரும் கடினமாக உழைத்துள்ளார், எனவே இது வெறும் பரிசு மட்டுமல்ல."

"இளம் வயதிலிருந்தே அவர் நிறைய பந்துகளை எதிர்கொண்டு விளையாடியுள்ளார். அதை நான் ராஜஸ்தானில் பார்த்தேன்."

"அவர் தனது முழுத் திறனையும் அடைவதற்கு இந்த பயணத்தில் அவருக்கு ஆதரவும் உதவியும் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்."

"அவரைப் போன்ற ஒருவரை நீங்கள் பாதுகாக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில், சில நேரங்களில் அவரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டிய அந்த நுணுக்கமான எல்லையும் எப்போதும் இருக்கும்."

பந்துவீச்சாளரின் குறிப்புகளைக் கண்டறிதல்

இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், ஐபிஎல் தொடரின்போது வர்ணனையாளராகப் பணியாற்றினார். அப்போது அவருக்கு சூர்யவன்ஷியை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

"நான் மும்பையில் அவரைச் சந்தித்தேன். அது ஒரு தீவிர ரசிகருக்கான தருணம் போல இருந்தது. உண்மையைச் சொல்லப்போனால், 1990களில் கிரிஸ் வாடிலைச் சந்தித்தப் பிறகு எனக்கு அப்படி ஒரு தருணம் ஏற்பட்டதாகவே நான் நினைக்கவில்லை".

"நாங்கள் அருமையாக உரையாடினோம். நான் அவரிடம், 'விளையாட்டுக்கு எப்படித் தயாரானீர்கள்?' என்று கேட்டேன். அவர், 'கார்ட்டூன்கள் பார்த்துக் கொண்டிருந்தேன்' என்றார். நான், 'என்ன சாப்பிடுவீர்கள்?' என்று கேட்டேன். அவர், 'நான் எல்லாவற்றையும் சாப்பிடுவேன்!' என்றார்".

"அவருக்கு அபாரமான பார்வையும் பேட்டிங் சுழற்சியும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது, ஆனால் கூடவே பந்துவீச்சாளரின் கணிப்பை உணர்ந்துகொள்ளும் திறனும் அவரிடம் அதிகமாக உள்ளது".

"அவரால் கள நிலவரத்தை கணிக்க முடியும், ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக, பந்துவீச்சாளர் என்ன வீசப்போகிறார் என்பதற்கான குறிப்பை அவரால் பார்க்க முடியும். உண்மையான சிறந்த வீரர்களால், பந்து வீசப்படுவதற்கு முன்பே அதைப் பார்த்துவிட முடியும்".

"பிறகு அவரால் அதை எக்ஸ்ட்ரா கவருக்கு மேலாகவோ, டீப் ஸ்கொயர் லெக்குக்கு மேலாகவோ வேகமாக அடிக்க முடியும். அவரால் அதை தேர்ட் மேனுக்கு மேலாக சிக்ஸருக்கு அடிக்கவும் முடியும்".

"நீங்கள் ஒரு அங்குல வித்தியாசத்தில் பந்தைத் தவறவிட்டாலும், அவர் அதைத் தரையிலிருந்து தூக்கி அடித்துவிடுவார். மைதானம் எங்கே இருக்கிறது என்பதை மறந்துவிடுங்கள், அவர் பந்தை மைதானத்தின் மேல் மட்டத்திலேயே அடித்துவிடுவார்".

"அவர் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதைக் கற்பனை செய்து பாருங்கள்".

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு