இந்திய வீரர்களின் பந்துவீச்சால் முதல் நாளே ஆல் அவுட் ஆகி சுருண்ட ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Sportzpic

பிரசுரிக்கப்பட்டது

இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான இரண்டாம் டெஸ்ட் போட்டி இன்று டெல்லியில் துவங்கியுள்ளது. முதலில் பேட்டிங்கை துவங்கிய ஆஸ்திரேலிய அணி 263 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து இரண்டாம் பாதியில் பேட்டிங்கை துவங்கிய இந்திய அணி 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்றைய ஆட்டம் நேரம் முடிவடைந்தது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது. நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 132 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது. இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாம் டெஸ்ட் போட்டி துவங்கியுள்ளது.

இந்த ஆட்டம் இந்திய வீரர் சத்தேஷ்வர் புஜாராவிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் 100வது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது.

இரண்டாவது டெஸ்டிற்கான இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. கடந்த போட்டியின் மூலம் சர்வதேச டெஸ்டில் அறிமுகமான சூர்யகுமாருக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சமீப காலமாக சொதப்பினாலும் தொடக்க வீரர் லோகேஷ் ராகுலுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் எதிர்பார்க்கப்பட்ட படியே, டிரெவிஸ் ஹெட் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நாக்பூர் டெஸ்டில் விளையாடிய ஸ்காட் போலாண்டு, மேத்யூ ரென்ஷா ஆகியோர் நீக்கப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக ட்ரெவிஸ் ஹெட், மேத்யூ குஹ்னேமன் ஆகிய இருவரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

காயத்தில் இருந்து மீளாததால் மிட்செல் ஸ்டார்க், கேமரூன் கிரீன் ஆகிய இருவரும் இந்த போட்டியிலும் களமிறங்க முடியாமல் போய்விட்டது.

கிரிக்கெட்

பட மூலாதாரம், Sportzpic

இந்திய பந்துவீச்சில் திணறிய ஆஸ்திரேலியா

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் – உஸ்மான் கவாஜா ஜோடி களமிறங்கியது. 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் சேர்த்திருந்த வார்னரை முகமது சமி ஆட்டமிழக்கச் செய்தார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அதன் பின்னர், முதல் டெஸ்டைப் போலவே அஸ்வின் – ரவீந்திர ஜடேஜா சுழற்பந்துக் கூட்டணி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடித்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க துவங்கியது. லபுஷேனே 18 ரன்களிலும், ஸ்டீவன் ஸ்மித் ஒரு ரன் கூட எடுக்காமலும் அஸ்வினின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த டிராவிஸ் ஹெட் 12 ரன்களோடு வெளியேறினார்.

தொடக்க வீரராக களமிறங்கி நிலைத்து நின்று, அதேநேரத்தில் அதிரடியாகவும் விளையாடிய உஸ்மான் கவாஜாவை ரவீந்திர ஜடேஜா வெளியேற்றினார். கவாஜா 125 பந்துகளில் 12 பவுண்டரிகள், ஒரு சிக்சர் விளாசி 81 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் – ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் ஜோடி விக்கெட் சரிவை த டுத்து நிறுத்தி, தங்களது அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடியது.

சிறிது நேரம் நிலைத்து ஆடிய கம்மின்ஸை எல்.பி.டபிள்யூ முறையில் ரவீந்திர ஜடேஜா வெளியேற்றினார். அவர் 33 ரன்களை எடுத்திருந்தார்.

கம்மின்சைத் தொடர்ந்து வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் யாருமே நிலைக்கவில்லை. ஒரு முனையில் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் நிலைத்து நின்று போராட, மறுமுனையில் வந்த டாட் மர்பி, நாதன் லியோன், மேத்யூ குஹ்னேமன் ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 142 பந்துகளில் 72 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களில் ஆல்அவுட்டானது.

இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். உஸ்மான் கவாஜாவை வீழ்த்திய போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 250வது விக்கெட் என்ற மைல் கல்லை ரவீந்திர ஜடேஜா எட்டினார்.

இரண்டாவது டெஸ்டிலும் இந்திய அணி முன்னிலை பெறுமா?

கிரிக்கெட்

பட மூலாதாரம், Sportzpic

பின்னர் முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களுடனும், கே.எல் ராகுல் 4 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

நாளை இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆடி ரன்களைக் குவிக்கும் பட்சத்தில் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற வாய்ப்புள்ளது. இந்திய அணி வலுவான முன்னிலை பெறும் பட்சத்தில் இந்த டெஸ்டிலும் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: