You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா - இரான் ஒப்பந்தம் எழுப்பும் தவிர்க்க இயலாத கேள்வி
- எழுதியவர், ஜெரெமி போவன்
- பதவி, சர்வதேச ஆசிரியர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் பிப்ரவரி 28-ஆம் தேதி இரானைத் தாக்குவது என்று எடுக்கப்பட்ட தவறான முடிவின் அரசியல், ராணுவ மற்றும் பொருளாதார விளைவுகளைக் குறிப்பிடுகிறது.
இதனால் ஏற்பட்ட மனித உயிரிழப்புகள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. இரான் மற்றும் லெபனானில் ஆயிரக்கணக்கான பேர், குறிப்பாக பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவும் ஓரளவுக்கு இஸ்ரேலும் ஒரு வியூக ரீதியான தோல்வியைச் சந்தித்துள்ளன. உலகின் வலுவான சக்தியான அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் வலுவான சக்தியான இஸ்ரேல் இணைந்து தன்னை முடக்க வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்கிற நோக்கில் மேற்கொண்ட கூட்டு ராணுவ நடவடிக்கை என்கிற கொடுங்கனவை இரானில் உள்ள ஆட்சி எதிர்கொண்டது. இரான் அதிலிருந்து பிழைக்க மட்டும் செய்யவில்லை, மாறாக கூடுதல் வலிமை பெற்றுள்ளது.
ஹோர்மூஸ் நீரிணையை முடக்கி, அதனுடன் உலக பொருளாதாரத்தின் முக்கிய கூறுகள், உலக எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தின் ஐந்தில் ஒரு பங்கு ஆகியவற்றை முடக்குவது என்கிற உத்தியை இரான் கடைபிடித்தது.
இந்த உத்தி டிரம்ப் பல சலுகைகளை வழங்க நிர்பந்தித்தது. இந்த நகர்வு இஸ்ரேல் அரசு மற்றும் அமெரிக்காவின் இரான் பார்வையாளர்களை ஆத்திரமூட்டியதோடு எச்சரிக்கை கொள்ளவும் செய்துள்ளது.
லெபனானிலும் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என புரிந்துணர்வு ஒப்பந்தம் கூறுகிறது. ஆனால் அது சாத்தியமில்லை என இஸ்ரேல் தெரிவிக்கிறது. லெபனானில் தான் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என இஸ்ரேல் விரும்புகிறது. இந்த விவகாரம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே மேலும் ஆழமான விரிசலை ஏற்படுத்துவதோடு அமெரிக்கா உடன் எந்த விதமான ஒப்பந்தத்தையும் மறுக்கும் இரானிய கடும்போக்குவாதிகளுக்கு சாதகமாக அமையும் திறன் கொண்டது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஹோர்மூஸ் நீரிணையைத் திறப்பதற்கு மாற்றாக அமெரிக்கா இரானிய துறைமுகங்களின் முற்றுகையை நீக்க ஒப்புக்கொண்டது. அதனுடன் பொருளாதாரத் தடைகளை விலக்கி எண்ணெய் ஏற்றுமதி மூலம் இரான் பில்லியன்கணக்கான டாலர் சம்பாதிக்கவும் அனுமதிப்பதோடு வெளிநாடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள இரானின் சொத்துகளை விடுவித்து மேலும் பல பில்லியன்களை இரான் பெறும் திரும்பப்பெறும் நடைமுறையை தொடங்கி வைக்க இருக்கிறது.
இவை அனைத்தும் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான கடுமையான பேச்சுவார்த்தைக்கு முன்பு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடங்கிய பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு முன்பான நிலைக்குச் செல்ல இந்த விலை கொடுக்க வேண்டியுள்ளது. அந்த நாளில் ஹோர்மூஸ் நீரிணை திறந்திருந்தது. அமெரிக்க மற்றும் இரானிய பேச்சுவார்த்தைக் குழுவினர் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் பேச்சுவார்த்தைக் குழுவினர் மீண்டும் தங்களின் பணியைத் தொடங்குவதோடு கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து செல்லவும் முடியும்.
ஜோ பைடன் அரசில் வெளியுறவு செயலாளராக இருந்த ஆண்டனி பிளிங்கன் தனது எக்ஸ் பக்கத்தில் "இந்தப் போர்நிறுத்தத்தின் ஒரே 'சாதனை' ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மட்டுமே. போர் தொடங்குவதற்கு முன்பாக இது திறந்தே இருந்தது. அவ்வாறு செய்வதற்கு நாம் இரானுக்குப் பணம் செலுத்தவிருப்பதாகவும் தெரிகிறது."
இந்தப் போர் எதற்கானது என்கிற கேள்வி தவிர்க்க முடியாதது மட்டுமல்லாது எளிதில் விலகாத ஒன்றாக உள்ளது. இதுநாள் வரையிலான டிரம்பின் மோசமான வெளியுறவு கொள்கை தவறாக இது உள்ளது.
இது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நீண்ட அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருவதையும் குறிக்கலாம். அக்டோபர் மாதம் அவர் தேர்தலை எதிர்கொள்ள உள்ளார், இஸ்ரேல் வரலாற்றில் மிகவும் மோசமான பாதுகாப்பு தோல்விக்கு இஸ்ரேல் வாக்காளர்கள் பதிலளிக்க உள்ளனர்.
2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ஊடுருவ ஹமாஸ் திட்டமிட்டதை இஸ்ரேலின் ராணுவ மற்றும் உளவு அமைப்புகள் கணிக்கத் தவறிவிட்டன. நெதன்யாகுவின் கடுமையான ராணுவ கொள்கைகளும் மற்றும் ராஜிய நடவடிக்கைகளை நிராகரித்ததும், இஸ்ரேலின் 'பாதுகாப்பு நாயகன்' என்கிற அவரது நற்பெயரை மீட்டெடுக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாகவே வடிவமைக்கப்பட்டது.
ஹோர்மூஸ் நீரிணையை முடுவதால் ஏற்படும் சக்தி வாய்ந்த விளைவு பற்றி இரான் எப்போதும் அறிந்தே இருந்தது. அமெரிக்க ராணுவம், அதன் ராஜதந்திரிகள் மற்றும் உளவாளிகளும் இதனை நன்கு அறிந்திருந்தனர்.
ஆனால் எச்சரிக்கையுணர்வு கொண்ட இரானின் முன்னாள் அதிஉயர் தலைவர் அலி காமனெயி நீரிணையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்தார்.
ஆனால் போரின் தொடக்கத்தில் அவரையும் அவரது நெருங்கிய ஆலோசகர்களையும் இஸ்ரேல் கொன்ற பிறகு தாங்கள் ஓர் இருத்தல் சார்ந்த நெருக்கடியில் இருப்பதை உணர்ந்த அவரின் வாரிசுகள் நீரிணையை மூடத் தயங்கவில்லை.
உலகளாவிய பொருளாதாரத்தின் மீதான இறுக்கமான பிடியைக் கட்டுப்படுத்தும் விதத்தை அவர்கள் கண்டறிந்தனர். இது மிகவும் பயனுள்ள ஆயுதமானது. மத்திய கிழக்கில் பல தசாப்தங்களாக பில்லியன்கணக்கில் செலவு செய்து இரான் உருவாக்கிய கூட்டாளிகள் மற்றும் பினாமிகளின் வலைப்பின்னலை விடவும் மலிவானதாக இருந்தது.
2024-இன் இறுதியில் சிரியாவில் ஆசாத் ஆட்சி கவிழ்ந்த பிறகு எஞ்சியிருந்த இரானின் எதிர்ப்பு கூட்டணி பிழைத்திருக்கிறது. ஆனால் அவை இஸ்ரேலால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் எதிர்க்க முடியுமா என்பது முக்கியப் புள்ளியாக உள்ளது.
இரான் தனது அணுசக்தி திட்டத்திற்குப் பரவலாக செலவு செய்திருந்தாலும் அவை ஆயுதம் தயாரிக்கும் நோக்கில் கட்டமைப்படவில்லை எனத் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இது இரானுக்கு ஒரு வாய்ப்பையும் அச்சுறுத்தலையும் வழங்கியது. ஆனால் அது ஒரு போரையும் தூண்டியது, அதில் ஆட்சிப் பிழைத்திருந்தாலும் இரானுக்குக் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இதற்கு மாறாக நீரிணையை மூடுவது என்கிற இரானின் முடிவு எளிதான ஒன்றாக இருந்தது, அதற்கு விரைவான மற்றும் பலமான தாக்கமும் இருந்தது. அது அரபு எண்ணெய் வள நாடுகள் மற்றும் உலகின் பெரும்பகுதிக்கும் வலியை ஏற்படுத்தியது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் விமானப் படைகளின் வலிமை சில தொடர் வெற்றிகளைக் கொடுத்தது. ஆனால் ஒரு ராஜிய ரீதியான தோல்வியைத் தவிர்க்க அவை போதுமானதாக இல்லை. ஏனெனில் ஆட்சி மாற்றம் என்கிற அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உத்தி என்பது சில சோம்பேறித்தனமான மற்றும் தவறான கணக்கீடுகளால் தீர்மானிக்கப்பட்டது.
அதிஉயர் தலைவரைக் கொல்வது ஆட்சிக் கவிழ்ப்புக்கு வழிவகுக்கும் என அவர்கள் அனுமானித்தனர். ஆனால் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தங்களை அழிப்பதற்கான முயற்சிகளை எதிர்க்க ஏதுவாக இஸ்லாமிய குடியரசு கட்டமைக்கப்பட்டுள்ளது.
இது ஊழல் குற்றச்சாட்டு கொண்ட லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுவேலாவைப் போல இல்லை. அதன் தலைவர் அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்ட உடன் அந்நாடு சமநிலை இழந்தது.
இரானிய ஆட்சியும் ஊழல் குற்றச்சாட்டுகள் மட்டும் அதிக ஒடுக்குமுறைகளையும் கொண்டது. ஜனவரி மாதம் இரான் தெருக்களில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாயினர். ஆனால் இரானிய ஆட்சி என்பது சித்தாந்தம், மத நம்பிக்கை மற்றும் 1980களில் சதாம் உசேனின் இராக் உடன் ஏற்பட்ட மோசமான போரினால் உருவான தேசிய பாதுகாப்பு, தியாகம் மற்றும் பிழைத்திருக்கும் உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலானது.
இரானுடன் போருக்குச் சென்றபோது அங்கு ஆட்சி கவிழ்ந்துவிடும் என டிரம்ப் கூறியிருந்தார். இரானிய மக்கள் தங்களுடைய நாட்டை மீண்டும் கைப்பற்றும் அரிதான வாய்ப்புக்கு தயாராகுமாறும் கூறியிருந்தார் டிரம்ப். அதற்குப் பிறகு இரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்றும் டிரம்ப் கோரியிருந்தார்.
இரானுடன் போருக்குச் செல்ல டிரம்புக்கு முந்தைய அமெரிக்க நிர்வாகத்தைச் சம்மதிக்க வைக்க முயற்சித்து தொடர்ந்து தோல்வியடைந்த நெதன்யாகு, தான் நடக்கும் என நம்பியதைப் பற்றி குறிப்பிட விவிலிய வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.
"இந்தப் படைகளின் கூட்டணி, நான் 40 ஆண்டுகளாகச் செய்ய வேண்டும் என நினைத்ததை நாங்கள் செய்ய அனுமதிக்கிறது. அது 'பயங்கரவாத ஆட்சியை அடியோடு வீழ்த்துவது' என்பதே."
இருவருமே அதைச் சாத்தியப்படுத்தவில்லை.
புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது இறுதி ஓப்பந்தம் அல்ல. இருதரப்புக்கும் இடையே நிலவும் மிகப்பெரிய பிரச்னையான இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒப்பந்தம். ஆனால் இதன் தொடக்கத்திலேயே இரானுக்கான சலுகைகள் இடம்பெற்றுள்ளன. பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இருந்தால் பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான 60 நாள் பேச்சுவார்த்தையின் வெற்றியைப் பொருத்து அது அமையும். இந்தப் பிரச்னைகள் சிக்கலானவை என்பதால் காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதில் நிறைய விஷயங்கள் தவறாகவும் செல்லலாம். அமெரிக்கா, இரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள கடும்போக்குவாதிகள் இந்த ஒப்பந்தம் கூடாது என விரும்புகின்றனர்.
ஆனால் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றதோடு ஓர் உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்திய போரைவிட இந்த ஒப்பந்தம் சிறந்தது.
அமெரிக்கா மற்றும் இரான் திருப்தியடையும் வகையிலான அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, இரு தரப்பும் தங்களின் உத்தரவாதங்களைக் கடைபிடித்தால் மத்திய கிழக்கில் மாற்றங்கள் நடக்கலாம். ஆனால் அது நீண்ட மற்றும் கடினமான பேச்சுவார்த்தையின் இறுதியில் இருக்கும் மிகப்பெரிய கேள்விக் குறியாக உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு