'பாட்டிலுக்கு ரூ.10': டாஸ்மாக்கில் என்ன நடக்கிறது? பிரச்னைக்கு தீர்வு பற்றி பிபிசிக்கு அமைச்சர் பதில்

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

''பாட்டிலுக்கு 10 ரூபாய்... பாட்டிலுக்கு 10 ரூபாய்... இங்கே ஒரு மந்திரி இருந்தார். இப்போது மந்திரி மாதிரி இருக்கிறார். திமுகவுக்கு இந்த மாஜி மந்திரி என்ன செய்கிறார் தெரியுமா... இப்படி ஊழல் செய்யுற பணத்தை எல்லாம் 24x7 சப்ளை பண்ற ஏடிஎம் மெஷினாக இருக்கிறாராம். அப்படி நான் சொல்லவில்லை. ஊருக்குள் பேசிக் கொள்கிறார்கள்!''

கரூரில் கடந்த ஆண்டு செப்டெம்பர் 27ஆம் தேதி நடந்த பரப்புரை நிகழ்ச்சியின்போது, தற்போதைய முதல்வர் விஜய் பாடிய பாட்டும், பேசிய பேச்சும் இது.

அதே கூட்டத்தில் 'இன்னும் ஆறு மாதங்களில் ஆட்சி மாறும் காட்சி மாறும்' என்றும் அவர் பேசியிருந்தார். அப்போது அவர் கூறியது போலவே ஆட்சியும் மாறிவிட்டது. ஆனால் அவர் அப்போது முன் வைத்த 'பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் விலை' என்ற குற்றச்சாட்டுக்கு அவர் முதல்வரான பிறகும் தீர்வு காணப்படவில்லை என்ற புகார் கிளம்பியுள்ளது.

பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் விலை பெறப்படுவதை ஒப்புக் கொள்ளும் டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகள், அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளனர்.

இதுபற்றி பிபிசியிடம் பேசிய தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், ''பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவது குறித்த பிரச்னைக்கு விரைவில் முழுமையான தீர்வு காணப்படும்'' என்றார்.

23 ஆண்டுகளாக நீடிக்கும் ஊதிய பிரச்னை

தமிழகத்தில் கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து மதுக்கடைகளை மாநில அரசின் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமே (TASMAC) நடத்தி வருகிறது.

கடந்த 2024–2025 நிதியாண்டில் மட்டும் ரூ.48,344 கோடிக்கு மது விற்பனை நடந்ததாக 2025–2026 மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது கடந்த நிதியாண்டில் ரூ.50 ஆயிரத்தைத் தாண்டியிருக்கவும் வாய்ப்புள்ளது எனக் கணிக்கப்படுகிறது.

புதிய அரசு பொறுப்பேற்ற பின், தமிழகத்தில் கோவில்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு 500 மீட்டருக்குள் இருக்கும் 717 கடைகள் மூடப்படும் என்று முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்தார். அவையனைத்தும் தற்போது மூடப்பட்டுவிட்டதாக நான்கு நாட்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது. தற்போது 4 ஆயிரத்துக்கும் அதிகமாக மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. தொழிற்சங்க நிர்வாகிகள் கூறும் தகவல்களின்படி, இந்தக் கடைகளில் தற்போது 22 ஆயிரம் பணியாளர்கள் பணியில் உள்ளனர்.

தமிழகத்தில் மதுபாட்டில்களுக்கு அதன் அதிகபட்ச சில்லரை விலையை விட கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. மதுபாட்டில் வாங்கும் போது குவாட்டருக்கு (180 மில்லி) ரூ.10, ஆஃப் பாட்டிலுக்கு (360 மில்லி) ரூ.20, முழு பாட்டிலுக்கு (750 மில்லி) ரூ.40 வரையிலும் அதிக பணம் வாங்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முதலில் ஒரு ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் என்று அதிகரித்த கூடுதல் விலை, ஒரு வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பின்பே, பாட்டிலுக்கு 10 ரூபாய் என்ற நிலையை அடைந்ததாகக் கூறுகிறார் டாஸ்மாக் சிஐடியு நிர்வாகி ஜான்.

"நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் சாலையோரத்தில் வீசப்படும் மது பாட்டில்களால் காட்டுயிர்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. யானைகள் பாதுகாப்பு தொடர்பான ஒரு வழக்கில் இதைக் கவனத்தில் எடுத்த உயர்நீதிமன்றம், மலைப் பகுதிகளில் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தைக் கொண்டு வர உத்தரவிட்டது. அதை விரிவாக்கம் செய்யவும் நீதிமன்றம் கூறியதால், விற்பனையாகும் மது பாட்டில்களை காலி பாட்டிலாக திரும்பப் பெறும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்தது" என்றார் அவர்.

அதன்படி, மது பாட்டில் விற்கும்போது, மதுபானத்தின் விலையைவிடக் கூடுதலாக பாட்டிலுக்கு ரூ.10 வீதம் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த பாட்டிலை திரும்பக் கொடுத்தால் ரூ.10 திரும்பத் தரப்பட வேண்டும்.

ஆனால் எந்த மாவட்டத்திலும் எந்த மதுக்கடையிலுமே மது பாட்டிலை திரும்பக் கொடுத்தால் வாங்குவதே இல்லை என்பதே டாஸ்மாக் வாடிக்கையாளர்களின் பரவலான புகாராக இருக்கிறது. இவ்வாறு பாட்டிலுக்கு 10 ரூபாய் வீதமாக வசூலிக்கப்படும் கூடுதல் தொகை, பல மட்டங்களில் அதிகாரத்தில் இருப்பவர்களை லஞ்சமாக சென்றடைவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு, சேலத்தில் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ''தமிழகத்தில் உள்ள 6 ஆயிரம் டாஸ்மாக் மதுக்கடைகளில் ஒரு நாளுக்கு ஒன்றரை கோடி மது பாட்டில்கள் விற்கப்படுகின்றன. பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்குவதன் மூலமாக தினமும் ரூ.15 கோடிக்கு ஊழல் நடக்கிறது'' என்று குற்றம் சாட்டியிருந்தார்.

மறுபுறம் கரூர் பரப்புரைக் கூட்டத்தில் விஜய் பாடிய ''பாட்டிலுக்கு 10 ரூபாய்'' என்பது சமூக ஊடகங்களில் அதிகமாகப் பரவியது. அதே விஜய் தற்போது தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இப்போது இந்த விவகாரம் பேசுபொருளாகி இருக்கிறது.

இதுகுறித்து பேசிய பெயர் கூற விரும்பாத டாஸ்மாக் ஊழியர் ஒருவர், "நாளொன்றுக்கு 500 மது பாட்டில்கள், அதாவது ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை நடக்கும் மதுக்கடையில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வீதம் 5 ஆயிரம் கிடைக்கும். சென்னை, கோவை போன்ற நகரங்களில் ஒரு சில கடைகளில்தான் அதிகபட்சம் ரூ.10 லட்சத்துக்கு விற்பனையும், அதற்கேற்ப கூடுதல் பணமும் கிடைக்கும்." என்றார்.

'டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியம் மிகக் குறைவு'

தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் டாஸ்மாக் பணியாளர்கள் பலரும் கூறியதன்படி, "டாஸ்மாக் தொடங்கப்பட்டபோது, மேற்பார்வையாளரிடம் ரூ.50 ஆயிரம், விற்பனையாளரிடம் ரூ.15 ஆயிரம், உதவி விற்பனையாளரிடம் ரூ.10 ஆயிரம் டெபாஸிட் தொகை பெறப்பட்டது. மேற்பார்வையாளருக்கு ரூ.2 ஆயிரம், விற்பனையாளருக்கு ஆயிரம் ரூபாய், உதவி விற்பனையாளருக்கு 500 ரூபாய் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டது. இவர்களுக்கு பி.எஃப் பிடிக்கப்படுகிறது. ஆனால் இஎஸ்ஐ உள்ளிட்ட வேறு எந்தச் சலுகைகளும் இல்லை. அரசு உறுதியளித்தபடி, ஊக்கத்தொகை தொடர்ந்து வழங்கப்படவில்லை."

பிபிசியிடம் பேசிய டாஸ்மாக் சிஐடியு தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் திருச்செல்வன், ''பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதை எந்தப் பணியாளரும் மறுப்பதில்லை. அத்தகைய நிலையை உருவாக்கியது அரசும் அதிகாரிகளும்தான். கடந்த 2003இல் டாஸ்மாக் துவக்கப்பட்டபோது, குறைவான சம்பளமே நிர்ணயிக்கப்பட்டது. அப்போது விற்பனைக்கேற்ப ஊக்கத்தொகை தருவதாகக் கூறப்பட்டது'' என்றார்.

திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளும், கடந்த 23 ஆண்டுகளாக ஊதிய உயர்வுக்காக நடத்திய தொடர் போராட்டங்களை விவரித்தனர். தமிழ்நாடு பணி நிரந்தர தகுதி வழங்கல் சட்டப்படி, தொழிலாளர் நீதிமன்றத்தில் பெற்ற உத்தரவுகள், அதற்கு எதிராக அரசு செய்த மேல்முறையீடு போன்ற அரசின் செயல்பாடுகளையும் விளக்கி அதற்கான ஆவணங்களையும் பகிர்ந்தனர்.

அதன்படி, "கடந்த 23 ஆண்டுகளில் சட்டப்பேரவையில் 17 முறை டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு முறையும் ரூ.500, ரூ.1000 என்று மட்டுமே உயர்த்தி, தற்போது 23 ஆண்டுகளாகப் பணியில் தொடரும் டாஸ்மாக் பணியாளர்களில், மேற்பார்வையாளருக்கு ரூ.16,850, விற்பனையாளருக்கு ரூ.14,530, உதவி விற்பனையாளருக்கு ரூ.13,340 என்று மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது."

'வாடகை, மின் கட்டணம், சுகாதாரம் அனைத்தும் பணியாளர்களே பொறுப்பு'

டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கத்தின் (ATP) மாநிலத் தலைவர் சரவணன், மதுக்கடைப் பணியாளர்கள் கூடுதல் விலைக்கு விற்பதற்கான காரணங்களை, அனைத்துத் தொழிற்சங்கங்களும் சேர்ந்து அரசிடமும், அதிகாரிகளிடமும் பலமுறை விளக்கிவிட்டதாகக் கூறுகிறார். இதை திமுக தொழிற்சங்கப் பேரவையின் மாநிலத் தலைவர் நடராஜனும் ஒப்புக்கொள்கிறார்.

இந்த தொழிற்சங்கங்கள் மற்றும் ஏஐடியுசி, மேற்பார்வையாளர் சங்கம் உள்ளிட்ட 14 சங்கங்களும் இணைந்து தற்போது டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்ட நடவடிக்கைக் குழு என்ற அமைப்பைத் துவக்கி, அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

கேரளாவில் இருப்பது போன்று பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் குறித்து அரசு முடிவெடுக்க வேண்டுமென்பதை முதல் கோரிக்கையாக வலியுறுத்தியுள்ள தொழிற்சங்கங்கள், "மின் கட்டணம், வாடகை, மது பாட்டில் ஸ்டிக்கர் ஒட்டும் கூலி, காலி பாட்டில் சேகரிப்புக் கூலி, மதுபான பெட்டிகளை இறக்குவதற்கான கூலி, இணைய வசதி, சுகாதார செலவினங்கள்" அனைத்தையும் அரசே ஏற்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளன.

இதுபற்றி பிபிசியிடம் விளக்கிய டாஸ்மாக் சிஐடியு மாநில நிர்வாகி ஜான், ''மின் கட்டணம் 9 ஆயிரம் என்று அரசு நிர்ணயிக்கிறது. ஆனால் ஃபிரிட்ஜ் பயன்பாட்டால் ரூ.12 ஆயிரம் மின் கட்டணம் ஏற்படுகிறது. பெருநகரங்களில் அரசு தரும் வாடகைக்கு கட்டடம் கிடைப்பதில்லை. அதனால் அரசு தரும் வாடகை தவிர்த்து, பணியாளர்கள் ஒரு தொகையைத் தருகின்றனர்.

அப்படிக் கொடுக்காவிட்டால் அந்த இடத்தை காலி செய்ய வேண்டியுள்ளது. மது பாட்டில் பெட்டிகளை இறக்குவதற்கு 10 ரூபாய் இறக்கு கூலி தர வேண்டியுள்ளது. உடைந்த பாட்டில், வெடிக்கும் பாட்டில், ஸ்டேஷனரி எல்லாவற்றுக்கும் பணியாளர்களே பொறுப்பேற்க வேண்டியுள்ளது. பாட்டிலுக்கு கூடுதலாக வாங்கப்படும் 10 ரூபாய் செலவாகும் வழிகளில் இவையும் அடக்கம். இந்த செலவுகளை எல்லாம் அரசு ஏற்க வேண்டுமென்பது எங்களின் முக்கியக் கோரிக்கை'' என்றார்.

அத்துடன் "தினமும் 12 மணிநேரம் வேலை செய்யும் தங்களுக்கு, 8 மணிநேர வேலை என்ற சூழலை உருவாக்கித் தர வேண்டும், வார விடுமுறை, பண்டிகைக் கால விடுமுறை, ஒவ்வொரு கடையிலும் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, எமர்ஜென்சி விளக்குகள் போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதும், அனைத்து துறைகளிலும் உள்ள பண்டிகைக் கால விடுமுறைகளை வழங்க வேண்டும்" என்பது பல்வேறு தொழிற்சங்கங்களும் அரசிடம் முன்வைக்கும் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

'விரைவில் தீர்வு காணப்படும்' – அமைச்சர் கூறியது என்ன?

தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், புதிதாகப் பொறுப்பேற்ற இரண்டு நாட்களில் "இதற்கு மிக விரைவாக மாற்றுவழி கண்டறியப்பட்டு தீர்வு காணப்படும்" என்று தெரிவித்திருந்தார். அதற்கேற்ப முக்கிய தொழிற்சங்கங்களுடன் அமைச்சரும், மேலாண் இயக்குநர் நந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகளும் பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

திமுக ஆட்சியில் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு திமுகவின் டாஸ்மாக் தொழிற்சங்கம் ஏன் முயற்சி எடுக்கவில்லை என்ற கேள்வியை, பிபிசி முன் வைத்தபோது, அதற்கு பதிலளித்த அதன் மாநிலத் தலைவர் நடராஜன், "பல கோரிக்கைகளை அமைச்சர் முத்துசாமி ஒப்புக்கொண்ட பின்னும், அவை செயல்பாட்டுக்கு வரவில்லை" என்றார்.

''டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அரசுத் துறை செயலாளர்களை வைத்து 4 கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆட்சியின் கடைசிக் கட்டத்தில் அமைச்சர் பல கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார். கடைகளுக்கு முழுமையான வாடகை, மின் கட்டணத்தை டாஸ்மாக் நிர்வாகமே மொத்தமாகச் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தியும், மாவட்ட அளவிலான அதிகாரிகள் அதைச் செயல்படுத்தவில்லை" என்று நடராஜன் கூறினார்.

இதற்கிடையில் காலி பாட்டில்களை திரும்பப் பெற முடியாது என்று கூறி, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில், மதுக் கடைகளை மூடி பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். மே 27 அன்று, டாஸ்மாக் தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் விக்னேஷ் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தொழிற்சங்கங்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்து கோரிக்கைகளைத் தெரிவித்தன. இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும்'' என்றார்.

டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள், பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவது போன்ற குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விகளை அமைச்சர் விக்னேஷிடம் பிபிசி முன் வைத்தது. அதற்குப் பதிலளித்த அவர், ''முதல்வர் கூறியபடி, 717 மதுக் கடைகள் மூடப்பட்டுவிட்டன. அவர்களுக்கு மாற்றுப் பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் ஜூன் 18ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கும் முன், இந்தப் பிரச்னைக்கு முற்றிலும் தீர்வு காணப்படும்'' என்றார்.

அதோடு, ''டாஸ்மாக்கில் இருப்பவை நீண்ட காலப் பிரச்னைகள். இந்த ஆட்சி வந்து ஒரு மாதம்கூட முடியவில்லை. இன்னும் 4 ஆண்டு 340 நாட்கள் மீதமுள்ளது. அதற்குள் இந்தத் துறையின் முகத்தையே மாற்றுவதற்கு நாங்கள் முயல்வோம். அதைச் சிறப்பாகச் செய்து முடிப்போம் என்ற நம்பிக்கையும் உள்ளது'' என்றார் அமைச்சர் விக்னேஷ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு