You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
500 ஏர்பஸ் விமானங்களை முன்பதிவு செய்த இண்டிகோ - விமானக் கட்டணம் குறையும் என நம்பிக்கை தெரிவித்த நிறுவனம்
இந்திய விமான சேவை நிறுவனமான இண்டிகோ, 500 ஏர்பஸ் A320 வகை விமானங்களை வாங்குவதற்கான முன்பதிவு செய்துள்ளது. விமானப் பயணத்தின் வரலாற்றிலேயே இவ்வளவு அதிகமான விமானங்களுக்கான முன்பதிவு செய்யப்படுவது இதுவே முதல்முறை.
திங்கட்கிழமை (ஜூன் 19) அன்று பாரிஸ் நகரில் நடந்த ஏர்ஷோ (Airshow) நிகழ்வில் இது அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 55 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
இது ஏர் இந்தியா நிறுவனம் இவ்வாண்டு வாங்கிய 470 போயிங் ரக விமானங்களைக் காட்டிலும் பெரிய எண்ணிக்கை.
இந்த புதிய விமானங்கள் 2030 மற்றும் 2035ஆம் ஆண்டுகளுக்கு இடையேயான காலகட்டத்தில் நிறுவனத்திடம் வழங்கப்படும்.
பட்ஜெட் விமான சேவையாக கருதப்படும் இண்டிகோ விமான சேவை நிறுவனம், இந்த புதிய விமானங்கள் தங்களின் பயணக் கட்டணத்தை மேலும் குறைக்க உதவும் என தெரிவித்துள்ளது.
பெருந்தொற்றுக்கு பிறகு மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. அதேபோல பெருந்தொற்றுக்கு பிறகு முதல் முறையாக விமானத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையையும் குறிப்பிடத்தகுந்த அளவில் அதிகரித்துள்ளது.
தற்போது இண்டிகோ நிறுவனத்தின் இந்த ஒப்பந்தம் பெருந்தொற்றுக்கு பிறகு இந்தியாவின் விமான சேவைத் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை காட்டுகிறது.
இதுவரை மொத்தம் 1,330 விமானங்களுக்கான முன்பதிவு
ஏர்பஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கியாம் ஃபௌரி, இதை ஒரு மைல்கல் என்று வர்ணித்தார். இவ்வளவு பெரிய முன்பதிவை வேறு யாரும் செய்ததில்லை என்றார்.
இண்டிகோ நிறுவனம் அளித்துள்ள அறிக்கையில் கீழ்கண்ட தகவல்களைப் பகிர்ந்துள்ளது:
- 500 Airbus A320 ரக விமானங்களுக்கான முன்பதிவு செய்யப்பட்டுள்ளது
- தற்போது இண்டிகோ 300 விமானங்களை இயக்குகிறது
- முந்தைய முன்பதிவுகளையும் சேர்த்தால், வரும் மாதங்களில் இண்டிகோ 1,000 விமானங்களை வாங்கவிருக்கிறது
- முன்பதிவு செய்யப்பட்டிருக்கும் விமானங்கள் A320NEO, A321NEO and A321XLR ஆகிய வகைகளைச் சேர்ந்தவை
- 2006 இண்டிகோ நிறுவனம் துவங்கப்பட்டதிலிருந்து இதுவரை 1,330 விமானங்களுக்கான முன்பதிவு செய்திருக்கிறது
பாரீஸ் நகரில் கையெழுத்தான ஒப்பந்தம்
பாரீஸ் நகரில் நடந்த ஏர்ஷோ நிகழ்வின் முதல்நாளான திங்கட்கிழமை, இந்த ஒப்பந்தத்தில் இண்டிகோ நிறுவனத்தின் தலைவர் வி சுமந்தரன், தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ், மற்றும் ஏர்பஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கியாம் ஃபௌரி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இண்டிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வி சுமந்தரன், தலைமைச் செயல் அலுவலர் பீட்டர் எல்பர்ஸ், இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இப்போது இண்டிகோவின் புதிய விமானங்களுக்கான முன்பதிவு 1,000 ஆக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவின் உள்நாட்டு விமானச் சந்தையில் இண்டிகோவின் பங்கு 60%.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய எல்பெர்ஸ், இது துவக்கம் தான் என்று கூறினார். இந்தியாவின் வளர்ச்சி, இந்திய விமானச் சேவைத்துறையின் வளர்ச்சி ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது இத்தனை விமானங்கள் வாங்குவதற்கான சரியான தருணம் இதுதான் என்று கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்