இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை திணறடித்த ஷமியின் வேகம், சாதனை படைத்த அஸ்வின்

இந்தியா - ஆஸ்திரேலிய டெஸ்ட்

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. முதல் நாள் முடியும் முன்னரே ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்கள் எடுத்தது.

ஆட்டத்தின் 16வது ஓவரில் மெதுவாக ஆடிக்கொண்டு இருந்த டேவிட் வார்னரை முகமது ஷமி வெளியேற்றினார். அதைத் தொடர்ந்து தாக்குதலை வெளிப்படுத்திய அஷ்வின், ஒரே ஓவரில் லபுஷேன், ஸ்டிவன் ஸ்மித் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டரை ஆடவிடாமல் முடக்கினார்.

இந்திய அணியில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்களை குவித்தது.

நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா, இந்திய மைதானங்களின் மீது விமர்சனத்தை முன்வைத்தது. அதைத் தொடர்ந்து நேற்று டெல்லியில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே ஆஸ்திரேலியா தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

வேகப்பந்து தாக்குதல்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகத் தாக்குதலைத் தொடங்கினார். அவரது ஷார்ட் பாலையும் பவுன்சர் பாலையும் சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் தடுமாறினர்.

இடது கை ஆட்டக்காரர்களான டேவிட் வார்னரும் உஸ்மான் கவாஜாவும் இந்திய அணியின் சிராஜ் மற்றும் ஷமியின் பந்து வீச்சில் மெதுவாகவே ரன்களை சேர்த்தனர். கவாஜா அடிக்கடி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய நிலையில், மோசமான ஃபார்மில் இருக்கும் வார்னர் ரன்களை சேர்க்கத் தடுமாறினார்.

அதைப் பயன்படுத்திக் கொண்ட ஷமி, வார்னரை 16வது ஓவரில் அவுட்டாக்கி பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார். தனது இன்னிங்ஸில், முதல் அரை மணிநேரத்திற்கு ரன் ஏதும் குவிக்காமல் டேவிட் வார்னர் விளையாடியது அவரது மோசமான ஃபார்மை காட்டுவதாக ஈஎஸ்பிஎன் க்ரிக் இன்ஃபோ குறிப்பிட்டுள்ளது. வார்னர் நேற்றைய ஆட்டத்தில் 44 பந்துகளுக்கு 3 பவுண்டரிகளுடன் 15 ரன்களை எடுத்திருந்தார்.

ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரில் விளையாடும் முதல் 7 பேரில் ஐந்து பேர் இடது கை ஆட்டக்காரர்களாக இருந்தனர். இதைப் பயன்படுத்திய இந்திய அணி, வலது கை பவுலர்களான முகமது ஷமி, சிராஜ், அஸ்வின் ஆகியோரைப் பயன்படுத்தி பந்துவீச்சு தாக்குதலைத் தொடுத்தது.

இந்தியா - ஆஸ்திரேலிய டெஸ்ட்

பட மூலாதாரம், Getty Images

முதல் இன்னிங்ஸின் முடிவில் முகமது ஷமி 14.4 ஓவர்களில் 60 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த உதவினார்.

இறுதியில் ஆஸ்திரேலியா அணி, 263 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கவாஜா 81 ரன்களும், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆட்டமிழக்காமல் 72 ரன்களும் குவித்தனர்.

இந்திய ஆடுகளங்களில் வேகப்பந்து வீசுவது கடினமாக இருக்கும். டெஸ்ட் போட்டிகளில் இந்திய ஆடுகளங்கள் வேகப்பந்துக்குச் சாதகமாக இருக்காது. ஆனால் சரியான இலக்கை குறி வைத்து சீரான வேகத்தில் பந்துகளை வீசினால் நிச்சயம் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்.

இந்திய மைதானங்களில் பவுன்சர் வீசுவது பலனைத் தராது என ஆடுகளத்தை வடிவமைப்பவர்கள் எங்களிடம் கூறுவார்கள். ஆனால் சரியாகத் திட்டமிட்டு பயன்படுத்தினால், இந்தியாவுக்கு பவுன்சர்கள் சிறந்த ஆயுதமாக மாற முடியும் என்று நேற்றைய போட்டிக்குப் பிறகு முகமது ஷமி பேசினார்.

இந்தியா - ஆஸ்திரேலிய டெஸ்ட்

பட மூலாதாரம், Getty Images

சாதனை படைத்த அஸ்வின்

நேற்றைய முதல் நாள் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், டெஸ்ட் போட்டியில் ஒரு அணிக்கு எதிராக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அவருக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 20 போட்டிகளில் 111 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.

அதைத் தொடர்ந்து நேற்று அலெக்ஸ் காரேவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின்.

நேற்றைய போட்டியில் ஷமி முதல் விக்கெட்டை வீழ்த்தியிருந்தாலும், ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித், அலெக்ஸ் கேரி ஆகிய மூவரின் விக்கெட்டுகளை எடுத்து இந்திய பவுலிங்கில் முக்கியப் பங்காற்றினார் அஸ்வின்.

இந்தியா - ஆஸ்திரேலிய டெஸ்ட்

பட மூலாதாரம், Getty Images

குறிப்பாக ஒரே ஓவரில் லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரின் விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியது, ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

மேலும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித், அலெக்ஸ் கேரி ஆகிய இருவரையும் அஸ்வின் டக் அவுட் ஆக்கினார்.

அஸ்வினால் வலது கை ஆட்டக்காரர்களுக்கு பந்து வீச முடியாதா?

இடது கை ஆட்டக்காரர்களுக்கு எதிராக அஸ்வின் சிறப்பாகப் பந்து வீசி வருவதாகவும், ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டரில் 5 பேர் இடது கை ஆட்டக்காரர்களாக இருப்பது பற்றியும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கருத்து தெரிவித்திருந்தார்.

"அஸ்வினால் இடது கை ஆட்டக்காரர்கள் விக்கெட்டுகளை மட்டுமே எடுக்க முடியும் என்ற இந்திய கேப்டனின் பேச்சு மோசனாது. என்னைப் பொருத்தவரை தற்போதைய இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மட்டுமே. அதை நேற்றைய போட்டியின்போது லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இரண்டு வலது கை ஆட்டக்காரர்களின் விக்கெட்டை எடுத்து நிருபித்துள்ளார் அஸ்வின்," என்று முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான இயான் சேப்பல் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலிய டெஸ்ட்

பட மூலாதாரம், Getty Images

இது குறித்துப் பேசியுள்ள அஸ்வின், "லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித் இருவரும் கடந்த டெஸ்ட் போட்டியின்போது கீரிஸை விட்டு வெளியே வந்து லெக் சைடில் பந்தை அடிக்க முயற்சி செய்தார்கள். அதைக் கவனித்து இந்தப் போட்டியின்போது பந்தை ஆஃப் சைடில் சற்று வெளியே வீசினேன். அது விக்கெட்டாக மாறியதில் மகிழ்ச்சி.

நாக்பூர் போட்டியின்போது எனது பந்து வீச்சு ரிதம் இல்லாமல் இருந்தது. ஆனால் நேற்றைய ஆட்டத்திற்குப் பிறகு மீண்டும் ரிதம் வந்துள்ளதை உணர்கிறேன்," என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசினார்.

ஆஸ்திரேலிய அணியால் வெற்றி பெற முடியுமா?

முதல் நாளிலேயே 263 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆட்டமிழந்த நிலையில், இந்த டெஸ்ட் போட்டியில் அந்த அணி வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலிய டெஸ்ட்

பட மூலாதாரம், Getty Images

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவதற்கு, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளுக்கும் இந்த போட்டியில் பெறும் வெற்றி முக்கியமானது.

இந்திய அணியைப் பொருத்தவரை இந்தத் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றுவது, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற உதவும். அதே நேரத்தில் தொடரை இழப்பது ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடும்.

மேலும் டெல்லி மைதானத்தில் புற்களின் அளவு குறைவாக இருப்பது, பேட்டிங் செய்யும் அணிக்கு சற்று கடினமாக இருக்கும். ஆனால் ஆஸ்திரேலியா பெற்ற 263 ரன்கள் என்பது, இந்திய அணியைக் கட்டுப்படுத்தி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற உதவுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 68 ரன்களை எடுத்து, பேட்டிங் செய்து வருகிறது.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: