ஓபிஎஸ் Vs ஈபிஎஸ்: மோதி அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் அனுப்பிய 'அதிருப்தி' கடிதம் - முழு பின்னணி

    • எழுதியவர், இரா.சிவா
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

டெல்லியில் கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற ஜி20 ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுகவின் 'இடைக்கால பொதுச்செயலாளர்' என்று குறிப்பிட்டு தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷிக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அது மோதி அரசு மீதான அவரது அதிருப்தியின் வெளிப்பாடாக கருதப்படுகிறது. என்ன நடந்தது இந்த விவகாரத்தில்?

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது என அந்த கடிதத்தில் ஓபிஎஸ் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், கட்சியின் சிறு பிரிவை மட்டுமே எடப்பாடி பழனிசாமி பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக அந்தக் கடிதத்தை எழுதுவதாக குறிப்பிட்டுள்ள ஓபிஎஸ், தன்னுடைய பதவி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டது என்றும், எடப்பாடி பழனிசாமியின் பதவி அதிமுக கட்சி விதிகளுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்துக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்வதாக தெரிவித்துள்ள ஓபிஎஸ், எதிர்காலத்தில் 'இடைக்கால பொதுச்செயலாளர்' என்று எடப்பாடி பழனிசாமியை குறிப்பிடுவதை தவிர்ப்பீர்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மோதி அரசு விடுத்த அழைப்பு

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் சர்வதேச மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. கடந்த 1ஆம் தேதி ஜி20 தலைமைப் பொறுப்பேற்ற இந்தியா, இந்த மாநாட்டை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த மாநாட்டை நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த 5ஆம் தேதி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டிலிருந்து மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, தொல்.திருமாவளவன், ஜி.கே.வாசன் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க நாடாளுமன்ற விவாகரத்துறை சார்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு தனித்தனியாக அழைப்பிதழ் அனுப்பட்டது.

எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் அவர் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தார்.

அதிமுகவில் கடந்த ஜூன் மாதம் வெடித்த ஒற்றைத் தலைமை விவகாரத்திற்கு மத்தியில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்தச் சூழலில்தான், மத்திய அரசின் அழைப்புக் கடிதமும், ஓபிஎஸ்ஸின் எதிர்ப்புக் கடிதமும் பேசுபொருளாகியுள்ளது.

தம்பிதுரையை குற்றம்சாட்டும் ஓபிஎஸ் தரப்பு

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி, நாடாளுமன்ற விவாகார அமைச்சகத்தில் எடப்பாடி அணியினர் ஏற்படுத்திய குழப்பமே இதற்கு காரணம் என்கிறார்.

“அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி நல்லவர். அவருக்கு அதிமுகவில் என்ன பிரச்னை போய் கொண்டிருக்கிறது என்பது முழுமையாக தெரிய வாய்ப்பில்லை. அதைப் பயன்படுத்தி எடப்பாடி அணியைச் சேர்ந்தவர்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக தம்பிதுரைதான் இந்த செயலில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இது குறித்து மக்களவை அதிமுக எம்பி ஓ.பி. ரவீந்திரநாத்திடமாவது அவர்கள் கேட்டிருக்க வேண்டும். ஏன் அதைச் செய்யவில்லை என்று தெரியவில்லை. அதனால் இந்த அழைப்பை சரியான அழைப்பாக நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை” என்கிறார் புகழேந்தி.

பொதுச்செயலாளர் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் இந்த அழைப்பிதழ் தொடர்பாக உங்கள் தரப்பில் எந்த முயற்சியும் முன்கூட்டியே எடுக்கவில்லையா என்று கேட்டபோது, “எந்த அழைப்பையும் நாங்கள் தேடிப்போவதில்லை. அழைத்தால் மகிழ்ச்சியுடன் செல்வோம். இது அதிமுகவின் தலைமையை முடிவு செய்யும் கூட்டமல்ல. மத்திய அரசு நடத்தும் ஒரு கூட்டம், அவ்வளவுதான். அவர்கள் கவனமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தவறு நடந்து விட்டது. பிரதமர், உள்துறை அமைச்சர் உட்பட நாட்டின் பல தலைவர்களோடு ஓபிஎஸ் நல்லுறவில் உள்ளார்” என்றும் அவர் கூறுகிறார்.

ஈபிஎஸ் தரப்பு என்ன சொல்கிறது?

ஆனால், ஓபிஎஸ் கடிதம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், லெட்டர் பேட் கட்சி நடத்திவரும் ஓபிஎஸ் தன்னிலை அறியாமல் தனி உலகத்தில் இருக்கிறார் என்று விமர்சித்தார்.

“அதிமுகவை பொறுத்தவரை பொதுக்குழு சர்வ அதிகாரம் படைத்தது. அந்தப் பொதுக்குழு கூடி ஒருமனதாக அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டது. தற்போது அவர் ஒருங்கிணைப்பாளர் கிடையாது. அந்தப் பொதுக்குழுவிலேயே எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.

அந்த அடிப்படையில் அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், என்ன நடக்கிறது என்று தன்னிலை தெரியாமல் தனி உலகத்தில் ஓபிஎஸ் இருக்கிறார். லெட்டர் பேட் கட்சியை நடத்திக்கொண்டிருக்கும் ஓபிஎஸ் தற்போது கடிதம் எழுதியிருப்பதுகூட அவரோடு இருக்கும் சிலரை திருப்திப்படுத்துவதற்காகத்தான்,” என்கிறார் ஜெயக்குமார்.

தம்பிதுரை குழப்பம் ஏற்படுத்தி விட்டதாக ஓபிஎஸ் தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஜெயக்குமார், “நாங்கள்தான் அதிமுக எனும் போது நாங்கள் ஏன் முயற்சி எடுக்க வேண்டும். ஓபிஎஸ் நீக்கம் முதல் பொதுச்செயலாளர் தேர்தெடுக்கப்பட்டது வரை அனைத்தையும் சட்டத்திற்கு உட்பட்டே நாங்கள் செய்துள்ளதால் இந்தக் கடிதம் எங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் தரப்புதான் இன்று குழப்பத்தில் உள்ளது. அவர்கள் தான் அறிவாளி, மத்திய அரசு முட்டாள் என்று சொல்கிறார்களா? இது குழந்தைத்தனமான வாதமாக உள்ளது” என்கிறார் ஜெயக்குமார்.

பாஜகவிற்கு வேறு வழியில்லை

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய தலைமை இதுவரை வெளிப்படையாக எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி குறித்து பேசும்போது அவரை இடைக்கால பொதுச்செயலாளர் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட யாரும் குறிப்பிட்டதில்லை.

எனவே தற்போதைய இந்தக் கடிதம் எடப்பாடி தரப்பை நோக்கி பாஜக நகர ஆரம்பித்துவிட்டதா என்ற கேள்வியை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.

“இன்று கட்சி எடப்பாடி பழனிசாமி கையில்தான் உள்ளது. ஓபிஎஸ் தரப்பு வலுவாக இல்லை. அவர் அணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறுகிறார்கள். அதனால் பாஜக எடப்பாடி பழனிசாமி பக்கம்தான் நகர வேண்டும். அதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை” என்கிறார் பத்திரிகையாளர் குபேந்திரன்.

அண்மையில் அமித்ஷா சென்னை வந்ததையொட்டி நடந்த ஒரு நிகழ்வை குபேந்திரன் சுட்டிக்காட்டுகிறார்.

ஒரு தனியார் நிகழ்ச்சிகாக அண்மையில் சென்னை வந்திருந்த அமித் ஷாவை ஓபிஎஸ் சந்தித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை.

இது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட போது, ஒவ்வொரு முறை வரும்போதும் அவரை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை எனப் பதிலளித்தார் எடப்பாடி.

“எடப்பாடி இது போல குறைந்தபட்ச எதிர்ப்பையாவது வெளிப்படுத்துகிறார். ஆனால், ஓபிஎஸ் அந்த கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாக நின்று அமித் ஷாவை சந்திக்கிறார். எனவே ஓபிஎஸ்ஸை கையாளுவது போல எடப்பாடியை கையாளக் கூடாது என பாஜக நினைத்திருக்கலாம் என்பதும் இந்த அழைப்பிதழின் பின்னணியாக இருக்கலாம்” என்று குபேந்திரன் கூறுகிறார்.

“அதற்காக எடப்பாடியை பாஜக முழுமையாக ஏற்கிறது நான் கூறமாட்டேன். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையின் பேச்சுக்கு கட்டுப்படவில்லை என்றால் எடப்பாடிக்கு என்ன நேரும் என்பதை சிவசேனாவிற்கு நடந்ததை வைத்து புரிந்துகொள்ளலாம்” என்றும் அவர் கூறுகிறார்.

இந்த விவகாரம் ஒரு புறமிருந்தாலும், அதிமுகவின் தலைமையை கைப்பற்றுவதிலேயே தாங்கள் கவனம் செலுத்திவருவதாகக் கூறுகிறார் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த புகழேந்தி.

“இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாததால் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை. தெரியாமல் நிகழ்ந்துவிட்ட தவறைச் சுட்டிக்காட்டியுள்ளோம். மற்றபடி, இதை அரசியலாக்க ஓபிஎஸ் விரும்பவில்லை.

நாங்கள் தொலைநோக்கோடு இருக்கிறோம். திங்கட் கிழமை உச்ச நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதில்தான் தற்போது கவனம் செலுத்துகிறோம்,” என்கிறார் புகழேந்தி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: