தமிழ்நாட்டின் கோவில் நிர்வாகம் பற்றி தெலுங்கானாவில் பிரதமர் மோதி பேசியது ஏன்? பா.ஜ.க. வியூகம் என்ன?

பிரசுரிக்கப்பட்டது

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு விவரம் வெளியிடப்பட்டு, நாடு முழுவதும் விவாதப்பொருளாகியுள்ள நிலையில் பிரதமர் மோதி தமிழ்நாடு அரசு மீது புதிய குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதுபோல் சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களின் நிர்வாகத்தை கையில் எடுக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜ.க.வின் இந்துத்வா அரசியலுக்கு எதிராக சாதியை எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கையில் எடுப்பதற்கான சமிக்ஞைகள் தென்படும் நிலையில், பிரதமர் மோதியின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த கூட்டத்தில் பிரதமர் பேசியது என்ன? அது குறித்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் என்ன சொல்கிறார்? பிரதமர் மோதியின் பேச்சுகளும், அவரது நோக்கமும் எத்தகையது? விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டின் கோவில்கள் நிர்வாகம் பற்றி மோதி பேச்சு

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தமிழ்நாட்டில் கோவில்கள் நிர்வகிக்கப்படும் விதம் பற்றி விமர்சனங்களை முன்வைத்தார்.

" என்னுடைய கேள்வி என்னவென்றால், ’எத்தனை மக்கள் தொகையோ அத்தனை உரிமை’ என்று சொல்கிறார்கள். நான் காங்கிரஸிடம் கேட்கிறேன். தெற்கில் குறிப்பாக தமிழ்நாட்டில் கோவில்கள் மீது அரசின் பிடி இருக்கிறது. அரசு அவற்றை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளது. கோவில்களின் சொத்துகள் கூட்டு சதி மூலம் அபகரிக்கப்பட்டு வருகிறது. கோவில்கள் சூறையாடப்படுகின்றன. கோவில் சொத்துகள் அபகரிக்கப்படுகின்றன.

ஆனால் சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் மீது கை வைக்கப்படுவதில்லை. அவற்றின் கட்டுப்பாட்டை தன்வசம் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் இப்போது காங்கிரஸ் அளித்துள்ள முழக்கம்.... அதாவது ’எத்தனை மக்கள் தொகையோ அத்தனை உரிமை’ என்று காங்கிரஸ் கூறுகிறது. இதுதான் உங்கள் மூல மந்திரம் என்றால், இதுதான் உங்கள் சித்தாந்தம் என்றால், சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் அனைத்தையும் தெற்கில் உங்கள் கூட்டாளிகள் கைப்பற்றுவார்களா? தன் வசம் எடுத்துக்கொள்வார்களா? . சொத்துகளை மக்கள் பணிக்காக பயன்படுத்துவார்களா? அப்படி செய்ய மாட்டார்கள்." என்று அவர் கூறினார்.

காங்கிரசுக்கு பிரதமர் மோதி கேள்வி

மேலும் தொடர்ந்த பிரதமர் மோதி, "நான் மற்றொரு கேள்வி கேட்கிறேன் காங்கிரஸிடம் இந்த கோஷம் எழுப்புகிறார்களே, காங்கிரஸும் அதன் கூட்டாளிகளும் குறிப்பாக, தமிழ்நாட்டில் கைப்பற்றப்படும், தங்கள் வசம் எடுத்துக் கொள்ளப்படும் இந்து கோவில்களை, அதிகபட்ச மாநிலங்களில் இதுதான் செய்யப்படுகிறது. ’எத்தனை மக்கள் தொகையோ அத்தனை உரிமை’ என்று நீங்கள் சொல்கிறீர்களே, இந்த உரிமையை இந்துகளுக்கு திருப்பி அளிப்பீர்களா? பதில் சொல்லுங்கள். இந்த பொய்யான வாக்குறுதிகளை அளிக்காதீர்கள்.

மக்களை குழப்பும் இந்த விளையாட்டை விளையாடுவதை நிறுத்துங்கள். காங்கிரஸும், ’இந்தியா’ கூட்டணியும் இதுகுறித்த தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் காங்கிரஸின் தோழமை கட்சி, கேரளாவில் ஆட்சி செய்யும் கட்சி, தெலுங்கானாவில் ஆட்சி செய்யும் கட்சி, கர்நாடகாவில் ஆட்சி செய்யும் கட்சியும், காங்கிரஸுடன் சேர்ந்து இதற்கு பதில் அளிக்க வேண்டும்." என்றார்.

தமிழ்நாடு அமைச்சர் சேகர்பாபு பதில் என்ன?

தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் மோசமான நிலையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ள நிலையில், அவரின் கருத்துக்கு தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார்.

பிபிசியிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களில் கோயில்கள் மாநில அரசின் கீழ் செயல்படுகின்றன. தமிழ்நாடு அரசு எந்த கோயிலையும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இந்து கோயில்கள் அனைத்தும் முறையாக நிர்வகிக்கப்படுகின்றன" என்று கூறினார்.

"9 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த பிரதமர், இப்போது கோயில்கள் பற்றி ஏன் கேள்வி எழுப்ப வேண்டும்? அப்படி பேசுவதாக இருந்தாலும் குறிப்பிட்டு எந்த கோயிலில் பாதிப்பு இருக்கிறது என்று கூறினால் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசும், அறநிலையத் துறையும் தயாராக உள்ளோம். அதைவிட்டு அவதூறுகளை அள்ளி வீசுவது பிரதமர் மோதி வகிக்கும் பதவிக்கு அழகல்ல." என்று அவர் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

"பிரதமர் வரலாறு தெரியாமல் பேசுகிறார்"

பிரதமர் மோதியின் பேச்சு பெரும் விவாதப்பொருளாகியுள்ள நிலையில் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாமிடம் பேசினோம். அவர் கூறுகையில், "பிரதமர் வரலாறு தெரியாமல் அல்லது வரலாற்றுக்குப் புறம்பாக பேசுகிறார். 1927-ம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு வழிகோலப்பட்டது. நாடு விடுதலைக்குப் பிறகு 1950-ம் ஆண்டு இந்து கோவில் சொத்து தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று இந்திய சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், பிரிவு 25(2)ன் மூலம் மத விவகாரங்களில் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டைப் பயன்படுத்துவதற்கு அரசுக்கு அதிகாரங்களை வழங்கியுள்ளனர்.

1960-ம் ஆண்டு அன்றைய மெட்ராஸ் மாகாணத்தை ஆண்ட காங்கிரஸ் அரசு அமைத்த ராமசாமி ஐயர் கமிட்டி, இந்து பொது சமய நன்கொடை

நிர்வாக சீர்கேடை தடுக்க அரசின் கட்டுப்பாடு அவசியம் என்றே வலியுறுத்தியது. இந்து கோவில்கள் நிர்வாகத்தில் நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவின் முயற்சியால் ஆயிரம் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறது. கோவில்கள் மிகச் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகின்றன. யானைகளுக்கு கூட தனியாக பராமரிப்பு உண்டியல் வைத்திருக்கிறார்கள். திருக்கோவில் அன்னதானத் திட்டம் ஜெயலலிதா காலத்திலிருந்து சிறப்புடன் நடைபெற்று வருகிறது." என்று கூறினார்.

"மத ரீதியான அணி திரட்டலுக்கு மக்களை தயார்படுத்துகிறார்"

பிரதமர் மோதி பேச்சின் நோக்கம் குறித்து கருத்து தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், "இந்து சமய மற்றும் அறநிலைய அறக்கட்டளை (HRCE) சட்டம் முதன்முதலில் தமிழ்நாட்டில் (அப்போது மெட்ராஸ்) இயற்றப்பட்டது. மெல்ல மெல்ல மற்ற தென் மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசம், மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை இதே மாதிரியான சட்டங்களை இயற்றின. ஆனால், இந்து கோவில்கள் மேம்படுத்தப்படுவது பாரதிய ஜனதாவின் தாய் ஸ்தாபனமான ஜன சங்கம் கண்களை உருத்தியது. அதே கருத்தை பிரதமர் மோடி எதிரொலித்துள்ளார்

வாழ்நாள் அறங்காவலர்கள் என்ற போர்வையில் பரம்பரை அறங்காவலர்கள் என்ற முகமூடியை தரித்துக் கொண்டு வட இந்திய மாநிலங்களில் இந்து கோவில்கள் சுரண்டப்படுவது கண்கூடாக தெரிந்த உண்மை. குஜராத்தில் உள்ள சோம்நாத் ஆலய டிரஸ்ட் நிர்வாகத்தில் மாநில அரசு வசம் 50 சதவீதமும், தனியார் வசம் 50 சதவீதமும் உள்ளது. தனியார் வசம் என்பதில், வாழ்நாள் டிரஸ்டியாக பிரதமர் மோதி, அத்வானி, அம்மாநில முன்னாள் முதலமைச்சர் கேசுபாய் படேல் ஆகியோர் இருக்கின்றனர். தற்போது, பிரச்சினைகளை திசை திருப்பும் முயற்சியாக தமிழ்நாட்டில் சிறந்த முறையில் செயல்படும் அறநிலைத்துறையின் மீது பாய்ந்திருக்கிறார் பிரதமர் மோடி.

அரசியலில் மத ரீதியான அணி திரட்டல்தான் பா.ஜ.க.வின் பிரதான ஆயுதம். பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிந்தைய அரசியலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி அரசு நிர்வாகத்தில் சாதிவாரி பிரதிநிதித்துவத்தை பேசும் நிலையில் அவரது பேச்சு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் சாதி வாரியாக அணி திரட்டல் சாத்தியமானால் பா.ஜ.க.வுக்கு தேர்தல் களம் சவாலானதாகி விடும். ஆகவேதான், மீண்டும் மத ரீதியான அணி திரட்டலுக்கு மக்களை தயார்படுத்தும் வகையில் பிரதமர் மோதி பேசியிருக்கிறார்." என்று விரிவாக விளக்கம் அளித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)