கரூர் நெரிசலுக்குப் பிறகு நீளும் மௌனம் - விஜய் இனி என்ன செய்யப் போகிறார்?

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானதற்குப் பிறகு, தமிழக அரசியல் அரங்கில் தவெகவின் குரல் பெரியளவில் ஒலிக்கவில்லை. கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்ததை தவிர்த்து, மற்ற விஷயங்களில் அந்தக் கட்சியில் வெளிப்படையான செயல்பாடுகள் ஏதும் இல்லை. அடுத்த கட்ட நிகழ்வுகள் குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

சட்டமன்றத் தேர்தலுக்கு சுமார் 6 மாதங்களே உள்ள நிலையில், தவெக என்ன செய்யப் போகிறது?

தவெகவில் என்ன நடக்கிறது?

கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி மாலையில் நடந்த கூட்டத்தில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில் அங்கு அவசர அவசரமாக பேசிவிட்டுப் புறப்பட்ட விஜய், விமானம் மூலம் திருச்சியில் இருந்து சென்னை வந்தடைந்தார். இந்தக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் 2 பதிவுகளை வெளியிட்டார். சில நாட்களுக்குப் பிறகு, விஜய் பேசி பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றும் வெளியானது. அதற்குப் பிறகு கட்சி மௌனமானது.

கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அக்டோபர் 1ஆம் தேதியன்று ஒரு பதிவு வெளியானது. அதில் "நம் கழகத் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்" எனக் கூறப்பட்டிருந்தது.

சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் வீடியோ அழைப்பு (Video call) மூலம் விஜய் பேசினார். இப்போது வழக்கு விசாரணை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டிருக்கும் நிலையில், அந்தக் குடும்பங்களுக்கு அறிவித்த இழப்பீட்டுத் தொகையை வங்கி மூலம் தவெக வழங்கியிருக்கிறது.

கரூர் சென்று கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க விரும்புவதாகக் கோரி கடிதம் ஒன்று அளிக்கப்பட்டது. அந்த திசையில் வேறு எந்த முன்னேற்றமும் தென்படவில்லை.

கடந்த ஒரு மாத காலத்தில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த மற்ற நிகழ்வுகள் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அறிக்கைகளோ, கருத்துகளோ வெளியாகவில்லை. வடகிழக்குப் பருவமழையை மாநில அரசு எதிர்கொள்ளும் விதம் குறித்து பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் மௌனமாகவே இருந்துவருகிறது.

அதேபோல, அரசியல் ரீதியான நிகழ்வுகளுக்கும் விஜய் தரப்பிடமிருந்து எந்த பதிலும் இல்லை. நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற அ.தி.மு.க பிரசாரக் கூட்டத்தில் த.வெ.க கொடியை சிலர் ஏந்தியபடி நின்றனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'இதோ பாருங்கள்...கொடி பறக்கிறது... பிள்ளையார் சுழியைப் போட்டுவிட்டார்கள்." எனக் கூறினார்.

எடப்பாடி கே. பழனிசாமியின் இந்தப் பேச்சு, கிட்டத்தட்ட கூட்டணிக்கு விருப்பம் தெரிவித்ததைப் போலவும் அழைப்பு விடுப்பதைப் போலவும் தான் இருந்தது. ஆனாலும், எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து த.வெ.க தரப்பில் இருந்து விளக்கம் எதுவும் வெளிவரவில்லை.

விஜய் தரப்பு என்ன செய்யப் போகிறது?

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளார் அய்யநாதன், "இவ்வளவு மோசமான சம்பவம் ஏற்பட்ட பிறகும் மருத்துவமனைக்கு வராத விஜய், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடமும் பேசாமல் சென்றது ரசிகர்கள் அல்லாத பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தால் இந்த விவகாரம் குறித்த விசாரணை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கரூர் நிகழ்வை வைத்து, பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் தவெகவுக்கு ஆதரவு கொடுப்பதைப் போல கூட்டணிக்காக அழுத்தம் கொடுக்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள்." என்றார்.

விஜய் கரூருக்குச் செல்லாமல் இருப்பதற்கு சில காரணங்கள் இருக்கலாம் என்கிறார் அய்யநாதன். "விஜய் கரூருக்குச் சென்றால், அந்தத் தருணத்தில் யாராவது குறுக்கிட்டு கேள்வியெழுப்புவார்களோ, அது அவரது இமேஜைப் பாதிக்குமோ என அஞ்சுகிறார்கள். மேலும், விஜய் மீண்டும் இதுபோல கூட்டங்களை நடத்தி மக்களை நெருங்க விரும்பினாலும், காவல்துறை கூடுதல் கெடுபிடிகளை விதிக்கும். தாங்கள் சொல்வதைப் போலவே கூட்டங்களை நடத்த வேண்டும் என்பார்கள். இல்லாவிட்டால், நீதிமன்றத்தில் கரூர் சம்பவத்தைச் சுட்டிக்காட்டுவார்கள். ஆகவே, வரும் காலங்களில் இதெல்லாம் பெரும் நெருக்கடியாகவே அந்தக் கட்சிக்கு மாறும்" என்கிறார் அவர்.

இதற்கிடையில், வெள்ளிக்கிழமையன்று ஊடகங்களில் சில செய்திகள் வலம்வர ஆரம்பித்தன. அதாவது, கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்கும் திட்டத்தில் மாற்றம் இருக்கலாம் என்றும் சென்னையிலோ, வேறு இடத்திலோ மொத்தமாக அந்தக் குடும்பத்தினரை விஜய் சந்திக்கலாம் என்றும் அந்த செய்திகள் கூறின.

அதேபோல, ரோட் ஷோவுக்குப் பதிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டங்களை நடத்த த.வெ.க. திட்டமிட்டிருப்பதாகவும் நாளிதழ் செய்திகள் தெரிவித்தன. இதுபோன்ற தகவல்கள், ஊடகச் செய்திகள் எதையும் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ த.வெ.க-வில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாரும் முன்வரவில்லை.

தவெக நிர்வாகிகள் கூறுவது என்ன?

கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ராஜ்மோகன், "கட்சியைப் பொறுத்தவரை, செயல்பாடில்லாமல் இருப்பதாகக் கூறுவது தவறு. சமூக வலைதளங்களிலும் மற்ற ஊடகங்களிலும் யாரும் பேசுவதில்லை. ஆனால், கட்சியில் உள்ள ஒவ்வொரு தலைவருமே கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலையில்தான் ஈடுபட்டிருக்கிறோம்" என்று மட்டும் குறிப்பிட்டார். வேறு எந்த விஷயம் குறித்தும் பேச ராஜ்மோகன் மறுத்துவிட்டார்.

த.வெ.க. வட்டாரத்தைப் பொறுத்தவரை இந்த அமைதிக்கு சில காரணங்களைக் குறிப்பிடுகின்றனர். "கரூர் விவகாரத்தைப் பொறுத்தவரை விசாரணை துவங்கியிருப்பதால் அதைப் பற்றி இப்போது பேசுவது சரியாக இருக்காது என்பதால் யாரும் அது குறித்துப் பேச வேண்டாம் எனக் கூறப்பட்டிருக்கிறது. தவிர, அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் வேறு விஷயங்களுக்காக ஊடகங்களிடம் பேசினால், ஏன் அது குறித்துப் பேசவில்லை என்ற கேள்வி வரும். ஆனால், அடுத்த வாரத்திலிருந்து நிலைமை மாறலாம்" என்று அவர்கள் கூறுகிறார்கள்.

விஜய் கரூருக்குச் செல்லாமல் இருப்பது ஏன்?

ஆனால், த.வெ.கவின் இந்த நீடித்த மௌனம் அக்கட்சிக்கு பின்னடைவாக அமையக்கூடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

"மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின் மூலம் பெரிய அளவில் கூட்டங்களைத் திரட்டி அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு கரூர் சம்பவம் ஒரு வேகத் தடையைப் போல ஆகிவிட்டது. இந்த நிகழ்வு நடுநிலையாளர்களிடம் பெரும் ஏமாற்றத்தையும் விலகலையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவருடைய ரசிகர்கள் அவர் வசம்தான் இருக்கிறார்கள் என்றாலும் மற்றவர்கள் அதிருப்தியடைந்திருக்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.கவுக்கு மாற்றாக விஜய் வந்திருக்கிறார் என கருதியவர்கள் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள்." என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

தொடர்ந்து பேசிய அவர், "விஜய் ஊடகங்களிடம் பேசுவதேயில்லை. அவர் என்ன நினைக்கிறார் என்பதே யாருக்கும் தெரியாது. தவிர, எந்த மக்கள் பிரச்னைக்கும் அவர் குரல் கொடுப்பதில்லை. இதெல்லாம் அவருக்கு பின்னடைவாக இருக்கும். இப்போது நினைத்தாலும்கூட விட்ட இடத்திலிருந்து அவரால் தொடர முடியும். ஆனால், அவர் எந்த அளவுக்கு முனைப்போடு இருக்கிறார் எனத் தெரியவில்லை. இனி மீண்டும் கூட்டங்களை நடத்த ஆரம்பிக்கும் போது என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு