முதல் போட்டியிலேயே 3 வீரர்களுக்கு ரெட் கார்டு: மெக்சிகோ - தென் ஆப்ரிக்கா ஆட்டத்தில் என்ன நடந்தது?

    • எழுதியவர், டேல் ஜான்சன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

உலகக்கோப்பை போட்டிகள் என்றாலே 'ரெட் கார்டு' (Red Card) அதிகமாக பயன்படுத்தப்பட்ட காலம் எப்போதோ மலையேறிவிட்டது, அல்லது நாம் அப்படித்தான் நினைத்தோம்.

வியாழக்கிழமை (ஜூன் 11) நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்தின் தொடக்க ஆட்டத்தில் மெக்சிகோ அணி 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது. அந்த ஆட்டத்தில் மூன்று முறை ரெட் கார்டு காண்பிக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்காவின் யாயா சிதோல் மற்றும் தெம்பா ஸ்வானே ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (stoppage time) மெக்சிகோவின் சீசர் மான்டெஸ் வெளியேற்றப்பட்டார்.

ரஷ்யா மற்றும் கத்தாரில் நடந்த உலகக்கோப்பை தொடர்களில் தலா 4 ரெட் கார்டுகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன. 2026 தொடர் ஏற்கனவே அந்த எண்ணிக்கையை நெருங்கிவிட்டது. ஒரே போட்டியில் மூன்று வீரர்கள் வெளியேற்றப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிவிட்டன.

2006 உலகக் கோப்பைத் தொடரில், ஒட்டுமொத்தமாக 28 வீரர்களுக்கு ரெட் கார்டு காண்பிக்கப்பட்டது. அது ஒரு அசாதாரணமான தொடராகும், அதில் மூன்று வெவ்வேறு போட்டிகளில் தலா மூன்று வீரர்கள் வெளியேற்றப்பட்டனர். போர்ச்சுகல் மற்றும் நெதர்லாந்து இடையிலான ஆட்டத்தில் அதிகபட்சமாக நான்கு ரெட் கார்டுகள் காட்டப்பட்டதே சாதனையாக உள்ளது.

நாம் மீண்டும் அந்த காலகட்ட நிலைக்கு செல்லப் போகிறோமா? 2026 உலகக் கோப்பையானது, சாதாரண வண்ணக் காகிதத் துண்டுகளைப் போல ரெட் கார்டுகள் வழங்கப்பட்டதற்காக நினைவுகூரப்படுமா?

ரெட் கார்டு சில சமயம் நியாயமானதே

2017 ஆம் ஆண்டில், பியர்லூய்கி கொலினா ஃபிஃபாவின் புதிய நடுவர் குழு தலைவராக நியமிக்கப்பட்டார். அது முற்றிலும் மாறுபட்ட ஒரு சகாப்தத்தின் தொடக்கமாக அமைந்தது.

முடிவுகள் இரு அணிகளுக்கும் நியாயமாக அமைய வேண்டும் என்று கொலினா அடிக்கடி கூறுவார். உண்மையிலேயே ஒரு ரெட் கார்டுக்கு தகுதியான ஒரு செயலைச் செய்யாதவரை, வீரர்கள் மைதானத்திலேயே இருக்க வேண்டும்.

உதாரணமாக, அவர் பொறுப்பேற்ற பிறகு, பெனால்டி வழங்கப்பட்ட சூழ்நிலையில் எதிரணியின் கோல் அடிக்கும் வாய்ப்பை தடுத்தால் (DOGSO) ரெட் கார்டு வழங்கும் விதிமுறைகள் மிகவும் தளர்த்தப்பட்டன. அதனால் இப்போது அந்த மாதிரியான சம்பவங்களுக்கு ரெட் கார்டு பெறுவது மிகவும் அரிதாகிவிட்டது.

எனவே, அவர் பொறுப்பேற்ற பிறகு நடந்த 2018 மற்றும் 2022 உலகக்கோப்பை போட்டிகளில் ஒட்டுமொத்தமாகவே தலா நான்கு ரெட் கார்டுகள் மட்டுமே தரப்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஒரு தொடரின் ஆரம்பத்தில் நடுவர்கள் செயல்படும் விதமே பெரும்பாலும் அந்தத் தொடர் முழுவதும் நடுவர்கள் எப்படிச் செயல்படுவார்கள் என்பதற்கான போக்கை தீர்மானிக்கிறது. அப்படியிருக்க, இந்த ஒரு போட்டியை மட்டும் வைத்து நாம் ஏதேனும் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியுமா?

தொடர் தொடங்குவதற்கு முந்தைய தனது விளக்கக் கூட்டத்தில், அந்த இத்தாலிய நிர்வாகி (கொலினா) 'களத்தில் நேரத்தை வீணடிப்பது மற்றும் வீரர்களின் பொதுவான நடத்தை' ஆகியவற்றின் மீதே தனது கவனத்தைச் செலுத்தினார்.

அங்கு, ரெட் கார்டுகளின் எண்ணிக்கை பெருமளவில் உயர்வதற்கு வழிவகுக்கக் கூடிய எந்தவொரு கடுமையான நிலைப்பாடு குறித்தும் பேசப்படவில்லை.

சில நேரங்களில் ரெட் கார்டு காண்பிக்கப்படுவது முற்றிலும் நியாயமானதாகவே அமைந்துவிடுகின்றது;

பிரையன் குட்டரெஸை ஃபவுல் செய்ததற்காக சிதோலை வெளியேற்றியது, நடுவர் வில்டன் சாம்பாயோவுக்கு ஒரு எளிய முடிவாகவே இருந்தது.

மெக்சிகோவின் பிரையன் குட்டரெஸ், கோல் அடிப்பதற்கான இலக்கை நோக்கித் தனியாக முன்னேறி கொண்டிருந்தார். அவரை கீழே தள்ள வேண்டும் என்ற நோக்கம் சிதோலுக்கு இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர் தடுத்தார் என்பது உண்மை. அந்த தென்னாப்பிரிக்க வீரர், தனது எதிராளியின் தெளிவான கோல் அடிக்கும் வாய்ப்பைப் பறித்துவிட்டார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இருக்கவில்லை.

இரண்டாவது 'ரெட் கார்ட்' மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்தது; மோசமான முறையில் நடந்துகொண்டதற்காக, வீடியோ உதவி நடுவர் (VAR) மறுஆய்வுக்குப் பிறகே ஸ்வானேவுக்கு அந்த ரெட் கார்டு வழங்கப்பட்டது.

ஸ்வானே, ராபர்டோ ஆல்வராடோவுடன் மல்லுக்கட்டினார்; அப்போது அந்த மெக்சிகன் வீரர் (ராபர்டோ) தனது தலையைப் பிடித்தபடி தரையில் விழுந்தார்.

அது பந்து இல்லாத ஒரு சூழலில் இரு வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சாதாரண மோதல் போலத்தான் தெரிந்தது. ஆனால், கொலம்பியாவைச் சேர்ந்த வீடியோ உதவி நடுவர் (VAR) நிகோலஸ் காலோ, மைதானத்தின் ஓரத்திலுள்ள திரைக்குச் சென்று அதைச் சரிபார்க்குமாறு கள நடுவரை அனுப்பினார்.

நடுவர் சாம்பாயோ திரையில் அதை மீண்டும் பார்த்தபோது, அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொள்வது கடினமாக இருந்தது.

உண்மையிலேயே அவரது கை தலையில் பட்டதா? அப்படி பட்டிருந்தால், அது தற்செயலாக நடந்ததா அல்லது அவர் கையை ஓங்கி வீசினாரா? ஒரு வீரரின் வன்முறை நடத்தையை மதிப்பிடும்போது, ஆக்ரோஷத்தின் அறிகுறியாக மூடிய கைமுஷ்டி இருக்கிறதா என்று பார்க்கும்படி விஏஆர் நடுவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்றாலும், இது ஒரு முக்கிய அறிகுறியாகும்.

அங்கு ஸ்வானே மூடிய கைமுஷ்டியால் தாக்காமல், திறந்த கையால் ஆல்வராடோவின் தலையின் பக்கவாட்டில் தொட்டது போலத்தான் தோன்றியது.

எனவே இந்த 'ரெட் கார்டு' முடிவு மிகவும் கடுமையான தீர்ப்பாகத் தோன்றுகிறது. விஏஆர் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கமான 'தெளிவான மற்றும் வெளிப்படையான தவறுகளை' சரிசெய்வதற்கான வகையிலும் இது தோன்றவில்லை.

அல்லது, மோசமான வீரர்களின் நடத்தை என்ற பிரிவின் கீழ் வரும் இந்த வகையான விஷயங்களைக் உன்னிப்பாகக் கவனிக்குமாறு கொலினா தனது நடுவர்களுக்கும் விஏஆர் நடுவர்களுக்கும் முன்பே அறிவுறுத்தியிருந்ததன் வெளிப்பாடாகவும் இது இருக்கலாம்.

கொலினா, வாக்குவாதங்களின் போது வீரர்கள் தங்கள் வாயை கைகளால் மறைத்துக் கொள்வதற்கும், நடுவர் தீர்ப்பை எதிர்த்து மைதானத்தை விட்டு வெளியேறுவதற்கும் ரெட் கார்டு வழங்கும் விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளார். செட்-பீஸ் (set-piece) சூழல்களில் எதிரணி வீரர்களை தடுத்து நிறுத்தி கோல் வாய்ப்பை உருவாக்கினால், அந்த கோல்களையும் செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒருவேளை ஸ்வானேவின் செயலும் இந்த வகையான பிரிவுக்குள் வரலாம்; விளையாட்டிற்குள் இருக்கும் இத்தகைய தவறான தந்திரங்களை குறைக்க கொலினா எடுக்கும் ஒரு முயற்சியாகவும் இது இருக்கலாம்.

நடுவர்கள் பற்றி இப்போதே பதற்றம் தேவையில்லை

'டாக்சோ' (Dogso) விதியின் கீழ் வழங்கப்பட்ட மூன்றாவது ரெட் கார்டும், ஆரம்பத்தில் சர்ச்சைக்குரியதாகவே தோன்றியது.

குலிசோ முடாவ் பெனால்டி ஏரியாவை நோக்கி வேகமாக முன்னேறி, மான்டெஸைக் கடந்து செல்ல முயன்றார்; ஆனால் அந்த தென்னாப்பிரிக்க வீரர் ஒரு ஆக்ரோஷமான செயல்பாடு மூலம் அவரை அப்படியே தடுத்து நிறுத்தினார். முடாவ் மைதானத்தின் சற்று ஓரப்பகுதியில் (wide position) இருந்ததால், மஞ்சள் அட்டை வழங்கப்படுவதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாகத் தோன்றியது. ஆனால் நடுவர் சாம்பாயோ ரெட் கார்டு எடுத்தார். நிச்சயமாக விஏஆர் மீண்டும் இதில் தலையிடும் என்றுதானே நினைப்போம்?

ஆனால், அந்தச் சம்பவத்தை இரண்டாவது முறை உற்றுப் பார்க்கும்போது, முடாவ் பந்தைத் தொட்டு அடுத்த கணமே பெனால்டி ஏரியாவுக்குள் அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க அதிக வாய்ப்புள்ளது என்று தெரிந்தது. அவரைத் தடுப்பதற்கு அருகில் எதிரணியின் வேறு எந்த டிஃபெண்டரும் இல்லை.

முடாவ் அநேகமாக பந்தை ஒருமுறை தொட்டுத் தன்வசப்படுத்தி, அடுத்ததாக கோல் போஸ்ட்டை நோக்கி அடித்திருப்பார். எனவே, நடுவர் ஒரு தெளிவான மற்றும் வெளிப்படையான தவறைச் செய்துவிட்டார் என்று விஏஆர் நடுவர் தலையிட்டுக் கூறுவதற்கு இதில் வாய்ப்பில்லை.

கடந்த சீசனில் பிரீமியர் லீக்கில் நடந்த ஒரு சம்பவம் இதற்கு ஒரு நல்ல ஒப்பீடாகும். அது அக்டோபர் மாதத்தில் கிறிஸ்டல் பேலஸ் மற்றும் பார்ன்மவுத் அணிகளுக்கு இடையே 3-3 என சமனான போட்டியில் நிகழ்ந்தது.

அங்கு மார்கோஸ் செனேசி என்பவர் இஸ்மைலா சாரை கீழே வீழ்த்தினார்; அப்போது பேலஸ் அணியின் ஸ்ட்ரைக்கர் (சார்), இப்போது முடாவ் இருந்ததைப் போன்ற ஒரு சாதகமான நிலையை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருந்தார்.

அப்போது நடுவர் ஜாரெட் கில்லெட் மஞ்சள் அட்டையை மட்டுமே காண்பித்தார்; ஆனால் விஏஆர் நடுவர், அதைச் ரெட் கார்டாக மாற்றுவதற்காக அவரைத் திரையைப் பார்க்க அனுப்பினார்.

நடுவர் கில்லெட் அந்த மறுஆய்வை நிராகரித்தார்; ஆனால் பிரீமியர் லீக்கின் முக்கிய போட்டிச் சம்பவங்கள் குழு (Key Match Incidents Panel), நடுவர் எடுத்த முடிவு தவறு என்றும், அதற்கு ரெட் கார்டு தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் பின்னர் வாக்களித்தது.

ஒருவேளை, சாம்பாயோ இப்போது எடுத்த முடிவு சரியானதுதான் என்பதற்கான ஒரு சான்றாக இது அமைகிறது. அவரது முடிவு நிச்சயமாக நியாயப்படுத்தப்படக் கூடிய ஒன்றுதான்.

கொலினா, 'டாக்சோ' (Dogso) விதிமுறையின் மீது கடுமையான ஒடுக்குமுறைகளை ஏவும் வகையான நிர்வாகி அல்ல. உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பே அவர் தனது நோக்கங்களைத் தெளிவாக அறிவித்திருந்தார்.

நடுவர்கள் சரமாரியாக ரெட் கார்டு வழங்குவதால் இந்த உலகக் கோப்பை பாதிக்கப்படப் போகிறது என்று எளிதாகச் சொல்லிவிடலாம்.

அதேநேரத்தில், இந்த ஆட்டம் ஒரு விதிவிலக்காக மட்டுமே அமையக்கூடும். 104 ஆட்டங்கள் கொண்ட ஒரு போட்டித்தொடரில் இது ஒரு சிறிய புள்ளிவிவர முரண்பாடாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்தமாக ஆராய்ந்து பார்க்கும்போது, மைதானத்தில் கள நடுவரால் நேரடியாக வழங்கப்பட்ட இரண்டு ரெட் கார்டுகளும் சரியான முடிவுகள் என்றே தோன்றுகிறது. எனவே, நடுவர்களைப் பற்றி நாம் இப்போதே பதற்றமடையத் தேவையில்லை.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு