பழனி முருகன் கோவில் மடத்துக்கு சொந்தமான நிலம் தனிநபர்களுக்கு விற்பனையா? சர்ச்சை என்ன?

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ்

பட மூலாதாரம், RameshOfficial/Facebook

படக்குறிப்பு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பழனி மலை அடிவாரத்தில் தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான நிலத்தை தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்ததாக, 4 பேர் மீது காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிலத்தைப் பத்திரப்பதிவு செய்ததாக எழுந்த புகாரில், சார்-பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

நிலத்தை வாங்கிய தனிநபர்கள் அமைச்சரின் உறவினர்கள் என, வெளியான தகவலை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மறுத்துள்ளார். "புதிதாக எனக்கு ஓர் உறவினரை உருவாக்கி அவதூறு பரப்பியவர்கள் மீது காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என அவர் கூறியுள்ளார்.

சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தில் முறைகேடு நடைபெற்ற பின்னணி என்ன?

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவில் தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு மலையின் அடிவாரத்தில் உள்ள பூங்கா சாலையில் தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான சுமார் 1.40 ஏக்கர் நிலம் உள்ளது.

'1888 ஆம் ஆண்டு நிலம்'

பழனி தண்டாயுதபாணி கோவில்.

பட மூலாதாரம், HR&CE

படக்குறிப்பு, பழனி தண்டாயுதபாணி கோவில்

குப்புசாமி மணியக்காரர் என்பவருக்கு சொந்தமாக இந்த நிலம் இருந்துள்ளது. 'அவர் தண்டாயுதபாணி சுவாமி என்பவருக்கு 26.4.1888 ஆம் ஆண்டு மடம் கட்டவும் இந்துமத கோட்பாடுகளை பரப்பவும் அனுசரிக்கவும் தர்ம சாசனத்தின் மூலமாக எழுதிக் கொடுத்தார்' என, ஜூலை 2 ஆம் தேதி பழனி கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, பழனி 1-ம் எண் இணை சார் பதிவாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தண்டாயுதபாணி மடம், பல்வேறு நபர்களால் அபிவிருத்தி செய்யப்பட்டு கட்டடங்கள் கட்டி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கும் கோவிலில் பூஜை செய்வதற்கும் நிர்வாகம் செய்யப்பட்டுள்ளதாக, கடிதத்தில் செ.மாரிமுத்து குறிப்பிட்டுள்ளார்.

'மடத்துக்கு கொடுக்கப்பட்ட 1.40 ஏக்கர் நிலத்தில் இருந்து வரும் வருமானத்தை மடத்தின் பராமரிப்பு மற்றும் பூஜை, கைங்கர்ய செலவு ஆகியவற்றுக்கு செய்து வரவும் அந்தச் சொத்துகளை எவருக்கும் விற்பதற்கோ, வில்லங்கப்படுத்தவோ உரிமை கொடுக்கப்படவில்லை' என கோவிலின் இணை ஆணையர் செ.மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த நிலத்தில் தங்கி அன்னதானம் உள்பட பல்வேறு சேவைப் பணிகளைச் செய்து வந்தனர். தற்போது இந்த நிலம் இலவச வாகன நிறுத்தும் இடமாக உள்ளது.

இந்த நிலத்தை சில தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதை அறிந்து பழனி கோவில் நிர்வாகம் சார்பில் சார்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கின் முடிவில், மடத்தின் சொத்தை பாதுகாக்கும் பொருட்டு மடத்தின் தக்காராக பழனி தண்டாயுதபாணி கோவிலின் இணை ஆணையரை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

'அந்த வகையில், தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்தின் சொத்துகளை தனி நபர்களுக்கு விற்பனை செய்தது தவறானது என நீதிமன்றத்தில் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதை தெரிவித்து கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது' என இணை சார் பதிவாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

'தனி நபர் பெயரில் பத்திரப்பதிவு'

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

'அந்தவகையில், சார்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம், தர்ம சாசன ஆவண எண் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மடத்துக்குத் தொடர்பில்லாத, உரிமையில்லாத நபர்கள் மூலம் எந்தவித பத்திரப்பதிவும் மேற்கொள்ள வேண்டாம்' எனவும் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிலைநிறுத்தி மடத்தின் சொத்துக்களைப் பாதுகாக்கும் வகையில் உத்தரவுகளை வழங்குமாறும் பழனி தண்டாயுதபாணி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து கோரியுள்ளார்.

இந்தநிலையில், கடந்த ஜூலை 6 ஆம் தேதியன்று தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தை தனி நபர்கள் பெயருக்குப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, பழனி தண்டாயுதபாணி கோவில் கண்காணிப்பாளர் முருகானந்தம் பழனி அடிவாரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் மனுவில், 'உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி, சொத்தை வில்லங்கப்படுத்தக் கூடாது என பத்திரப்பதிவுத் துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. அதையும் மீறி மோசடி நடந்துள்ளது' எனக் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் சார்-பதிவாளர் உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கையை எடுக்குமாறு புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

நிலத்தை அபகரிக்க நடந்த தொடர் மோசடி

இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், "நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக கடந்த ஆண்டில் கோவில் நிர்வாகம் தரப்பில் பதிவாளர் அலுவலகத்துக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன" எனக் கூறினார்.

கடந்த மார்ச் 27 ஆம் தேதியன்று நிலத்தைப் பத்திரப்பதிவு செய்யும் வகையில் போலி விற்பனை பத்திரம் மூலம் சிலர் முயற்சி செய்ததாகக் கூறிய அமைச்சர் ரமேஷ், "கடந்த ஏப்ரல் மாதம் சில தனி நபர்கள் நீதிமன்றத்தை அணுகி உத்தரவு ஒன்றை வாங்கியுள்ளனர்" என்கிறார்.

"நீதிமன்றமும், 'ஆவணங்கள் சரியாக இருந்தால் ஒரு வாரத்துக்குள் பரிசீலிக்கலாம்' எனக் கூறியது. அந்த உத்தரவை வைத்தே மடத்துக்குச் சொந்தமான நிலத்தை ஜூலை 3 ஆம் தேதியன்று பத்திரப்பதிவு செய்ய முயன்றுள்ளனர்" என அமைச்சர் ரமேஷ் குறிப்பிட்டார்.

ஆனால், அடுத்து வந்த நாட்களில் தனிநபர்கள் பெயரில் மடத்தின் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, செய்தியாளர் சந்திப்பில் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் சில விளக்கங்களை அளித்தார்.

'சட்டப்பூர்வ நடவடிக்கை' - அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

பட மூலாதாரம், Logintvk/X

படக்குறிப்பு, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

"மடத்தின் நிலத்தில் தவறு நடந்துள்ளது. முன்னதாக, இந்த நிலத்தில் எந்தப் பத்திரப் பதிவும் மேற்கொள்ளக் கூடாது என இதற்கு முன்பிருந்த சார்-பதிவாளர் நிலுவையில் போட்டுவிட்டார்" எனக் கூறினார்.

"அவர் விடுப்பில் இருந்த நேரத்தில் சார்-பதிவாளராக பொறுப்பேற்ற ஜஸ்டின் மணிகண்டன் பத்திரப்பதிவை செய்து கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது, 'நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பத்திரப்பதிவை மேற்கொண்டதாக கூறினார்" என்கிறார் லோகேஷ் தமிழ்ச்செல்வன்.

'இந்த விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம்' எனக் கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "பத்திரப்பதிவு தொடர்பான ஆவணங்களை நிறுத்தி வைத்துள்ளோம். இந்த விவகாரத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்.

வழக்கின் மேல் விசாரணை தேவைப்பட்டால் முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டார்.

'4 பேர் மீது முதல் தகவல் அறிக்கை' - டி.எஸ்.பி

நீதிமன்ற உத்தரவுகளை மீறி மடத்தின் நிலத்தில் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு நடந்ததாகக் கூறி பழனி அடிவாரம் காவல்நிலையத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நான்கு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிபிசி தமிழிடம் பேசிய பழனி டி.எஸ்.பி செல்வகுமார் தெரிவித்தார்.

"புகார் மனுவில் நிலத்தை விற்றவர்கள், வாங்கியவர்கள், சார்-பதிவாளர் உள்பட நான்கு பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

1888 ஆம் ஆண்டு நிலம் மடத்துக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசிய டி.எஸ்.பி செல்வகுமார், "இந்த வழக்கில் ஏராளமான ஆவணங்களை சேகரிக்க வேண்டியுள்ளது. அதனால் தான் குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை இன்னும் கைது செய்யவில்லை" என்கிறார்.

'கோவில் நிலம் அல்ல'

"இது நேரடியாக கோவிலின் நிலம் இல்லை" எனக் கூறும் டி.எஸ்.பி செல்வகுமார், "மடத்துக்கு தனி நபர் ஒருவர் எழுதி வைத்துள்ளார். அவர், பொதுசேவைக்காக நிலம் பயன்படுத்தப்பட வேண்டும் என எழுதி வைத்திருந்தார். அதை மீறி பத்திரப் பதிவு நடந்ததால் கோவில் நிர்வாகம் தலையிட்டது" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "2000 ஆம் ஆண்டிலேயே நிலத்தை விற்பதற்கான வேலைகள் நடந்தன. அதன் காரணமாக தக்கார் நியமிக்கப்பட்டார். இதுதொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட நீதிமன்ற வழக்குகள் உள்ளன" என்கிறார்.

"நிலத்தின் மதிப்பு 100 கோடி ரூபாய் என ஊடகங்களில் வெளியாகும் தகவலில் உண்மை உள்ளதா?" எனக் கேட்டபோது, " அது தவறான தகவல். 1.40 ஏக்கர் நிலத்தின் மதிப்பை ஆராய்ந்தால் அதிகபட்சம் 30 கோடி ரூபாய் வரை விலை போவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்று மட்டும் பதில் அளித்தார்.

'புதிதாக எனக்கு ஓர் உறவினர்' - அமைச்சர் ரமேஷ்

அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்.

பட மூலாதாரம், RameshOfficial/Facebook

படக்குறிப்பு, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்

இந்தநிலையில், நிலத்தை பத்திரப்பதிவு செய்த தனி நபர்களும் அறநிலையத்துறை அமைச்சரும் உறவினர்கள் என சமூக வலைதளங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியானது.

"எந்த ஆதாரமும் இல்லாமல் புதிதாக எனக்கு ஓர் உறவினரை உருவாக்கி வருகின்றனர். எனக்கு இப்படிப்பட்ட உறவினர் இருக்கிறார் என்பது இன்று தான் தெரியும். அமைச்சருக்கு தெரிந்து தான் நடப்பதாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்" என, செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ரமேஷ் பதில் அளித்தார்.

இதுதொடர்பாக, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளதாகக் கூறிய அவர், "சமூக வலைதளங்களிலும் யூடியூப்பிலும் இதுதொடர்பாக பேசிய நபர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆதாரமில்லாமல் பேசி வந்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்.

"எங்களுக்கு யாரைப் பற்றியும் கவலையில்லை. கோவில் நிலங்களைப் பொறுத்தவரையில் ஒரு 'இன்ச்' கூட கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. சட்டப்படி அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்" என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு