You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூர்யவன்ஷியின் குறைகள் பற்றி விவாதிக்கப்படும் வேளையில் வைரலாகும் ஆர்ச்சரின் பழைய பேட்டி
ஷ்ரேயாஸ் ஐயர் முதல் முறையாக டி-20 போட்டித்தொடரில் கேப்டன் பதவியைப் பெற்றார்.
அவரது தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது.
அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷிக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காத போது, அவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று இந்தியாவில் சமூக ஊடகங்களில் கடுமையான விவாதம் நடந்தது.
பிரிட்டனுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் வைபவ் தனது வாய்ப்பைப் பெற்றார். சர்வதேச அளவில் அவர் அறிமுகமான இப்போட்டியில் 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மூன்றாவது போட்டியில் இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வைபவ் ஐந்து பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நான்காவது போட்டியில், வைபவ் 10 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வைபவ் எப்போதும் ஒவ்வொரு பந்திலும் அதிரடியாக விளையாடும் மனநிலையில் இருக்கிறார் என்றும், இந்த அணுகுமுறை அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது என்றும் விமர்சிக்கப்படுகிறது.
பிரிஸ்டலில் உள்ள கவுண்டி மைதானத்தில் நடந்த நான்காவது டி20 சர்வதேச போட்டியில் வைபவ் 10 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவர் இதுவரை விளையாடிய மூன்று சர்வதேச போட்டிகளிலும் பேக்-ஆஃப்-லென்த் பந்துகளை எதிர்கொள்வதில் தடுமாறி வருகிறார்.
வைபவ் சூர்யவன்ஷி இந்திய கிரிக்கெட்டில் நீண்ட காலம் நீடிக்க விரும்பினால், அவர் ஐபிஎல்லின் பிளாட் பிட்ச்களில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு களங்களிலும் ரன்கள் குவிக்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஐபிஎல்லில் வைபவ் சூர்யவன்ஷியின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சக வீரரான ஜோஃப்ரா ஆர்ச்சர் முதல் ஓவரிலேயே இரண்டு முறை ஷார்ட் பந்துகளை வீசினார்.
இளம் பேட்ஸ்மேனான வைபவ் சூர்யவன்ஷி அந்த இரண்டு பந்துகளிலும் பெரிய ஷாட்களை விளையாட முயன்றார், ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.
ஆர்ச்சர் தொடர்ந்து உடலை குறிவைத்து பந்துவீசி, 15 வயதான வைபவின் விக்கெட்டை வெறும் எட்டு பந்துகளுக்குள் வீழ்த்தினார். வைபவ் சூர்யவன்ஷியை அவர் தொடர்ந்து ஆட்டமிழக்கச் செய்த இரண்டாவது போட்டி இதுவாகும்.
ஜோஃப்ரா ஆர்ச்சரின் பழைய பேட்டி
ஐபிஎல் 2026 எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெற்ற அபார வெற்றிக்குப் பிறகு, வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிரான தனது பந்துவீச்சு திட்டத்தை வெளிப்படுத்த ஜோஃப்ரா ஆர்ச்சர் வேடிக்கையாக மறுத்துவிட்டார்.
அதிகாரப்பூர்வ ஐபிஎல் தளத்தில் வைரலான போட்டிக்கு பிந்தைய நேர்காணலில், வலைப்பயிற்சி நேரத்தில் பந்துவீசும்போது சூர்யவன்ஷியை கையாள்வதற்கான ஃபார்முலாவை நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்களா என்று ஆர்ச்சரிடம் கேட்கப்பட்டது.
அணியில் உள்ள சக இளம் வீரரின் பேட்டிங்கில் உள்ள பலவீனங்களை சுட்டிக்காட்டுவதற்கு பதிலாக, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் இந்த கேள்வியை நகைச்சுவையாக தவிர்த்தார்.
ஐபிஎல் முடிந்த பிறகு சூர்யவன்ஷிக்கு எப்படி பந்துவீசுவேன் என்பதை வெளிப்படுத்துவேன் என்று ஆர்ச்சர் புன்னகையுடன் கூறினார்.
அவரது இந்த பதில் பலரையும் ஊகிக்க வைத்தது.
வலைப்பயிற்சியில் சூர்யவன்ஷிக்கு பந்துவீசுகிறீர்களா என்று ஆர்ச்சரிடம் கேட்டபோது, "சில நேரங்களில்" என்று பதிலளித்தார்.
பின்னர், சூர்யவன்ஷிக்கு நீங்கள் எந்த வகையான பந்துகளை வீசுகிறீர்கள் என்று தொகுப்பாளர் கேட்டபோது, ஆர்ச்சர் சிரித்துக்கொண்டே, "ஐபிஎல்லுக்குப் பிறகு உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
இப்போது, தனது பந்துவீச்சின் மூலம் வைபவ் சூர்யவன்ஷியை எப்படி கையாள்வது என்பதை ஆர்ச்சர் காட்டி வருகிறார்.
பிரிஸ்டலில், வைபவ் சூர்யவன்ஷி ஒரு ஷார்ட் பந்தை புல் ஷாட் அடிக்க முயன்று மிட்-ஆனில் இருந்த சாம் கரனிடம் எளிதான கேட்ச் கொடுத்தார்.
இதனுடன் அவரது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இடதுகை பேட்ஸ்மேனான சூர்யவன்ஷி , இதுவரை கிடைத்த மூன்று வாய்ப்புகளில் வெறும் 42 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
மூத்த விளையாட்டு பத்திரிகையாளர் விக்ராந்த் குப்தா எக்ஸ் தளத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளார்.
"வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங்கில் தனது 'சோடா பாட்டில் எஃபெக்ட்' அணுகுமுறையிலிருந்து எவ்வளவு சீக்கிரம் வெளியேறுகிறாரோ, அவ்வளவு தூரம் அது அவருக்கு நல்லது.
கிரிக்கெட்டில், எதிரணிகளுக்கு தகவல்கள் மிக வேகமாகச் சென்றடையும். இப்போது, அணிகள் அவரது பலவீனங்களைக் குறிவைத்து, அவரது உடல் மற்றும் கழுத்துப் பகுதியை நோக்கி பந்துகளை வீசி, அவரை ஆபத்தான ஷாட்களை விளையாட கட்டாயப்படுத்த முயலும்" என்று எழுதியுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) தான் தனது முத்திரையைப் பதித்துள்ளார், அங்கு சூழ்நிலைகள் முற்றிலும் வேறுபட்டவை.
இந்திய பேட்ஸ்மேன்கள் வரலாற்று ரீதியாக இங்கிலாந்து சூழ்நிலைகளில் தடுமாறியுள்ளனர். இந்தத் தொடரிலும் அதுவே நடந்துள்ளது.
சூர்யவன்ஷி மட்டுமின்றி, அணியின் மற்ற பேட்ஸ்மேன்களும் ரன்கள் குவிக்க தடுமாறி வருகின்றனர்.
அபிஷேக் சர்மா மற்றும் புதிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரைத் தவிர, மற்ற பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை.
இருப்பினும், இவர்கள் இருவரும் கூட தங்களது சிறந்த ஃபார்மில் இல்லை.
சச்சின் டெண்டுல்கரும் தனது ஆரம்பகால ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான தனது முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில், அவர் ரன் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து இரண்டு முறை ஆட்டமிழந்தார்.
வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங்
ஐ.பி.எல்-லின் போது கூட, ஷார்ட்-பிட்ச் பந்துகளுக்கு எதிராக வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் அவ்வளவு சிறப்பானதாக இல்லை என்ற விவாதங்கள் இருந்தன.
தற்போது நடந்து வரும் டி20 தொடரிலும், கடந்த மாதம் இலங்கையில் நடந்த இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் ஆடிய முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் அவரது செயல்பாடுகள் அந்த அச்சங்களை ஓரளவுக்கு உறுதிப்படுத்தியுள்ளன.
கிரிக்கெட் பற்றி ஆழமான புரிதல் கொண்ட வரலாற்றாசிரியர் முகுல் கேசவன், இந்த ஆண்டு ஐபிஎல் முடிந்த பிறகு டெலிகிராப் ஆங்கில நாளிதழில் எழுதியிருந்த கட்டுரையில், வைபவ் சூர்யவன்ஷியின் இன்னிங்ஸை தான் ஏன் தொடக்கம் முதல் இறுதி வரை பார்ப்பதில்லை என்று கூறியிருந்தார்.
"நான் வைபவ் சூர்யவன்ஷியின் முழு இன்னிங்ஸையும் தொடக்கத்திலிருந்து இறுதி வரை பார்ப்பதில்லை. அதற்கான காரணம் எளிது. ஐபிஎல் என்பது பேட்ஸ்மேன்களுக்கு, குறிப்பாக பெரிய ஷாட்களை அடிப்பவர்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளது. இதனால் சிக்ஸர்கள் மற்றும் ஃபோர்களின் முக்கியத்துவம் குறைந்துவிடுகிறது. தொடர்ந்து பெரிய ஷாட்களைப் பார்ப்பது சிறிது நேரத்திற்குப் பிறகு சலிப்பை ஏற்படுத்துகிறது. ஆர்வம் குறையத் தொடங்குகிறது"
"டி20 கிரிக்கெட்டில் பெரிய ஷாட்களை அடிக்கும் பேட்ஸ்மேன்கள், டெஸ்ட் பேட்ஸ்மேன்களை விட மிக அதிக ஆபத்துகளை எதிர்கொள்கிறார்கள்.
ஆனால் முரண் என்னவென்றால், அவர்களுக்கு 20 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை மட்டுமே இழக்கும் ஆபத்து உள்ளது, அதேசமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில், பொதுவாக 80 அல்லது 90 ஓவர்கள் பேட்டிங் செய்ய வேண்டும்.
எனவே, நீண்ட வடிவத்தில் பேட்டிங்கை உற்சாகமாக்கும் அழுத்தமும் ஆபத்தும் டி20-யில் கணிசமாகக் குறைந்துவிடுகிறது.
ஐ.பி.எல்-லில் ஜஸ்பிரித் பும்ராவின் ஓவரில் சூர்யவன்ஷி இரண்டு சிக்ஸர்களை அடித்தபோது, முதலில் 'வாவ்' என்றும், 'இப்போது இதே விஷயத்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ராவுக்கு எதிராக செய்து காட்டுங்கள்'என்றும் எனது மனதில் ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்கள் தோன்றின".
"நிச்சயமாக, இந்த ஒப்பீடு முற்றிலும் நியாயமானது அல்ல. வேறு உலகில், டெஸ்ட் கிரிக்கெட் என ஒன்று இல்லாமல், டி20 கிரிக்கெட் மட்டுமே விளையாடப்பட்டால், என்னைப் போன்ற பார்வையாளர்கள் இரு வடிவங்களையும் ஒப்பிட மாட்டார்கள். அப்போது, நான் சூர்யவன்ஷியின் அதிரடி பேட்டிங்கை எந்த ஒரு தயக்கமும் இன்றி ரசித்திருக்கலாம்."
"ஆனால், மேஜர் லீக் பேஸ்பால் மற்றும் ஐபிஎல் இரண்டையும் நன்றாகப் புரிந்து கொண்டு, இதே உலகில் வாழும் ஒரு என்.ஆர்.ஐ ஆக நான் இருந்திருந்தால், பல என்.ஆர்.ஐ-கள் செய்வதைப் போல நானும் ஒப்பீடுகளைச் செய்திருப்பேன்.
1960-களின் பிற்பகுதியில், பேட்ஸ்மேனுக்கும் பந்துவீச்சாளருக்கும் இடையிலான சமநிலையை மீட்டெடுக்க எல்.எம்.பி நிர்வாகிகள் ஆட்டத்தின் விதிகளை மாற்றினர். ஐபிஎல் தொடர்ந்து சிறிய எல்லைக்கோடுகள், ஃப்ரீ ஹிட்கள் மற்றும் ஃபீல்டிங் கட்டுப்பாடுகள் போன்ற விதிகளை ஊக்குவித்து பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக செயல்படுவது குறித்த கேள்வியை நான் முன்வைத்திருப்பேன் "என்றும் முகுல் கேசவன் அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவின் தோல்வி குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?
தொடர்ந்து ஐந்து தோல்விகளுக்குப் பிறகு, அணி தேர்வு மற்றும் பிளேயிங் லெவன் குறித்து மீண்டும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
காங்கிரஸ் மூத்த தலைவரும், கிரிக்கெட் ஆர்வலருமான சசி தரூர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நான் உண்மையிலேயே வார்த்தைகளின்றி தவிக்கிறேன். என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. நான் முற்றிலும் அதிர்ச்சியடைந்துள்ளேன். விவரிக்க முடியாத அளவிற்கு இது மற்றொரு அவமானகரமான தோல்வி. வெளிப்படையாகச் சொல்வதானால், சொல்வதற்கு இனி எதுவும் இல்லை" என்று எழுதியுள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளார்.
அதில், "கடந்த பிப்ரவரியில் டி20 உலகக் கோப்பையை வென்ற அதே இந்திய அணி, இப்போது இங்கிலாந்துக்கு எதிராக முற்றிலும் திகைத்துப்போய் நிற்கிறது. இந்திய அணி இவ்வளவு மந்தமாகவும், வியூக ரீதியாக முடங்கியும் இருப்பதை நான் அரிதாகவே பார்த்திருக்கிறேன். இந்த அணிக்கு ஜஸ்பிரித் பும்ராவை விட இன்றியமையாத வீரர் வேறு யாரும் இல்லை என்பதையும் இது தெளிவாக்குகிறது. அவர் தான் இந்தியாவின் உண்மையான மேட்ச்-வின்னர். ஒரு தனி நபர் மட்டும் ஒரு அணியை உருவாக்கிவிட முடியாது என்று அடிக்கடி சொல்லப்படுவதுண்டு. ஆனால் பும்ரா இதற்கு ஒரு விதிவிலக்கு"எனக் குறிப்பிட்டிருந்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் மூன்றாவது தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், "முதலில் பேட்டிங் செய்யும்போது நம் பேட்ஸ்மேன்களால் ஒரு சராசரியான ஸ்கோரைக் கூட எடுக்க முடிவதில்லை. அதேபோல் சேஸிங் செய்யும்போது, அவர்கள் போட்டிக்குத் தயாராக இருப்பது போலக்கூடத் தெரியவில்லை" என்று எழுதியுள்ளார்.
"பந்து கூடுதலாக பவுன்ஸ் ஆகும்போதோ அல்லது நகரும்போதோ, இந்திய பேட்ஸ்மேன்கள் தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பிளாட் பிட்ச்களில் மட்டுமே ரன் குவிக்கும் பேட்ஸ்மேன்கள் என்ற முத்திரையை அவர்கள் சுமக்க விரும்பவில்லை என்றால், அவர்கள் இதுவரை விளையாடியதை விட மிகச் சிறப்பாக விளையாட வேண்டும்."
"ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார். மிடில் ஓவர்களை அவர் கட்டுப்படுத்திய விதம் ஒரு மாஸ்டர்கிளாஸ். அவர் தொடர்ந்து ஸ்டிரைக்கை மாற்றி, சரியான வாய்ப்புகளைத் தேர்ந்தெடுத்து, திட்டமிட்டு ஆடுகிறார். மற்ற பேட்ஸ்மேன்கள் அவரிடமிருந்து இதைக் கற்றுக்கொள்ள வேண்டும்"என்றும் இர்பான் பதான் கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு