கரூர் கூட்ட நெரிசல்: முதலமைச்சர் விஜய் தனக்கு இருந்த பொறுப்பை புறக்கணிக்கிறாரா?

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, கரூரின் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய ஒரு பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தபோது, 'கரூர்' மாவட்டம் இந்தியா முழுவதும் பேசுபொருளானது.

அந்தத் துயர நிகழ்வு நடந்து ஒன்பது மாதங்கள் கடந்துள்ள நிலையில், இன்று (ஜூலை 10) மீண்டும் கரூர் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்த ஒன்பது மாதங்களில் முதல்முறையாக இன்று கரூர் சென்ற தவெக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய், ஒரு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசினார்.

பின்னர், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணைகளையும், ஒருவருக்கு பத்து லட்சம் ரூபாய் கருணைத் தொகையையும் முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

இந்த மொத்த நிகழ்வுமே பல விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரை விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் பேசியது என்ன?

முதலமைச்சர் விஜய், "என் வாழ்வில் எல்லாவற்றையும்விட அதிக வலியையும் காயத்தையும் ஏற்படுத்தியது கரூர் சம்பவம்தான்" எனத் தனது உரையின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் மாவட்ட வாரியாக பரப்புரை மேற்கொண்டு வந்தார். அப்படித்தான் 2025, செப்டம்பர் 27ஆம் தேதி சனிக்கிழமை நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் பரப்புரையை முடித்துவிட்டு இரவு கரூர் சென்றார். அப்போது பரப்புரை நடந்த வேலுசாமிபுரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதைக் குறிப்பிட்ட முதலமைச்சர் விஜய், "நாமக்கல்லில் இருந்து கரூர் வந்தபோது அங்கிருந்த காவல்துறை கூட்டம் அதிகமாக இருப்பதாக எங்களை எச்சரிக்காதது ஏன்? கரூரில் எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகமாக உள்ளது, நீங்கள் வரவேண்டாம் எனச் சொல்லியிருக்கலாம் அல்லவா?" எனக் கூறினார்.

மேலும், "ஏன் என்னை காவல்துறையே நெடுஞ்சாலை பகுதிக்கு வந்து கரூருக்குள் அழைத்துச் சென்றது. அன்றிருந்த கரூர் காவல்துறையின் நாடகத்தை நான் அப்போது நம்பிவிட்டேன்" என்றும் குறிப்பிட்டார்.

"இப்படி நடந்தால் அப்படிச் செய்யுங்கள், அப்படி நடந்தால் இப்படிச் செய்யுங்கள் எனச் சொல்லி காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்தது யார்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

"நம் எல்லோருக்கும் இத்தனை வலிகள், காயங்களைக் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் பதிலடி கொடுத்துவிட்டீர்கள். ஆனால், அது மட்டும் போதாது, அவர்கள் எழவே முடியாத அளவுக்கு நிரந்தரமான பதிலடியைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்" என்றும் முதலமைச்சர் விஜய் கூறினார்.

திமுக தரப்பில் எழுந்த எதிர்வினைகள்

முதலமைச்சரின் பேச்சுக்கு உடனடியாக திமுக தரப்பில் இருந்து எதிர்வினைகள் வந்தன.

"கரூர் சம்பவத்தின்போது மக்களோடு நின்றவர்கள் யார், மக்களுக்கு உதவியவர்கள் யார், மக்களைச் சந்திக்காமல் ஓடிப் போனவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்" என்று திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், "ஒரு முதலமைச்சர் இப்படி காவல்துறையைக் குற்றம் சாட்டுவது தவறு. அன்று விஜய் சரியான நேரத்திற்கு வந்திருந்தால் அந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கும். வெயிலில், உணவு மற்றும் தண்ணீரின்றி நாள் முழுக்க மக்கள் நின்றதால்தான் ஆங்காங்கே பலர் மயங்கி விழுந்தார்கள். அன்று மயங்கி விழுந்த 100 பேரில் 60 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். அதற்குக் காரணம் அன்றைய திமுக அரசுதான்" என்று கூறினார்.

குறிப்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, "திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானத்தில் ஓடியது யார் என்பதும் எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்" எனத் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு நடந்தவற்றை அடிப்படையாக வைத்தே இந்த விமர்சனங்கள் எழுந்தன.

கரூர் சம்பவத்திற்குப் பிறகு நடந்தது என்ன?

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த சில மணிநேரத்திற்குள் அப்போது கரூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த செந்தில்பாலாஜி, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போன்றோர் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தனர்.

அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அன்றிரவே கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார்.

தவெக தலைவர் விஜய் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்காமலே சென்றது சமூக ஊடகங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது. அன்று திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை சென்றார்.

அதோடு, இந்த நெரிசல் சம்பவமே ஒரு சதி என்று அப்போது தவெக-வினர் குற்றம்சாட்டினர். இந்த விவகாரத்தில் தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல்குமார் மற்றும் பல தவெக நிர்வாகிகள் எனப் பலர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. தவெக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால், "தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதன் பின்னணியில் மறைமுக ஒப்பந்தம் உள்ளதாகச் சொல்லலாமா? விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாமென அழுத்தம் கொடுத்தது யார்?" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அப்போது மாநில அரசை விமர்சித்திருந்தார்.

'கரூர் கூட்ட நெரிசலுக்கு விஜய் தாமதமாக வந்ததே காரணம்' என சட்டமன்றத்தில் அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். பின்னர் கரூர் நெரிசல் சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ விசாரணைக்காக அதன் டெல்லி அலுவலகத்திற்கு விஜய் வரவழைக்கப்பட்டார்.

இந்த ஒன்பது மாத காலங்களில், இன்றைய கரூர் கூட்டம் தவிர்த்து, இரண்டு முறை கரூர் சம்பவம் குறித்து விஜய் தெரிவித்த கருத்துகள் கவனம் பெற்றன.

செப்டம்பர் 30, 2025 அன்று கரூர் சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட விஜய், "மற்ற மாவட்டங்களில் பரப்புரையின்போது ஏற்படாத நிகழ்வு கரூரில் மட்டும் எப்படி நடந்தது?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் காணொளியில் அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பாக விஜய் பேசிய கருத்தும் பேசுபொருளானது.

அதன் பின்னர் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில், "கரூரில் உண்மையில் என்ன நடந்தது என்பது கரூர் மக்களிடம் கேட்டாலே மிகத் தெளிவாகத் தெரியும். ஆனால், சட்டப்பேரவையில் நான் தாமதமாக வந்ததாக என் மீது அபாண்டமாகப் பழி சுமத்துகிறீர்கள்" எனக் கூறினார்.

'பொறுப்பை புறக்கணிக்கிறாரா முதலமைச்சர்?'

"கரூர் சம்பவத்தில் தொடக்கத்தில் இருந்தே தன் மீதுள்ள தவறுகள் குறித்து முதலமைச்சர் விஜய் பேசுவதில்லை. தொடர்ச்சியாக திமுகவை குறை கூறுவது ஓர் அரசியல் உத்தி போலத் தெரிகிறது" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

"ஓர் அரசியல்வாதியாகவே அவர் இன்னும் பேசுகிறார். முதலமைச்சராக இந்த விஷயத்தை அவர் அணுகவில்லை. குறிப்பாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. அப்படியிருக்க இந்த விஷயத்தைப் பற்றி அவர் பேசியிருக்கக் கூடாது" என்கிறார் ப்ரியன்.

"அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சில நாட்களுக்கு முன் 'கரூரில் தீர்க்கப்பட வேண்டிய ஒரு கணக்கு உள்ளது' எனப் பேசியிருந்தார். அதற்கும் இன்று முதலமைச்சர் பேசியதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை" என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூத்த பத்திரிகையாளர் ப்ரியனின் கூற்றுப்படி, "இந்த வழக்கில் அவரே சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார் என்னும்போது இப்படி பேசியிருக்கத் தேவையில்லை. அவரது பிரசாரத்தில்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்னும்போது அதில் தனக்கு இருக்கும் பொறுப்பையும் ஒரு முதலமைச்சராகத் தனக்கு இருக்கும் பொறுப்பையும் உணராமலே அவர் பேசியுள்ளார்."

மேலும் பேசிய அவர், "நிரந்தரமாக பதிலடி கொடுக்க வேண்டும் எனக் கூறுவதன் மூலம், அடுத்து வரும் தேர்தல்களை மனதில் வைத்துதான் முதலமைச்சர் விஜய் பேசுகிறார் என்பது தெளிவாகப் புரிகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகதான் கரூர் சம்பவத்திற்குக் காரணம் என்கிற ரீதியிலான பிரசாரம் கை கொடுத்ததைப் போல, அது தனக்கு எப்போதும் கைகொடுக்கும் என்று முதலமைச்சர் தீர்க்கமாக நம்புவதாகத் தோன்றுகிறது" என்று கூறினார்.

அதேபோல முதலமைச்சர் விஜயின் பேச்சை விமர்சிக்கும் மூத்த பத்திரிக்கையாளர் சிகாமணி, "சொன்ன பொய்களையே மீண்டும் மீண்டும் சொல்லி உண்மையாக்குவதுதான் முதலமைச்சர் விஜயின் அரசியல் உத்தி. கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் காவலர்களுக்கு நன்றி என அன்று கூறியவர், இன்று காவல்துறையினர் நாடகம் ஆடினார்கள் எனக் கூறுகிறார். சிபிஐ விசாரணையை முதலமைச்சர் விஜய் கேலிக்கூத்தாக மாற்றுகிறார்" என்று தெரிவித்தார்.

தவெக தரப்பு கூறுவது என்ன?

ஆனால் இதை மறுத்துப் பேசும் தவெக-வின் தேசிய செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்ட், "தனது உரையில் நேரடியாக கரூர் சம்பவத்திற்கு இவர்கள்தான் காரணம் என்று யாருடைய பெயரையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டவில்லை" என்று கூறுகிறார்.

"அன்று தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து மட்டும்தான் விஜய் பேசினார். எனவே இது சிபிஐ விசாரணையை பாதிக்காது" என்கிறார் பெலிக்ஸ் ஜெரால்ட்.

கரூர் சம்பவத்தில் விஜய் தனக்கு இருக்கும் பொறுப்பை புறக்கணிப்பதாக எழும் விமர்சனங்கள் குறித்துக் கேள்வி எழுப்பியபோது, "விஜய் கொடுக்கப்பட்ட நேரத்தில் சரியாகவே வந்தார். இந்த அசம்பாவிதம் நிகழ அவர் காரணமில்லை என்பதால் அவருக்கு அதில் எந்தப் பொறுப்பும் இல்லை," என்று பதிலளித்தார்.

அத்துடன், "அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையிலேயே விஜய் தாமதமாக வந்ததாகக் குறிப்பிட்டார். ஆனால் விஜய் காவல்துறை அனுமதி அளித்த நேரத்திற்குள்தான் கரூர் சென்றார். எனவே சில விஷயங்களை நாங்கள் அழுத்தமாகத் தெரிவிக்க வேண்டியுள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய பெலிக்ஸ் ஜெரால்ட், "அவர் தேர்தல்களை மனதில் வைத்துக்கொண்டு இதையெல்லாம் பேசவில்லை. அவருக்கு மக்களிடம் சிறப்பான ஆதரவு உள்ளது. முதலமைச்சர் விஜய் கரூர் விஷயத்தில் அரசியல் செய்யவில்லை, உண்மையை வெளிப்படையாகச் சொல்கிறார், அவ்வளவுதான்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு