'தனிநபர் மீதான கடன் ரூ.1.28 லட்சம்': மக்கள் கவலைப்பட வேண்டுமா?

பட மூலாதாரம், TN DIPR
'தமிழ்நாட்டில் பிறக்கும் ஒரு குழந்தை, இணை மாநிலங்களைவிட (கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா) மிக அதிக கடன் சுமையுடன் பிறக்கிறது' என, தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தனிநபர் மீதான கடன் தொகை, 2025-26 ஆம் ஆண்டில் 1,28,934 ரூபாயாக உயர்ந்துவிட்டதாக, அரசின் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020-21 ஆம் ஆண்டில் தனி நபர் மீதான கடன் என்பது 67,087 ரூபாயாக இருந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் இதன் அளவு இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்தக் கடனால் தனி நபர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?
தமிழ்நாட்டின் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையை செவ்வாய்க் கிழமையன்று தலைமைச் செயலகத்தில் நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், " 2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டைப் போலவே தொழில்துறை அமைப்பு மற்றும் பொருளாதார அளவு கொண்ட கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களுடன் ஒப்பீடு செய்தோம்." எனக் கூறினார்.
மற்ற மாநிலங்கள் தங்களின் நிதிப் பற்றாக்குறையைக் குறைத்த காலகட்டத்தில் அதற்கு நேர்மாறாக தமிழ்நாடு அரசு செயல்பட்டதாக, அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
திருக்குறளில் 478வது குறளான, 'ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை' என்ற குறளை மேற்கோள் காட்டிப் பேசிய அமைச்சர், "வருவாய் குறைவாக இருந்தால் தீமை இல்லை. ஆனால் அளவுக்கு மீறாமல் செலவுகள் இருந்தால் போதும்." எனக் குறளுக்கு விளக்கம் அளித்தார்.
'கடன் அளவு 13.18 லட்சம் கோடி ரூபாய்'

பட மூலாதாரம், TNDIPR
தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிலுவை கடன் 10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாகவும் இவை 28.3 சதவிகிதம் எனவும் வெள்ளை அறிக்கை வெளியிட்ட அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
மாநிலத்தின் மொத்த வருவாய் வரவில் வட்டி செலவினம் 22.8 சதவிகிதம் எனக் குறிப்பிட்ட அமைச்சர், "மொத்த வருவாய் வரவுகளில் தவிர்க்க இயலாத செலவீனம் என்பது 64.4 சதவிகிதமாக உள்ளது" எனக் குறிப்பிட்டார்.
அரசின் உண்மையான கடன் அளவு என்பது 13.18 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாகக் கூறிய அமைச்சர், "வட்டி, ஊதியம், ஓய்வூதியம் ஆகிய மூன்று விஷயங்களுக்காக மட்டும் 64.4 சதவிகிதத்தை அரசு செலவிடுகிறது" என்கிறார்.
அமைச்சர் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில், '2021 - 26 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 4.87 லட்சம் கோடி ரூபாய் கடன் பெறப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த ஐந்தாண்டு கால கடன் என்பது தமிழ்நாடு தனது முதல் அறுபது ஆண்டுகாலத்தில் திரட்டிய கடனை விட அதிகம்' எனவும் கூறப்பட்டுள்ளது.
மூலதனச் செலவினங்களின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 8.3 சதவிகிதமாக உள்ள நிலையில் கடன் வளர்ச்சி விகிதம் 14.3 சதவிகிதமாக உள்ளதாக வெள்ளை அறிக்கை கூறுகிறது.
'இது முதலீடு செய்வதற்காக அல்லாமல் அன்றாட செலவுகளுக்காகக் கடன் பெறுவதைக் குறிக்கிறது' என வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த வருவாய் வரவுகளில் வட்டி விகிதம் குறித்து இணை மாநிலங்களுடன் (கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா) ஒப்பிட்டு தமிழ்நாடு அரசு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், மகாராஷ்டிரா 10.3 சதவிகிதம் எனக் குறைந்த அளவில் உள்ளது. கர்நாடகா 16.4 சதவிகிதம், குஜராத் 12.0 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. ஆனால், தமிழ்நாடு 22.8 சதவிகிதம் என்ற அளவில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
'மூன்றில் ஒரு ரூபாய் கடனுக்கு வட்டி'
மாநிலத்தின் மொத்த வருவாயில் 22.8 சதவிகிதம் வட்டிக்கு செலுத்தப்படுகிறது எனவும் சொந்த வரி வருவாயில் ஏறத்தாழ மூன்றில் ஒரு ரூபாய், எந்தவொரு ஒதுக்கீட்டுக்கும் முன்பாக முழுவதுமாக கடனுக்காக வட்டியைச் செலுத்துவதற்கே செல்வதாக வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் சொந்த வரி வருவாய் சரிவுப் பாதையில் செல்வதாகக் கூறியுள்ள தமிழ்நாடு நிதித்துறை, 'சரக்கு மற்றும் சேவை வரித் துறையில் அமைப்பு சார்ந்த ஊழல் காரணமாக கணிசமான இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இணை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது' என்கிறது.
'முத்திரைத் தாள் கட்டணம் சந்தை மதிப்பைவிட மிகவும் குறைவு' எனக் குறிப்பிட்டுள்ள வெள்ளை அறிக்கை, 'பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது ஆயத்தீர்வை வருவாய் என்பது மிகக் குறைவான வளர்ச்சியாக உள்ளது' எனத் தெரிவித்துள்ளது.
மாநிலம் பெருமளவு கனிமவள ஆதாரங்களைக் கொண்டுள்ள போதிலும் அத்துறையின் மூலம் பெறப்படும் வருவாய் பெரியளவில் மாற்றமின்றியே உள்ளதாகவும் கனிம வளத்துறையில் நடந்த ஊழலும் வருவாய் இழப்பும் அனைவருக்கும் தெரிந்த ரகசியமாக உள்ளதாகவும் நிதித்துறை கூறியுள்ளது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளார் முன்னாள் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.
'3 வெள்ளை அறிக்கைகள்.. என்ன வித்தியாசம்?'

பட மூலாதாரம், Thangam Thennarasu
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வெள்ளை அறிக்கை என்பது நிதி நிலையின் புள்ளிவிவரங்களைக் குறித்து இல்லாமல் வெற்று அறிக்கையாக உள்ளது" எனக் குறிப்பிட்டார்.
வெள்ளை அறிக்கையின் உண்மையான நோக்கம், தனது இயலாமையை மூடிமறைக்கும் வகையில் இதை ஒரு யுக்தியாக த.வெ.க அரசு பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பதால் அதில் இருந்து தப்பிக்கும் நோக்கில் தி.மு.க மீது பழிசொல்லும் நோக்கில் வெற்று அறிக்கையை வெளியிட்டுள்ளதாக அவர் சாடினார்
தமிழ்நாட்டில் 2001-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இதன்பிறகு 2021-ஆம் ஆண்டு நிதி அமைச்சராக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தற்போது த.வெ.க அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதனைக் குறிப்பிட்டுப் பேசிய தங்கம் தன்னரசு, "மூன்று முறை வெளியிடப்பட்டிருந்தாலும் இந்த வெள்ளை அறிக்கையில் என்ன வித்தியாசம் என்பதைப் பார்க்க வேண்டும்" எனக் கூறினார்.
"1991 முதல் 2001 ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டு கால நிதிநிலை நிலவரம் குறித்து ஜெயலலிதா வெள்ளை அறிக்கை வெளியிட்டார்" என்கிறார், தங்கம் தென்னரசு.
2021 ஆம் ஆண்டு தி.மு.க அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை என்பது, 2006 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான 15 ஆண்டுகால ஆட்சியைக் கணக்கில் கொண்டு வெளியிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
'20 லட்சம் கோடியாக உயரும்'
ஆனால், த.வெ.க அரசு கடந்த ஐந்தாண்டுகால தி.மு.க ஆட்சியை மட்டும் எடுத்துக் கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளதாக தங்கம் தென்னரசு சாடினார்.
தமிழ்நாட்டின் கடன் அளவு என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிகரித்து வருவதாகக் கூறிய தங்கம் தென்னரசு, "2006 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 57,457 கோடி ரூபாய் வாங்கப்பட்டது. 2011-12 காலகட்டத்தில் இந்தக் கடன் இரு மடங்காக உயர்ந்தது" எனக் கூறினார்.
"2016-17 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கடன் அளவு 2,11,066 கோடியாக இருந்தது. பிறகு 2021-22 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 4 லட்சத்து 85 ஆயிரம் கோடியாக உயர்ந்தது" என்கிறார் தங்கம் தென்னரசு.
அதன்பிறகு பத்து லட்சம் கோடியாக உயர்ந்ததாகக் கூறிய அவர், "தி.மு.க ஆட்சியில் இரு மடங்காக அதிகரித்துவிட்டதாகக் கூறுகின்றனர். இது தொடர்ச்சியாக வரக் கூடிய முறையாக (Pattern) உள்ளது." எனக் குறிப்பிட்டார்.
வரும் ஐந்தாண்டுகளை த.வெ.க அரசு நிறைவு செய்தால் அவர்களின் கடன் என்பது 20 லட்சம் கோடியாக உயரும் எனக் கூறிய தங்கம் தென்னரசு, "இதை யாராலும் தவிர்க்க முடியாது. சராசரி கடனைவிட குறைத்து வாங்கினோம் என நிரூபித்தால் பொறுப்பில் இருந்தே விலகிக் கொள்கிறேன்." எனவும் சவால்விடுத்தார்.
'அதிக கடன் சுமையுடன் பிறக்கும் குழந்தைகள்'

பட மூலாதாரம், Nagappan
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில், தனி நபர் மீதான கடன் என்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
நிதித்துறை வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில், 'தமிழ்நாட்டில் 2020-21 ஆம் ஆண்டில் ஒவ்வொரு தனிநபர் மீதான கடன் என்பது 67,087 ரூபாயாக இருந்தது. இந்தக் கடன் 92 சதவிகிதம் வளர்ச்சியடைந்து 2025-26 ஆம் ஆண்டில் 1,28,934 ரூபாயாக உயர்ந்துள்ளது' எனக் கூறப்பட்டுள்ளது.
'இணை மாநிலங்களில் (கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா) தனி நபர் மீதான கடன் மிகக் குறைந்த அளவில் உள்ளது. தமிழ்நாட்டில் பிறக்கும் ஒரு குழந்தை, இணை மாநிலங்களைவிட மிக அதிகமான கடன் சுமையுடன் பிறக்கிறது' என அரசின் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"தனி நபர்கள் மீதான கடன் எனக் குறிப்பிடுவது ஏன்? இதனால் தனி நபர்களுக்கு ஏதேனும் விளைவுகள் ஏற்படுமா?" என, முதலீட்டு ஆலோசகர் நாகப்பனிடம் பிபிசி தமிழ் பேசியது.
"இந்தத் தொகையை தனிநபர்கள் செலுத்தப் போவதில்லை. ஆனால், கடன் தொகை அதிகரிப்பது உண்மையிலேயே ஆபத்தானது," என்கிறார் அவர்.
கடன் வாங்கக் கூடாது என்பதாக தான் இதைப் பார்க்கவில்லை எனக் கூறும் நாகப்பன், "வீடு கட்டக் கடன் வாங்கினால் அது லாபகரமானது. கல்விக் கடன் பெற்றாலும் லாபகரமான கடனாகப் பார்க்கலாம். அதுவே திருமணத்துக்குக் கடன் வாங்கினால் நஷ்டமாகப் பார்க்கப்படும்." என்கிறார்.
தொடர்ந்து பேசும்போது, "கடன் வாங்கி நெய்வேலி நிலக்கரி சுரங்கம், பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் போன்று ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதன்மூலம் லாபம் கிடைத்தால் அது சிறந்த முதலீடாக பார்க்கப்படும். ஆனால், அவ்வாறு எதுவும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படவில்லை" எனத் தெரிவித்தார்.
1986 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் டிட்கோவுடன் (தொழில் வளர்ச்சிக் கழகம்) இணைந்து டைட்டன் நிறுவனம் கைக்கடிகார உற்பத்தியை தொடங்கியது. அடுத்த சில ஆண்டுகளில் கைக்கடிகார சந்தையில் முதலிடத்தை டைட்டன் பிடித்தது.
இதனைக் குறிப்பிட்டுப் பேசிய நாகப்பன், "டைட்டன் நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு முதலீடு செய்தது. இந்த முதலீட்டின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாய் கிடைத்தது." என்கிறார்.
"ஆனால், அரசாங்கத்தை நடத்துவதற்கு கடன் வாங்குவதன் மூலம் எந்தவித லாபமும் வரப் போவதில்லை," எனவும் அவர் குறிப்பிட்டார்.
'தனி நபர்களுக்கு பாதிப்பு இல்லை'

பட மூலாதாரம், Soma Valliappan
கடன் அட்டைகள் (Credit card) வாங்கும்போது தவணை, தாமத வட்டி எனக் கட்டும்போது அதன் ஆபத்துகளை மக்கள் உணர்ந்துகொள்வதாகக் கூறிய நாகப்பன், "கடன் பெறுவதை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது சரியானதாக இல்லை." என்கிறார்.
இதற்கான தீர்வை முன்வைத்த நாகப்பன், "அரசுத் துறைகளில் எங்கெல்லாம் ஊழல் நடக்கிறது என்பதைக் கண்டறிந்து அதனைச் சரிசெய்வதன் மூலம் கடன் அளவைக் குறைக்க முடியும். இதனால் தனி நபர்களுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு இல்லை." எனத் தெரிவித்தார்.
ஆட்சி மாற்றங்களின்போது மட்டுமே வெள்ளை அறிக்கை வெளிவருவதாகக் கூறுகிறார், பொருளாதார ஆலோசகர் சோம.வள்ளியப்பன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அரசு திட்டமிடுகிற மூலதனச் செலவுகள் குறைந்து கொண்டே வருகின்றது. மாநிலத்தின் சொந்த வரி வருவாய் குறைந்து கடன் அளவு அதிகரிப்பது கவலை தரக்கூடிய ஒன்றாக உள்ளது." என்கிறார்.
'தனி நபர் மீதான கடன்' என வெள்ளை அறிக்கை கூறுவது குறித்துப் பேசிய அவர், "அதை ஒருவித கணக்காக பேசுகின்றனர். அதை வைத்து மக்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை." எனக் குறிப்பிட்டார்.
"மாநில அரசின் மொத்த உள்நாட்டு வளர்ச்சியில் கடன் தொகை 28 சதவீதமாக உள்ளது. இதில், தனி நபர் மீதான கடன் என்பது மக்களிடம் சொல்வதற்கு சுவாரஸ்யமானதாக இருக்கிறது. அதனால் எந்தவித பயனும் இல்லை," என்கிறார் சோம.வள்ளியப்பன்.
"மக்கள் சார்பாக அரசு கடன் பெறவில்லை. மாறாக செலவு செய்வதற்காக கடன் வாங்குகின்றனர். அதை அரசு திருப்பிச் செலுத்தும்" எனக் கூறிய அவர், "மாநிலத்தின் மொத்த சொத்துகளைக் கணக்கிட்டால் தனி நபருக்கு தலா மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைக் கொடுக்கலாம். அதற்காக அந்தச் சொத்து கிடைக்கும் என ஒருவர் எதிர்பார்க்க முடியாது." எனக் கூறுகிறார்.
அதைப் போலவே தனி நபர் மீதான கடன் எனக் குறிப்பிட்டு நிதி அமைச்சர் பேசுவதாக சோம.வள்ளியப்பன் குறிப்பிட்டார்.
கடந்த தி.மு.க ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், "இதற்கு முந்தைய காலங்களில் மக்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்த மானியத் தொகை, புதிய திட்டங்களின் மூலம் அதிகரித்துவிட்டதாக கடந்த ஆட்சியாளர்கள் கூறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன." என்கிறார்.
"மொத்த உள்நாட்டு வளர்ச்சியில் இருந்து தான் கடன் அளவைக் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். மாறாக, தனி நபர் மீதான கடன் எனக் கூறி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக பேசப்படுகிறது" எனவும் அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



















