ரோபோவால் மனிதனைப் போல கண் சிமிட்ட முடியுமா? அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் ஏன்?

    • எழுதியவர், கிறிஸ்டின் ரோ
    • பதவி, டெக்னாலஜி ஆஃப் பிசினஸ் எடிட்டர்
  • பிரசுரிக்கப்பட்டது

ஒரு ரோபோவுடன் இணைந்து ட்ரம்ஸ் வாசிப்பது இதுவே எனது முதல் அனுபவம்.

iCub எனப் பெயரிடப்பட்டுள்ள ஓர் அழகான ரோபோவும் நானும் இணைந்து மெலிதான இசைக்கு ஏற்றவாறு ட்ரம்ஸ் வாசிக்கிறோம். அந்த ரோபோவை நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். அது என்னைக் கவனித்துக்கொண்டிருக்கிறது என்பதையும் நன்றாக அறிகிறேன்.

இந்த ட்ரம்ஸ் வாசிக்கும் சோதனை என்பது, மனிதன் ஒரு வேலையைச் செய்யும்போது, அதே வேலையைச் செய்துகொண்டு ஒரு ரோபோ அங்கே இருந்தால், அது மனிதனின் நடவடிக்கைகளை எப்படிப் பாதிக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் ஓர் ஆய்வே ஆகும்.

இத்தாலி நாட்டின் ஜெனோவா நகரில் உள்ள தொழில்நுட்ப கல்வி நிலையத்தில் செயல்படும் ஆராய்ச்சிக் குழு ஒன்று மேற்கொள்ளும் பல ஆய்வுகளில் ஒன்றாகவே இது நடத்தப்படுகிறது.

இந்த அறையில் மற்றவர்கள் இருந்தாலும், எனது கண்கள் எப்போதும் iCub ரோபோவின் அடர்வெண்மை நிற கண் இமைகளையே உற்று நோக்குகின்றன.

இந்த ரோபோ ஒவ்வொரு சில விநாடிகளுக்கும் ஒருமுறை கண் சிமிட்டும்போது ஒரு சத்தம் கேட்கிறது. அதன் பெரிய விழிகள் உணர்வுகளை வெளிப்படுத்துபவையாக இருப்பதால் அவற்றை உற்று நோக்குவதைத் தவிர்க்க முடியவில்லை.

"கண் சிமிட்டுவது என்பது ஒரு சாதாரண உடலியல்ரீதியான செயல் என்பதுடன், கண்களை ஈரப்பதத்துடன் வைத்திருப்பற்காக நடைபெறும் இயல்பான செயல் என்றே அனைவரும் அறிந்திருந்தாலும், மற்றவர்களுடன் சில உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் செயலாகவும் இது இருக்கிறது," என ஃபின்லாந்து நாட்டின் டாம்பியர் பல்கலைக்கழக உளவியல் ஆய்வாளர் ஹெலெனா கீலாவரி தெரிவிக்கிறார்.

மனிதன் கண் சிமிட்டுவது அவன் கவனமாக இருக்கிறான் என்பதை மட்டுமின்றி, அவனது உணர்வுகளையும் பிரதிபலிக்கிறது. பலர் ஒன்றாக இருக்கையில், நாம் கண் சிமிட்டுவதில் நம்மை அறியாமலே பல செய்திகளைத் தெரியப்படுத்துகிறோம். சான்றாக அடுத்தது யார் பேசவேண்டும் என்ற செய்திகூட கண் சிமிட்டுவதன் மூலம் பிறருக்கு உணர்த்தப்படுகிறது.

இப்படி, கண் இமைக்கும்போது ஒவ்வொருவருக்கும் இடையே அவர்களை அறியாமலேயே ஏராளமான தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது.

இதனால், கண் சிமிட்டுவது குறித்த உடலியல் மற்றும் உளவியல்ரீதியான தகவல்களை ரோபோக்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் ரோபோக்கள் கண் சிமிட்டும் வகையில் உருவாக்கப்படுவதன் நன்மைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

"கண் சிமிட்டுவதன் மூலம் ஏராளமான தகவல்கள் இயல்பாகவே பரிமாறப்படும் நிலையில், ரோபோக்களையும் கண் சிமிட்டும் வகையில் வடிவமைத்தால் அது மனிதர்களுக்கும், ரோபோக்களுக்கும் இடையிலான தொடர்பு மற்றும் கருத்துப் பரிமாற்றத்தை எளிமையாக்குவது மட்டுமின்றி வலுவானதாகவும் மாற்றும்," என கீலாவரி கூறுகிறார்.

"ரோபோக்கள் நன்றாக கண் சிமிட்டும்போது, அவை உள்ளத்திலிருந்து உணர்வுகளை வெளிப்படுத்துவது போன்ற தோற்றம் ஏற்படுவதால் அவற்றை இயல்பாக பயன்படுத்தும் ஆர்வம் மனிதர்களுக்கு ஏற்படும்."

13 வயது நிரம்பியவர்கள் மற்றும் பெரியவர்களை வைத்து ஜெனோவா நகர தொழில்நுட்ப கல்வி நிலைய ஆராய்ச்சிக் குழு மேற்கொண்ட ஆய்வில், இரு தரப்பும் கண் சிமிட்டும் ரோபோக்களையே பெரிதும் விரும்புவதாகவும், கண் சிமிட்டாத ரோபோக்களை பார்க்கும்போது அது உணர்வுரீதியாக மகிழ்ச்சியான அனுபவத்தை அளிக்கவில்லை என்று தெரிவிப்பதையும் அந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் அலெஸ்ஸாண்ட்ரா ஸ்க்விட்டி தெரிவிக்கிறார்.

கண் சிமிட்டும ரோபோக்கள்தான் இயல்பான, புத்திசாலித்தனமான ரோபோக்கள் என மனிதர்கள் எண்ணுகின்றனர். ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பயன்படுத்தப்படும் ரோபோக்களை பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அதிக அளவில் சார்ந்திருப்பதால், புத்திசாலித்தனமான ரோபோக்களின் முக்கியத்துவமும், தேவையும் அதிகரிக்கிறது.

இயற்கையாக கண் சிமிட்டும் ரோபோக்கள் மிகுந்த பயன் அளிக்கும் என்றாலும், அவற்றை கண் சிமிட்டச் செய்வது என்பது திரையில் தெரியும் உருவங்கள் அல்லது அவதார்களை கண் சிமிட்டச் செய்வதைப் போல எளிதானது அல்ல. ரோபோக்களை கண் சிமிட்ட வைப்பது தொழில் நுட்பரீதியாக சவாலானது.

"மனித உடல் அசைவுகளில் கண் சிமிட்டுவது என்பது மிகவும் நுட்பமானது என கருதப்படும் நிலையில் அதேபோன்ற அசைவுகளை இயந்திரங்களில் உருவாக்கும்போது நவீன தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. சக்தி வாய்ந்த சிறிய மோட்டார்களைப் பயன்படுத்தவேண்டிய தேவைகளும் உள்ளன," என விளக்குகிறார் கீலாவரி.

பிரிட்டனில் செயல்படும் இஞ்சினியரிங் ஆர்ட்ஸ் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் ரோபோக்களில் விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களில் பயன்படுத்தப்படும் மோட்டார்களை போன்ற சக்தி வாய்ந்த மோட்டார்களை பயன்படுத்தியே பல இயந்திரங்கள் உருவாக்கப்படுகின்றன.

குறிப்பாக "கண் சிமிட்டும்போது, கண் இமைகள் செயல்படும் வேகத்துக்கு ஏற்றாற்போன்ற மோட்டார்களைப் பயன்படுத்துவதும், அப்போது கண்கள் எப்படித் தோற்றமளிக்குமோ அதே போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும், அப்படி கண் சிமிட்டும்போது ரோபோவின் கண்களும், கண் இமைகளும் உராய்வதைக் குறைப்பதும் மிகப்பெரிய சவால்களாக உள்ளன," என்கிறார் ஹான்சன் ரோபோடிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஹான்சன்.

இன்னொரு சிக்கல் என்னவென்றால், ஒரு ரோபோ கண் சிமிட்டும்போது மோட்டார்கள் இயங்குவதால் சத்தம் கேட்கிறது. iCub ரோபோ கண் சிமிட்டும்போது எழும் சத்தத்தைக் குறைப்பதற்காக அதிக ஒலி எழுப்பாத மோட்டார் பயன்படுத்தப்படுவதாகவும், அதனால் அந்த ரோபோ மிக மெதுவாக கண் சிமிட்டுவதாகவும், அதன் முகத்தில் தூக்கம் வரும் உணர்வுகள் ஏற்படுவதாகவும், பூனைக் கண்களைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாகவும் ஜெனோவா தொழில்நுட்ப கல்வி நிலைய ஆராய்ச்சிக் குழுவின் மூத்த ஆராய்ச்சியாளர் ஃப்ரான்செஸ்கோ ரியா தெரிவிக்கிறார்.

iCub ரோபோவின் கேமரா அதன் கண்களுக்குப் பின்னால் பொருத்தப்பட்டுள்ளதால், அது மெதுவாக கண்களைச் சிமிட்டும்போது அதன் முன் தோன்றும் காட்சிகளில் சிலவற்றை அது தவற விடுவதாகவும் கூறும் ரியா, "கண்களில் காணும் காட்சிகளில் மிகக் குறைந்த அளவைத் தவற விடுவதால் பெரும் பிரச்னை எதுவும் இல்லை என்றாலும், கொஞ்சம் நீளமான காட்சியைத் தவறவிட்டால் அது ஒரு பிரச்னையாக மாறும்," என்றும் தெரிவிக்கிறார்.

"ரோபோக்கள் கண் சிமிட்டுவதற்காக எடுத்துக்கொள்ளும் சரியான இடைவெளியும், நேரமும் மற்றொரு பிரச்னையாக இருக்கிறது," என்று கூறும் கீலாவரி, மனிதர்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கும் போதோ அல்லது பொய் பேசும் போதோ கண் சிமிட்டும் கால இடைவெளியில் மாற்றத்தையும், அப்போது கண்களில் ஏற்படும் மாற்றத்தையும் ரோபோக்களில் அறிமுகப்படுத்துவதும் சிரமமான செயலாக உள்ளது என்கிறார்.

"கண் சிமிட்டுவதில் சரியான கால இடைவெளி இல்லை என்றாலும், குறிப்பிட்ட செயலுக்கு ஏற்றாற்போல் அது கண்களின் தண்மையை மாற்றாவிட்டாலும் அந்த ரோபோக்கள் மனிதனுக்கு இணையான - இயல்பான தோற்றத்தில் இருக்காது என்பது மட்டுமல்ல, அது மனிதர்களுடன் துல்லியமான கருத்துப் பரிமாற்றத்துக்கு உதவாது," என்கிறார் அவர்.

எனவே ரோபோக்கள் கண் சிமிட்டும் செயலைச் செய்ய தனித்துவமான மென்பொருளை ஜெனோவா தொழில்நுட்ப கல்வி நிலைய ஆராய்ச்சிக் குழு பயன்படுத்துகிறது. இருப்பினும் அது இயற்கையாகத் தெரியவில்லை.

இதற்கிடையே, டிஸ்னி ஆராய்ச்சிக் குழுவினருடன் ரோபோ ஆராய்ச்சியாளர்களும் இணைந்து, அனிமேசன் துறையினரின் உதவியுடன் ரோபோவின் கண் அசைவுகளைச் சரியாக வடிவமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கண் இமைகள் அசையும்போது ஏற்படும் தோற்ற மாற்றங்கள் குறித்த விளக்கங்களின் உதவியுடன் "அவற்றை உருவாக்குவதில் உள்ள சிரமங்களைக் கண்டறிந்து அவற்றை ரோபோக்களில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை உருவாக்குவது எளிமையாக இருக்கிறது," என்கிறார் டிஸ்னி ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த ஜேம்ஸ் கென்னடி.

கண் இமைகளை மூடுவது அல்லது திறப்பது போன்ற செயல்களுக்கான சமிக்ஞைகளை உருவாக்குதல், ரோபோவின் நெஞ்சுப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவான படங்களைப் பயன்படுத்தும் மென்பொருள் மற்றும் கண்கள் உற்று நோக்குவது குறித்து அவர்கள் கண்டறிந்த விஷயங்களுக்கு காப்புரிமை பெற்றுள்ளனர்.

இதுபோன்ற ஆராய்ச்சிகள் இன்னும் சோதனை அடிப்படையிலேயே இருப்பதாகவும், டிஸ்னி தீம் பார்க்குகளில் இவற்றை இன்னும் பயன்படுத்தவில்லை என்றும் கென்னடி கூறுகிறார். "ரோபோக்களை வெகு இயல்பான அசைவுகளுடன் மனிதர்களுடன் பழக வைக்க வேண்டும் என்பதே எங்களது ஒட்டுமொத்த இலக்கு," என்றும் அவர் கூறுகிறார்.

இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, ரோபோக்கள் கண்களால் உற்று நோக்கும்போது வெகு இயல்பான தோற்றத்தை ஏற்படுத்தும் தேவை இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசுகையில் ஒவ்வொரு தகவலைக் கேட்கும் போதும் அவர்களுடைய கண்களில் சில மாற்றங்கள் ஏற்படும். கண் இமைக்கும் தன்மையும் மாறுபடும். ஆனால் ரோபோக்களில் இது போன்ற மாற்றங்களை உருவாக்குவது சவால் நிறைந்த பணியாக இருக்கிறது.

ஒரு ரோபோவை முழுமையான - இயல்பான செயல்பாடுகளுடன் உருவாக்குவதில் இதுபோன்ற சவால்கள் உள்ளன. ஆண்ட்ராய்ட் செல்ஃபோனில் காணப்படும் மனித உருவங்கள் தங்கள் கண்களை அசைப்பது போல் ரோபோக்களில் அவ்வளவு எளிமையாக எதையும் செய்ய முடிவதில்லை.

கண் சிமிட்டுவது போன்ற மிகச் சிறிய விஷயங்களை உருவாக்கும் போதும் "உண்மையில் அதில் மிகவும் சிக்கலான சிரமங்கள் உள்ள நிலையில், இத்துறையில் மேலும் பல விரிவான ஆராய்ச்சிகளுக்கும், கண்டுபிடிப்புக்களுக்குமான தேவைகள் உள்ளன என்பதே உண்மை," என்கிறார் கென்னடி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: