You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஞ்சிபுரம் பட்டாசு ஆலை தீ: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு - 13 பேருக்கு சிகிச்சை
காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை பகுதியை அடுத்து குருவிமலை வளத்தோட்டம் பகுதியில் என்ற தனியாருக்கு சொந்தமான பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இந்த பகுதியில் பட்டாசு உற்பத்தி ஆலை இயங்கி வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். இந்த பட்டாசு ஆலையில் திருவிழாவுக்கு வெடிக்கும் பட்டாசுகள் மற்றும் வாண வேடிக்கைகள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இன்று பகல் 12 மணியளவில் பட்டாசு குடோனுக்கு வெளியே காய வைக்கப்பட்டு இருந்த பட்டாசின் மூலப்பொருட்கள் திடீரென தீப்பற்றி எறியத் தொடங்கின.
இந்த தீ வேகமாக பரவி பட்டாசு தயாரிக்கும் ஆலை குடோன் பகுதியிலும் பரவியது. இந்த தீ விபத்து நடைபெற்ற பொழுது, குடோன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 30க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்துள்ளனர். திடீரென தீப்பற்றி எரிந்த பட்டாசு குடோனில், பலத்த வெடிசத்தத்துடன் சிறிய நில அதிர்வை போன்று 5 கிலோ மீட்டர் வரை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர்.
பட்டாசு ஆலையை நோக்கி பதறியடித்து ஓடிச் சென்ற மக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும் காஞ்சிபுரம் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
என்ன நடந்தது?
தீ விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்தில் சிறிய ரக பட்டாசுகள் மற்றும் வாண வேடிக்கைகள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.
நண்பகல் 12 மணியளவில் குடோனுக்கு வெளியே காய வைக்கப்பட்டு இருந்த, பட்டாசின் மூலப்பொருட்கள் திடீரென தீப்பற்றி எரிந்தன.
இந்த தீ வேகமாக பரவி பட்டாசு தயாரிக்கும் ஆலை குடோன் பகுதிக்கும் பரவியது. அந்த நேரத்தில் குடோன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 30க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துள்ளனர். பலத்த வெடி சத்தத்துடன் சிறிய நில அதிர்வை அப்பகுதி மக்கள் உணர்ந்தனர்.
தீ மளமளவென பரவியதைப் பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும் காஞ்சிபுரம் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு வாகனங்களில் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மருத்துவ குழுவினர் வருவதற்கு முன்பாகவே அந்தப் பகுதி மக்கள் விபத்தில் சிக்கியவர்களை ஆட்டோவில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி, டிஐஜி பகலவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் தொழிலாளர்களுடன் ஆலையின் உரிமையாளர் சுதர்சனும்(31) உயிரிழந்தார். இந்த வெடி விபத்தில் சம்பவ இடத்தில் 5 பேரும், காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் 4 பேர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் வெடி விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேர் உள்ளிட்ட 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் .அதில் 5 பேர் செங்கல்பட்டு அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், ஒருவர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். இதில் 7 பெண்கள் அடக்கம்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி, டிஐஜி பகலவன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவரிடம் கேட்டு தெரிந்துகொண்டனர். மேற்சிகிச்சைக்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 46 ஆவது வார்டில் இருந்த பட்டாசு குடோன் வெடி விபத்து நடந்ததில் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐந்து பேர் கேஎம்சிக்கும், செங்கல்பட்டு அரசு மருத்துவனைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 13 பேர் காஞ்சிபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்தில் அனைவரையும் மீட்டு விட்டோம். தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறை ஆய்வு செய்துள்ளனர். இதற்கு உண்டான விசாரணையை காவல் துறை நடத்தி வருகிறது.
இந்த குடோன் 2024 ஆம் ஆண்டு வரை அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
காவல் துறையின் விசாரணையின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்படும். விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புத்துறையினர் சொல்வார்கள் அதற்கான விசாரணை போய்க்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு வரை பட்டாசு குடோன் இயங்க அனுமதி வாங்கியிருக்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறதா என்பது விசாரணையின் அடிப்படையிலேயே தெரிய வரும் என்றார்.
காஞ்சிபுரத்தை அடுத்த வளதோட்டம் பகுதியில் செயல்பட்ட தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை குடோனில்,இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் பலியானார்கள் என்ற செய்திஅறிந்து மிகவும் துயறுற்றேன்.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். வெடி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மரணமடைந்தவர்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அரசை வலியுறுத்துவதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் குருவிமலை வெடிவிபத்தில் இறந்த 8 பேரின் குடும்பத்திற்கு பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இனியும் இதுபோன்ற வெடி விபத்துக்கள் நடக்காமல் தடுக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அதற்கான பயிற்சியையும் பட்டாசு ஆலைகள் வழங்க வேண்டும். தமிழக அரசு அவற்றை உரிய முறையில் கண்காணித்து தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி, டிஐஜி பகலவன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். மேல் சிகிச்சைக்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அன்புமணி கோரிக்கை
இதற்கிடையே, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமப்பகுதிகளில் செயல்பட்டு வரும் வெடி ஆலைகளை கண்காணிக்கவும், அவற்றின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் தனி விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அத்தகைய வெடி ஆலைகளுக்கு பொறுப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். ஏதேனும் விபத்துகள் நடந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியை அரசு பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இறந்தவர்கள் விவரம்
இந்த வெடிவிபத்தில் சசிகலா, தேவி, விஜயா, கஜேந்திரன், சுதர்சன், பூபதி, முருகன், பெயர் தெரியாத மூவர் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். 90 சதவீதத்திற்கு மேல் படுகாயமடைந்த ஜெகதீசன் (35) ரவி (40) இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏழு பெண்கள் உட்பட 14 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமைச்சர் நேரில் ஆறுதல்
மருத்துவமனையில் அமைச்சர் த மோ அன்பரசன் அவர்கள் காயமடைந்தவர்களை பாரவையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் நான்கு பட்டாசு. தொழிற்சாலைகள் உள்ளது. இந்த விபத்து நடந்த தொழிற்ச்சாலையில் 10 பேர் மட்டுமே பணி புரிய வேண்டும். ஆனால் 27 பேர் பணி புரிந்து வருகின்றனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களை நானும், சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறியிருகிறோம்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பான தகவல்களை தமிழ்நாடு முதல்வரிடத்தில் எடுத்துச் சென்று முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.
மேலும் இதுபோன்ற விபத்துகள் நடைபெறாதவாறு மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளிடம் கண்காணிக்க வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தபட்டுள்ளதாக தெரிவித்தவர்.
இந்த ஆலைகளில் அனுமதி பெற்று இயங்கி வந்தாலும் விபத்து நடந்த தொழிற்சாலை அதிபர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிவாரணத்தொகையை அறிவித்துள்ளார்.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்