இலங்கை நெருக்கடி: "உணவுக்காக மக்கள் மத்தியில் கலவரம் ஏற்பட வாய்ப்பு" - சம்பிக்க ரணவக்க

பட மூலாதாரம், PATALI / FACEBOOK
(இன்றைய (மே 23) இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)
இலங்கையில் "எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெறுவதற்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை பெறுவதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி வரும். இறுதியில் பொருட்களை பெற மக்கள் மத்தியில் கலவரம ஏற்பட வாய்ப்புள்ளது என, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"ஜூன் மாதம் நடுப்பகுதியில் நிச்சயமாக மீண்டும் ஒரு தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடி நிலைமை உருவாகும். அது நிச்சயமாக பெரிய அளவில் ஒரு கலவரமாக மாறும். பொருட்களுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பொருளாதார நெருக்கடியை தாங்கிக்கொள்ள முடியாத மக்களால் எரிபொருள், எரிவாயு, மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவுகளை பெற்றுக்கொள்வதற்காக இந்த கலவரம் உருவாகும் என்பது உறுதியாகும்.
இதனால் கடந்த 9 ஆம் தேதி இடம்பெற்ற கலவரம் போல் இல்லாமல் அரசியல்வாதிகள் சொத்துக்கள் மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைவருடைய சொத்துக்களும் கொள்ளையிடப்படும். நாடு தற்போது பாதாளத்துக்குள் தள்ளப்பட்டுவிட்டது.
நாட்டுக்கு கிடைக்கப்பெறும் டாலர்களை கொண்டு மக்களுக்கு எரிபொருள், எரிவாயு பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றுவதை விடுத்து நாட்டை கட்டியெழுப்ப முறையான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை பெற வேண்டும். சர்வ கட்சிகளையும் இணைத்து அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண வேண்டும்" என்றார்.
2024 ஆம் ஆண்டுவரை தேர்தல் நடைபெறாது - கொள்கையளவில் அரசு தீர்மானம்

பட மூலாதாரம், RANIL WICKREMESINGHE/FB
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வகையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுவரை எவ்வித தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனவே, அடுத்த ஆண்டு முழுவதும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டங்களை செயற்படுத்த முன்னுரிமை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, 'தினகரன்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில், இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு பயணம் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "இலங்கை நெருக்கடிக்கான தீர்வை முன்னிறுத்திய பன்னாட்டு ஒத்துழைப்பு மையத்தை நிறுவுதல், கொழும்பில் சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பாக அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடனும் கலந்துரையாடலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வருகிறது 21 ஆவது திருத்தம்

பட மூலாதாரம், Getty Images
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த சட்ட மூலம், அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக, 'தமிழ் மிரர்' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது,
அச்செய்தியில், இரட்டை டியுரிமையை கொண்டவர்கள், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாத வகையில் திருத்தம் மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தவிர, தற்போதுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு மேலதிகமாக தேசிய கணக்காய்வு ஆணைக்குழு மற்றும் தேசிய கொள்வனவு ஆணைக்குழு என்பன சுயாதீன ஆணைக்குழுக்களாக திருத்தப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதுள்ள ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை சுதந்திரமாக்கும் வகையிலும், பலப்படுத்தும் வகையிலும் 21ஆவது அரசமைப்புத் திருத்தம் அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசியலமைப்பு சபையினூடாகவே மத்திய வங்கியின் ஆளுநரை நியமிப்பதற்கும் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார் என்பதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












