வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு நுழைய உதவியவர்கள் யார்?

    • எழுதியவர், தினேஷ் குமார்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் நேற்று துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது. இந்த வெற்றியின் மூலம், சூப்பர் 4 சுற்றில் இருந்து முதல் அணியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

சூப்பர் 4 சுற்றில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்று இறுதிச்சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்தும் நம்பிக்கையுடன் களமிறங்கின.

டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஜாக்கர் அலி, இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தார். பயிற்சியின் போது காயமடைந்ததால், கேப்டன் லிட்டன் தாஸ் இந்த ஆட்டத்தில் களமிறங்கவில்லை. வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் உள்பட நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய வேகப்பந்து வீச்சு படையுடன் களம் கண்டது.

டாஸ் வென்ற வங்கதேசம்

தொடர் வெற்றியில் இருக்கும் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி, கடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கிய அதே அணியுடன் களமிறங்கியது.

பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிஸ்க் எடுக்க விரும்பாத இந்திய அணி, தனது முதன்மை லெவனுடன் விளையாடியது.

இந்த ஆட்டத்தை இந்தியா வெல்லும் பட்சத்தில், இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும் என்பதால், இலங்கை ரசிகர்களும் நேற்றைய ஆட்டத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்தனர்.

இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமான துபை மைதானத்தில், பெரிய ஸ்கோரை பதிவுசெய்ய வேண்டிய கட்டாயத்துடன் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கில், அபிஷேக் சர்மா களமிறங்கினர்.

மீண்டும் அசத்திய கில்–அபிஷேக்

தன்ஷிம் ஹசன் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட அபிஷேக் சர்மா வழக்கத்துக்கு மாறாக, ஒற்றை ரன் ஓடினார்.

அட்டகாசமான லைன் அண்ட் லெங்க்தில் தன்ஷிம் வீசிய அந்த ஓவரில், இந்திய அணி 3 ரன் மட்டுமே எடுத்தது.

முதல் சில ஓவர்களில், வேகப்பந்து வீச்சுக்கு மட்டுமின்றி சுழற்பந்து வீச்சுக்கும் பிட்ச் கைகொடுப்பதை பார்க்க முடிந்தது. தன்ஷிமின் இரண்டாவது ஓவரில் அபிஷேக் சர்மா கொடுத்த கடினமான கேட்ச் வாய்ப்பை, விக்கெட் கீப்பர் தவறவிட்டார்.

பொறுத்தது போதும் என நினைத்த கில் – அபிஷேக் ஜோடி நசும் அஹமதுவின் இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர்கள் என 21 ரன்களை குவித்தது.

கடந்த இரு ஆட்டங்களாக வங்கதேச வெற்றியில் முக்கியப் பங்கு வகித்த முஷ்ஃபிகுர் ரஹிம் ஓவரில், 20 ஓவர் ஆசிய கோப்பையில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அபிஷேக் சர்மா, இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டார்.

சைபுதீன் வீசிய ஓவரில் மேலும் பவுண்டரிகளும் சிக்சர்களும் கிடைக்க, பவர்பிளே முடிவில் 72 ரன்களை குவித்தது.

மூன்றாவது விக்கெட்டுக்கு துபே

இந்த ஆசிய கோப்பையில் இந்தியாவின் சிறந்த பவர்பிளே ஸ்கோர் இதுதான்.

பவர்பிளே முடிந்த மறு ஓவரிலேயே, சிக்சர் அடிக்க முயன்று லெக் ஸ்பின் ஆல்ரவுண்டர் ரிசாத் ஹுசைன் பந்தில் கில் ஆட்டமிழந்தார்.

மூன்றாவது விக்கெட்டுக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் களமிறங்கிய ஷிவம் துபே, ரிசாத் ஹுசைனின் அடுத்த ஓவரில், பெரிய ஷாட் ஆடப் பார்த்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

இடக்கை பேட்ஸ்மேனுக்கு எதிராக உள்ளே பந்தை திருப்பும் ரிசாத், நசும் ஆகியோரை அடித்தாட களமிறக்கப்பட்ட துபே, ரிசாதின் வெளியே செல்லும் கூக்ளிக்கு ஆட்டமிழந்தது எதிர்பாராதது.

அபிஷேக் அதிரடி அரைசதம்

25 பந்தில் டி20 கிரிக்கெட்டில் தனது 4–வது அரைசதத்தை பதிவுசெய்த அபிஷேக் சர்மாவுக்கு, நடப்பு ஆசிய கோப்பையில், இது இரண்டாவது அரைசதம் ஆகும்.

விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்த போதும் அபிஷேக் சர்மாவின் பேட்டில் இருந்து ஷாட்கள் பறப்பது நிற்கவில்லை. ரிசாத், சைபுதீன் ஓவர்களில் சிக்சர்கள் விளாசி, விக்கெட் இழப்பால் அணியின் ரன் ரேட் சரியாமல் பார்த்துக்கொண்டார்.

அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த அபிஷேக், நான்–ஸ்ட்ரைக்கர் திசையில் இருந்து ஓடிவந்து, கடைசி நேரத்தில் திருப்பி அனுப்பப்பட்டதால், ரன் அவுட்டானர்.

அதே ஓவரின் கடைசி பந்தில், லெக் சைடில் தனக்கு பிடித்தமான ஷாட் ஆடும் முயற்சியில், விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து சூர்யகுமார் நடையைக் கட்டினார். தொடரின் முக்கியமான கட்டத்தில் தொடர்ச்சியாக இரு ஆட்டங்களில் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங் வரிசை மாற்றப்பட்டதால், ஆறாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய திலக் வர்மா, பாண்ட்யாவுடன் கைகோர்த்தார்.

ஆனால், தன்ஷிம் புத்திசாலித்தனமாக வீசிய குறைவேகப் பந்தை மிட் விக்கெட் திசையில் அடித்து, பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

நம்பிக்கை கொடுத்த ஹர்திக்

நேற்றைய போட்டியில் அபிஷேக் சர்மாவிற்குப் பிறகு இரண்டாவது அதிகபட்சமாக 38 ரன்களை சேர்த்தார் ஹர்திக் பாண்ட்யா.

இந்திய வீரர்கள் சுப்மன் கில், சிவம் துபே, சூர்ய குமார் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்களை பறிகொடுத்து வந்த நிலையில் 4 பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர் அடித்து சற்று நம்பிக்கை கொடுத்தார் ஹர்திக். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 131.03ஆக இருந்தது.

பின் சைஃபுதின் வீசிய பந்தை அடிக்க முயன்றபோது தன்ஸித் ஹசன் கேட்ச் பிடித்து அவரை அவுட்டாக்கினார்.

கடைசிவரை களமிறக்கப்படாத சஞ்சு சாம்சன்

விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்ந்த பிறகும், வலது–இடது காம்பினேசனை கருத்தில் கொண்டு, சாம்சனுக்கு பதிலாக அக்சர் படேல் களமிறக்கப்பட்டார்.

பழைய பந்தில், இந்த பிட்ச்சில் ரன் சேர்ப்பது கடினமாக மாறியதால் புதிதாக களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் சிரமப்பட்டனர்.

வங்கதேச பந்துவீச்சாளர்களும் மிகவும் கறாராக பந்துவீசினர். 18–வது ஓவரில் இரு பவுண்டரிகள் விளாசிய பாண்ட்யாவால், கடைசி இரு ஓவர்களில் பெரிதாக ரன் குவிக்க முடியவில்லை. கடைசி பந்தில் அவர் ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் இந்தியா, 6 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன் எடுத்தது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3 சதங்கள் குவித்துள்ள சாம்சன் கடைசிவரை களமிறக்கப்படாதது விசித்திரமாக இருந்தது.

மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய பும்ரா

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வங்கதேசம். கடந்த ஆட்டத்தில் அதிரடியாக ரன் குவித்த சைஃப் ஹசன் நேற்றும் தடாலடியாக ஆரம்பித்தார். முதல் ஓவரில் ஹார்திக் பாண்ட்யா, 4 ரன்கள் மட்டுமே கொடுக்க, பும்ரா தான் வீசிய இரண்டாவது பந்திலேயே தன்சித் ஹசன் விக்கெட்டை கைப்பற்றினார்.

மூன்றாவது விக்கெட்டுக்கு பர்வேஸ் ஹொசைன் எமோன் களமிறங்கினார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரன்களை வாரிக்கொடுத்த பும்ரா, நேற்று தான் யார் என்பதை காட்டினார்.

அவருடைய டெஸ்ட் மேட்ச் லைன் அண்ட் லெங்க்தை எதிர்கொள்ள முடியாமல் வங்கதேச பேட்டர்கள் திணறினர்.

தொடர்ந்து இரு பவுண்டரிகள் அடித்து வருண் சக்கரவர்த்தியை எமோன் வரவேற்க, அதே ஓவரில் மேலும் ஒரு பவுண்டரி அடித்து சைஃப் மேலும் நெருக்கடி கொடுத்தார்.

கடந்த ஆட்டங்கள் போலவே, மூன்றாவது ஓவரையும் பும்ரா பவர்பிளேவில் வீசிய நிலையில், அந்த ஓவரிலும் எமோன் சிக்சர் விளாசினார். பவர்பிளே முடிவில் வங்கதேச அணி விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்தது.

சுழலில் சிக்கிய வங்கதேசம்

நன்றாக விளையாடிக் கொண்டிருந்த எமோனை(21) தனது முதல் ஓவரிலேயே வீழ்த்தினார் குல்தீப் யாதவ்.

வழக்கம்போல அவருடைய பந்து வெளியே செல்கிறதா உள்ளே நுழைகிறதா என்று புரியாமல் பேட்டர்கள் குழம்பித் தவித்தனர். மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சை கொண்டு வங்கதேச பேட்டிங்கை இறுக்கிக் கட்டியது இந்தியா.

ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷமீம் ஹுசைன், வருண் சக்கரவர்த்தி பந்தில் ஸ்டம்புகளை பறிகொடுக்க, இக்கட்டான கட்டத்தில் கேப்டன் அலி களமிறங்கினர்.

ஒருபக்கம் விக்கெட்கள் வீழ்ந்தாலும், தொடக்க பேட்டர் சைஃப் தன் அதிரடியை விட்டுவிடவில்லை. தொடர்ச்சியாக 10,11,12 ஓவர்களில் சிக்சர்களை அடித்து, சோர்ந்து போயிருந்த வங்கதேச ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டினார்.

ஆட்ட நாயகன் அபிஷேக்

4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கேப்டன் அலியும் சூர்யகுமாரால் ரன் அவுட் செய்யப்பட, 7–வது விக்கெட்டுக்கு சைபுதீன் களமிறங்கினார்.

அக்சர் படேலின் கடைசி ஓவரில் லாங்–ஆன் திசையில் இரு சிக்சர்கள் விளாசிய சைஃப், அரைசதத்தை கடந்தார்.

கடைசி 5 ஓவர்களில் வங்கதேச அணிக்கு 61 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சைபுதீன் விக்கெட்டை வருண் கைப்பற்ற, அதே ஓவரில் இருமுறை கேட்ச் வாய்ப்புகளில் இருந்து இன்–ஃபார்ம் பேட்டர் சைஃப் தப்பினார்.

அடுத்தடுத்த பந்துகளில் ரிசாத் (2), தன்ஷிம்(0) விக்கெட்களை குல்தீப் கைப்பற்ற, வங்கதேசத்துக்கு கடைசி 3 ஓவரில் 54 ரன்கள் தேவைப்பட்டது. 4 முறை கேட்ச்சில் இருந்து தப்பிய சைஃப்(69), கடைசியில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் திலக் வர்மா பந்துவீச்சில் முஷ்ஃபிகுர் ஆட்டமிழக்க, வங்கதேச அணி 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. 75 ரன்கள் குவித்த அபிஷேக் ஆட்டநாயகனாக தேர்வானார்.

மீண்டும் இந்தியா Vs பாகிஸ்தான் வாய்ப்புள்ளதா?

இந்த வெற்றியின் மூலம், ஆசிய கோப்பை இறுதிச்சுற்றுக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

இலங்கை அணி, தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இன்று (செப்டம்பர் 25) பாகிஸ்தான், வங்கதேசம் இடையே நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, இறுதி ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.

பாகிஸ்தான் அணி வெல்லும் பட்சத்தில், இந்த ஆசிய கோப்பையில் மூன்றாவது முறையாக இரு அணிகளும் மோதும் சூழல் ஏற்படும். இந்திய அணி, சூப்பர் 4 சுற்றில் தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (செப்டம்பர் 26) இலங்கையை எதிர்கொள்கிறது. இலங்கை வெளியேறிவிட்டதால் சம்பிரதாயத்துக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில், இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிச்சுற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) துபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு