You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"கோவை குணாவை பற்றி தவறாக பேசுவது வருத்தமளிக்கிறது" - மதுரை முத்து
நகைச்சுவை நடிகரும் மிமிக்ரி கலைஞருமான கோவை குணா உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், பன்முக தன்மையில் சிறந்து விளங்கும் நடிகர்களுக்கு அவர் பெயரில் விருது வழங்க வேண்டும் என்று மேடை கலைஞரும், சின்னத்திரை நகைச்சுவை கலைஞருமான மதுரை முத்து பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
கோவை கணபதி வினாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவை குணா (54). இவர் திருவிழாக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பல குரலில் பேசி கோவை மக்களிடையே பிரபலமனவர்.
தனியார் தொலைக்காட்சிகளில் வெளியான 'கலக்கப்போவது யாரு', 'அசத்தப்போவது யார்' போன்ற நிகழ்ச்சிகள் மூலம் கோவை குணா சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமாக தொடங்கினார். நகைச்சுவை நடிகர் மதுரை முத்து - கோவை குணா ஆகியோர் இணைந்து செய்யும் காமெடிகள் அன்றைய காலகட்டத்தில் ரசிகர்களிடையே தனித்த வரவேற்பை பெற்றிருந்தது.
ரஜினிகாந்த், கவுண்டமணி, ஜனகராஜ், எம்.ஆர். ராதா போன்ற நடிகர்களின் குரலை மிமிக்ரி செய்வது மட்டுமல்லாது அவர்களின் உடல் மேனரிசத்தை தத்ரூபமாக வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டைப் பொற்றவர். கலக்கப்போவது யாரு சீசன் 1 வெற்றியாளரான கோவை குணா சின்னத்திரை நிகழ்ச்சி மட்டுமல்லாது பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் தமிழ்நாடு பல குரல் கலைஞர்கள் என்ற சங்கத்தில் இணைந்து பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அவரது திறமைகளை வெளிப்படுத்தி வந்தார்.
இவரது மனைவி பெயர் ஜூலி. இரண்டு மகள்களுக்கு திருமணமான நிலையில் கோவை குணா தனது மனைவியுடன் கோவையில் வசித்து வந்தார். ஜனவரி மாதம் வரை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்து வந்துள்ளார்.
சர்க்கரை நோய் பாதிப்பு
கடந்த சில ஆண்டுகளாகவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தவருக்கு, டயலாசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. உடல்நலக்குறைவால் கடந்த வெள்ளிக் கிழமை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மார்ச் 20ஆம் தேதி கோவை குணா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கோவை குணாவின் இறப்பிற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள், நகைச்சுவை நடிகர்கள், பல குரல் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை குணா குறித்து பிபிசி தமிழிடம் பேசிய நகைச்சுவை நடிகர் மதுரை முத்து,
பன்முக கலைஞர் என்றால் அது கோவை குணா மட்டும்தான் என்று தெரிவித்தார்.
அவருடன் இணைந்து பல்வேறு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் மதுரை முத்து.
‘பொதுவாக பலரும் உடன் இருக்கும் கலைஞர்களை போட்டியாளராக நினைப்பார்கள். ஆனால், அனைவரையும் நண்பராக பாவித்தவர் கோவை குணா. ஒரு நபரிடம் இவ்வளவு திறமை இருக்குமா என்று அவரை நினைத்து பலமுறை பிரமித்துள்ளேன். பல குரல், நடிப்பு என எது கொடுத்தாலும் கச்சிதமாக செய்வதோடு, அதைவிட யாராலும் சிறப்பாக செய்ய முடியாது என எண்ண வைத்துவிடுவார். அவரது திறமையை பார்த்து இவரை விட நம்மால் என்ன சிறப்பாக செய்ய முடியும் என பயந்ததும் உண்டு. ஆனாலும், நான் சிறப்பாக செய்ய அவர் உற்சாகப்படுத்தி ஊக்கம் அளிப்பார் . தொலைக்காட்சிக்கு வருவதற்கு முன்பே அவர் பிரபலமாக இருந்தார். கோவை மாவட்டத்தில் கோவை குணாவிற்கு என்று ரசிகர்கள் இருந்தனர்’ என்று குறிப்பிட்டார்.
'சினிமா பயன்படுத்திக்கொள்ளவில்லை'
தொடர்ந்து பேசிய அவர், ‘கோவை குணாவை ஈடு செய்வதற்கென்று வேறு கலைஞர்கள் யாரும் இல்லை. நானும் எத்தனையோ நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளேன். ஆனால், கோவை குணாவை போன்று அனைத்து நடிகர்களின் மேனரிசத்தையும் வெளிப்படுத்தக் கூடிய ஒருவரை பார்த்ததில்லை. சிறந்த கலைஞர் என்பதை தாண்டி சிறந்த மனிதநேயம் உடைய நபர் அவர். அவர் நிகழ்ச்சியில் தொடர்ந்து பிற கலைஞர்களுக்கு வாய்ப்பு அளித்தார்" என்று தெரிவித்தார்.
தமிழ் சினிமாவும் கோவை குணாவை பயன்படுத்திக்கொள்ளவில்லை, அவரும் சினிமாவை சரியாக பயன்படுத்திகொள்ளவில்லை என்றும் மதுரை முத்து தெரிவித்தார். ‘கோவை குணா தற்போது உயரத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால் சினிமாவில் பெரிதாக அவர் ஈடுபாடு காட்டவில்லை. சென்னைக்கு அடிக்கடி வரவேண்டும் என்ற அலைச்சலை அவர் தவிர்த்தார். பெரிய பெரிய இயக்குநர்கள், நடிகர்களெல்லாம் கோவை குணாவின் ரசிகர்களாக இருந்தனர். அவர் சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் மிக சிறந்த நடிகராக வெளியே தெரிந்திருப்பார்." என்றார்.
கோவை குணா பெயரில் விருது
மேலும், "தற்போது ஒருசிலர் அவர் கெட்டப் பழக்கத்தால் இப்படி ஆகிவிட்டார் என்று கூறுகின்றனர். அது மிகவும் தவறானது. அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள இன்றைய தலைமுறை கலைஞர்களுக்கு நிறைய உள்ளது. அப்படியிருக்கும்போது, அவரை சிறுமைப்படுத்துவது போல் பேசுவது வருத்தமளிக்கிறது’ என்றும் தெரிவித்தார் கோவை குணா.
பன்முக தன்மையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு கோவை குணா பெயரில் விருது வழங்க வேண்டும் என்று தெரிவித்த மதுரை முத்து, ‘கோவை குணா பெயரில் விருது வழங்கினால் விருதுக்கும் பெருமை அதை பெறுபவர்களுக்கும் பெருமை. அவருக்கு விரைவில் கண்ணீர் அஞ்சலி கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில், வளர்ந்து வரும் கலைஞருக்கு கோவை குணா பெயரில் விருது வழங்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம்." என்று மதுரை முத்து தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்