விராட் கோலி - சூர்யகுமார் யாதவ் மேஜிக்கில் டி20 தொடரை வென்ற இந்தியா: கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள்

    • எழுதியவர், அஷ்ஃபாக் அஹ்மத்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

ஹைதராபாத்தில் நடைபெற்ற 3வது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை கடைசி ஓவரில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியிருக்கிறது இந்திய அணி. கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பை தனது ஸ்டைலான அணுகுமுறை மூலம் முடிவுக்கு கொண்டு வந்தார் ஹர்திக் பாண்டியா.

ஆசிய கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறிய பிறகு, அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் விதமாக பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது இந்திய அணி.

இந்த தொடரில் முதல் ஆட்டத்தை ஆஸ்திரேலியா வென்றிருந்தாலும் அடுத்த 2 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றி வாகை சூடியிருக்கிறது இந்திய அணி.

குறிப்பாக சில வீரர்கள் கம்பேக் கொடுத்திருப்பது இந்திய அணிக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது. இதில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல் உள்ளிட்டோர் கவனிக்கப்பட வேண்டியவர்கள்.

'எனது பேட்டிங் மகிழ்ச்சியளிக்கிறது' - விராட் கோலி

உலகின் டாப் பேட்ஸ்மேனாக வலம் வருவது அவ்வளவு எளிதல்ல. பேட்டிங்கில் சறுக்கினால் பல விமர்சனங்களையும் உளவியல் நெருக்கடிகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட ஒரு கடினமான சூழல்தான் விராட் கோலிக்கும் அமைந்தது.

பல மாதங்களாக பேட்டிங்கில் திணறியது, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது என அடுத்தடுத்த சவால்களை அவர் கடக்க வேண்டியிருந்தது. தான் மன ரீதியாக பலவீனமாக உணர்வதாகவும் இது குறித்துப் பேச தான் வெட்கப்படவில்லை என்றும் கடந்த மாதம் வெளிப்படையாகவே கூறியிருந்தார் விராட் கோலி.

பலவீனமாக இருப்பதை ஒப்புக் கொள்வதை விட பலமாக இருப்பது போல போலியாகக் கூறுவது மிகவும் மோசமானது என்றார் கோலி.

அவர் மீது அவ்வளவு பிரியம் இல்லாத கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்த வார்த்தைகள் ஓர் அனுதாபத்தை ஏற்படுத்தியது.

ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி அடித்த சதம் அவருக்கு நிச்சயம் ஒரு பெரிய ஆறுதலை தந்திருக்கும். இதை ஆஸ்திரேலியா உடனான வெற்றிக்குப் பிறகு விராட் கோலியும் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆசிய கோப்பைக்குப் பிறகு தனது பேட்டிங் மகிழ்ச்சியளிப்பதாகவும் ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்துவதாகவும் கூறினார் விராட் கோலி. முதல் டி20-ல் 2 ரன்கள், 2வது போட்டியில் 11 ரன்கள் எடுத்து தடுமாறினாலும் கடைசி ஆட்டத்தில் 63 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டிருக்கிறார் கோலி. டி20 உலகக்கோப்பையில் கோலியின் பங்களிப்பு இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அதிரடியில் நம்பிக்கை அளிக்கும் சூர்யகுமார்

இரண்டாவதாக சூர்யகுமார் யாதவ். நேற்றைய ஆட்டத்தில் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்து 69 ரன்களை குவித்த ஆட்டநாயகன் இவர். முதல் ஆட்டத்திலும் அவர் 25 பந்துகளில் 46 ரன்கள் விளாசிய சூர்யகுமார் இந்தியாவின் மிடில் ஆர்டரில் வலுவான பங்களிப்பை ஆற்றும் பொறுப்பில் இருக்கிறார்.

நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அவர் விளையாடிய விதம் பலராலும் பாராட்டப்பட்டது. இந்தியாவின் மிடில் ஆர்டர் மீதான பெரிய கவலையை தீர்க்க வேண்டிய பொறுப்பு சூர்யகுமார் வசம் உள்ளது.

ஜடேஜா இடத்தை நிரப்புவாரா அக்சர் பட்டேல்?

இதுதவிர, ஆசிய கோப்பையில் இடம்பெறாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஜொலித்த அக்சர் பட்டேல் சூழற்பந்துவீச்சில் எதிரணியை மிரட்டுகிறார். ஆஸ்திரேலியாவுடனான தொடரில் 10 ஓவர்களை வீசி 8 விக்கெட்களை கைப்பற்றிய அக்சர் படேல் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

காயம் காரணமாக ஜடேஜா டி20 உலகக்கோப்பையில் விளையாடாத நிலையில், அவரது இடத்தை நிரப்புவது கடினம் என்றாலும் சுழற்பந்துவீச்சில் அக்சர் படேல் நிச்சயம் ஆறுதல் அளிப்பார் என்றே எதிர்பார்க்கலாம். இதுதவிர, ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டராக ஜொலித்து வருவது இந்தியாவுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. பேட்டிங் - பவுலிங் என இரண்டிலும் நல்ல பங்களிப்பை அளித்து அவர் அளித்து வருகிறார்.

தினேஷ் கார்த்திக் நல்ல சாய்ஸ்-ஆ?

டி20 உலகக்கோப்பையில் 37 வயதான தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டதற்கு சில விமர்சனங்களும் எழுந்தன. குறிப்பாக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், 10 -12 ரன்களை அடிப்பதற்காக ஒரு வீரரை தேர்வு செய்வதா என கேள்வி எழுப்பினார். தினேஷ் கார்த்திக் டாப் -5 ஆர்டரில் விளையாட ஆர்வம் காட்டாத நிலையில், அவருக்கு பதிலாக ரிஷப் பண்டை களமிறக்கினால் அவர் எந்த இடத்திலும் விளையாடுவார் என கம்பீர் பேசியிருந்தார்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்டிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கிற்கே கூடுதல் வாய்ப்புகளை வழங்கினார் கேப்டன் ரோஹித் சர்மா. குறிப்பாக 2வது ஆட்டத்தில் இக்கட்டான தருணத்தில் களமிறங்கி 2 பந்துகளில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசி வெற்றியைத் தேடித் தந்தது.

அவரை ஒரு ஃபினிசராக மீண்டும் ஜொலிக்க வைத்தது. ஆசிய கோப்பை தொடரில் தொடர்ச்சியாக தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், டி20 உலகக் கோப்பையில் ஒரு ஃபினிசர் ரோலில் விளையாட வைக்க ரோஹித் சர்மா ரிஷப் பண்டை காட்டிலும் தினேஷ் கார்த்திக்கிற்கே கூடுதல் வாய்ப்பு வழங்கக்கூடும்.

கவலையளிக்கும் இந்தியாவின் வேகப்பந்துவீச்சு

வேகப்பந்துவீச்சில் அனுபவம் வாய்ந்த வீரர்களான புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா இருவரும் அதிக ரன்களை விட்டுத்தருவது கவலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

ஆசிய கோப்பை தொடரில் டெத் ஓவர்களில் தடுமாறிய புவனேஸ்வர் குமார், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 7 ஓவர்களை வீசி 91 ரன்களை வழங்கியுள்ளார்.

இடைவெளிக்குப் பிறகு களமிறங்கிய பும்ராவும் 6 ஓவர்களில் 73 ரன்களை விட்டுக்கொடுத்தார். டி20 உலகக்கோப்பையில் வேகப்பந்துவீச்சாளர் துல்லியமான பந்துவீச்சுத் தாக்குதலை தொடுப்பது அவசியமான ஒன்று.

இதனிடையே, தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் நாளை மறுநாள் முதல் விளையாடுகிறது இந்திய அணி. திருவனந்தபுரம், குவஹாத்தி மற்றும் இந்தூரில் இந்த ஆட்டங்கள் நடக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: