You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கரூர்: அரசுப் பணி வழங்கப்பட்ட 31 பேர் யார்? விஜய் பேச்சுக்கு செந்தில் பாலாஜி எதிர்வினை
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று (ஜூலை 10) கரூர் சென்றுள்ளார். கரூரில் கடந்த ஆண்டு செப்டெம்பர் 27 அன்று, விஜயின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்து ஒன்பது மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது அவர் கரூர் சென்றுள்ளது கவனம் பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் விஜய், "கரூரில் அன்று எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகமாக உள்ளது, நீங்கள் வர வேண்டாம் என காவல்துறை சொல்லியிருக்கலாம் அல்லவா? அன்று இருந்த கரூர் காவல்துறையின் நாடகத்தை நான் நம்பிவிட்டேன்" என்று கூறினார்.
"என் மனதை விட்டு கரூர் சம்பவம் என்றுமே நீங்காது. கரூரில் தவெக சார்பாக ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்படும்" என்றும் அவர் கூறினார்.
புதிய தொழில்துறைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவது, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்குவது உள்ளிட்ட நிகழ்வுகளில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார்.
சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி சென்ற முதல்வர் விஜய், பின்னர் சாலை மார்க்கமாக காரில் கரூர் சென்றார்.
31 பேருக்கு பணி நியமன ஆணைகள்
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும், ஒருவருக்கு பத்து லட்சம் ரூபாய் கருணைத் தொகையையும் முதலமைச்சர் விஜய் வழங்கியுள்ளார்.
இதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தி என்பவருக்கு பத்து லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தஜோதி, நிவேதா, சங்கவி, திவ்யா, கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல், ஆகியோருக்கு பள்ளிக் கல்வித் துறையில் இளநிலை உதவியாளர் பதவிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
அத்துடன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், மோனிஷா, சந்திரகலா, ம.பிரிதர்ஷினி, பிரபாகரன், மல்லிகா, தீபலட்சுமி, நிவேதிதா, அஷ்வின்குமரன், சந்தியா ஆகியோருக்கு இளநிலை உதவியாளர் பதவிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
காவல்துறையில் மகாலட்சுமி, தனலட்சுமி இருவருக்கும் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது. செ.பிரபாகரன், ஷர்மிளா இருவருக்கும் பதிவுத் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகருக்கு பேரூராட்சிகள் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணையும், அதே மாவட்டத்தைச் சேந்த ஜெயபிரகாஷுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணையும் வழங்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலகில் அலுவலக உதவியாளர் பணிக்கான ஆணை, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைச்செல்வி, சதீஸ்குமார், விமல், செல்வராணி மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் செர்ந்த அகிலாவுக்கு வழங்கப்பட்டது.
மேலும், கரூர் மாவட்ட அலகில் அலுவலக உதவியாளர் பணிக்கு முருகன் மற்றும் சுதன் என்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், மாவட்ட வருவாய் அலகில் மசால்ஜி பணிக்கான ஆணை செல்வராணிக்கு வழங்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ்குமார், ரகுநாதன் ஆகியோருக்கு மாவட்ட வருவாய் அலகில் இரவுக் காவலர் பணிக்கான ஆணையும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி என்பவருக்கு பழங்குடியினர் அடிமலைப்புதூர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியின் இரவுக் காவலர் பணிக்கான ஆணையும் வழங்கப்பட்டன.
கரூர் கூட்ட நெரிசல் பற்றி விஜய் பேசியது என்ன?
இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் விஜய், "ஒரு மனிதன் எவ்வளவு பெரிய உயரத்திற்குச் சென்றாலும் சில காயங்களை, வலிகளை மறக்க முடியாது. எல்லாவற்றையும்விட எனக்கு மிகப்பெரிய வலி என்றால் அது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்தான்."
"மக்களைச் சந்தித்து, அவர்களது பிரச்னைகளைக் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் தேர்தல் பிரசாரங்களில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் எனப் பயணம் செய்தோம். அதேபோல, அரியலூர் கூட்டம் முடித்து பெரம்பலூர் செல்ல ஆயுத்தமானபோது, பெரம்பலூரில் கூட்டம் அதிகமாக உள்ளது, செல்ல வேண்டாம் என காவல்துறையினர் கூறினார்கள். எனவே நாங்கள் பெரம்பலூர் கூட்டத்திற்குச் செல்லவில்லை. அதற்காக மக்களிடம் மன்னிப்பும் கேட்டோம்."
"அதேபோல நாமக்கல் பிரசார கூட்டம் முடித்துவிட்டு கரூர் வரும்போது, கரூர் காவல்துறை எச்சரிக்கை செய்திருக்கலாம் அல்லவா? கரூரில் எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகமாக உள்ளது, நீங்கள் வர வேண்டாம் எனச் சொல்லியிருக்கலாம் அல்லவா?" என்று கேள்வியெழுப்பினார்.
அதோடு, "பிறகு ஏன் என்னை காவல்துறையே வந்து கரூருக்குள் அழைத்துச் சென்றது. அன்றிருந்த கரூர் காவல்துறையின் நாடகத்தை நான் நம்பிவிட்டேன்" என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், "இதற்கெல்லாம் யார் காரணம்? இதெல்லாம் யார் சொல்லி செய்யப்பட்டது? அவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கியது யார்? அங்கு நாம் இழந்தது எனது சகோதரிகளின் குழந்தைகள். என் குடும்ப உறவுகளை இழந்து வலியோடு இருக்கும் என் மீது பழி போடுகிறீர்களா?" என்றார்.
"அன்றிருந்த கூட்டத்திற்கு ஏற்ப காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டதா? ஒரு காவல்துறை அதிகாரி நாங்கள்தான் சம்பவம் நடந்த இடத்தைக் கேட்டோம் எனக் கூறினார். இப்படி எங்கள் மீதுதான் பழி போட்டார்கள். நமக்குப் பல வலிகளையும், காயங்களையும் கொடுத்தவர்களுக்கு மக்களாகிய நீங்கள் பதிலடி கொடுத்துவிட்டீர்கள். ஆனால், அது போதாது அவர்களுக்கு நிரந்தர பதிலடியை நீங்கள் கொடுக்க வேண்டும்" என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.
"முந்தைய அரசின் பல ஊழல்களை நாங்கள் வெளிப்படுத்தி வருகிறோம். எங்களால் ஊழலை ஒழிக்க முடியாது என்றார்கள், ஆனால் நாங்கள் அதைச் செய்து காட்டியுள்ளோம். எந்த அரசு அலுவலகத்திலும் ஒரு ரூபாய்கூட லஞ்சம் வாங்குவதில்லை. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்" என்று அவர் பேசினார்.
'கரூரில் நினைவுச் சின்னம்'
"தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு மீண்டும் கொண்டு வந்தாலும், அதை நாம் உறுதியாக எதிர்ப்போம்" என முதலமைச்சர் விஜய் கூறினார்.
"என் மனதை விட்டு கரூர் சம்பவம் என்றுமே நீங்காது. நமக்கு ஏற்பட்ட இந்த வேதனையான சம்பவத்தை அடுத்து வரக்கூடிய தலைமுறைகளும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே, இனி இப்படியொரு அரசியல் சதியை யாரும் நினைத்துப் பார்க்கக்கூடாது என்பதற்காகவே, கரூரில் ஒரு நினைவுச் சின்னம் தவெக சார்பாக அமைக்கப்படும்" என்றார்.
"இது என்றுமே மக்களுக்கான அரசுதான், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களை அணுகலாம். தேர்தலில் பணம் கொடுக்கும் கலாசாரத்தை நாங்கள் அழித்துள்ளோம். எங்களைப் பார்த்து 'குதிரை பேரம் செய்கிறோம்', 'சோஃபா மாடல் அரசு' எனக் கூறுகிறார்கள். திமுக அரசு செய்த ஊழல்களை நாங்கள் தோண்டி எடுத்துக்கொண்டு இருக்கிறோம். இன்னும் பலர் மாட்டுவார்கள். அடுத்து வரும் தேர்தல்களிலும் மக்கள் திமுகவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்" என்று கூறினார் முதலமைச்சர் விஜய்.
இந்த கரூர் நிகழ்வில், கியூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5,000 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது என்றும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
"பாதுகாப்பு கருதி, கர்ப்பிணிகள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டோருக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'கரூரில் மக்களைக் காப்பற்றியது திமுக அரசு'- டி.கே.எஸ். இளங்கோவன்
கரூர் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், "ஒரு முதலமைச்சர் இப்படி காவல்துறையைக் குற்றம் சாட்டுவது தவறு. அன்று விஜய் சரியான நேரத்திற்கு வந்திருந்தால் இந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கும்" என்று கூறினார்.
"அன்று கரூரில் மக்கள் விஜயை பார்க்க காலையில் இருந்து காத்திருந்தார்கள். வெயிலில், உணவு மற்றும் தண்ணீரின்றி நாள் முழுக்க நின்றதால்தான் ஆங்காங்கே பலர் மயங்கி விழுந்தார்கள். அன்று மயங்கி விழுந்த 100 பேரில் 60 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். அதற்குக் காரணம் அன்றைய திமுக அரசுதான்" என்று கூறினார்.
"மக்களைத் திட்டமிட்டுத்தான் விஜய் காக்க வைத்துள்ளார். முன்பு சொன்ன பொய்களையே, மீண்டும் மீண்டும் சொல்கிறார்" என்றும் டி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
செந்தில் பாலாஜி கூறியது என்ன?
முதலமைச்சர் விஜய் இன்று கரூரில் ஆற்றிய உரைக்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர்வினையாற்றியுள்ளார்.
"கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார், இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார் என்பது மக்களுக்குத் தெரியும்" எனத் தனது எக்ஸ் பதிவில் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
"அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சைத் தொடர்ந்து பேசியது யார்?" என்றும் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
"திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானத்தில் ஓடியது யார் என்பதும் எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்" என்று செந்தில் பாலாஜி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல்
தவெக தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, கரூரில் வேலுசாமிபுரம் என்ற இடத்தில் வாகன பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அதுதொடர்பாக தவெக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த சிபிஐ விசாரணைக்காக அதன் டெல்லி அலுவலகத்திற்கு விஜய் வரவழைக்கப்பட்டார்.
தனது பரப்புரைக் கூட்டத்தில் பெரும் துயரம் நடந்ததும், அப்போது மருத்துவமனைக்குச் செல்லாமல் விஜய் விமானத்தில் சென்னை திரும்பியது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.
விஜய் அந்த நிகழ்ச்சிக்குத் தாமதமாக வந்ததே நடந்த துயரத்திற்குக் காரணம் என்று திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டு காணொளி வெளியிட்ட விஜய், அதன் பின்னர் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு நேரில் அழைத்துப் பேசி, இழப்பீடு வழங்கிய விஜய், அதன் பிறகு கரூர் செல்லவில்லை. இதுவும் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தது. சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்திற்காகவும் விஜய் அங்கு செல்லவில்லை.
இந்த நிலையில் ஒன்பது மாதங்கள் கழித்து இன்று அவர் கரூர் சென்றுள்ளார்.
'அரசுப் பணி வழங்க தடையில்லை'
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்கும் நிகழ்வை தமிழக அரசு தொடரலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், இந்த நியமனங்கள் தற்காலிகமானவை என்றும் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டவை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற நியமனங்களுக்கான வழிகாட்டுதல்கள் குறித்தும், இந்த வழக்கில் அவை பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் விளக்கி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அரசுப் பணி வாய்ப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது என்றும், நியாயமான காரணம் இல்லாமல் அதை மறுக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணையை 21ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இந்த வழக்கில் டிஎன்பிஎஸ்சி-யையும் நீதிமன்றமே தாமாக முன்வந்து இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கரூரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் விஜய் கலந்துகொண்டு அரசு பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு