டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்துடன் இந்தியாவுக்கு இரண்டு புள்ளிகள் கிடைக்காவிட்டால் என்னவாகும்?

பட மூலாதாரம், Getty Images
டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 பிரிவில் இன்று இந்தியாவும் வங்கதேசமும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெல்லும்பட்சத்தில் இந்தியாவுக்கு அரையிறுதிக்கான வாய்ப்பு பிரகாசமாகும்.
ஏற்கெனவே இந்தியாவும் வங்கதேசமும் இரு போட்டிகளில் வென்று தலா 4 புள்ளிகள் பெற்றிருக்கின்றன. எந்த அணி வெற்றிபெற்றாலும் அந்த அணி அரையிறுதியை எட்டுவதற்கு வாய்ப்பு அதிகரிக்கும்.
"இந்தத் தொடரில் குறைந்தது நான்கு போட்டிகளில் வெல்ல வேண்டும்" என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வலியுறுத்தியிருக்கிறார். அதனால் எந்த வகையிலும் வங்கதேச அணியை குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதில் இந்திய அணி உறுதியாக இருப்பது தெரிகிறது.
இந்தியாவின் தொடக்க இணை குழப்பம்
இந்திய அணி இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றியும் கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான போட்டியில் தோல்வியும் அடைந்திருக்கிறது.
மூன்று போட்டிகளிலும் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். ஆனால் எந்தப் போட்டியிலும் இந்த இணை நீடித்து நின்று ஆடவில்லை. குறிப்பாக கே.எல். ராகுல் எந்தப் போட்டியிலும் அதிக ரன்களைக் குவிக்கவில்லை. இது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ஆயினும் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் கே.எல். ராகுல் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிகிறது. பேட்டி ஒன்றில் டிராவிட் இதை வெளிப்படுத்தினார்.
தென்னாப்பிரிக்க ஆட்டத்தில் வெளிப்பட்ட பலவீனம்
பாகிஸ்தானையும், நெதர்லாந்தையும் தோற்கடித்த களிப்பில் இருந்த இந்தியாவை தென்னாப்பிரிக்காவின் வேகப் பந்து வீச்சாளர்கள் பலவீனப்படுத்தினார்கள். லுங்கி நிகிடின் பந்துவீச்சில் பெர்த்தின் ஆடுகளத்தில் இந்திய ஆட்டக்காரர்கள் தடுமாறினார்கள்.

பட மூலாதாரம், PAUL KANE
சூர்யகுமார் யாதவ் தவிர வேறு யாரும் அதிகளவு ரன்களைக் குவிக்க முடியவில்லை. அணியில் சேர்க்கப்பட்ட தீபக் ஹூடாவும் சொற்ப ரன்களை மட்டுமே சேர்த்தார். வரும் போட்டியில் இந்தப் பலவீனத்தை இந்திய அணி சரி செய்ய வேண்டியிருக்கும்.
இந்தியா - வங்கதேசம் யார் பலசாலி?
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி வங்கதேசத்துடன் டி20 போட்டியில் மோதுகிறது. இந்திய அணி பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை வென்றிருப்பது, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா ஆகியோர் ஃபார்மில் இருப்பதும் இந்தியாவுக்கு பலமாகக் கருதப்படுகிறது.
அதே நேரத்தில் வங்கதேசம் வென்ற இரு போட்டிகளிலும் அந்த அணியின் சார்பில் ஆட்ட நாயகன் விருதை வென்ற தொடக்க வேகப் பந்துவீச்சாளர் தக்சின் அகமது இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருப்பார் என்று கருதப்படுகிறது.
ஆனால் அவை இரண்டும் நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக நடந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் 3 ஓவர்களில் 46 ரன்களைக் கொடுத்தார்.
மைதானம் எப்படி?
போட்டி நடக்கும் அடிலெய்ட் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சராசரியாக 170 ரன்கள் வரை எடுக்கக்கூடிய மைதானம் இது. இந்த மைதானத்தில் இந்தியா இதுவரை ஒரேயொரு டி20 போட்டியில் ஆடியிருக்கிறது. 2016-ஆம் ஆண்டு நடந்த இந்தப் போட்டியில் இந்தியா 37 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது.
வங்கதேசமும் இங்கு ஆடிய ஒரேயொரு போட்டியில் இங்கிலாந்து அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது.
மழை பெய்தால் என்னவாகும்?
இந்தப் போட்டி நடைபெறும் அடிலெய்டில் இன்று காலை முதல் மழை இல்லை என்றாலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது. அப்படி ஒரு வேளை மழை பெய்தால் இந்திய அணிக்கு ஒரு புள்ளி மட்டுமே கிடைக்கும். வங்கதேசத்துக்கும் 1 புள்ளி கிடைக்கும். அடுத்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும் வங்கதேசம் உள்ளிட்ட பிற அணிகளின் போட்டிகளின் முடிவுக்கு வரும் வரை காத்திருக்க வேண்டும்.
இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு எப்படி?
நடப்பு டி20 தொடரில் இந்தியா முதல் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. பாகிஸ்தான், நெதர்லாந்துக்கு எதிராக அடுத்தடுத்து 2 வெற்றிகளால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா, தற்போது அதே 4 புள்ளிகளுடன் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வங்கதேசமும் 4 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. எதிர்வரும் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே உடனான போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும்.
ஒருவேளை இந்தியா தோல்வியடைந்தால் புள்ளிப்பட்டியலில் அடுத்த இடங்களை வகிக்கும் வங்கதேசம், ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகளுக்குள் போட்டி நிலவும்.

பட மூலாதாரம், PAUL KANE
வங்கதேசத்துக்கு என்ன வாய்ப்பு?
வங்கதேசம் 3 போட்டிகளில் ஆடி நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதன் ரன் ரேட் மைனஸ் 1.533. இன்னும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் மோத வேண்டியிருக்கிறது. இந்தியாவை விட ரன்ரேட்டில் மிகவும் குறைவாக இருப்பதால் அந்த அணிக்கான வாய்ப்புக் குறைவுதான்.
எனினும் இந்தியா தோல்வியைச் சந்தித்து, ரன்ரேட்டும் குறைந்தால் வங்கதேசத்துக்கு வாய்ப்புக் கிடைக்கும். அந்த அணி குறைந்தது இன்னும் ஒரு போட்டியில் வென்றாக வேண்டும். இரண்டு போட்டிகளிலும் வென்றால் சந்தேகமே இல்லாமல் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும்.
தென்னாப்பிரிக்கா தகுதி பெற்றுவிட்டதா?
மூன்று போட்டிகளில் ஆடியுள்ள தென்னாப்பிரிக்கா 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதன் ரன் ரேட் 2.772. இன்னும் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் ஆட வேண்டியிருக்கிறது. இதில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே அரையிறுதிக்கான வாய்ப்பு பெரும்பாலும் உறுதியாகிவிடும்.
வங்கதேசமோ, ஜிம்பாப்வேயோ இரு போட்டிகளிலும் வென்று ஏழு, எட்டு புள்ளிகளைப் பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா தகுதி பெற்றுவிடும்.
ஜிம்பாப்வேக்கு வாய்ப்பு இருக்கிறதா?
மூன்று போட்டிகளை ஆடியுள்ள ஜிம்பாப்வே அணி மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதன் ரன் ரேட் மைனஸ். 0.050. நெதர்லாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுடன் ஜிம்பாப்வே மோத வேண்டியிருக்கிறது. இருபோட்டிகளிலும் வெற்றிபெற்றால் அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்புக் கிடைக்கும். இந்தியாவுடன் தோற்றுவிட்டால் அரையிறுதிக்குச் செல்ல முடியாது.
நெதர்லாந்து அணியைப் பொறுத்தவரை அந்த அணி மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துவிட்டதால் ஏற்கெனவே அரையிறுதிக்கான தகுதியை இழந்துவிட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













