You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'புகைப்படம் எடுக்க கெஞ்சினார்': டிரம்ப் - மெலோனி நெருங்கிய நட்பில் விரிசல் விழுந்த பின்னணி
ஜி7 உச்சிமாநாட்டில் தன்னுடன் புகைப்படம் எடுக்க மெலோனி 'கெஞ்சினார்' என்ற டிரம்பின் கூற்று 'கற்பனையானது' என இத்தாலியப் பிரதமர் மெலோனி தெரிவித்துள்ளார்.
இத்தாலியத் தொலைக்காட்சி ஒன்றில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட கருத்துகளால் இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி அதிர்ச்சியடைந்துள்ளார். இந்தக் கருத்துகள் இரு தலைவர்களுக்கும் இடையே பகிரங்கமான மோதலை உருவாக்கியுள்ளன.
டிரம்பின் கருத்துகள் முற்றிலும் "கற்பனையானவை" என்று மெலோனி கூறியுள்ளார். அடுத்த வாரத் தொடக்கத்தில் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி ரத்து செய்துள்ளார்.
இரானுடன் போரிட டிரம்ப் எடுத்த முடிவுக்குப் பிந்தைய மாதங்களில், இருவருக்கும் இடையிலான உறவு எந்த அளவுக்குச் சிதைந்துள்ளது என்பதை இந்த பகிரங்க மோதல் உணர்த்துகிறது.
டிரம்ப் கூறியது என்ன?
இந்த வாரம் கிழக்கு பிரான்சில் உள்ள எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் (Evian-les-Bains) நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் டிரம்ப் - மெலோனி இருவரும் நெருக்கமாக உரையாடுவதைக் காண முடிந்தது. அப்போது தங்கள் உறவில் எந்த மாற்றமும் இல்லை என்றும், "எந்தவிதமான மனக்கசப்பும் இல்லை" என்றும் மெலோனி செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
இருப்பினும், அதன்பிறகு இத்தாலியின் எல்ஏ7 (La7) தொலைக்காட்சிக்கு அளித்த தொலைபேசி நேர்காணலில் டிரம்ப், "அவர் என்னுடன் புகைப்படம் எடுக்க கெஞ்சினார்; அதைப் பார்த்து எனக்கு அவர் மீது பரிதாபம் ஏற்பட்டது." என்று கூறினார்.
எவியன் நகரில் அவர்கள் இருவரும் ஒரு சிறிய சோபாவில் அமர்ந்து தீவிரமாக உரையாடிய போது பலமுறை அவர்கள் கேமராவில் பதிவாகியிருந்தனர்; அப்போது மெலோனி புன்னகைத்தபடியே பேசிக் கொண்டிருந்தார்.
"நான் அவரிடம் பேசியதில் அவர் மகிழ்ச்சியடைந்திருக்கலாம்," என்று டிரம்ப் கூறினார். எல்ஏ7 (La7) தொலைக்காட்சி டிரம்பின் ஆங்கிலத்திலான அசல் வார்த்தைகளை வெளியிடாமல், இத்தாலிய மொழியில் மொழிபெயர்த்து ஒலிபரப்பியது.
மெலோனி பதில்
இன்ஸ்டாகிராமில் உள்ள தனது 70 லட்சம் பின்தொடர்பவர்களிடம் ஆற்றிய சுருக்கமான உரையில் மெலோனி தான் "உண்மையிலேயே அதிர்ச்சியடைந்ததாகக்" கூறி, தனது முழுமையான அவநம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
"நட்பு நாடுகளிடம் அமெரிக்க அதிபர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை," என்று கூறிய அவர், இதுபோன்று நடப்பது இது முதல் முறையல்ல என்றும் குறிப்பிட்டார்.
"மேற்கத்திய நாடுகளின் மற்றும் அமெரிக்காவின் எதிரிகளிடம் அவர் அதேபோன்ற உறுதியான நிலைப்பாட்டைக் காட்டாதது வருந்தத்தக்கது என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும். அந்த எதிரிகளின் தலைவர்களிடமோ அவர் மிகவும் இணக்கமாக நடந்துகொள்வது போல் தெரிகிறது."
"ஆனால் அவர் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது: நானும் சரி, இத்தாலியும் சரி, ஒருபோதும் யாரிடமும் கெஞ்சுவதில்லை." என்றார் மெலோனி.
இதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு பிபிசி (BBC) வெள்ளை மாளிகையை அணுகியுள்ளது.
டிரம்ப் - மெலோனி நெருங்கிய நட்பில் விரிசல் வந்த பின்னணி
நெருக்கமான அரசியல் உறவாகத் தொடங்கிய ஒன்று அடுத்தடுத்த நிகழ்வுகளால் பலவீனமடைந்த நிலையில், டிரம்பின் இந்தக் கருத்துகள் மெலோனியை வெளிப்படையான அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. 2022-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மெலோனி, ஜனவரி 2025-ல் நடைபெறவிருந்த டிரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட ஒரே ஐரோப்பியத் தலைவர் ஆவார். அமெரிக்க அதிபருடன் நல்லுறவை ஏற்படுத்தக்கூடிய ஒருவராக அவர் தனது ஐரோப்பிய ஒன்றிய சகாக்களால் பரவலாகக் கருதப்பட்டார்.
ஆனால், இரானுடனான அமெரிக்கப் போருக்கு மெலோனி தனது எதிர்ப்பை வெளிப்படையாகத் தெரிவித்து வருகிறார். இதற்குப் பதிலடியாக, ஏப்ரல் மாதம் இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா செரா'வுக்கு அளித்த தொலைபேசி நேர்காணலில் டிரம்ப், "அவருக்குத் தைரியம் இருப்பதாக நான் நினைத்தேன், ஆனால் நான் தவறாக நினைத்துவிட்டேன்" என்று கூறினார்.
போப் பதினான்காம் லியோ "குற்ற விஷயத்தில் பலவீனமானவர் மற்றும் வெளியுறவுக் கொள்கையில் மோசமானவர்" என்று டிரம்ப் குற்றம் சாட்டியபோது, அவரது கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று மெலோனி கூறினார்.
இத்தாலிய தலைவர்கள் கண்டனம்
டிரம்பின் சமீபத்திய நேர்காணலுக்குப் பதிலளிக்கும் விதமாக, இத்தாலி அதிபர் செர்ஜியோ மட்டரெல்லா உடனடியாக மெலோனியைத் தொலைபேசியில் அழைத்து தனது ஆதரவை தெரிவித்தார். இத்தாலியின் அரசியல் களத்தின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் மெலோனிக்கு ஆதரவாகக் குரல் எழுந்துள்ளது.
"இத்தாலியப் பிரதமரிடம் இவ்வளவு ஆணவமான தொனியில் பேச யாருக்கும் உரிமை இல்லை," என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இடதுசாரி செனட்டர் பிலிப்போ சென்சி கூறினார்.
இத்தாலியை இவ்வாறு நடத்துவது சரியல்ல என்று 5 நட்சத்திர இயக்கத்தின் (Five Star Movement) தலைவர் கியூசெப்பே கோன்டே கூறினார். வாஷிங்டனிடம் சலுகைகளைப் பெறுவது ஒருபோதும் தேசிய கண்ணியம் மற்றும் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மெலோனியின் 'இத்தாலிய சகோதரர்கள்' (Brothers of Italy)கட்சியைச் சேர்ந்த செனட் குழுத் தலைவர் லூசியோ மலான், டிரம்பின் வார்த்தைகள், அவர் பல்வேறு ஐரோப்பியத் தலைவர்களை நோக்கித் தெரிவித்திருந்த அவமதிப்புமிக்க கருத்துகளின் ஒரு பகுதியாகும் என்றும், அவை எல்லாவற்றிற்கும் மேலாக டிரம்பின் சொந்த பிம்பத்திற்கும் அதிகாரத்திற்கும் சேதம் விளைவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஜி7 மாநாட்டின் காணொளி, டிரம்ப் விவரித்ததற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலை உண்மையில் காட்டியதாக மலா கூறினார். வாஷிங்டனுக்கு 'இல்லை' என்று சொல்லும் மெலோனியின் முந்தைய செயல்பாடே அமெரிக்க அதிபரை உண்மையிலேயே எரிச்சலூட்டியிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள லீக் கட்சியைச் சேர்ந்த மத்தேயோ சல்வினி, "மெலோனியைத் தாக்குபவர், நம் அனைவரையும் தாக்குகிறார்" என்று சுருக்கமாகக் கூறினார்.
மெலோனி - டிரம்ப் மோதல் எதன் வெளிப்பாடு?
மெலோனிக்கும் டிரம்பிற்கும் இடையிலான இந்த முரண்பாடு ஒரு சாதாரண வாக்குவாதத்தை விட மேலானது. இது ஒரு போக்கைக் குறிக்கிறது.
ஒரு காலத்தில் ஐரோப்பிய நட்பு நாடுகள் அதிபர் டிரம்பிற்கு அதிக இடமளித்த நிலையில், இப்போது அவர்கள் அவரை எதிர்க்க தயாராக உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பிரிட்டன் மற்றும் நேச நாடுகளின் படைகளை விமர்சித்ததற்காக அவரை பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கண்டித்துள்ளார்.
மிக சமீபத்தில், மெலோனி உட்பட மற்றவர்களும், அமெரிக்க குண்டுவீச்சு விமானங்களை தங்கள் விமானத் தளங்களைப் பயன்படுத்த அனுமதிக்க மறுத்ததற்காகவும், இரானுக்கு எதிரான அவரது போருக்காகவும் டிரம்பை வெளிப்படையாக விமர்சித்துள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா கிரீன்லாந்தை அச்சுறுத்தியதிலிருந்து, ஐரோப்பியத் தலைவர்கள் அதிக உறுதியைக் காட்டியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அட்லாண்டிக்கிற்கு அப்பால், நம்பகத்தன்மை குறைந்து வரும் ஒரு கூட்டாளியைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயமின்றி, ஐரோப்பிய நாடுகள் தாங்களாகவே பலவற்றைச் செய்ய முற்படுவதால், ஐரோப்பா ஒரு மூலோபாய ரீதியாக தன்னாட்சிப் பாதையை வகுப்பது குறித்த பேச்சு மீண்டும் தொடங்கியுள்ளது.
நிச்சயமாக, ஆரம்பத்தில் டிரம்ப் குழுவை அரசியல் சக பயணிகளாகக் கருதிய வலதுசாரி ஐரோப்பியக் கட்சிகள், இப்போது அமெரிக்க சகாக்களிடமிருந்து தங்களை விலக்கிக் கொள்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு