'பல ஆண்டுகளாக அடக்கம் செய்யாமல் அழுகிய நிலையில் உடல்கள்' - சாம்பலை மாற்றிக் கொடுத்த ஈமச்சடங்கு உரிமையாளர்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

எச்சரிக்கை : இந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடம் தரலாம்.

இறந்து பிறந்த தனது ஆண் குழந்தையான சன்னியின் இறுதிச் சடங்கு முடிந்த பிறகு, அவனது சாம்பல் அடங்கிய கலசம், அவனது உடலை இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்படும் இடத்துக்கு எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட அதே மரப்பெட்டியில் வைத்து தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதை ஜாஸ்மின் பெவர்லியால் புரிந்துகொள்ள முடியவில்லை.

"நிச்சயமாக குழந்தை அந்தப் பெட்டியோடு தான் தகன மேடைக்குள் வைக்கப்பட்டிருக்கும், குழந்தையை வெளியே எடுத்திருக்க மாட்டார்கள், பிறகு ஏன் அது அதே பெட்டியாக இருக்கிறது என்று நான் யோசித்தேன்" என பிபிசியின் 'நியூஸ்நைட்' நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார்.

"என் கணவர் ஒருவேளை இதுவும் அதே போன்ற வேறொரு பெட்டியாக இருக்கலாம் என்று கூறினார். ஆனால் அந்தப் பெட்டி செய்யப்பட்டிருந்த மரத்தில் இருந்த ஒரு வெட்டுக்காயத்தை நான் கவனித்தேன், அது அதே பெட்டிதான் என்பதையும் நான் அறிந்து கொண்டேன்," என்கிறார் ஜாஸ்மின் பெவர்லி.

ஆனால் ஜாஸ்மின் தனது சந்தேகங்களை மனதில் புதைத்துவிட்டு, குழந்தையின் நினைவாகவும், தனது பிரிவின் துயரத்திலிருந்து மீண்டு வரவும் நாள்தோறும் சன்னியின் சாம்பல் கலசத்தைத் துடைத்து தூய்மைப்படுத்தி வந்தார்.

ஆனால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு, ஜாஸ்மின் தனது ஐந்தாவது குழந்தையைச் சுமக்கும் ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்தார்.

அப்போது, காவல்துறையினர் ஜாஸ்மினைத் தொடர்பு கொண்டு, அந்தச் சாம்பல் கலசத்தில் இருப்பது சன்னியின் சாம்பலாக இருக்க முடியாது என்றும், அது அடையாளம் தெரியாத ஏதோவொரு அந்நியருக்குச் சொந்தமானது என்றும் தெரிவித்தனர்.

ஜாஸ்மின் அந்தச் சாம்பல் கலசத்தைக் காவல்துறையிடம் ஒப்படைத்தார். பின்னர் அதிகாரிகள், தகனம் செய்யப்படாத சன்னியின் உடலை அந்த இறுதிச்சடங்கு இல்லத்தில் கண்டெடுத்தனர்.

வடக்கு பிரிட்டனில் உள்ள ஹல் நகரில் இயங்கி வந்த 'லெகசி இண்டிபெண்டன்ட் ஃபியூனரல் டைரக்டர்ஸ்' எனும் தனது நிறுவனம் தொடர்பாக, 48 வயதான இறுதிச்சடங்குகளை மேற்கொள்பவரான ராபர்ட் புஷ், 67 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.

துக்கத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு தவறான சாம்பலைக் கொடுத்தது மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களின் அழுகும் உடல்களை இறுதிச்சடங்குகள் முடிந்த பிறகும் நீண்ட காலம் வைத்திருந்தது மட்டுமல்லாமல், தொண்டு நிறுவனங்களிடமிருந்து திருடியதுடன், முன்கூட்டியே இறுதிச்சடங்குகளைத் திட்டமிடுபவர்களுக்கு போலியான திட்டங்களையும் விற்பனை செய்துள்ளார்.

தனது மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்காக, அவர் சவக்கிடங்கில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளைக் கூட அணைத்துவிடுவார் என்று புஷ்ஷின் முன்னாள் ஊழியர் ஒருவர் பிபிசி நியூஸிடம் தெரிவித்தார்.

லெகசி நிறுவனத்தில் பணிபுரிந்த இரு குழந்தைகளின் தந்தை என்றும், தன்னை "எல்லா வேலைகளையும் செய்யும் ஒரு சாதாரண பணியாளர்" என்றும் குறிப்பிட்ட பேட்ரிக் மூர் என்ற தற்காலிக ஊழியர் தான், புஷ்ஷின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தார்.

2024-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், புஷ் மோட்டார் சைக்கிள் பந்தயத்தைப் பார்ப்பதற்காக லாஸ் ஏஞ்சலிஸுக்குச் சென்றார்.

அப்போது, "சுமார் நான்கு நாட்களுக்குப் பொறுப்புகளைப் பார்த்துக் கொள்ளுமாறு" மூரிடம் விட்டுச் சென்றதாக, 66 வயதான மூர் பிபிசி நியூஸிடம் தெரிவித்தார்.

"யாருடைய உடலையும் லெகசி மையத்துக்கு எடுத்து வரக்கூடாது" என்று மூருக்குக் கடுமையான உத்தரவுகள் வழங்கப்பட்டிருந்தன.

"யாராவது வந்தால், கதவைத் திறக்க வேண்டாம். எதற்காகவும் கதவைத் திறக்காதீர்கள் என்று அவர் கூறினார்," என மூர் தெரிவித்தார்.

ஆனால், உள்ளூர் முதியோர் இல்லத்திலிருந்து ஒரு உடலை எடுத்து வர மற்றொரு இறுதிச்சடங்கு சேவையிடமிருந்து வாங்கிய ஸ்ட்ரெச்சரைப் மூர் பயன்படுத்திய பிறகு, அந்த உடலைத் திரும்பப் பெற வந்த இரண்டு நபர்கள் லெகசியின் வளாகத்துக்குள் பார்த்து, சந்தேகமடைந்து அங்கிருந்த உடல்களின் எண்ணிக்கை குறித்து அவரிடம் கேட்டனர்.

அங்கு 29 உடல்கள் வரை எண்ணியதாகக் கூறிய மூர், அந்த இடத்தை ஒரு "பயங்கரமான காட்சிக்கு" ஒப்பிட்டு, "உங்களுக்கு இதில் பாதி கூட தெரியாது, பல ஆண்டுகளாக உடல்கள் அங்கே இருக்கின்றன" என்றும் கூறினார்.

இதனால் "அதிர்ச்சியடைந்த" அந்த ஈமச்சடங்குப் பணியாளர்கள், வழியில் வந்த ஒரு காவல் வாகனத்தை மறித்து விபரத்தைக் கூறியதாக, ஹல் கிரவுன் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

அந்த இறுதிச்சடங்கு இல்லத்தில் இருந்து 35 உடல்களையும், குறைந்தபட்சம் 163 பேருக்குச் சொந்தமான அரை டன் மனித சாம்பலையும் காவல்துறையினர் மீட்டனர்.

பெரும்பாலான உடல்கள் "மூடப்படாமலும், பல்வேறு நிலைகளில் அழுகிய நிலையிலும்" இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த இறுதிச்சடங்கு இல்லம் "அழுக்கடைந்து, பராமரிப்பின்றி" காணப்பட்டது.

சாம்பல், இறந்தவர்களின் தனிப்பட்ட பொருட்கள், மலர்கள், பொம்மைகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் என அனைத்தும் "எல்லா இடங்களிலும் சிதறிக் கிடந்தன".

இந்தக் குழப்பங்களுக்கு இடையே, அதிகாரிகள் ஒரு பழுப்பு நிறக் காகிதப் பையைக் கண்டெடுத்தனர். அதில் இருந்த சிறிய பொருளை அவர்கள் முதலில் ஒரு பறவைக் குஞ்சு என்று நினைத்தனர்.

பின்னர், அதன் இடுப்பில் சுற்றப்பட்டிருந்த இரண்டு மருத்துவமனை கைப்பட்டைகளைக் கண்டனர். அதில் "ஜாஸ்மின் பெவர்லியின் குழந்தை, பிறப்பு: 13/05/22 காலை 05:04" என்று எழுதப்பட்டிருந்தது.

ஜாஸ்மின் உட்பட மேலும் மூன்று பெண்களுக்கு, அவர்கள் அளித்த சாம்பல் அவர்களுக்குப் பிறக்காத குழந்தைகளுடையது தான் என்று கூறி ஏமாற்றியதை புஷ் ஒப்புக்கொண்டார்.

ஆனால், அந்த வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரே இறந்தே பிறந்த குழந்தை சன்னி மட்டுமே.

லெகசி நிறுவனத்தின் தலைமையகத்தில் உள்ள சிறிய பிரார்த்தனைக் கூடத்தில் நடந்த சன்னியின் இறுதிச்சடங்கை இன்னும் ஒரு "அழகான" நினைவாக ஜாஸ்மின் நினைவில் வைத்திருக்கிறார். மேலும், சாம்பல் கலசத்தை தினமும் துடைக்கும் அவரது வழக்கத்தில் அவர் ஆறுதல் அடைந்திருந்தார்.

"அந்தக் கலசத்தில் யார் இருந்திருந்தாலும், அவர்கள் என் சொந்தக் குழந்தையைப் போலவே அன்புடன் பராமரிக்கப்பட்டார்கள்," என்று அவர் கூறுகிறார்.

ஆனால் சன்னியின் உடல் பல ஆண்டுகளாக இறுதிச்சடங்கு இல்லத்திலேயே அடக்கம் செய்யப்படாமல் கைவிடப்பட்டிருந்தது என்ற உண்மை வெளிவந்தது.

அது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாஸ்மினை ஆழ்ந்த மன அழுத்தத்துக்குள் தள்ளியது. தற்கொலை எண்ணங்கள் கூட தனக்கு வந்ததாக அவர் கூறுகிறார்.

"அது மிகவும் மன உளைச்சலைத் தந்தது" என்று கூறும் அவர், "நான் தூக்கத்தை இழந்தேன், மிகவும் பலவீனமாக உணர்ந்தேன்" என்கிறார்.

இந்தக் குழந்தையையும் இழந்துவிடுவேனோ என்ற எண்ணங்கள் எனக்குள் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் மற்றவர்களோ, 'அப்படியெல்லாம் முட்டாள்தனமாக யோசிக்காதே, உனக்கு ஒன்றும் ஆகாது, நீ இப்போது பிரசவத்துக்கு மிகவும் நெருங்கிவிட்டாய்' என்று கூறினார்கள்.

"ஆனால் சன்னிக்கு நேர்ந்தது, தன் வயிற்றில் இருக்கும் இந்த குழந்தைக்கும் நடந்துவிடுமோ என்ற பயம் என் மனதை வெகுவாகப் பாதித்தது. அது என் கர்ப்பத்தின் கடைசி இரண்டு மாதங்களை முற்றிலும் பாழாக்கியது," என்கிறார் ஜாஸ்மின்.

இருப்பினும், இறுதியாகக் குடும்பத்தினரால் சன்னிக்கு இரண்டாவது முறையாக இறுதிச்சடங்கு செய்ய முடிந்தது. அவர் இப்போது அவரது கொள்ளுப் பாட்டன்-பாட்டியின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

"அவன் இறுதியாக வீட்டுக்கு வந்துவிட்டான் என்பது மகிழ்ச்சியளிக்கிறது," என்று கூறும் ஜாஸ்மின், லெகசி நிறுவனத்தின் இந்தச் சதிச் செயல் சன்னியின் நினைவை சீரழிக்கத் தான் அனுமதிக்கவில்லை என்றும் கூறுகிறார்.

"அவனைப் பற்றிப் பேசுவதன் மூலமும், மற்ற தாயார்களுக்கு உதவி செய்வான் என்ற நம்பிக்கையின் மூலமும் அவனது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற என்னால் முடிந்தது," என்றும் ஜாஸ்மின் கூறுகிறார்.

ஜூலை 31 வெள்ளிக்கிழமையன்று முடிவடையவுள்ள புஷ்ஷின் ஐந்து நாள் தண்டனை விசாரணையில் வாசிக்கப்பட்ட முதல் பாதிக்கப்பட்டவர் வாக்குமூலம், கரேன் கிங் என்பவரைப் பற்றியதாகும்.

இவரது தந்தையின் உடல் அவர் இறந்து 10 மாதங்களுக்குப் பிறகே மீட்கப்பட்டது. புஷ் அவரிடம் கொடுத்த சாம்பலைக் கொண்டு, அவரும் அவரது தாயாரும் அணிந்துகொள்ளும் வகையில் செயின்களைச் செய்திருந்தனர்.

"தெரியாத ஒரு நபரின் சாம்பலை எனக்கு மிக அருகில் வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதை நினைத்து இப்போது நான் வஞ்சிக்கப்பட்டதாக உணர்கிறேன்" என்று அவர் எழுதியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மற்றொரு நபர், பிபிசியிடம் பேசுகையில், இப்போது அந்நியருடையது என்று தெரியவந்துள்ள அந்தச் சாம்பலை மையுடன் கலந்து, அவரது நினைவாக பச்சை குத்திக் கொண்டதாகத் தெரிவித்தார்.

புஷ்ஷால் ஏமாற்றப்பட்ட மற்றொரு துயருற்ற தாயால், தனது குழந்தையின் உடலின் எஞ்சிய பாகங்களை இறுதிவரை கண்டுபிடிக்கவே முடியாமல் போனது.

கருச்சிதைவுக்குப் பிறகு, லூசி நெஸ் என்பவரின் பிறக்காத குழந்தையின் இறுதிச்சடங்கை மே 10, 2021 அன்று லெகசி நிறுவனம் ஏற்பாடு செய்தது.

மறுநாள், புஷ் அவரைத் தொடர்புகொண்டு சாம்பலை வாங்கிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார், லூசியும் அதை வாங்கி வந்தார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஹம்பர்சைடு காவல்துறை லெகசி நிறுவனத்தின் மீது விசாரணை நடத்துவதாக அறிவித்தபோது, பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட உதவி எண்களை லூசி தொடர்புகொண்டார்.

பின்னர் அவரைத் தொடர்புகொண்ட காவல்துறையினர், அவரது வீட்டில் இருக்கும் சாம்பல் அவருடைய குழந்தையின் சாம்பலாக இருக்க முடியாது என்று தெரிவித்தனர்.

தகன மயத்தின் பதிவுகளை அதிகாரிகள் பரிசோதித்தபோது, லூசியிடம் சாம்பல் கலசத்தைக் கொடுத்ததற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது மே 13 அன்றே புஷ் குழந்தையின் பாகங்களை வாங்கிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது.

"அவர் என்னிடம் கொடுத்த சாம்பல் ஒரு விலங்கினுடையது என்று சொல்வதற்காகக் காவல்துறையினர் என்னை நேரில் வந்து சந்தித்தார்கள்," என்று அவர் கூறுகிறார்.

"அது என் குழந்தையின் ஸ்கேன் புகைப்படத்துக்குப் பக்கத்தில் என் அலமாரியில் இருந்ததுடன், மிகுந்த அன்போடு பராமரிக்கப்பட்டது. இது உண்மையென நம்பவே முடியவில்லை," என்கிறார் லூசி.

பாதுகாக்கும் கடமையில் இருக்கும் ஒருவர் என் குடும்பத்துக்கு இதை எப்படிச் செய்ய முடியும்?

"என் குழந்தைக்கு என்ன நேர்ந்தது என்பது எனக்கு இனி ஒருபோதும் தெரியப்போவதில்லை. அவர் (புஷ்) பலருக்கு இதைச் செய்திருப்பதால், ஒருவேளை இது அவருக்கே தெரிந்திருக்காது."

"ஆனால் என் குழந்தையின் சாம்பல், நான் இந்தச் சாம்பலை நேசித்ததைப் போலவே அன்பான ஒருவரிடம் இருக்கும் என்று நம்புகிறேன்" என்கிறார் லூசி.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு