'ஜனநாயகன்' பார்க்க குழந்தைகளுடன் திரையரங்கு செல்ல முடியாது - ஏன்? விஜய் படம் கடந்து வந்த பாதை

விஜயின் கடைசி படம், ஜனநாயகன் பட வெளியீடு

பட மூலாதாரம், X/@JanaNayaganFilm

    • எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று படத்தை தயாரிக்கும் கேவிஎன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. ஜனநாயகன் படத்துக்கு ஏ சான்றிதழ் என்று மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியமும் அதிகாரப்பூர்வமாக தனது இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுவிட்டது.

படத்தை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் விண்ணப்பித்த பின் 7 மாதங்கள் கழித்து இந்த சான்றிதழ் கிடைத்து இருக்கிறது. ரிலீஸ் தேதி அறிவித்த ஆறரை மாதங்களுக்கு பின் இந்த படம் வெளியாக உள்ளது. ஏன் இந்த கால தாமதம்? சான்றிதழ் பெறுவதில் என்ன பிரச்னை?

ஜனநாயகன் படம் கடந்த வந்த பாதையை பார்க்கலாம்.

ஜனநாயகன் தொடங்கியது எப்படி?

விஜயின் கடைசி படம், ஜனநாயகன் பட வெளியீடு

பட மூலாதாரம், X/@JanaNayaganFilm

வெங்கட்பிரபு இயக்கிய 'கோட்' படத்துக்குபின் விஜய் நடிப்பில் 69வது படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற கேள்வி, 2024-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே எழுந்தது. இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன், எச்.வினோத், அட்லி ஆகியோர் அந்த பட்டியலில் இருந்தனர். தெலுங்கு இயக்குநர்களான திரிவிக்ரம், அனில்ரவிபுடி ஆகியோர் விஜயிடம் கதை சொன்னதாக தகவல்கள் கசிந்தன. கடைசியில் எச்.வினோத் ஒப்பந்தம் ஆனார்.

பெங்களூரை சேர்ந்த கேவிஎன் நிறுவனம் தயாரிக்க, விஜய் நடிக்கும் 69வது படம் தொடங்குவதாக 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி முறைப்படி அறிவிப்பு வெளியானது. அக்டோபர் 4-ஆம் தேதி சென்னையில் படப்பூஜை போடப்பட்டு மறுநாள் படப்பிடிப்பு தொடங்கியது.

ஜனநாயகன் படத்தில் விஜயுடன் மமிதா பைஜூ, ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பதாக அடுத்தடுத்து சமூக ஊடகங்களில் செய்திகள் வந்தன.

விஜயின் கடைசி படம், ஜனநாயகன் பட வெளியீடு

பட மூலாதாரம், X/@KvnProductions

மலேசியாவில் பாடல் வெளியீட்டு விழா

சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்தது. பின்னர், 2025-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி ஜனநாயகன் என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் சென்னை, சுற்றுவட்டாரங்கள், கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்தது. டிசம்பர் 27-ஆம் தேதி மலேசியாவில் பிரமாண்டமாக ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. அதில் 1 லட்சம் பேர் வரை கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. விஜயின் கடைசி படத்தின் பாடல் வெளியீட்டுவிழா என்பதால் அதில் கலந்துகொண்டவர்கள் உருக்கமாக பேசினர்.

"எனக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்த என் ரசிகர்களுக்காக, நான் சினிமாவையே விட்டுக் கொடுக்கிறேன். இந்த விஜய் ரசிகர்களுக்கு ..சும்மா 'நன்றி'ன்னு சொல்லிட்டு போறவன் கிடையாது. நன்றிக்கடன் தீர்த்துவிட்டுதான் போவேன்.." என்று பேசினார் விஜய்.

விஜயின் கடைசி படம், ஜனநாயகன் பட வெளியீடு

பட மூலாதாரம், X/@KvnProductions

படம் வெளியாவதில் சிக்கல்

2026-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி ஜனநாயகன் படத்தை தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிட முடிவு செய்து, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் சான்றிதழ் பெற டிசம்பர் 18-ஆம் தேதி படக்குழுவினர் விண்ணப்பித்தனர். படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளுக்கு அந்த வாரியத்தின் உறுப்பினர் ஆட்சேபம் தெரிவித்தார்.

இதையடுத்து, சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் ஜனவரி 6-ஆம் தேதி படத்தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது. இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஜனவரி 9-ஆம் தேதி பொங்கல் வெளியீடாக படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

விஜயின் கடைசி படம், ஜனநாயகன் பட வெளியீடு

பட மூலாதாரம், X/@JanaNayaganFilm

நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

ஜனவரி 9-ஆம் தேதி சென்னையில் வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா படத்துக்கு யு.ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால், அதை எதிர்த்து மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. அவர்கள் நீதிபதி பி.டி.ஆஷா தீர்ப்புக்கு தடை விதித்தனர். உயர் நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம், வழக்கை உயர் நீதிமன்ற அமர்வே விசாரித்து முடிவெடுக்க உத்தரவிட்டது. மீண்டும் சென்னையில் வழக்கு நடந்தது. கடைசியில் பிப்ரவரி 10-ஆம் தேதி கேவிஎன் நிறுவனம் தனது வழக்கை வாபஸ் பெற்றது. தாங்கள் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திடம் மீண்டும் அனுப்புவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமல்

மார்ச் 17-ஆம் தேதி சான்றிதழ் வாரிய அதிகாரிகள் ஜனநாயகன் படத்தை மீண்டும் பார்த்தனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காலம் என்பதால், தவெக தலைவரான விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை வெளியிட தேர்தல் ஆணையத்தின் அனுமதி தேவை என்று மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் கூறியது.

சில கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் தமிழக தேர்தல் முடிந்த பின்னரே படத்தை வெளியிடுவோம் என பட நிறுவனம் சொல்ல, அந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வந்தது.

இணையத்தில் கசிந்த ஜனநாயகன்

விஜயின் கடைசி படம், ஜனநாயகன் பட வெளியீடு

பட மூலாதாரம், X/@JanaNayaganFilm

ஆனாலும், பல வாரங்களாக ஜனநாயகன் படத்துக்கு முறைப்படி சான்றிதழ் கிடைக்காத நிலை நீடித்தது. இந்நிலையில், ஏப்ரல் 9-ஆம் தேதி ஜனநாயகன் படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்ததாக செய்திகள் வந்தன. படத் தொகுப்பாளர் பிரதீப் அலுவலகத்தில் தவறு நடந்ததாக கூறப்பட்டது. அவர் படத் தொகுப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஏ சான்றிதழ், ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜயின் கடைசி படம், ஜனநாயகன் பட வெளியீடு

பட மூலாதாரம், X/@JanaNayaganFilm

ஜூலை11-ஆம் தேதி ஜனநாயகன் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாக மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய இணையதளத்தில் அறிவிப்பு வந்தது. அதன் தொடர்ச்சியாக ஜனநாயகன் படம் ஜூலை 23-இல் உலகம் முழுக்க வெளியாகும் என்று படத்தை தயாரிக்கும் கேவிஎன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

சமீபத்தில் ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதும், அது சர்ச்சை ஆனதும் நடந்தேறியது.

குழந்தைகள் பார்க்க முடியாது - ஏன்?

தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், 18 வயதுக்கும் குறைவானவர்கள் படத்தை பார்ப்பது சட்டப்படி குற்றம். இதனால், குழந்தைகள், 18 வயதுக்கு உட்பட்டோர் தியேட்டருக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெற்றோர்களுடன் வந்தாலும் குழந்தைகளை திரையரங்கிற்குள் அனுமதிக்க முடியாது.

விஜய் நடிப்பில் பகவதி படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கழித்து ஜனநாயகன் படம் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி

ஜனநாயகன் ரிலீஸ் குறித்து தமிழ்நாடு திரையரங்குகள் சங்க நிர்வாகி திருச்சி ஸ்ரீதர் கூறுகையில் "படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 23-இல் தமிழகத்தில் மட்டும் 750க்கும் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. தமிழக முதல்வர் நடித்த படம், அவரின் கடைசி படம் என்பதால் படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. முதல் நாளில் இந்த படம் வசூலில் புது சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது. ஏ சான்றிதழ் என்பதால் 18 வயதுக்கு குறைவானவர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை. முன்பே இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கே மீண்டும் இந்த படத்தை கொடுத்து இருக்கிறார்கள். விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் தர வாய்ப்புள்ளது" எனக் கூறினார்.

'ரசிகர் மன்ற நிர்வாகிகள் எம்எல்ஏ ஆகிவிட்டனர்'

விநியோகஸ்தரும், சோஷியல் மீடியா பிரபலமுமான கார்த்திக் ரவிவர்மா கூறுகையில் ''தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. வெளிநாடுகளில் இந்த படத்தை பலர் இணையத்தில் பார்த்துவிட்டதால் ஜனவரி 9-ம் தேதி இருந்த வரவேற்பு இப்போது இல்லை. அது கொஞ்சம் வசூலை குறைக்கும். தவிர, ஏ சான்றிதழ் காரணமாக 18 வயதுக்கு குறைவானர்கள் படத்தை பார்க்க முடியாது. அதுவும் 5 முதல் 10 சதவீத வசூலை பாதிக்கும்.

முன்பு ரசிகர் மன்ற நிர்வாகிகளாக இருந்தவர்கள் இப்போது எம்எல்ஏக்களாக, தவெக நிர்வாகிகளாக மாறிவிட்டனர். அவர்களால் முன்புபோல் மன்றப் பணிகளில் இயங்க முடியுமா என்பது தெரியவில்லை. ஆகவே, வசூலில் மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது. ஆனாலும் ஒட்டு மொத்தமாக படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது" என்கிறார்.

'இப்போது வரவேற்பு அதிகம்'

விஜயின் கடைசி படம், ஜனநாயகன் பட வெளியீடு

பட மூலாதாரம், X/@JanaNayaganFilm

தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் பிபிசி தமிழிடம் பேசுகையில் "ஜனநாயகன் படம் ஜனவரி 9-ஆம் தேதி ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும். இப்போது ஜூலை 23-இல் ரிலீஸ் ஆகிறது. ஆனாலும், அப்போதைய சூழ்நிலையை விட இப்போது வரவேற்பு அதிகமாக இருக்கிறது. காரணம், ஜனநாயகன் முதல்வர் நடித்த படமாகிவிட்டது.

ஏ சான்றிதழ் காரணமாக நகரங்களில் கொஞ்சம் வசூல் குறையலாம். ஆனால் படத்துக்கு வரவேற்பு நன்றாக இருக்கிறது. படத்தின் வசூல் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை கணிக்க முடியவில்லை. ' என்கிறார்

'30 நாடுகளில் 8 ஆயிரம் திரைகளில் வெளியாகிறது'

ஜனநாயகன் வெளியீடு குறித்து பேசியுள்ள படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா "ஜனநாயகன் படத்தை இந்தியா தவிர 30 நாடுகளில் திரையிடப் போகிறோம். உலகம் முழுக்க 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையிலான திரைகளில் படம் வெளியாகிறது.' என்று கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு