இந்தியாவையும் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்த சிஜேபி போராட்டத்தின் 10 புகைப்படங்கள்

பட மூலாதாரம், Getty Images
ஜூலை 20 அன்று நடைபெற்ற காக்ரோச் ஜனதா கட்சியின் "நாடாளுமன்றம் நோக்கி பேரணியின்'' போது காவல்துறையினர் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. பல சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளன.
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு, தடியடி, மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தம், மொபைல் இணைய சேவை முடக்கம் ஆகியவை நடைபெற்றுள்ளன. அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தேவையற்ற மற்றும் அளவுக்கு மீறிய வன்முறை பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன," என்று கூறியுள்ளது.
மேலும், ''வினாத்தாள் கசிவு விவகாரத்தால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டக்காரர்கள் நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது டெல்லி காவல்துறையினர் வன்முறையான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்'' என அம்னெஸ்டி குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாச் வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் இந்திய நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றனர். இந்தச் சம்பவத்தில் பலர் காயமடைந்ததுடன், ஏராளமான போராட்டக்காரர்கள் காவலில் எடுக்கப்பட்டனர். அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக சட்டவிரோதமாகவும் அளவுக்கு மீறியும் பலம் பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் உட்பட அனைத்து புகார்களையும் அரசு பாரபட்சமற்ற முறையில் விசாரிக்க வேண்டும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் நடவடிக்கையால் பல டஜன் பேர் காயமடைந்தனர். போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண் போராட்டக்காரர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. எனினும், பின்னர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகளை டெல்லி காவல்துறை மறுத்துள்ளது. சட்டம்-ஒழுங்கையும் அமைதியையும் பேணுவதற்காகவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அது கூறியுள்ளது.
''ஜூலை 20 அன்று நடைபெற்ற வன்முறைப் போராட்டங்களின் போது பணியில் ஈடுபட்டிருந்த டெல்லி காவல்துறையின் உயர் அதிகாரிகள் உட்பட, டெல்லி காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 118-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் காயமடைந்தனர்'' என்று டெல்லி காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையில், போராட்டக்காரர்களுக்கு எதிராக காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யவும், இந்த மனுவை உடனடியாக விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் புதன்கிழமை அன்று மறுத்துவிட்டது.
தலைமை நீதிபதி சூர்யா காந்த், காணொளியைக் காட்டி நீதிமன்றத்தின் நேரத்தை "வீணடிக்க வேண்டாம்" என்றும், சட்டத்தின் கீழ் உள்ள உரிய நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் மனுதாரரைக் கேட்டுக் கொண்டார்.
நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கியபோது தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வின் முன்பாக இந்த விவகாரம் குறிப்பிடப்பட்டது.
தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யக் கோரி வழக்கறிஞர் ஒருவர் வாதிடுகையில், இந்த விவகாரம் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு எதிராக டெல்லி காவலத்துறை எடுத்த நடவடிக்கை தொடர்பானது என்று கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் "சலோ சன்சத்" முழக்கத்தின் கீழ் மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா, வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் மற்றும் தேசிய தேர்வு முகமை சீர்திருத்தங்கள் ஆகியவற்றை போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
போராட்டம் நடந்த அன்றைய தினத்தின் காணொளியைக் காட்ட மனுதாரரின் வழக்கறிஞர் அனுமதி கேட்டபோது, தலைமை நீதிபதி அந்த வழக்கறிஞரிடம், "எங்கள் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம், உங்கள் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்" என்று கூறினார்.
தலைமை நீதிபதி சூர்யாகாந்த் கூறிய ஒரு கருத்திற்குப் பிறகே 'காக்ரோச் ஜனதா கட்சி' உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































