You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடுக்கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து குதித்த 4 பேர் உயிருடன் மீண்டது எப்படி?
- எழுதியவர், ஜாய் சியாங், கெல்லி என்ஜி
- பதவி, தைபே மற்றும் சிங்கப்பூரிலிருந்து பிபிசி செய்தியாளர்கள்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
அந்த கப்பல் மூழ்கி கொண்டிருந்தது… உள்ளே இருந்தே 9 பேரும் உயிரைக் காத்துக் கொள்ள கடலில் குதித்தே தீர வேண்டும் என்பதை உணர்ந்திருந்தனர். அதனால், இரு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் கைகோர்த்தபடி அவர்கள் கடலில் குதித்தனர்.
வியாழக்கிழமை மதியம், தைவானின் கடலோரப் படையினர் ஒரு குழுவை சேர்ந்த 4 பேர் மியன்மார் நாட்டு எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தனர். கப்பலின் கேப்டன் வெள்ளிக்கிழமை அன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மீதமுள்ள நான்கு பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அவர்கள் அனைவரும் தான்சானியா கொடி தாங்கிய ஃபு ஷுன் (Fu Shun) என்ற சரக்கு கப்பலில் பணியாற்றினர். கெய்மி (Gaemi) சூறாவளி தாக்கியதால் அந்த கப்பல் கவிழ்ந்தது.
உயிர் பிழைத்த நால்வரும் இதுகுறித்து கூறுகையில், "நாங்கள் மொத்தம் 9 பேர் இருந்தோம். 5 மற்றும் 4 பேர் கொண்ட இரு குழுக்களாக பிரிந்து, நாங்கள் கடலில் குதித்தோம்" என்று கூறினர்.
அனைவரும் உயிர் காக்கும் உடை (லைஃப் ஜாக்கெட்) அணிந்திருந்தனர்.
5 பேர் கொண்ட குழுவில் 3 பேர் அணிந்திருந்த உயிர் காக்கும் உடையை அலைகள் அடித்துச் சென்றுவிட்டன.
வெள்ளிக்கிழமை மாலை 6:55 மணியளவில் மீட்பு பணியினர் அந்த குழுவில் இருந்த கப்பல் கேப்டனின் உடலைக் கண்டுபிடித்தனர்.
அந்த குழுவில் இருந்த மற்ற 4 பேரும் என்ன ஆயினர் என்பது பற்றி இன்னும் தெரியவில்லை.
மற்றொரு குழுவான, 4 பேர் கொண்ட குழுவில் இருவர் தைவானின் கவுஷியாங் (kaohsiung) கடற்கரையில் கரை ஒதுங்கினர். மற்ற 2 பேரை தைவான் கடலோர படையினர் மீட்டனர்.
உயிர் பிழைத்தவர்களில் ஒருவர், கடலில் குதித்த பிறகு, தனது கடவுச்சீட்டு இருந்து பையை எடுக்க மீண்டும் நீந்தி சென்றதாக கூறியிருந்தார்.
உயிர் பிழைத்த மற்றொருவர், "கப்பல் மூழ்கிய செய்தியை கடலோர காவல்படை மூலம் அறிந்ததும் நான் இறந்திருப்பேன் என தனது தாயும், மனைவியும் நினைத்திருப்பார்கள்" என கூறினார்.
அலைகளின் தாக்கம் பெரிதாக இருப்பதால், மீட்பு பணி பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடலோர காவல்படை பகிர்ந்த புகைப்படங்களில், உயிர் பிழைத்தவர்களை கதகதப்பாக வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது தெரிந்தது.
உயிர் பிழைத்தவர்களின் கை மற்றும் கால்களில் ஏற்பட்ட காயங்களுக்கு கடலோர காவல்படை பணியாளர் மருந்துவ உதவி அளித்தார்.
வானிலை சாதகமாக இல்லாத காரணத்தால் 8 சரக்கு கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
தைவான் மற்றும் ஃபிலிப்பைன்ஸில் பேரழிவை ஏற்படுத்திய இந்த சூறாவளியின் தாக்கத்தால் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூறாவளி சீனாவின் புஜியான் மாகாணத்தில் கரையை கடந்தது. பாதிக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேலான மக்கள் வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)