You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பா.ஜ.க.வின் இந்துத்வா அரசியலுக்கு எதிராக சாதியை கையில் எடுக்கிறதா 'இந்தியா' கூட்டணி?
- எழுதியவர், நளின் வர்மா
- பதவி, மூத்த பத்திரிகையாளர், பிபிசி இந்திக்காக
- பிரசுரிக்கப்பட்டது
மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று பிகார் மாநிலத்தின் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை நிதீஷ்குமார் அரசு வெளியிட்டவுடன் ராகுல் காந்தி ட்வீட் செய்து, ’பிகாரில் ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி மக்கள் தொகை 84 சதவிகிதம் என்று சாதிவாரி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது’ என்று எழுதியுள்ளார்.
“மத்திய அரசின் 90 செயலர்களில், 3 பேர் மட்டுமே ஓபிசிக்கள். அவர்கள் இந்தியாவின் பட்ஜெட்டில் 5 சதவிகிதத்தை மட்டுமே கையாளுகிறார்கள். எனவே இந்தியாவின் சாதிப் புள்ளி விவரங்களை அறிந்து கொள்வது அவசியம். மக்கள் தொகை எத்தனை அதிகமோ உரிமைகளும் அத்தனை அதிகமாகும் - இது எங்கள் உறுதிமொழி,” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தலைவர் லாலு பிரசாத் யாதவின் ட்வீட்டுடன் ராகுல் காந்தியின் ட்வீட் பொருந்துகிறது. "எண்ணிக்கைக்கு ஈடான பங்கு," என்று அவர் எழுதியுள்ளார்.
எதிர்க்கட்சி கூட்டணியான ‘இந்தியா’ ஆட்சிக்கு வந்தால், தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோதியை ஆட்சியில் இருந்து அகற்ற, 28 கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சிக் கூட்டணியான 'இந்தியா' தனது தேர்தல் பிரசாரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை கண்டிப்பாகப் பயன்படுத்தும் என்பது தெளிவாகிறது.
எதிர்க்கட்சி கூட்டணி மத்திய அரசை குறிவைக்க, ஓபிசி பிரதிநிதித்துவப் பிரச்சனையை எழுப்பும். 2024 தேர்தலில் பாஜகவின் இந்துத்துவ அரசியலை தோற்கடிக்க இது ஒரு ஆயுதமாக அமையும்.
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த விஷயத்தில் எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ், பிகாரில் ஆர்ஜேடி, ஜேடியு மற்றும் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் முழுமையான ஒருங்கிணைப்பில் உள்ளது.
’இந்தியா’ கூட்டணிக்கு இது ஒரு நல்ல செய்தி
ராஜீவிடம் இருந்து மாறுபடும் ராகுலின் அணுகுமுறை
ஆட்சி அதிகாரத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் தலித்துகளின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற ராகுல் காந்தியின் உறுதிப்பாடு அவரது தந்தை ராஜீவ் காந்தியின் உறுதியிலிருந்து வேறுபட்டது. 1990ல் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ராஜீவ் காந்தி, மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதை எதிர்த்தார்.
இந்த அறிக்கைக்குப் பிறகுதான் அப்போதைய பிரதமர் வி.பி.சிங், ஓபிசி பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார்.
அரசுப் பணிகளில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ’சாதிக்கு பதிலாக தகுதியை’ அப்போது ராஜீவ் காந்தி ஆதரித்தார். ஆனால் இப்போது ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராக ராகுல் காந்தி புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது ஓபிசி பிரிவினருக்கு தனது பங்கை கொடுக்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்த அவர், அது இனி நிறைவேற்றப்படும் என்றார்.
பாஜகவுக்கு எதிராக ஓபிசி விவகாரத்தை பயன்படுத்துமாறு, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியான 'இந்தியா'வின் பிற கட்சிகளை, பிகாரில் உள்ள பெரும் எண்ணிக்கையிலான ஓபிசி பிரிவினர் ஊக்குவிக்கின்றனர்.
திங்கள்கிழமை வெளியான சாதிவாரி கணக்கெடுப்புத் தரவுகளும் இதை நிரூபிக்கிறது.
இதன்படி பிகார் மக்கள்தொகையில் 63.13 சதவிதம் ஓபிசியினர் உள்ளனர். இதில் 36.01 சதவிகிதம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் 27.12 சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளனர். இது தவிர 19.65 சதவிகிதம் பட்டியல் சாதி மக்கள் உள்ளனர்.
பிராமணர்கள், ராஜபுத்திரர்கள், பூமிஹார்கள் மற்றும் காயஸ்தர்கள் அடங்கிய பொதுப்பிரிவு மக்கள் 15.52 சதவிகிதமாக உள்ளனர். இந்த சாதியினர் பெரிய அளவில் பாஜகவை ஆதரிப்பதாக நம்பப்படுகிறது.
இருப்பினும் முஸ்லிம்களின் ஐந்து சதவிகித மக்கள் தொகையும் இந்த 15.52 சதவிகித்தில் அடங்கும். அதாவது பிகாரில் உயர் சாதி இந்துக்களின் எண்ணிக்கை சுமார் பத்து சதவிகிதம் மட்டுமே.
நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸின் மிகப்பெரிய முகமான ராகுல் காந்தி, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள வட மாநிலங்களில் ஓபிசிகளின் பங்கை முக்கிய விவகாரமாக ஆக்கியுள்ளார். இந்த மாநிலங்களில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை அடங்கும்.
மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறினார்.
உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பரந்து விரிந்து கிடக்கும் மக்கள் பற்றி, பிகாரின் உதாரணம் மூலம் விரிவாகப் புரிந்துகொள்ள முடியும் என்று எதிர்க்கட்சிக் கூட்டணியான 'இந்தியா' வில் உள்ள கட்சிகளின் மத்தியில் பொதுவான உணர்வு உள்ளது.
இதன் பொருள் என்னவென்றால் இந்த மாநிலங்களைப் புரிந்துகொள்ள பிகாரின் சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற ஒன்று மிகவும் உதவிகரமாக இருக்கும்.
மொத்த மக்கள் தொகையில் 10 சதவிகிதமே உள்ள பொதுப்பிரிவு மக்களிடையே உள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு பத்து சதவிகித இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கியது ஏன் என சமூக வலைதளங்களில் 'இந்தியா' கூட்டணி ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மாநிலத்தில் ஓபிசி மக்கள் தொகை 63.13 சதவிகிதமாக உள்ளதாகவும், அவர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு மட்டுமே கிடைப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
உயர்சாதி இந்துக்களுக்கு நன்மை செய்வதற்காக பாஜக, ஓபிசிகளை ஒடுக்குகிறது என்று சமூக ஊடகங்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாஜகவுக்கு எவ்வளவு சிரமம்?
லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதீஷ் குமார் ஆகிய இருவருமே பிகாரில் மிகவும் சக்தி வாய்ந்த தலைவர்கள் என்றும், இந்த இரு தலைவர்களும் ஒன்றிணைவது மாநிலத்தில் பாஜகவுக்கு எப்படி அழிவை ஏற்படுத்த முடியும் என்றும் சாதிவாரி கணக்கெடுப்பு தரவு காட்டுகிறது.
லாலு பிரசாத் யாதவும், அவரது மனைவி ராப்ரி தேவியும் 1990 முதல் 2005 வரை பிகாரில் ஆட்சி செய்தனர்.
மண்டல் கமிஷன் அறிக்கை அமல்படுத்தப்பட்ட பிறகு லாலு பிரசாத் யாதவ், ஓபிசி களின் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக உருவெடுத்தார். முஸ்லிம்களின் ஆதரவும் அவருக்கு இருந்தது.
லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவியும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிகார் முதல்வர்களாக பதவி வகித்ததற்கு இது ஒரு முக்கிய காரணம்.
2005 நவம்பரில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து லாலு-ராப்ரியை ஆட்சியில் இருந்து அகற்றினார் நிதீஷ்குமார்.
நிதீஷின் சமூக மாற்ற முயற்சிகள்
2013-14 இல் 9 மாதங்களுக்கு ஜிதன் ராம் மாஞ்சியை முதல்வராக நிதீஷ்குமார் ஆக்கினார். இந்த 9 மாதங்களைத் தவிர, 2005-ம் ஆண்டு முதல் அவர் முதல்வர் பதவியில் நீடித்து வருகிறார்.
நிதீஷ் குமார் தனது சமூக மாற்றங்கள் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின்(Extremely backward classes) பெரும் பகுதியை உடைத்தார். அவர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விட அதிக இடஒதுக்கீடு அளித்தார். இது இந்த வகுப்பினரிடையே நிதிஷ் குமாரின் செல்வாக்கை அதிகரித்தது.
இவர்களின் ஆதரவு காரணமாகவே அவரால் லாலு பிரசாத் யாதவை ஆட்சியில் இருந்து அகற்ற முடிந்தது. அங்கே மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் மக்கள் தொகை 36.01 சதவிகிதமாக உள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகை 27.12 சதவிகிதம். இபிசி பிரிவினரிடையே நிதீஷ்குமாருக்கு இருக்கும் செல்வாக்கு காரணமாகவே அவர் இவ்வளவு காலமாக முதலமைச்சராக நீடித்து வருகிறார்.
பாஜக அல்லது ராஷ்ட்ரீய ஜனதா தளம் என்று எந்தக்கட்சியாக இருந்தாலும், தான் கூட்டணி அமைக்கும் கட்சியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்கிறார் நிதீஷ்குமார்.
2009 தேர்தலில் பிகாரில் மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 32 இடங்களில் பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. ஆனால் 2015 இல் நிதிஷ் குமாரும், லாலு பிரசாத் யாதவும் கைகோர்த்த போது சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. மாநிலத்தில் மொத்தமுள்ள 243 இடங்களில் 178 இடங்களில் ஜேடியு, ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ்
கூட்டணி வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் பாஜக 53 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
2017-ல் நிதீஷ்குமார் பாஜகவுடன் கைகோர்த்த போது, அது மீண்டும் வலுப்பெற்றது. 2019 பொதுத் தேர்தலில் பிகாரில் மொத்தமுள்ள 40 இடங்களில் 39 இடங்களில் ஜேடியு-பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.
தற்போது பிகாரில் ஆளும் கூட்டணி பற்றி பேசினால், அதில் ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸுடன் இடதுசாரிக் கட்சிகளும் உள்ளன. இதனால்தான் மக்களவை தேர்தலில் குறைந்தபட்சம் பிகாருக்குள் பாஜக.வை ஒழித்து விடலாம் என்று எதிர்க்கட்சிகளின் கூட்டணி கருதுகிறது.
பாஜக பிரச்னைகளை அதிகரித்துள்ளதா?
பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பலர் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து, நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியபோது அவர் மறுத்துவிட்டார்.
மாநிலத்தின் பணம் மற்றும் வளங்களைக் கொண்டு கணக்கெடுப்பு நடத்திக்கொள்ளுமாறு நிதிஷ்குமாருக்கு பிரதமர் பரிந்துரைத்திருந்தார். ஆனால் அவரது அரசும் கட்சியும் மாநிலத்தில் கணக்கெடுப்பு நடத்துவதில் பல சிரமங்களை உருவாக்கியது.
பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் அளித்திருந்தார். ஆனால் பின்னர் அரசு அதன் எதிர்ப்பை வாபஸ் பெற்றது.
பாஜக ஆதரவாளர்கள் பாட்னா உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் இந்த கணக்கெடுப்பை எதிர்த்து வழக்கு பதிவு செய்தனர். இதன் காரணமாக பிகார் அரசு பலசிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இறுதியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிகார் அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்தது.
ஆனால் இப்போது பாஜக கவலையில் ஆழ்ந்திருப்பதாக தெரிகிறது. கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த தலைவருமான சுஷில் குமார் மோதி வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டு, பிகாரில் நடத்தப்பட்ட சாதி கணக்கெடுப்பின் பெருமை தனது கட்சியையே சாரும் என்று கூறியுள்ளார்.
பிகாரில் ஜேடியு-பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது பிகாரில் உள்ள ஏழை மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதைத் தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறுகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)