You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நின்னுக்கோரி வர்ணம் - பாடகி சித்ராவின் 5 பிரபல 'சோலோ' பாடல்கள்
- எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தென்னிந்திய சினிமாவில் பி.சுசீலா, எஸ்.ஜானகிக்கு பின் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி, மக்கள் மனங்களில் இடம் பிடித்தவர் கே.எஸ்.சித்ரா.
1980களின் தொடக்கத்தில் 'அட்டஹாசம்', ஸ்னேஹபூர்வம் மீரா', 'ஞான் ஏகனானு' போன்ற மலையாளப் படங்களில் பாடல்களை பாடிய சித்ரா பின்னாளில் கே.ஜே.யேசுதாஸ் போன்ற மூத்த பாடகர்களுடன் இசை மேடைகளில் பாட தொடங்கினார்.
'பூவே பூச்சூடவா' படத்தின் மலையாள வடிவமான 'நோக்கெத்தாதூரத்து கண்ணும் நட்டு' படத்தில் அவர் பாடல் பிரபலமானது. 1984-ல் வெளியான அந்த படத்தில் ஜெர்ரி அமல்தேவ் இசையில் சித்ரா பாடியிருந்தார். அதை கேட்டு, 1985ல் வெளியான பூவே பூச்சூடவாவில் பாட வைத்தார் இளையராஜா. அதைத்தொடர்ந்து, 'நீதானா அந்தக் குயில்' படத்தில் இடம்பெற்ற 'பூஜைக்கேத்த பூவிது' பாடலையும் அவர் பாடினார்.
'பூவே பூச்சூடவா'வில் சித்ரா பாடிய 'சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா' பாடல் பிரபலமடைய இன்றுவரை தமிழ் ரசிகர்களால் 'சின்னக்குயில்' சித்ரா என்றே அழைக்கப்பட்டு வருகிறார். 1985ல் பிரபலமான அவரது இசைப்பயணம் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இசை உலகில் பேசப்பட்டு வருகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் பாடியிருக்கிறார்.
தன்னை சந்திக்கும் இளம் பாடகர்கள், பாட ஆசைப்படுபவர்களுக்கு, ''நம் நாட்டில் திறமையான பாடகர்கள் பலர் இருக்கிறார்கள். திரைப்படங்களில் மட்டுமே ஒரு தொழிலைத் தேடுவது கடினமாக இருக்கும். நீங்கள் முதலில் ஒரு பாதுகாப்பான வேலையைக் கண்டுபிடித்துவிட்டு, பிறகு இசையைத் தொடர வேண்டும். சினிமா, இசைத்துறையில் வாய்ப்புகள் மிகக் குறைவு, சம்பளமும் குறைவு, மேலும் இது ஒரு நிலையற்ற தொழிலாகவும் இருக்கலாம். ஆகவே பாடுவதை பயிற்சி செய்வதை, நிறுத்தாதீர்கள். இன்னொரு தொழிலை, கை வசம் வைத்துக்கொள்ளுங்கள்'' என்று அறிவுரை வழங்கும் சித்ராவுக்கு இன்று பிறந்தநாள்
2 மணி நேரத்தில் பாடிக்கொடுத்த ஒவ்வொரு பூக்களுமே
இசையமைப்பாளர் பரத்வாஜிடம் பாடகி சித்ரா குறித்து பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
''நான் பக்தி இசைத் தொகுப்பு இசையமைத்துக்கொண்டிருந்த காலத்தில் இருந்து சித்ராவை தெரியும். எனக்காக தமிழ், தெலுங்கு, மலையாள படங்களுக்கு நிறைய பாடல் பாடியிருக்கிறார். அதில் ஆட்டோகிராப் படத்தில் வரும் ஒவ்வொரு பூக்களுமே பாடல் ரொம்ப பிரபலம். அந்த பாடலுக்கு தேசியவிருது உட்பட ஏகப்பட்ட விருதுகள் கிடைத்தன. பொதுவாக இப்படிப்பட்ட தன்னம்பிக்கை பாடல்களை ஆண்கள்தான் பாடுவார்கள். தத்துவ பாடல்களை ஆண்களே பாடி வந்து இருக்கிறார்கள்.
சேரனின் சிந்தனை, பாடலின் சூழல் வேறு மாதிரி இருந்ததால் சித்ராவை பாட வைக்க நினைத்தேன். பாடலை வெறும் 2 மணி நேரத்தில் பாடி கொடுத்துவிட்டு சென்றார். அந்த 2 மணி நேரத்தில் அவர் உழைப்பு, ரசனை அசாத்தியமானது. அதேபோல் இன்றும் அஜித் ரசிகர்களால் பெரிதும் விரும்பக்கூடிய 'உன்னோட வாழாத வாழ்வென்ன வாழ்வு' பாடலை அமர்க்களம் படத்துக்காக பாடிக்கொடுத்தார்.
ஒரு பாடகருக்கு குரல்வளம், உணர்ச்சியுடன் பாடுவது போன்றவை முக்கியமானவை. இந்த குணங்கள் சித்ராவிடம் இருக்கிறது. இதுதவிர, எளிமையானவர். செய்யும் தொழிலுக்கு உண்மையானவர்.
அடிப்படையில் அனுபவம், நிறைய பயிற்சி செய்வதால் அவரை பாட வைப்பது இசையமைப்பாளர்களுக்கு மிகவும் எளிதான விஷயம். குயில் மாதிரி பாடுபவர். அவரை சின்னக்குயில் சித்ரா என அழைப்பது அவ்வளவு பொருத்தம். தென்னிந்தியாவின் லதாமங்கேஸ்கர் என அவரை அழைப்பேன். என் பாடல் இல்லாமல், அவர் பாடியதில் சிந்து பைரவியில் இளையராஜா இசையில் 'பாடியறியேன் படிப்பறியேன்' பாடலை பிடிக்கும். அதை அழகாக பாடியிருப்பார். சில பாடகர்கள் எவ்வளவு கஷ்டமான பாடலை அருமையாக பாடி அசத்திவிடுவார்கள். அந்த வகை பாடகி சித்ரா. அவரின் முழு திறமையை ஆரம்ப காலத்திலேயே காண்பித்த பாடல் அது.'' என்றார் இசையமைப்பாளர் பரத்வாஜ்.
எழுத்தாளர், இயக்குனர், பாடலாசிரியர் தமயந்தியிடம், பாடகி சித்ரா குரலில் வெளியான பாடல்களில் உங்களுக்கு பிடித்த சோலோ பாடல்கள் பற்றி சொல்ல முடியுமா? என்று பிபிசி தமிழ் சார்பில் கேட்டபோது அவர் அளித்த பட்டியல் இங்கே.
1) ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் (புன்னகை மன்னன்)
"கே. பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன், ரேகா நடிப்பில் உருவான புன்னகை மன்னன் படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். இளையராஜா இசையில் வரும் இந்த பாடலின் சூழல் முக்கியமானது. ஒரு மரணத்துக்கு முன்னால் காதலை வெளிப்படுத்துவதாக இந்த பாடல் வரும். அந்த பாடலில் மென்மை இருக்கும். சோகம் இருக்கும். 'ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்… உன் கையில் என்னை கொடுத்தேன்'… என தொடங்கி, பாடல் முழுக்க தனது காந்த குரலில் சின்னக்குயில் தனி ராஜ்ஜியம் நடத்தியிருப்பார்.''
2) பாடியறியேன் படிப்பறியேன்(சிந்து பைரவி)
''சிந்து பைரவி படத்தில் வரும் இந்த பாடலை யார்தான் மறக்க முடியும். சங்கீதம் அதிகம் தெரியாதவர்கள் கூட இந்த பாடலை வெகுவாக ரசிப்பார்கள். மண்சார்ந்த குரலில் 'பாடியறியேன் படிப்பறியேன்' என நாட்டுப்புற ஃபீலிங்கில் சித்ரா தொடங்குவார். அப்படியே கர்நாடக சங்கீதத்துக்கு மாறி, கடைசியில் 'மரி மரி நின்னே, மொரலிட நீ….' என முடிப்பது அவ்வளவு ரசிக்கும்படியாக இருக்கும். ஒரு இடத்தில் கூட, ஒரு இழை கூட மாறாது. சித்ராவுக்கு தேசியவிருது பெற்றுக்கொடுத்த பாடலும் அது. இன்னும் இந்த பாடலை கேட்டு ரசித்துக்கொண்டே இருக்கிறோம்.''
3) ஏ...மரிக்கொழுந்து (புது நெல்லு புது நாத்து)
''பாரதிராஜாவின் புது நெல்லு புது நாத்து படத்தில் இடம் பெற்ற பாடல். அது ஒரு கிராமப்புறப்பாட்டு. இரண்டு தோழிகள் ஆற்றங்கரையில் துணி துவைக்கும்போது ஒலிக்கும் பாடல். இளையராஜா இசையில் சித்ரா குரலை கேட்கும்போது ஒரு கிராமத்துக்கு சென்ற உணர்வு வரும். நம் தோழியுடன் உரையாடுகிற மாதிரி இருக்கும். குறிப்பாக, 'ஆமாமா அது சொகம்தானம்மா…ஏம் மாமா எப்போ வருவாரம்மா…' என்று சித்ரா ரசித்து பாடும்போது நம் மனதில் ஆசைப்பட்டவர்கள் நேரில் வந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.''
4) கண்ணின் மணியே கண்ணின் மணியே (மனதில் உறுதி வேண்டும்)
'''கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா'…இந்த பாடல், வாலியின் இந்த வரிகள் பல பெண்களின் மனதுக்கு நெருக்கமான பாடலாக இன்றும் இருக்கிறது. ஒரு பெண்ணின் கஷ்டங்களை புரிந்துக்கொண்டு சித்ரா பாடுவது போல இருக்கும். குறிப்பாக 'தன்னம்பிக்கையை தரும். சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா…அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா…' என சித்ரா பாடி பல ஆண்டுகள் ஓடிவிட்டாலும் பெண்கள் நிலை அப்படியேதான் இருக்கிறது.''
5) நின்னுக்கோரி வர்ணம், வரணும்(அக்னி நட்சத்திரம்)
'''நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்…' இந்த பாடலை கேட்கும்போது, அமலாவின் நடனத்தை பார்க்கும்போது இளமை துள்ளும். குரலில் அப்படியொரு மாயாஜாலம் செய்திருப்பார் சித்ரா. ஒவ்வொரு முறையும் இந்த பாடலை கேட்கும்போது காற்றில் பாதரச துளி மிதப்பது போல இருக்கும்.''
கண்ணாளனே, கண்ணாமூச்சி ஏனடா
பிரபல வானொலி வர்ணனையாளர் சிவசங்கரியிடம், சித்ரா பாடல்கள் பற்றி கேட்கும்போது, ''எத்தனையோ ஆயிரம் பாடல்களை நேயர்களுக்காக நான் ஒலிபரப்பி இருக்கிறேன். அது பற்றி பேசியிருக்கிறேன். எனக்கும் தனிப்பட்ட முறையில் அவரின் பல பாடல்கள் பிடிக்கும். குறிப்பாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் 'மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை ( ஓ காதல் கண்மணி), கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா…(கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்), கண்ணாளனே (பம்பாய்), பரத்வாஜ் இசையில் உன்னோடு வாழாதா வாழ்வென்ன வாழ்வு (அமர்களம்) ஆகிய பாடல்கள் ரொம்ப விருப்பம்'' என்கிறார்.
நடிகை நதியா கூறியது என்ன?
''நோக்கெத்தா தூரத்து கண்ணும் நட்டு என்ற என் முதல் மலையாளப் படத்தில் 'ஆயிரம் கண்ணுமாய்' பாடலை எனக்காகப் பாடினீர்கள். தமிழில் 'பூவே பூச்சூடவா' படத்தில் அதே பெயரில் ஒரு நல்ல பாடலையும் பாடினீர்கள். எனக்கு அற்புதமான, காலத்தால் அழியாத ஹிட் பாடல்களை வழங்கினீர்கள். மீண்டும் உங்களுக்கு நன்றி. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்," என பிபிசி தமிழிடம் பேசிய நடிகை நதியா கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு