திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் ரூ.2,203 கோடி குறைய காரணம் என்ன?

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இந்தியாவின் ஆயத்த ஆடை (RMG) ஏற்றுமதியில் 35 சதவீதம் பங்களித்து வரும் திருப்பூரிலிருந்து முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் ரூ.2203 கோடிக்கு ஏற்றுமதி குறைந்துள்ளது.

அமெரிக்காவின் சுங்கவரி தொடர்பான பிரச்னை, மேற்காசியாவில் நிலவும் நெருக்கடி, கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவை இதற்குக் காரணங்களென்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கூறுகிறது.

ஆனால், இதனை இந்திய ரூபாயின் மதிப்பை வைத்துக் கணக்கிடுவது சரியாக இருக்காது என்கிறது இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பு.

எதிர்காலத்தில் ஏற்றுமதிக்கான வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், மற்ற பிரச்னைகளை விட, திருப்பூரில் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னை பெரிதாகி வருவதாகக் கூறுகிறார் இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன்.

இதை ஒப்புக்கொள்ளும் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள், அதற்காகவே தொழிலாளர்களுக்கான விடுதிகளை அமைக்குமாறு அரசிடம் கோரிக்கை வைத்திருப்பதாகத் தெரிவித்தனர். இதற்கான கட்டமைப்பை தொழில் நிறுவனங்களே உருவாக்கிக் கொள்ளும்பட்சத்தில் அதற்குரிய மானியம் மற்றும் வரிச்சலுகை வேண்டுமென்று அவர்கள் கோருகின்றனர்.

இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், திருப்பூரின் அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படுமென்று கூறியுள்ளார்.

'ஆயத்தஆடை ஏற்றுமதியில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம்'

மத்திய அரசின் வர்த்தகத்துறை இணையத்திலுள்ள புள்ளி விவரங்களின்படி, ஆயத்த ஆடை ((RMG) ஏற்றுமதியில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் ஆயத்த ஆடையில் தமிழகத்தின் பங்களிப்பு சராசரியாக 33 முதல் 34 சதவீதமாகவுள்ளது. இதில் திருப்பூரின் பங்களிப்பு 75 முதல் 78 சதவீதம் என்று இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

கடந்த நிதியாண்டில் (2025–2026) ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 5.29 பில்லியன் டாலர் (33–34 சதவீதம்) ஆக இருந்தது.

தமிழ்நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் திருப்பூர் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்து வருவதாகக் கூறியுள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இருப்பினும் கடந்த ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டை விட 4.91 சதவீதம் (ரூ.2203 கோடி) அளவுக்கு ஏற்றுமதி குறைந்திருப்பதாகத் கூறியுள்ளது. இந்த அமைப்பு பகிர்ந்துள்ள விவரங்களின் படி, கடந்த 2024–2025 ஆம் ஆண்டில் திருப்பூரின் பின்னலாடை துறையின் ஏற்றுமதி மதிப்பு, ரூ.44,747 கோடியாக இருந்தது. அதுவே கடந்த நிதியாண்டில் (2025–2026) ரூ.42,544 கோடியாகப் பதிவாகியுள்ளது.

இதற்கான காரணங்களை பிபிசியிடம் பகிர்ந்த திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தலைவர் கே.எம்.சுப்ரமணியன், ''அமெரிக்காவில் நிலவும் சுங்கவரி தொடர்பான பிரச்னைகள் மற்றும் மேற்காசிய நெருக்கடியால் உலகளாவிய வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளே இந்த சரிவுக்கு முக்கியக் காரணம்.'' என்று தெரிவித்தார்.

இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், ''பல்வேறு சவால்களுக்கு இடையிலும் ரூ.42,500 கோடிக்கும் அதிகமான ஏற்றுமதி செய்திருப்பது, திருப்பூர் ஜவுளித் தொழில்துறையின் வலிமையையும், எந்தச் சூழலிலும் மீண்டெழும் திறனையும் வெளிப்படுத்துகிறது. வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்களை (FTA) சிறப்பாகப் பயன்படுத்துதல், தற்போது அதிகரித்து வரும் ஏற்றுமதி ஆர்டர்கள், செயற்கை இழை (MMF) ஆடைகளுக்கான தேவை அதிகரிப்பு சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மீதான கவனம் ஆகியவை திருப்பூரின் வளர்ச்சிக்குச் சாதகமாகவுள்ளது.'' என்றார்.

'ரூபாயின் மதிப்பை வைத்து ஏற்றுமதியைக் கணக்கிடுவது சரியாக இருக்காது'

திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி கடந்த ஆண்டில் சரிவைச் சந்தித்திருப்பது உண்மை என்றாலும், ரூபாய் மதிப்பின் அடிப்படையில் இதைக் கணக்கிடுவது சரியாக இருக்காது என்கிறார் இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன். ஒரே அளவிலான ஏற்றுமதிக்கும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் மாற்றத்துக்கேற்ப தொகை மாறுமென்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் ஏற்றுமதிப் பங்களிப்பு 33 முதல் 34 சதவீதம் என்ற அளவிலேயே இருப்பதை மத்திய வர்த்தகத்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் திருப்பூரின் பங்களிப்பு 75 லிருந்து 78 சதவீதமாகவுள்ளது. ஆனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, இந்த 10 ஆண்டுகளில் பெருமளவில் மாறியிருப்பதும் தெரிகிறது.

உதாரணமாக கடந்த 2021–2022 ஆம் ஆண்டில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.76 ஆக இருந்துள்ளது. இப்போது 90 ரூபாயைக் கடந்துள்ளது. கடந்த 2021–2022 நிதியாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயத்த ஆடைக்கு அப்போதைய மதிப்பு ரூ.40 ஆயிரம் கோடியாக இருந்திருந்தால், இப்போது அதன் மதிப்பு ரூ.49 ஆயிரம் கோடியாக இருக்கும் என்பதால் ரூபாயின் மதிப்பை வைத்து ஏற்றுமதியைக் கணக்கிடுவது சரியாக இருக்காது என்பது இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் முன் வைக்கும் வாதமாகவுள்ளது.

பிபிசியிடம் பேசிய திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் திருக்குமரன், ''கடந்த 2025 ஆகஸ்ட்டிலிருந்து 2026 பிப்ரவரி வரையிலுமாக ஆறேழு மாதங்கள் அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக பின்னலாடை ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின் மேற்காசிய நாடுகளிடையே மோதல் துவங்கிவிட்டது. அது, பல்வேறு நாடுகளிலும் எதிரொலித்து, அங்குள்ள மக்களின் வாங்கும் திறனைக் குறைத்தது.'' என்றார்.

'வரியில்லா ஒப்பந்தங்களால் வர்த்தக வாய்ப்பு அதிகரிக்கும்'

பிபிசியிடம் பேசிய இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன், ''பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகளுடனான வரியில்லா ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துவிட்டால், ஆண்டுக்கு 10 சதவீதம் அளவுக்கு இந்திய ஆடைத்துறை வளர்ச்சியடையும் என்ற கணிப்பு உள்ளது. அந்த வாய்ப்பை நாம் கைப்பற்றுவதற்கு நமக்கு முதலில் பெரும் தடையாக இருப்பது தொழிலாளர் பற்றாக்குறைதான்.'' என்றார் பிரபு தாமோதரன்.

இதுபற்றி மேலும் விளக்கிய அவர், ''தமிழகத்தில் ஓராண்டில் சராசரியாக 30-லிருந்து 40 சதவீதம் அளவுக்கு தொழிலாளர் வெளியேற்றம் (attrition) நடக்கிறது. ஒரு நிறுவனத்தில் 400 பேர் வெளியே சென்றால் புதிதாக 400 பேர் வருகின்றனர். புதியவர்கள் பணிக்கு வரும்போது உற்பத்தித் திறன் பாதிக்கப்படுகிறது. புதிய தொழிலாளருக்கு பயிற்சி கொடுப்பதற்கு செலவு அதிகமாகிறது.'' என்றார்.

தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு காணவேண்டியது அவசரத் தேவையாக இருப்பதை பிபிசியிடம் பேசிய பல்வேறு தொழில் அமைப்பினரும் சுட்டிக்காட்டினர். உள் மாநிலத் தொழிலாளர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டதால் புலம்பெயர் தொழிலாளர்களையே பெருமளவில் நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் அதிகரித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

வழக்கமாக பிப்ரவரி மாதத்திலிருந்து தொழிலாளர் பற்றாக்குறை அதிகமாகும் என்று கூறும் தொழில் அமைப்பினர், இந்த ஆண்டில் மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்ததால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டதும் இந்த பற்றாக்குறை அதிகமாகக் காரணமென்கின்றனர்.

திருப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்களை நிரந்தரமாக வைத்திருப்பதற்கு, அவர்களுக்குத் தேவையான தரமான குடியிருப்பு வசதிகளைச் செய்து தரவேண்டிய அவசியம் இருபபதாகச் சொல்கிறார் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (AEPC) பொது மேலாளர் ஈஸ்வரமூர்த்தி. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஏஇபிசி சார்பில் அதன் தலைவர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள், தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்துப் பேசியதையும் அவர் குறிப்பிட்டார். அவர்களிடம் தரப்பட்ட மனுக்களையும் பிபிசியிடம் பகிர்ந்தார்.

கடந்த ஜூன் 6 ஆம் தேதி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ் மற்றும் கமலி ஆகியோருக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டது. அப்போது திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் தரப்பட்ட மனுவில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தங்குமிடங்களை ஏற்படுத்தித்தர வேண்டுமென்பதே முதல் கோரிக்கையாக இருந்தது.

திருப்பூரில் புதிய சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க வேண்டும், பின்னலாடை வாரியம் அமைக்க வேண்டும், ஜவுளித்துறைக்கான சோலார் மின்சார நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும், ஜவுளித்துறை சார்ந்த கட்டமைப்புகள், தொழிலாளர்களுக்கான போக்குவரத்து வசதிகளுக்கு வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அதில் இடம் பெற்றிருந்தன.

நிகழ்ச்சியில் பேசிய ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் ஏ.சக்திவேல், ''தமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்து, திருப்பூர் ஆயத்த ஆடைத்துறை மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக்கான கோரிக்கைகளை விளக்கினோம். அவரும் எல்லாவற்றையும் நிதானமாகக் கேட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.'' என்றார்.

விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கும் வரியில்லா ஒப்பந்தங்களால் அடுத்த 10 ஆண்டுகள் திருப்பூரின் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைத்துறைக்கு மிகப்பெரிய வளர்ச்சி இருக்கும் என்று கூறிய சக்திவேல், அதற்கு திருப்பூரில் தொழிலாளர் தங்குமிடங்களைக் கட்டுவதற்கு 50 சதவீத மானியம் மற்றும் மீதித்தொகைக்கு குறைந்த வட்டிக்கு கடன் வழங்க அரசு முன் வரவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

'பெரிதாக உருவெடுத்து வரும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னை'

இதே கோரிக்கையை தமிழக அரசிடம் வலியுறுத்தும் இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன், ''தொழிலாளர்களைத் தக்க வைக்க வேண்டுமெனில் வசதியுள்ள குடியிருப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டியது அவசியமாகவுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு அரசு இத்தகைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதேபோன்று ஆயத்த ஆடைத்துறைக்கும் தங்குமிட வசதிகளை உருவாக்கினால் மட்டுமே தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்களைத் தக்க வைக்க முடியும்.'' என்றார்.

திருப்பூர் தொழில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றில் சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதுடன் மேலும் சில கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளதாகக் கூறியுள்ளார் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம்.சுப்ரமணியம். இன்னும் அதிகமான ஒத்துழைப்பு கிடைக்கும்பட்சத்தில், 2030 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதியை எட்டும் திறன் திருப்பூருக்கு உள்ளது என்றார் அவர்.

திருப்பூரின் வளர்ச்சி ஏற்றுமதியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், ஏராளமான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும், ஜவுளி மற்றும் ஆடைத்துறைகளில் கூடுதல் வணிக வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும் என்றும் சுப்ரமணியன் தெரிவித்தார்.

தொழிலாளர் பற்றாக்குறை பற்றி பிபிசியிடம் விளக்கிய திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் திருக்குமரன், ''இப்போதும் பல நிறுவனங்களில் 15–20 சதவீத அளவுக்கு தொழிலாளர் பற்றாக்குறை இருப்பது உண்மைதான். அதற்காகவே தொழிலாளர்களுக்கான விடுதி வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைக்கிறோம். இதற்கு அரசுகள் மானியம் வழங்கினால் அவற்றை அமைப்பதற்கு தொழில் நிறுவனங்கள் தயாராகவுள்ளன.'' என்றார்.

''500 தொழிலாளர் தங்குவதற்கு விடுதிகளைக் கட்ட ரூ.20 கோடி செலவாகும். அதிலிருந்து எந்த வருவாயும் கிடைக்காது. இலவசமாகத்தான் வழங்க வேண்டியிருக்கும். அப்படியிருக்கும் போது, அதற்குரிய வரிச்சலுகை, மானியம் போன்றவற்றைத் தர வேண்டும். வணிக மின் கட்டணம், வணிகக் கட்டடத்துக்கான சொத்து வரி வசூலிக்காமல் இருந்தாலே இதைச் செய்யமுடியும்.'' என்றார் அவர்.

தொழிலாளர்களுக்கான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்துவதுடன், உற்பத்தியை அதிகரிப்பதற்கு தொழில் நிறுவனங்களை நவீனமயப்படுத்துவது, தானியங்கி, ஏஐ போன்ற தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதும் மிக அவசியம் என்கிறார் பிரபு தாமோதரன். இதற்கான நடவடிக்கைகளை திருப்பூரிலுள்ள நிறுவனங்கள் எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட திருக்குமரன், மத்திய அரசு நடைமுறைப்படுத்தவுள்ள 'டீம்' திட்டம் இதற்கு பெரும் பலனளிக்குமென்று நம்பிக்கை தெரிவித்தார்.

திருப்பூரில் நடந்த பாராட்டு விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ''திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கு அரசு உறுதுணையாக இருக்கும். மின்சாரம், தொழிலாளர் வசதி வாரியம் அமைத்தல், கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சிட்டி கோரிக்கைகள் பரிசீலிகக்கப்படும்.'' என்று தெரிவித்தார்.

அத்துடன் திருப்பூரை இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி மையமாகவும், ''மாடல் எக்ஸ்போர்ட் டெஸ்டினேஷன்'' ஆகவும் உருவாக்கும் நோக்கில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படும் என்றும் செங்கோட்டையன் உறுதியளித்திருந்தார். அதே நிகழ்ச்சியில் பேசிய திருப்பூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் அருண்ராஜ், ''திருப்பூர் முன்பை விட இப்போது மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கேற்ப உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து மேம்பாட்டிற்கான தேவைகள் நிறைவேற்றப்படும்.'' என்று கூறியிருக்கிறார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு